Aran Sei

திரையரங்குகளின் எதிர்காலம் இனி என்னவாகும்? –  கி.ச.திலீபன்     

காலத்தின் தேவைக்கேற்ப தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்வது உலக யதார்த்தம். ஓடிடி தளங்களின் வருகையையும் வளர்ச்சியையும் நாம் இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த லாக்டவுன் காலத்தில் அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் பற்றியும் அவற்றில் வெளியாகும் வெப்சீரிஸ்கள் பற்றியும் நாம் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஷக்கலக்க பூம் பூம், மாயா மச்சிந்திரா போன்ற நாடகத் தொடர்களைக் கண்டு வளர்ந்த 90களின் குழந்தைகள் தற்போது மணி ஹெய்ஸ்ட், டார்க் போன்ற சீரிஸ்களுக்க மனதை பறிகொடுத்துள்ளனர்.

ஒரு காலத்தில் ஆங்கில நாளிதழ்கள் வாங்கி வாசிப்பது எப்படி சமூக அந்தஸ்தாக கருதப்பட்டதோ அதே போல் இன்றைக்கு வெப் சீரிஸ்கள் பார்ப்பதும் அந்தஸ்தாக கருதப்படுகிறது. அது மட்டுமின்றி இதுவரை நாம் பார்த்த திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை அவை தருவதால் பொழுதுபோக்கு தளத்தில் வெப்சீரிஸ்கள் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிட்டன.

காட்சி ஊடகத்தின் பரிணாம வளர்ச்சியின் சமீபத்திய விளைவுதான் இந்த Over the top அல்லது ஓடிடி தளங்கள். திரைப்படங்களுக்கு அடுத்து தொலைக்காட்சி வந்த போது தொலைக்காட்சித் தொடர்கள் உருவாக்கப்பட்டதைப் போல, இணையதள வளர்ச்சிக்குப் பிறகு உருவானவைதான் ஓடிடி தளங்களும், வெப் சீரிஸ்களும். உலக அளவில் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஓடிடி தளங்கள் அறிமுகம் ஆகி விட்டாலும் கூட இந்தியாவில் சமீபத்தில்தான் அந்த தீ பற்றியது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24ம் தேதியிலிருந்து இந்தியாவில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மக்களின் பார்வை ஓடிடி தளங்கள் மீது திரும்பியது. ஆரம்பத்தில் அவற்றில் உள்ள படங்களைத் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தவர்களின் கவனம் மெல்லவே வெப் சீரிஸ்களின் பக்கம் திரும்பியது. சமூக வலைதளங்களில் வெப்சீரிஸ்கள் குறித்த விமர்சனங்கள் பலராலும் எழுதப்பட்ட நிலையில் அவற்றின் மீதான கவனம் மேலும் அதிகரித்து பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கூடியது.

வெப் சீரிஸ்களை தொடர்ந்து திரைப்படங்களும் தற்போது நேரடியாக இத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. தமிழில் ஜோதிகா நடிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியிடப்பட்டது. மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான பென்குயின் திரைப்படமும் அத்தளத்தில்தான் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் அமேசான் ப்ரைம் தளத்தில் அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது.

சூர்யா போன்ற பெரிய சந்தையைக் கொண்டிருக்கும் நடிகரின் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது பல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. இந்தப் பொதுமுடக்க காலத்தில், திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் தான் எடுத்திருக்கும் இப்படியான முடிவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என சூர்யா கோரிக்கை விடுத்திருந்தார். அப்படத்தை ஓடிடி தளத்துக்கு விற்பனை செய்யும் தொகையிலிருந்து 5 கோடியைத் திரைத்துறை சங்கங்களுக்கு அளிப்பதாகவும் அறிவித்திருந்தார். இருந்தும்,  திரையரங்க உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூர்யாவுக்கு மிக முக்கியமான சில வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் ஹரி, சூர்யா தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். சூர்யாவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை சூர்யா தரப்பை பலப்படுத்துவதாக இருந்தது. இவற்றையெல்லாம் கடந்து அக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் ‘சூரரைப் போற்று’ வெளியாகவிருக்கிறது.

