Aran Sei

அமெரிக்க டாலரின் இடத்தைப் பிடிக்குமா சீன நாணயமான ரென்மின்பி? – மாறி வரும் சர்வதேச பொருளாதார சூழல்கள்

image credit : project-syndicate.org

டாலரின் பலவீனமான மேலாதிக்கம் – கென்னத் ரோகாஃப்

லிமையான அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தைகளில் தொடர்ந்து மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், டாலரின் ஆதிக்கம் நமக்குத் தெரிவதை விட பலவீனமாக இருக்கலாம். ஏனென்றால், சீனாவின் அன்னியச் செலாவணி அமைப்பில் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் சர்வதேச பணவியல் ஒழுங்கமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைத் தூண்டுவதாக உள்ளது.

சீன நாணயமான ரென்மின்பியை ஒரு சில நாணயங்களின் தொகுப்பின் மதிப்புடன் இணைத்திருப்பதற்கு, சீன அரசு பல காரணங்களுக்காக விரைவில் முடிவு கட்டக் கூடும். அன்னியச் செலாவணி வீதம், குறிப்பாக டாலருக்கு எதிராக, மேலும் சுயேச்சையாக ஏறி இறங்குவதற்கு வழி வகுக்கும் பணவீக்கத்தை இலக்காகக் கொண்ட முறைக்கு சீனா மாறக் கூடும். அது நடக்கும் போது, ஆசியாவின் பெரும்பாலான நாடுகள் சீனாவைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கலாம்.. அதைத் தொடர்ந்து, தற்போது, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்குக்கு நங்கூரமாக உள்ள நாணயமான டாலர் அதன் முக்கியத்துவத்தில் கிட்டத்தட்ட பாதியை இழக்கக்கூடும்.

தனது பெருமளவிலான அரசுக் கடன்களுக்கும் தனியார் கடன்களுக்கும் அமெரிக்கா டாலரின் சிறப்பு அந்தஸ்தை பெருமளவு சார்ந்துள்ளது (இதனை, அப்போதைய பிரெஞ்சு நிதி அமைச்சர் வலேரி கிஸ்கார்ட், அமெரிக்காவின் “விலை மிகுந்த சலுகை” என்று பிரபலமாக குறிப்பிட்டிருந்தார்). இதை வைத்துப் பார்க்கும் போது அத்தகைய ஒரு நகர்வின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவாக இருக்கும். கொரோனா பெருந்தொற்றின் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு அமெரிக்க அரசு பற்றாக்குறை நிதி முறையை தீவிரமாக பயன்படுத்தி வரும் நிலையில், அமெரிக்கா தனது கடன்களை பராமரிப்பதற்கான திறன் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.

சீன நாணயம் மேலும் சுயேச்சையாக்கப்பட வேண்டும் என்பதற்கு நீண்ட காலமாக முன் வைக்கப்படும் வாதம், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தாளத்துக்கு ஆட்டம் போட அவசியம் இல்லாத அளவுக்கு சீன பொருளாதாரம் மிகப் பெரியது என்பதாகும். சீன அரசின் மூலதன கட்டுப்பாடுகள் ஓரளவுதான் பாதுகாப்பை அளிக்கின்றன. சர்வதேச விலைகளில் அளவிடப்படும் போது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பை 2014-ம் ஆண்டில் கடந்தது. சீனப் பொருளாதாரம் ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் விட வேகமாக இன்னும் கூட வளர்ந்து வருகிறது. சீனா தனது அன்னியச் செலாவணி வீதத்தை மேலும் சுயேச்சையானதாக்குவதற்கான வாதத்தை இது மேலும் வலுவாக்குகிறது.

