Aran Sei

‘இந்தியாவில் மனுஸ்மிருதி எதிர்ப்பே, பெண்ணுரிமை போராட்டம்’ – கவிதா கிருஷ்ணன்

கவிதா கிருஷ்ணன் - Image Credit : Wikipedia

“பெரியாரும் பெண்ணுரிமையும்” என்ற ஒரு இணைய வழி கருத்தரங்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மனுஸ்மிருதியைப் பற்றி பெரியார் கூறியிருந்ததை மேற்கோள் காட்டி, “மனு தர்மம்” பெண்களை இழிவுபடுத்துவதாகவும், ‘அவர்கள் இயல்பாகவே விபச்சாரிகள்’ என்று கூறுவதாகவும் பேசியிருந்தார்.

பாஜகவின் காவலராக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் குஷ்பு சுந்தர் திருமாவளவனின் பேச்சு பெண்களை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டினார். சொல்லி வைத்தது போல, சென்னையில் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உண்மையில், பெண்களை அவமதிப்பது மனுஸ்மிருதி தான், திருமாவளவன் அதிலிருந்து மேற்கோள் காட்ட மட்டும்தான் செய்தார். குஷ்புவும் அவரது கட்சியும் மனுஸ்மிருதிக்காக கோபப்படுகிறார்கள், பெண்களுக்காக இல்லை என்று அவர்களுக்கு நன்கு தெரியும், ஆனால் அதை அவர்கள் வெளியில் சொல்ல முடியாது. அதனால்தான், மனுஸ்மிருதியில் “பெண்களை இழிவுபடுத்தும் ஒரு வார்த்தை கூட இல்லை” என்று குஷ்பு சாதிக்கிறார்.

“பெண்கள் மதிக்கப்படும் இடங்களில் தேவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர், ஆனால் பெண்கள் மதிக்கப்படாத இடங்களில் எல்லா சடங்குகளும் பலனற்றவை” என்று பொது நிகழ்வுகளில் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டுவது இந்தியாவில் வழக்கமானது (மனுவின் சட்டங்கள், 3:58, டோனிகர் மற்றும் ஸ்மித், பெங்குயின் புக்ஸ், 1991). அதே மனுஸ்மிருதியில், “பூமியில் ஆண்களை தவறிழைக்கச் செய்வது பெண்களின் இயல்பு; எனவே, ஜாக்கிரதையான ஆண்கள் விரும்பத்தகாத பெண்களிடையே ஜாக்கிரதையின்றியும் விருப்பத்தோடும் போவதில்லை.” என்று சொல்லப்படுகிறது.

பாலியல் ரீதியாக தூண்டுபவர்கள், தவறிழைக்கத் தூண்டுபவர்கள், அல்லது நரகத்தின் நுழைவாயில்கள் என்று பெண்களை சித்தரிப்பது மனுவுக்கு மட்டும் தனித்துவமானது அல்ல. கிறிஸ்துவ நூல்களும், இஸ்லாமிய நூல்களும் பௌத்த நூல்களும் கூட பெண்களைப் பற்றி எச்சரிக்கின்றன, அவர்களை பாலியல் இச்சை மிகுந்தவர்களாகவும், இரகசியத்தன்மை வாய்ந்தவர்களாகவும், தந்திரமானவர்களாகவும், ஆண்களுக்கு வலை போடுபவர்களாகவும் சித்தரிக்கின்றன.

மனுஸ்மிருதி “பெண்களை விபச்சாரிகளாகக் கருதுகிறது” என்று சொல்வது தவறான பொருள் தருவது. மனுஸ்மிருதி பெண்களை பாலியல் ஒழுக்கம் இல்லாதவர்களாக சொல்வதாலும், அதன் மூலம் பெண்களை அவமதிப்பதாலும் தான் அது தீங்கிழைக்கிறது என்று பொருள்படுகிறது. ஆனால், உண்மையில், மனுஸ்மிருதியின் தீங்கு பெண்களின் சுதந்திரத்தை இறுக்கமாகக் கட்டுப்படுத்துவதற்கான அதன் பரிந்துரைகளில் உள்ளது.