ஓடிடி தளங்களின் இந்த அதி பயங்கர வளர்ச்சி திரையரங்குகளை பாதிக்குமா? என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது. இது இப்போதல்ல, டிவி சானல்கள் வந்த போதும் சொல்லப்பட்டதுதான். ஒன்றிலிருந்து அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதுதான் வளர்ச்சி. காலம்தான் அதன் தேவையை உருவாக்குகிறது. இதற்கிடையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பொது முடக்கத்தால் வெளியிட முடியாமற்போனது. இப்படியான சூழலில் எப்போது திரையரங்குகள் திறக்கப்படுகிறதோ அப்போதுதான் வெளியிடுவோம் என படக்க்குழுவினர் உறுதிபடக் கூறியிருக்கின்றனர்.

சூர்யா போன்ற ஸ்டார் வேல்யூ கொண்ட நடிகர்களின் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்.

நேரடியாக ஓடிடி தளங்களில் திரைப்படங்களை வெளியிடப்படுவதை எதிர்க்கிறீர்களா? என்று அவரிடம் கேட்டதற்கு “ஓடிடி தளங்களில் வெளியாகும் எல்லா படங்களையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ‘பொன்மகள் வந்தாள்’ ‘பெண்குயின்’ போன்ற திரைப்படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியிடப்பட்ட போது நாங்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. சூர்யா போன்ற பெரும் ரசிகர்களைக் கொண்டிருக்கிற, வசூல் சாதனை புரியக்கூடிய நடிகர்களின் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்படுவதை எதிர்க்கிறோம். ஏனென்றால் அவர்களைப் போன்ற பெரிய நடிகர்களை நம்பித்தான் திரையரங்குகள் இருக்கின்றன” என்கிறார்.

இந்த பொதுமுடக்க கால சூழலின் விளைவாகத்தான் இப்படியொரு முடிவினை எடுத்துள்ளதாக சூர்யா தெரிவித்திருக்கிறாரே என்று கேட்டதற்கு “இந்த பொது முடக்க காலத்தில் திரைத்துறையினர் மட்டுமல்ல. திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என நாங்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர் இம்முடிவை எடுத்திருக்கிறார். இந்த பொதுமுடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டு பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியிருக்கிறோம். இந்நிலையில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும்  விஜயின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஆகிய படங்கள் நல்ல வசூலைக் கொடுக்கையில் அந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட சரியாக இருக்கும் என எதிர்பார்த்தோம். அதனை முறியடிக்கும் செயலாகவே ஓடிடி வெளியீட்டைப் பார்க்கிறோம்” என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

“சினிமா என்பது திரையரங்குக்கான கலை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஓடிடி தளங்கள் நிச்சயம் கலைஞர்களுக்கு பக்க பலமாய் இருக்கும் என்பதால் அதனை ஆதரிக்கலாம்” என்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

“அகன்ற திரைவழியாக உண்டாகும் காட்சியனுபவத்தைப் பெறுவதற்காகவே மக்கள் திரையரங்குக்கு வருகிறார்கள். திரையரங்கம் என்பது மக்கள் சக்தியின்  ஒன்றுபடும் உள்ளுணர்வுடைய வெளிப்பாடு. சினிமாவைப் பொறுத்தவரை  தொழில் நுட்பங்கள் பெரிய அளவில் மாற்றம் கண்டிருந்தாலும், திரையரங்கம் என்கிற கட்டமைப்பு உடையவில்லை. டிக்கெட் விலை, பாப்கார்ன் விலை, சைக்கிள் பார்க்கிங் மறுப்பு போன்றவற்றால் திரையரங்கில் சாமனியனுக்கான  இடத்தை நாம் குறைத்து விட்டோம். இந்த உண்மையைக் கடந்து பார்த்தால் சினிமா என்பது திரையரங்குக்கான கலைதான். பொதுமுடக்க சூழல் காரணமாகத்தான் தன் படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக நடிகர் சூர்யாவும் சொல்கிறார். அவரும் திரையரங்கையே முழுமையாக நம்புவதாகவே படுகிறது” என்கிறார் சீனு ராமசாமி.

ஓடிடி தளங்களை இக்காலகட்டத்தின் முன்னகர்வாகக் கருதலாமா? என்று கேட்டதற்கு “ஒ.டிடி என்பது சிறிய பட்ஜெட் படங்கள், திரையரங்கம் கிடைக்கப்பெறாத படங்களுக்கு நன்மை செய்யும் தொழில்நுட்பம். ஆனால், ஒடிடி யும் எல்லாப் படங்களையும் வாங்குவார்களா எனத்தெரியாது. சென்சார் இல்லாத இடமாகவும் இருப்பதனால் அதன் போக்குகள் புரியவில்லை. விஞ்ஞான மாற்றத்தில் நன்மையை போலவே அசௌரியங்களும் இருக்கின்றன. இருப்பினும் இத்தளங்களில் படைப்பாளிகள் இயங்வதற்கான சூழல் இருப்பதாகவே நினைக்கிறேன். படைப்பாளிகளின்  கலை விளைச்சலுக்கு சிறிய பாதுகாப்பு இருப்பதாகத் தோன்றுகிறது” என்கிறார் சீனு ராமசாமி.