இது தொடர்பாக, சமீபத்தில் முன்வைக்கப்படும் இன்னொரு வாதம், உலகப் பொருளாதார பரிவர்த்தனைகளின் மையமாக டாலர் இருப்பதன் காரணமாக, உலகளாவிய பொருளாதார பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை அமெரிக்க அரசு எளிதாக பெற முடிகிறது என்பதாகும். இது ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு முக்கியமான கவலையாக உள்ளது. கொள்கையளவில், டாலர் பரிவர்த்தனைகள் உலகில் எங்கு வேண்டுமானாலும் தீர்த்து கொள்ளப்படலாம், ஆனால், அமெரிக்க வங்கிகளுக்கும் தீர்வகங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவு இயல்பான ஆதாயம் உள்ளது. ஏனென்றால் அவற்றுக்கு அமெரிக்க ரிசர்வ் வங்கியின் மறைமுகமான (அல்லது வெளிப்படையான) பின்புலம் உள்ளது. ஒரு நெருக்கடியின் போது நாணயத்தை (பணத்தை) வெளியிடுவதற்கான வரம்பற்ற திறனை அமெரிக்க ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது. எனவே, அமெரிக்க வங்கிகளுடனும் தீர்வகங்களுடனும் ஒப்பிடும் போது, அமெரிக்காவுக்கு வெளியில் உள்ள தீர்வகங்கள் நம்பிக்கை இழப்பு என்ற நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையிலேயே எப்போதும் உள்ளன. யூரோ மண்டலம் கூட இந்தப் பிரச்சினையோடு போராடியுள்ளது.

மேலும், வர்த்தகத் துறையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த கொள்கை முடிவுகள் விரைவில் கைவிடப்படப் போவதில்லை. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பரவலாக உடன்படும் ஒரு சில பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகும். வர்த்தகத்தில் உலகமயமாக்கல் நீக்கப்படுவது டாலரை மேலும் பலவீனப்படுத்துகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சீன நாணயமான ரென்மின்பி அமெரிக்க டாலருடன் பிணைக்கப்பட்டிருப்பதை மாற்றுவதற்கான முயற்சியில், சீனாவின் கொள்கை வகுப்பாளர்கள் பல தடைகளை எதிர்கொள்கின்றனர். ஆனால், அவர்களுக்கே உரிய பாணியில், அவர்கள் பல முனைகளில் படிப்படியான தயாரிப்புப் பணிகளை செய்து வருகின்றனர். அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ரென்மின்பி கடன் பத்திரங்களை வாங்குவதை சீன அரசு படிப்படியாக அனுமதித்து வருகிறது. மேலும் 2016-ம் ஆண்டில், சர்வதேச நாணய நிதியம், அதன் சேம கையிருப்புக்கான கருவியாக பயன்படுத்தும், சிறப்பு பண உரிமைகளின் மதிப்பை, நிர்ணயிக்கும் முக்கிய நாணயங்களின் தொகுப்பில் ரென்மின்பியையும் சேர்த்தது.

கூடுதலாக, மத்திய வங்கிக்கான மின்னணு நாணயத்தை உருவாக்குவதில் சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி மற்ற முக்கியமான நாடுகளின் மத்திய வங்கிகளை விட மிகவும் முன்னணியில் உள்ளது. சீன மக்கள் வங்கியின் மின்னணு நாணயம் தற்போது முற்றிலும் உள்நாட்டு பயன்பாட்டுக்காக மட்டுமே இருந்தாலும், எதிர்காலத்தில் ரென்மின்பி சர்வதேச அளவில், குறிப்பாக வரவிருக்கும் சீனாவின் நாணய முறையை நோக்கி நகரும் நாடுகளில், பயன்படுத்தப்படுவதை இது எளிதாக்கும். தற்போதைய நாணய முறை பெருமளவு பொருளாதார பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை அமெரிக்க அரசிற்கு கிடைக்கச் செய்வது போல, ரென்மின்பியின் மின்னணு பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை சீனா பெறுவது எளிதாக்கப்படும்.