மனு கூறுகிறார், “ஒரு பெண், ஒரு இளம் பெண், அல்லது ஒரு வயதான பெண்மணி கூட (தன் சொந்த வீட்டில்) கூட சுதந்திரமாக எதையும் செய்யக்கூடாது. குழந்தை பருவத்தில் ஒரு பெண் தன் தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், இளமையில் கணவனின் கீழ் இருக்க வேண்டும், கணவர் இறந்தவுடன், அவரது மகன்களின் கீழ் இருக்க வேண்டும்.”

ஒரு பெண்ணைப் பற்றி ஒருவர் சொல்லக்கூடிய மிக மோசமான விஷயம், “அவர் பாலியல் ஒழுக்கம் இல்லாதவர் அல்லது விபச்சாரி என்பதுதான்” என்ற கருத்தை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். மனுஸ்மிருதியைப் பற்றிய நமது விமர்சனம் அவ்வாறு அமைய வேண்டும். மனு ஸ்மிருதியின் தீங்கு அது பெண்களை விபச்சாரிகளாக நடத்துமாறு நம்மை கேட்டுக் கொள்கிறது என்ற உண்மையில்  இல்லை. மாறாக, தந்தைகளாலும், கணவர்களாலும், மகன்களாலும் இறுக்கமாக கட்டுப்படுத்த வேண்டிய மகள்களாக, மனைவிகளாக, தாய்மார்களாக பெண்களை நடத்தும்படி அறிவுறுத்துவதில்தான் மனு ஸ்மிருதியின் தீங்கு உள்ளது. மனு இந்தக் கட்டுப்பாட்டை அடக்குமுறையாகவும் ஒடுக்குமுறையாகவும் இல்லாமல் “புனிதமா”கவும் “பாதுகாப்பாகவும்” கருதச் சொல்கிறார்.

சாதி படியமைவையும், சாதி அடிப்படையிலான பிரிவினைகளையும் உடைந்து போகாமல் தடுப்பதற்கு பெண்கள் மீதான மனுஸ்மிருதியின் இந்த வெறித்தனமான கட்டுப்பாடு தேவையாக உள்ளது.

“தன்னை விட மேல் சாதியைச் சேர்ந்த ஒரு ஆணுடன் உறவு கொள்ளும் ஒரு பெண்ணுக்கு எந்தத் தண்டனையும் இல்லை; தன்னை விட “தாழ்ந்த” சாதியைச் சேர்ந்த ஒரு ஆணுடன் உறவு கொள்ளும் ஒரு பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட வேண்டும்; ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு ஆண் மேல் சாதியைச் சேர்ந்த பெண்ணுடன் உறவு கொண்டால் அவன் கொல்லப்பட வேண்டும்.” என்று மனுஸ்மிருதி வகுக்கிறது

ஆனால், இன்றைக்கு இந்தியாவில் மனுஸ்மிருதியை யாராவது உண்மையில் படிக்கிறார்களா, அது கடைப்பிடிக்கப்படுகிறதா என்று சிலர் கேட்கிறார்கள். மனுவின் சட்டங்களின் ஆவி இந்தியாவில் நவீன சமுதாயத்தின் மீதும், நவீன அரசியலின் மீதும் தாக்கம் செலுத்துகிறது, அவற்றை மாற்றியமைக்கிறது என்பதை உண்மைகள் காட்டுகின்றன.

2015–16 ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி, 15 முதல் 49 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்களில் வெறும் 41 சதவீதம் பேர் மட்டுமே சந்தைக்கு போவதற்கும், மருத்துவமனைக்கு போவதற்கும், தமது சமூகத்திற்கு வெளியே போவதற்கும் தனியாக அனுமதிக்கப்படுகிறார்கள். (NFHS-4, அட்டவணை 15.13).

“பாலியல் வல்லுறவு என வகைப்படுத்தப்பட்டவற்றில் 40 சதவீதம் இரு பாலினருக்கும் இடையே சம்மதத்துடன் நிகழும் பாலியல் உறவுகளை பெற்றோர் குற்றமயமாக்கல் ஆக்குவது ஆகும். இது பெரும்பாலும் வெவ்வேறு சாதி இணையருக்கு இடையே, அல்லது வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இணையருக்கு இடையே நிகழும் உறவுகள் தொடர்பானது” (ருக்மிணி எஸ், ‘டெல்லி பாலியல் வல்லுறவு வழக்குகளின் பல வகைகள்’, தி இந்து, ஜூலை 29, 2014)

பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதிலும் மட்டுப்படுத்துவதிலும் இந்தியர்களின் அக்கறையை புரிந்து கொள்வதற்கான திறவுகோல் சாதியில் உள்ளது – மேலும், நமது சமூகங்களிலும் பிரிக்க முடியாமல் பிணைந்துள்ள சாதிய மற்றும் பாலினக் குறியீடுகளைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் மனுஸ்மிருதியில் உள்ளது.