“வணிக சமரசங்களுக்கு ஆட்படாமல் திரைப்படத்தை கலையுணர்ச்சியோடு இயக்க முன்வரும் இண்டிபென்டன்ட் திரைப்பட இயக்குநர்களுக்கு ஓடிடி தளங்கள் சாதகமாக இருக்கும் என்கிற கருத்து பரவலாக இருக்கிறது. இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஓடிடி தளத்தினை முற்றிலுமாக மறுத்து விடவும் முடியாது” என்கிறார் திரைப்படச் செயற்பாட்டாளர் நாச்சி.

“முதலில் இண்டிபெண்டண்ட் சினிமா என்கிற பதமே தவறானது. சினிமாவை யாரும் இண்டிபெண்டண்ட் ஆக எடுக்க முடியாது. எப்படியும் அதற்கு ஒரு முதல் இருக்க வேண்டும். அலெக்ஸா கேமராவின் வாடகை மட்டும் நாளொன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய். திரைத்தொழிலாளர்கள் யூனியனில் இருந்து விதிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டுதான் படம் இயக்க முடியும். எனவே பொருளாதார ரீதியாக நிறைய சிக்கல் இருப்பதால் இங்கே யாராலும் இண்டிபெண்டண்ட் ஆக படம் இயக்க முடியாது.” என்கிறார்.

ஓடிடியில் வெளியிடுவதற்கு அவ்வளவு தயாரிப்புச் செலவுகள் தேவையில்லை. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகியுள்ள சீ யூ சூன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அத்திரைப்படம் முழுவது ஐபோனில் படம் பிடிக்கப்பட்டதுதான்.

குறைந்த பட்ஜெட்டிலேயே ஓடிடிக்கு படம் தயாரிக்க முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது வரவேற்கத்தக்கதுதானே எனக் கேட்டதற்கு “ஓடிடியில் பார்ப்பதற்கு அந்தத் தரமே போதுமானது. அந்த வகையில் குறைந்த செலவில் கூட திரைப்படம் இயக்கும் வாய்ப்பு அங்கே உருவாக்கப்படுவது உண்மைதான். இருந்தும் ஓடிடி தளங்கள் எத்தகைய படங்களை முன் நிறுத்துகின்றன என்பதைப் பார்த்தால் அதன் பின் உள்ள வணிக அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்.” என்கிறார்.

“அமேசான் போன்ற உலகப்பெரும் பணக்கார நிறுவனங்கள் கையிலெடுத்துள்ள ஓடிடி தளங்களால் சில நன்மைகள் விளைவதை மறுக்க முடியாதுதான். ஆனால், அதை திரையரங்குகளுக்கு மாற்றாக நிறுவி விட முடியாது. திரையரங்கில் படம் பார்ப்பது ஓர் தனி அனுபவம் என்பதோடு, திரையரங்குகள் ஓர் ஜனநாயகப் பூர்வமான மாற்றத்தை விளைவித்திருக்கின்றன. அனைத்துச் சமூக மக்களையும் ஒரே அரங்கில் அமர வைத்த கலை வடிவம் சினிமாதான். அது திரையரங்குகள் மூலம் மட்டுமே சாத்தியப்பட்டது. ஆகவேதான் லெனின் போன்ற தலைவர்கள் சினிமா என்னும் கலைவடிவை நேசித்தார்கள். ஓடிடி தளங்கள் வணிக நோக்கை மட்டும் கருத்தில் கொண்டு இயங்குபவை. அங்கே மக்களுக்கான அரசியலை, கலையம்சத்துடன் பேசும் மாற்றுத் திரைப்படங்களுக்கான வாசல் இல்லை.  கிளாசிக்குகளைக் கொண்டு வருவதிலும் அரசியல் இருக்கிறது. எனவே ஓடிடி தளங்களை மாற்றாகக் கருத முடியாது என்பதோடு அதனைப் புறந்தள்ள வேண்டியதும் இல்லை” என்கிறார் நாச்சி.

–  கி.ச.திலீபன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்