மற்ற ஆசிய நாடுகள் உண்மையில் சீனாவுடன் இணையுமா? பல நாடுகளும் தொடர்ந்து டாலரைச் சார்ந்தே இருக்கும்படி செய்ய அமெரிக்கா கடுமையாக முயற்சிக்கும் என்பது நிச்சயம். ஆனால், அது ஒரு அமெரிக்காவுக்கு பாதகமான போராட்டமாகத்தான் இருக்கும். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்கா பிரிட்டனை விஞ்சி உலகின் மிகப்பெரிய வர்த்தக நாடாக உருவானது போலவே, சீனா நீண்ட காலத்திற்கு முன்பே சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவை விஞ்சி விட்டது.

ஜப்பானும் இந்தியாவும் தம் வழியில் தொடரக் கூடும் என்பது உண்மைதான். ஆனால் சீனா ரென்மின்பியை மேலும் சுயேச்சையானதாக மாற்றும் பட்சத்தில், அவை தமது அன்னியச் செலாவணி கையிருப்புகளில் ரென்மின்பிக்கு டாலருக்கு நிகரான முக்கியத்துவத்தைக் கொடுப்பது குறைந்த பட்சம் நடக்கக் கூடும்.

இப்போது, ஆசிய நாடுகள் டாலருடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருப்பது, 1960-களிலும் 1970-களின் தொடக்கத்திலும் ஐரோப்பிய நாடுகளின் நிலைமையுடன் தெளிவாக ஒப்பிடக் கூடியதாக உள்ளது. அந்த சகாப்தம், உயர் பணவீக்கத்தோடும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட நிலையான அன்னியச் செலாவணி வீதங்களை உறுதி செய்வதற்கான பிரெட்டன் வுட்ஸ் அமைப்பின் வீழ்ச்சியோடும் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவுடனான வர்த்தகத்தை விட ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் முக்கியமானது என்பதை ஐரோப்பாவின் பெரும்பகுதி அப்போது உணர்ந்து கொண்டது. இது, ஜெர்மானிய மார்க் குழு ஒன்றின் உருவாக்கத்துக்கு வழி வகுத்தது.. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அது ஐரோப்பிய நாடுகளுக்கான ஒற்றை நாணயமான யூரோ தோன்றுவதற்கு வழி வகுத்தது.

சீன ரென்மின்பி ஒரே நாளில் உலக நாணயமாக மாறி விடும் என்று இதற்குப் பொருள் இல்லை. உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவது என்ற அந்தஸ்து ஒரு நாணயத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். எடுத்துக்காட்டாக, முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட 20 ஆண்டுகளில், உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் கையிருப்பில், புதிதாக சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருந்த டாலர், 1800-களின் தொடக்கத்தில் நெப்போலினிய போர்களுக்குப் பிந்தைய 100 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி உலக நாணயமாக விளங்கிய பிரிட்டிஷ் பவுண்டுக்கு சமமான முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது.

யூரோ, ரென்மின்பி, டாலர் ஆகிய மூன்றும் உலக நாணயங்கள் என்ற முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்வதில் என்ன பிரச்சினை உள்ளது? அத்தகைய ஒரு மாற்றத்துக்கு பணவியல் சந்தைகளும் கொள்கை வகுப்பாளர்களும் தயாராக இல்லை என்பதைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. அமெரிக்க அரசு கடன் வாங்குவதற்கான வட்டி வீதங்கள் நிச்சயம் பாதிக்கப்படும். ஆனால், உண்மையில் மிகப்பெரிய தாக்கம் அமெரிக்க கார்ப்பரேட்டுகள் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் கடன் வாங்குவதன் மீது ஏற்படும்.

டாலர் கடன் பத்திரங்களை வாங்குவதற்கான உலக நாடுகளின் தாகம் கிட்டத்தட்ட தணிக்க முடியாதது என்பது அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களுக்கு மத்தியிலும் பல பொருளாதார வல்லுநர்களுக்கு மத்தியிலும் ஒரு நம்பிக்கையாக உள்ளது. ஆனால் சீனா தனது அன்னியச் செலாவணி வீத நடைமுறைகளை நவீனமயமாக்குவது டாலரின் இந்த அந்தஸ்துக்கு ஒரு வலுவான அடியை தரக் கூடும்.

project-syndicate.org இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்