பெண்கள் கண்காணிக்கப்படும், அவர்களின் நகர்வுகள் தடைசெய்யப்படும் ஒவ்வொரு வீட்டிலும்; வெவ்வேறு சாதி ஆண் பெண்ணுக்கு இடையிலான, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஆண் பெண்ணுக்கு இடையிலான திருமணத்திற்கு எதிரான ஒவ்வொரு எதிர்ப்பிலும்; ஒரு தலித் மனிதன் ஒரு தலித் அல்லாத பெண்ணை திருமணம் செய்தபின், தலித் கிராமங்கள் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலிலும்; இந்து பெண்களுக்கும் முஸ்லீம் ஆண்களுக்கும் இடையேயான காதலை “லவ் ஜிஹாத்” என்று முத்திரை குத்துவதான ஆர்எஸ்எஸ்-ன் பிரச்சாரத்திலும் – நாம் பார்ப்பது துடிப்பான நடைமுறையில் இருக்கும் மனுஸ்மிருதியை.

இன்று, இந்தியப் பெண்மையை அவமதிப்பதாக அவர்கள் கருதும் மனுஸ்மிருதியின் கருத்துக்களுக்காக திருமாவளவன் மீது தாக்குதல் நடத்துவதில் பாஜக சார்பாக நடிகர் குஷ்பு சுந்தர் முன்னணியில் உள்ளார். 2005-ம் ஆண்டில், குஷ்பு இதேபோன்ற ஆணாதிக்க தார்மீக சீற்றத்தின் இலக்காக இருந்தார். பாதுகாப்பாக உடலுறவு வைத்துக் கொள்ளும் வரை திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் சரியானதுதான் என்று அவர் கூறியிருந்தார் – “தமிழ் பெண்மையையும் கற்பையும் அவதூறு செய்ததாக” அவர் மீது குற்றம் சாட்டி 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குஷ்பு மீதான தாக்குதலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைமை தாங்கியது.

பாமக தலித் ஆண்களுக்கும் இடைநிலை சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் இடையிலான திருமணங்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பெயர் பெற்ற கட்சி. அந்த நேரத்தில், தொல். திருமாவளவனும் அவரது கட்சியும் கூட குஷ்புவுக்கு எதிராக களத்தில் இறங்கியிருந்தன. திருமாவளவன் குஷ்புவின் கருத்துக்கள் “பொது ஒழுங்கிற்கு எதிரானது” என்று கூறினார்.

2005-ம் ஆண்டு அவர் பெண் தூய்மை பற்றியும் கற்பு பற்றியும் கூறிய கருத்துக்கள், இன்று அவரும் நாம் அனைவரும் எதிர்த்து போராடும் அதே பார்ப்பன ஆணாதிக்க கருத்துக்களை வலுப்படுத்துவதாக இருந்தன என்பதை திருமாவளவன் ஒப்புக் கொண்டால், அது இந்தப் போராட்டத்துக்கு இன்னும் வலு சேர்க்கும்.

இந்தியாவில் மனுஸ்மிருதியை எதிர்த்து போராடா விட்டால் ஒருவர் பெண்ணுரிமை போராளியாக இருக்க முடியாது – ஒருவர் வலுவான பெண்ணுரிமை போராளியாக இல்லாமல், பெண்களின் நிபந்தனையற்ற சுதந்திரத்தை ஆதரிக்காமல் மனுஸ்மிருதியை எதிர்த்து போராட முடியாது.

-கவிதா கிருஷ்ணன்
(கட்டுரையாளர் அகில இந்திய முன்போக்கு பெண்கள் சங்கத்தின் செயலாளர், சிபிஐ(எம்எல்) கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்)

நன்றி : indianexpress.com
மொழியாக்கம் செய்யப்பட்டது

“இந்தியாவில், சாதி ஒழிப்பே பெண் விடுதலை ” – மீனா கந்தசாமி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்