Aran Sei

வன்மத்தை விளைவிக்கும் கேமிங் ஆப்கள் – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை 

ராமநாதபுரம் அருகே, ஹிருத்திக் ரோஷன் என்கிற 7-ம் வகுப்பு மாணவன், தனது தந்தையின் செல்போனில் ஃப்ரீ ஃபயர் கேம் விளையாடி ரூ.90 ஆயிரத்தை இழந்திருக்கிறான். அந்த கேமுக்கான உடைகள் மற்றும் உபகரணங்களை மொபைல் பேங்கிங் மூலம் வாங்கியதில் இவ்வளவு பெரிய தொகையை இழந்திருக்கிறான். இந்நிகழ்வு ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்திருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் பப்ஜி உட்பட 118  சீன ஆப்களுக்குத் தடை விதித்திருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு கல்வான் பகுதியில் நிகழ்ந்த இந்திய – சீன ராணுவ மோதலுக்குப் பிறகே சீன ஆப்களை தடை செய்யும் இந்நடவடிக்கை தொடங்கியது. இந்தியா போன்ற அதிக எண்ணிக்கையிலான பயன்பாட்டாளர்கள் கொண்ட நாட்டில் விதிக்கப்படும் இப்படியான தடை சீன நிறுவனங்களுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டது. தற்போது தடை செய்யப்பட்டுள்ள 118 ஆப்களில் மிகவும் பிரபலமானது பப்ஜி எனும் கேமிங் ஆப்.

போர்க்களத்தில் எதிர்ப்படையினரை சுட்டு வீழ்த்தி வெற்றிபெறும் மூர்க்கத்துடன் விளையாடப்படும் கேம் இது. பப்ஜி விளையாடுவதால் இளைஞர்கள் மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு ஆளாவதன் காரணமாக அதனை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பப்ஜி தடையும், அதற்கு அளிக்கப்பட்ட விளக்கமும் ஏற்புடையதுதான் என்றாலும், பப்ஜியை விட அதிக பயனாளிகளைக் கொண்ட ஃப்ரீ ஃபயர் போன்ற கேமிங் ஆப்களை தடை செய்யாதது ஏன் என்கிற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற கேமிங் ஆப்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பார்ப்போம்…

“குழந்தைகளின் உளவியலில் இது போன்ற கேம்கள் நிச்சயம் வன்மத்தை விளைவிக்கும்” என்றும் “அவர்களது ஆளுமை கேள்விக்குள்ளாக்கப்பட்டு குடும்பம் மற்றும் சமூகத்தை எதிர்கொள்வதில் நிறைய பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்” என்றும் கூறுகிறார் உளவியல் ஆலோசகர் சிந்து ராஜன்.

சிந்து ராஜன்

“டிஜிட்டல் கேம்கள் குழந்தைகளை வெகு எளிதில் ஈர்த்து விடும். ஆண் – பெண் பாகுபாடின்றி அனைவரும் இதற்கு அடிமையாக வாய்ப்புள்ளது. எந்த ஒன்றுமே அதற்கான அளவைக் கடந்தால் ஆபத்துதான். ஓய்வு நேரத்தில் விளையாடுவது வேறு, விளையாட்டுக்கு இடையே மற்ற வேலைகளைச் செய்வது வேறு. இந்த டிஜிட்டல் கேம்களுக்கு இரையானவர்கள் இரண்டாவது வகை. சாப்பிடுவது, தூங்குவது போன்ற அன்றாட செயல்பாடுகள் கூட அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகி விடும்.

பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற கேம்கள் நிச்சயம் வன்மத்தைத்தான் அவர்களுக்குள் விளைவிக்கும். பெண்களை விட ஆண்கள் இயல்பிலேயே மூர்க்கத்தனமாக இருப்பதற்குக் காரணம் அவர்களுக்குள் சுரக்கும் டெஸ்ட்ராஸ்ட்ரோன் எனும் ஹார்மோன்தான். ஆகவேதான் இது போன்ற கேம்களை பெண்களை விட ஆண்களே அதிகம் விரும்பி விளையாடுகின்றனர். அவர்களது மூர்க்கத்தனத்தை மேலும் சீண்டுவதைப் போலவே இந்த கேம்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

நன்றாகப் படிக்கிற, துரிதமாக கணக்குப் போடுகிற மற்றும் வேறு பல திறன்கள் கொண்ட குழந்தை கூட இந்த கேம்கள் விளையாட ஆரம்பித்த பின் படிப்பில் மந்தமாகி விடுவார்கள். எப்போதும் சிரித்தபடி குழந்தைத்தனத்தோடு இருப்பவர்களிடம் சற்றே மூர்க்கத்தனம் வெளிப்படும். தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். முழுமூச்சாக கேமில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். டெஸ்ட்ரோஸ்ட்ரான் அதிகமாகி டோப்பமைன் என்கிற ஹார்மோனின் அளவு குறைந்து விடும். இதன் விளைவாக பசியின்மை, தூக்கமின்மை ஏற்படும். தூக்கமின்மை ஏற்படும் மொபைல் திரையையே அதிகம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் எரிச்சல் ஏற்படும்.” என்று கூறுகிறார்.

மேலும் அவர், “கேம் அடிக்சனுக்கு பெற்றோர் மட்டுமல்லாமல் அக்குழந்தையின் பள்ளி ஆசிரியரும் பொறுப்பேற்க வேண்டும். குழந்தையின் நடவடிக்கையில் ஏதேனும் மாறுதல் தெரிந்தால் பெற்றோரிடம் அது குறித்து கலந்துரையாடி என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய வேண்டும். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்களை பணிக்கு அமர்த்தப்படும் நடைமுறை இல்லை. அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகள் வழங்கி இது போன்ற அடிமைத்தனங்களிலிருந்து அவர்களை மீட்க முடியும்” என்கிறார் சிந்து ராஜன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்