காவி பயங்கரவாத்தை கடுமையாக எதிர்த்ததால் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்று. அவரை நினைவு கூர்வதன் வழியே அதிகாரத்திற்கெதிரான போரில் நாம் இன்னும் ஓர்மையோடு செய்ல்படுவதற்கான வலிமையை வளர்க்க உதவும். கடந்த பத்தாண்டுகளில் பத்திரிக்கையாளர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கி என்பதும் ஒரு அரசியல் குறியீடு. சுதந்திர இந்தியாவில் காந்தியைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிதான் வெவ்வேறு வடிவெடுத்து பலரைச் சுட்டுக் கொல்கிறது. நரேந்திர தபோல்கர் 2013, மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி 2015, உத்திர பிரதேசத்தில் ரதன் சிங்(2017), கௌரி லங்கேஷ் 2017, ரைசிங் காஷ்மீர்’ (Rising Kashmir) இதழின் ஆசிரியர் சுஜாத் புஹாரி(2018) ஆகியோரைக் கொன்று குவித்துள்ளது. ”தொடர்ச்சியாக வன்முறைக்கு ஆளாவதால் பத்திரிகை துறை குறித்து யோசிக்கவே பலருக்கு பயமாக இருக்கும்” என்று ஒரு காஷ்மீர் பத்திரிகையாளர் கூறினார். அதுதான் அவர்களின் வெற்றி.
பெங்களூரு நகரத்தில் செப்டம்பரின் மழைமாதத்தில் கௌரி லங்கேஷ் மூவரால் சுடப்பட்டபோது காந்தியைப் போல் ராமனை அழைக்காமல் உயிர்நீத்தார். ஏழு தோட்டாக்கள் அவரின் உடைலை துளைத்தெடுத்த்து. தகவலறிந்த ராஜராஜேஸ்வரி நகர் காவலர்கள் நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.நிகழ்விடத்திலேயே உயிர் நீத்தார்.
மூத்த பத்திரிகையாளர் பி.லங்கேஷின் மகள் கெளரி லங்கேஷ். சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய பாடுபட்ட அவர் இடதுசாரி சித்தாந்தத்தை அரசியல் நெறியாகப் பின்பற்றியவர். ஆளும் வர்கத்திற்கு எதிராகவும், காவி மத அடிப்படைவாத்த்திற்கு எதிராகவும் கருத்தியல் ரீதியாகவும் களத்திலும் சமர் புரிந்தவர். கர்நாடகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமலாக்க ஆதரவு தெரிவித்தவர்.
80 களில் தன்னுடைய பயணத்தை ஓர் ஆங்கில ஊடகத்தில் தொடங்கிய அவர், 2000-ஆவது ஆண்டில் அவரது தந்தை பி.லங்கேஷின் மரணத்துக்குப் பிறகு, பெங்களூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். கௌரி லங்கேஷ் பத்திரிகா என்ற நிறுவனத்தைத் தொடங்கி நட்த்தி வந்தார்.
”இந்தியக் குடிமகனாக பாஜகவின் மதக் கொள்கைகளையும், மத ரீதியிலான அரசியலையும் எதிர்க்கிறேன். இந்து தர்மம் என்ற பெயரில் மக்களுக்குச் செய்யும் இடையூறுகளையும், மத நடைமுறைகளையும் கண்டிக்கிறேன். இந்து தர்மம் என்ற பெயரில், நியாயமற்ற, நீதியற்ற, பாலின பாகுபாடு நிறைந்த கொள்கைகளைக் கடுமையாக எதிர்க்கிறேன்” என்று பாஜகவுக்கு எதிராகவும் உழைக்கும் மக்களுக்கு ஆதராகவும் பேசியும் எழுதியும் வந்தார். தனக்குக் கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
பாபாசாகேப் அம்பேத்கரைப் போல மத பாகுபாடுக்கும் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடுவேன் என்று முழங்கினார். அரசியல் அமைப்பு வழங்கியிருக்கிற சுதந்திரம், சமத்துவம் இரண்டையும் உழைத்து ஓடாய் தேய்ந்து போன மக்களும் பெற வேண்டும் என்று முனைப்புக் காட்டியவர்.
