Aran Sei

கொரோனா தடுப்பூசி- புலம்பெயர்ந்தோரின் வெற்றிக் கதை

கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலக அளவில் பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இதில், ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ள தம்பதியினர் ஜெர்மனியில் வெற்றிபெற்ற புலம்பெயர்ந்தோரின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர், கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆய்வில் ஈடுபட்டது. அந்தப் பணிக்கு, ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. பயோஎன்டெக் நிறுவனத்தை உருவாக்கிய தம்பதியினர் துருக்கியிலிருந்து ஜெர்மனிக்கு குடியேறியவர்களின் பிள்ளைகள் ஆவர்.

பேராசிரியர் உகுர் சாஹின், சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள, துருக்கிய மத்தியதரைக் கடல் நகரமான இஸ்கெண்டெருனில் பிறந்தார். உகுர் நான்கு வயதாக இருந்தபோது மேற்கு ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தார். அவரது தந்தை ஒரு புலம்பெயர் தொழிலாளி. அவர் கொலோனில் உள்ள ஃபோர்டு கார் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.

அப்போது, மேற்கு ஜெர்மனி குடியேற்றத்தை ஊக்கப்படுத்தவில்லை. புலம்பெயர் தொழிலாளிகள் தற்காலிக ஊழியர்களாகக் கருதப்பட்டனர். அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஜெர்மன் குடியுரிமை கிடைப்பதற்கான வாய்ப்பு மிகச் சொற்பமாக இருந்தது.

ஆயினும் இன்று, பேராசிரியர் உகுர் சாஹின், அவரது மனைவி இஸ்லெம் டெரெசி ஆகியோர் ஜெர்மனியில் பணம் படைத்த 100 செல்வந்தர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் 2016-ம் ஆண்டு, தங்கள் முதல் வணிக நிறுவனத்தை பல லட்ச டாலர்களுக்கு விற்றனர். கொரோனா தடுப்பூசியின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பயோஎன்டெக்-ன் மதிப்பு 21 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஒரு இளைஞனாக, பேராசிரியர் உகுர் சாஹின் தனது மருத்துவ கனவுக்கு ஏற்பட்ட தடைகளை எதிர்த்துப் போராடினார். இது புலம்பெயர்ந்த கார் தொழிலாளியின் மகனான உகுருக்கு பெரும் சவாலாக இருந்தது. அவர் கொலோன் மற்றும் ஹோம்பர்க்கில் மருத்துவம் பயின்றார் மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றார்.

ஹோம்பர்க்கில், புற்றுநோயியல் நிபுணராகப் பணிபுரிந்தபோதுதான் அவர் தனது வருங்கால மனைவியான மருத்துவர் டெரெசியை சந்தித்தார். டெரெசியின் பெற்றோரும் புலம்பெயர்ந்தவர்கள் தான் என்றபோதிலும், அவரால் சற்று சுலபமாக மருத்துவ படிப்பில் நுழைய முடிந்தது. அவரது தந்தை இஸ்தான்புல்லிலிருந்து குடியேறிய ஒரு மருத்துவர். டெரெசி ஜெர்மனியில் பிறந்தார்.

புற்றுநோய்க்கான புதிய சிகிச்சையை மேம்படுத்துவதில் இந்தத் தம்பதியினர் கட்டிய ஆர்வத்தின் பெயரால் அவர்களால் அதிகளவில் செல்வத்தை ஈட்டமுடிந்தது. அவர்களின் ஆர்வம், புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசியைக் கண்டறியவும் உதவியுள்ளது.

ஜனவரி மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டபோது பேராசிரியர் சாஹின் தனது குழுவைக் கூட்டி, பயோஎன்டெக் இனி கொரோனாவில் கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.

செல்வம் படைத்த பின்னும் பேராசிரியர் சாஹின் தனது மாணவர்களைப் பயிற்றுவிக்கிறார். அவர் இப்போதும் மைன்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். அவர் மிகவும் ‘தாழ்மையானவர்’ என அவருடன் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர். அவர் தனது கூட்டங்களுக்குச் சைக்கிளில் செல்வார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபைசரின் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவர் கேத்ரின் ஜான்சனும், இரும்புத் திரைக்கு மறுபுறம் உள்ள ஜெர்மனியில் (கிழக்கு ஜெர்மனி) பிறந்துள்ளார். 1961-ல் பெர்லின் சுவர் கட்டப்படுவதற்கு முன் அவரது குடும்பம் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்குக்கு வந்துள்ளது.

அந்தப் பயணத்தின்போது, அதிகாரிகளின் கேள்விகளைத் தவிர்ப்பதற்காகக் கத்ரினின் அத்தை அவருக்குப் போதை மருந்து அளித்துள்ளார். அவரது தந்தை ஒரு வேலையின் நேர்காணலுக்காகப் பயணம் செய்வதுபோல் நடித்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே மருத்துவத்தில் ஆர்வம் உள்ளதாகக் கத்ரின் கூறுகிறார். மார்ச் மாதத்திலிருந்து, அவர் தடுப்பூசியை உருவாக்கும் 650 நபர்கள் குழுவுக்குத் தலைமை தங்கியுள்ளார். பெரும்பாலும் மன்ஹாட்டனில் உள்ள அவரது குடியிருப்பிலிருந்து ஜூம் (Zoom) வழியாகத் தனது குழுவுக்கு ஆலோசனைகள் வழங்குகிறார்.

பின் குறிப்பு: இந்தத் தடுப்பு மருந்தால் 90% க்கும் மேலானோர் குணமடைந்துள்ளனர். இதற்கு இன்னும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்படவில்லை.

(டெலிகிராஃபிள் வெளியான கட்டுரையின் சுருக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்