Aran Sei

’சுதந்திர இந்தியாவும் தலித்துகள் நிலைமையும்’ – ரவிக்குமார்

ந்த நாட்டு மக்கள் தொகையில் கால் பகுதி மக்கள் பொதுச் சாலைகளில் நடக்க முடியாது; பொதுக் கிணற்றில் நீர் எடுக்க முடியாது; கடைகளில் சமமாக டீ குடிக்க முடியாது; தங்கள் சங்களை பொதுப்பாதையில் சுமந்து செல்ல முடியாது; தங்கள் பிள்ளைகளை மற்றவர்களைப்போல் படிக்க வைக்க முடியாது; அந்தப் பெண்களை யார் வேண்டுமானாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கலாம்; அவர்களை யார் வேண்டுமானாலும் கொலை செய்யலாம்; அவர்கள் குடிசைகளை யார் வேண்டுமானாலும் எரித்துச் சாம்பலாக்கலாம். அதைக் கேட்க அரசியல் கட்சிகள் இல்லை, பத்திரிக்கைகள் இல்லை, நீதிமன்றங்களும் இல்லை – என்ற கேடுகெட்ட நிலை நிலவுகின்றதே இந்த நாட்டில்! அதற்காக அகமகிழ்ந்து பொன்விழா கொண்டாடுவதா?
சுதந்திர நாள் வெள்ளி விழாவின்போது (1972) பெரியார் சொன்னார்: “ நமது சுதந்திரமானது ஒரு யோக்கியன் ஒரு பெரிய மனிதன் என்று சொல்வதற்கு ஒரு ஆள் கூட நமது தேசத்தில் நமது நாட்டில் இல்லாமல் செய்து விட்டது. அது மட்டுமா? நம் நாட்டில் காலித்தனம், அயோக்கியத்தனம், கயவாளித்தனம், புரட்டு, பித்தலாட்டம், மோசடி, துரோகம், வஞ்சனை முதலிய குணங்கள் தன்மைகள் இல்லாத மக்களையும் அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும், அரசியல்வாதிகளம் காண முடியாதபடி செய்து விட்டது. பெரிய பித்தலாட்டம், துரோகம், வஞ்சனை – இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் தலைவர்கள் ஆகிறார்கள். தேசியவாதிகளாக ஆகின்றார்கள், தேசபக்தர்கள் ஆகின்றார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தச் சுதந்திரம் உள்ளவரை மக்களில் நேர்மையுள்ள யோக்கியன் இருக்க மாட்டான் என்பதோடு தோன்றவே மாட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்” எனத் தந்தை பெரியார் குறிப்பிட்டு பல ஆண்டுகள் கடந்து விட்ட இன்றைய நிலையில் ஏதேனும் மாற்றம் நடந்திருக்கிறதா? அரசியலில் நாம் பெற்ற மாறுதலென்பது கேடுகெட்ட நிலையிலிருந்து கழிசடை நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றோம் என்ற அளவில்தான் உள்ளது.
இப்படியான கேடுகெட்ட நிலையை உருவாக்கித் தந்த சுதந்திரப் போராட்டத்தில் தலித் மக்கள் பங்கேற்கவில்லை என்று குறைபட்டு குற்றம் சொல்கின்றார்கள் சில மேதாவிகள். தலித் மக்கள் தம்மை ஒடுக்கும் ஆதிக்க சாதி இந்துக்களுடன் சேர்ந்து கொண்டு என்ன போராட்டம் நடத்த முடியும்?
தங்களுக்கு சமத்துவம் தராத சாதி இந்துக்கள் சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகு அதைத் தருவார்கள் என நம்புவதற்கு தலித் மக்களுக்கு என்ன நியாயம் இருந்தது? இந்திய சுதந்திரம் என்பது இந்து ஆதிக்கத்தை நிலைநிறுத்தும். இந்த இந்து ஆதிக்கம் தீண்டாத மக்களைப் பொறுத்தவரை அவர்களது வாழ்க்கையில் சுதந்திரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் என்றுமே வாய்ப்பு இல்லாமல் செய்துவிடும். அவர்கள் விறகு வெட்டிகளாகவும், நீர் இரைப்பவர்களாகவுமே தொடர்ந்து காலம் தள்ள வேண்டி வரும்’ என்ற அச்சம் தலித் மக்களிடையே இருந்தது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் பெறுவதை தலித் மக்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. மாறாக, பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த சிறுபான்மையாக உள்ள இந்துக்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், சிறுபான்மையாகவுள்ள தங்களுக்குச் சில பாதுகாப்பு வழிமுறைகளைக் காண்பதற்கும்தான் அவர்கள் போராடினார்கள்.
அன்று தலித் மக்கள் எதற்காக பயந்தாரோ அது என்று நிரூபணமாகி உள்ளது. இந்திய அரசு என்பது இந்துக்களின் அரசுதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘இந்துத்துவா’ என்றால் அது ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளின் கொள்கைகள் நடைமுறைகளில் தான் உள்ளது என்பது போல் நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கின்றோம்.
அனைத்து வார்த்தைகளின் பின்னாலும் செயல்களிலும் பொதிந்துள்ள இந்துத்துவாவை நாம் கிளறிக் கண்டறிந்தாக வேண்டும். அப்போதுதான் இன்று சுதந்திரப் பொன்விழா என்ற பெயரில் நடத்தப்படும் கூத்து இந்துத்துவாவின் வடிவம் தான் என்பதை நாம் உணர முடியும். இதை வெளிப்படுத்த, இந்த கொண்டாட்டங்கள் கட்டியெழுப்பும் மதிப்பீடுகளை, நம்பிக்கைகளை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். அதுமட்டுமின்றி 1947க்கு பின்னால் சென்று சுதந்திரப் போராட்டம் என்று முன்வைக்கப்படும் ஒற்றைப் பரிமாணம் கொண்ட வரலாற்றைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
1997 ஆம் ஆண்டு சுதந்திர தினப் பொன்விழா கொண்டாடப்பட்ட காலகட்டத்தில்தான் தென் மாவட்டங்களில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு இருந்தது. . இந்திய சுதந்திரத்துக்கு ‘பொன்விழா’ முடிந்து இப்போது ‘பவளவிழா’ வந்துவிட்டது. இடையில் 25 ஆண்டுகள் எப்படி போனதென்றே தெரியவில்லை. இந்த 25 ஆண்டுகளில் தலித் மக்களுடைய வாழ்க்கையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தலித் மக்களுக்குச் சுதந்திரம் எப்போது கிடைக்கும்? அவர்களுடைய வாழ்க்கையில் ஏன் காலம் உறைந்து போய் விடுகிறது?
கட்டுரையாளர்: துரை. ரவிக்குமார்
(கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்பாளர், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர், பொதுச்செயலாளர்- விசிக)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்