கௌரியின் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டறிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டது கர்னாடக அரசு. இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த பரசுராம் வாக்மோர் என்பவரை அடையாளம் கண்டது காவல்துறைஅப்போது அவருக்கு வயது 26. பரசுராம் வாக்மோர் குடும்பம் ஏழ்மையில் சிக்கித் தவிப்பதாக ஃபேஸ்புக் மற்றும் இணையதளங்கள் மூலம் வங்கிக்கணக்கைக் குறிப்பிட்டு, உதவி கேட்டு அறிவிப்பு கொடுத்துப் பொதுமக்களிடம் இருந்து பெரும் தொகையை வசூல் செய்துள்ளனர். வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய ரசீது அனைத்தையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இணையதளத்தில் இருந்து கைப்பற்றினர்.
விசாரணையில் இந்துத்துவ அமைப்பின் முக்கிய நிர்வாகி நவீன்குமார் என்பதும், ஸ்ரீராம் சேனாவைச் சேர்ந்த சுஜித்குமார் (எ) பிரவீன் பரசுராம் வாக்மோர் உள்ளிட்ட ஐந்து பேர் குறித்த விவரம் கிடைத்தது. பிரவீனைக் கைதுசெய்து விசாரித்தபோது, கௌரி லங்கேஷைக் கொல்ல ‘ஆபரேஷன் அம்மா’ என்ற திட்டத்தை வகுத்ததும், அதை நிறைவேற்றச் சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோரைத் தேர்வுசெய்து பெல்காமில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.
பரசுராம் வாக்மோர் அளித்த வாக்குமூலத்தில், “துப்பாக்கிச் சுடும் பயிற்சி முடிந்ததும் இந்து மதத்தைக் காக்க ஒரு பெண்ணைக் கொலைசெய்ய வேண்டும் என்று கூறினார்கள். நானும் அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால் நான் கொல்லப்போகும் நபர் யார் என்று எனக்குத் தெரியாது. கௌரி லங்கேஷைப் பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு வந்த உத்தரவின்படி செப்டம்பர் 3-ஆம் தேதி பெங்களூரு அருகே உள்ள பிரவீன்குமார் வீட்டில் தங்கினேன். பிறகு நான் கொலை செய்ய வேண்டிய பெண்ணின் வீட்டையும், அந்தப் பெண்ணையும் காட்டினார்கள்” என்று தெரிவித்தார்.
பி.ஜே.பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா அமைப்பினர் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் திட்டமிட்டு, இந்துத்துவா அமைப்பினரை இவ்வழக்கில் கொலையாளிகளாகச் சித்தரித்துள்ளதாக குற்றம்சாட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கொலையாளி பரசுராம் வாக்மோர், ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் உடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.
கௌரியின் வழக்கை விசாரித்து வரும் காவல்துறை ஜூலை25, 2021 வரை 18 பேரை கைது செய்துள்ளது. இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.
”நீ என்னை உன் பலம் கொண்டு அடிக்கிறாய்
உன்னைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்
என் கருப்புத்தோல் சிவக்கும் மட்டும் கிழிக்கிறாய்
நான் சிரிக்கிறேன்
நாங்கள் ஒன்றிணைந்து மேலெழும் காலத்தில்
உன் வெள்ளை சாம்ராஜ்ஜியத்தின்
தடங்கள் இருக்காது என்பதை நினைவு கொள்”
என்கிற கருப்பின கவிதை நினைவுக்கு வருகிறது. நாம் ஒன்றிணையும் காலத்தில் நம்மை நெரித்திருக்கும் விலங்கு தெறிக்கும்.
கட்டுரையாளர் – சந்துரு
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.