Aran Sei

“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்

15 வது நிதி ஆணையத்தால் 2019 ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட விவசாய ஏற்றுமதிகள் தொடர்பான உயர்மட்ட வல்லுநர் குழு(HLEG), உள்நாட்டுத் தேவைகளை நிறைவு செய்யும் கட்டமைப்பு என்ற முந்தைய விவசாய ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றம் செய்வது மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து உபரி உற்பத்தியை ஏற்றுமதி இலக்கை அடைய பயன்படுத்துவது என்ற வகையில்  மூன்று விவசாயப் சட்டங்களின் முழுமையானப் பங்கை உறுதி செய்கின்றன. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள செயல்முறைகள் விவசாய வளங்களைப் பயன்படுத்துதல், நிலத்தின் மீதானக் கட்டுப்பாடு, பொதுக் கொள்முதல் மற்றும் உணவு ஆகியவற்றில் திட்டமிடப்பட்டுள்ள விவசாயத்திற்கான மாபெரும் கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

விவசாய ஏற்றுமதியை 4000 கோடி டாலரிலிருந்து 10,000 கோடி டாலராக உயர்த்துவது என்பது,  2022-23 ம் ஆண்டு வாக்கில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை “தேசிய கட்டாயம்” என்ற கருத்தைக் அடிப்படையாகக் கொண்டதாகும். அனைத்து வகையிலும் இந்த மகாதிட்டம் வெறும் “தேசிய திட்டம்” மட்டுமல்ல, மாறாக உள்ளார்ந்த முறையில் ஒரு பெரிய உலகளாவிய வேளாண்-வணிக நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். இந்தப் பேரழிவு கட்டவிழ்த்து விடும் தாக்கங்கள் ஒவ்வொரு உணவு நுகர்வோரையும் பாதிக்கும் என்பதுடன், ஏற்கனவே மோசமாக உள்ள, இந்தியாவின் 90% குடிமக்களின், குறிப்பாக நிலமற்ற, சிறு மற்றும் குறு விவசாயிகள், மற்றும் முறைசாராத் தொழிலாளர்களின் உணவுப் பாதுகாப்பு உரிமையை ஆபத்தில் ஆழ்த்திவிடும். தற்போது நமது உணவு உற்பத்தி உள்நாட்டுத் தேவையுடன் ஒப்பிட்டு  “உபரியாக” இருப்பதாக கருதினால், இந்திய அரசு ‘மேட் இன் இந்தியா’ கார்ப்பரேட் லாபத்திற்காக  உலகளவில், 2050 ம் ஆண்டிற்குள் மேலும் 200 கோடி மக்களுக்கு உணவளிக்க, வசதி செய்து கொடுக்கத் தயாராகி வருகிறது. வேளாண் வணிக கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் அரசாங்க கூட்டாளிகளால் ஆன அந்த உயர் மட்டக் குழு தனது ஒற்றைப் பயிர் மதிப்புப் சங்கிலி கூட்டமைப்பு, மாநிலத்திற்குள் போட்டி என்ற  வரைபடத்திற்கு ஆதரவாக  உலகளாவிய அனுபவத்தை மேற்கோள் காட்டுகிறது. அவர்கள் உற்பத்தியாளர் வலைப்பின்னலுக்கும், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கும் (FPO), வேளாண் வணிகர்களுக்கும், நிதிநிறுவனங்களுக்கும், கார்பரேட்டுகளுக்கும், நுகர்பொருள் வாரியங்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும், சந்தைகளின் உள்நாட்டு மட்டத்திலான தலையீடுகள் ஆகியவற்றிற்கும் தரகு வேலை செய்து ஒரு கூட்டமைப்பு (cluster) சங்கிலிக்கு ஆதரவு தர வைக்கின்றனர்.

உள்ளீடுகளை விற்பவர்கள், செயல்முறைபடுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் ஆகியோருக்கிடையே செங்குத்து உறவையும், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பம், பயிற்சி, மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை வழங்கும் அமைப்புகளுக்கு ஏற்பாடு செய்து தரும் அமைப்புகளுடன் கிடைமட்ட உறவையும் கட்டமைக்க அவர்கள் முயல்கின்றனர்.

உற்பத்தி, பதப்படுத்துதல், போக்குவரத்து மற்றும் சந்தை ஆகிய அனைத்து படிநிலைகளிலும் செலவைக் குறைக்கும் வணிகத்தை மேற்கொண்டு, வேளாண் வணிகத்தின் நலனுக்காக ( மற்றும் அதன்பிறகு விவசாயிகளுக்காக) பங்குதாரர்களை மதிப்புச் சங்கிலி முழுவதிலும்  ஒன்றாக இணைப்பது என்பதை இது கோடிட்டு காட்டுகிறது.

விவசாய உற்பத்தி அமைப்புகளின் பங்கும் கூட இதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது: வேளாண் வணிகம் மூலம் உள்ளீடுகளின் பெரும கொள்முதல், உற்பத்தியை ஒன்றுகூட்டுவது, மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைகள் ஆகியவற்றிற்குச் சேவை செய்யும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளை இணைப்பது. இந்த மதிப்புப் சங்கிலி கூட்டமைப்புகளைத் தனியார் துறையே நிறுவும் என்பதுடன், ஒரு குறிப்பிட்டப் பயிரை ‘ பொருளாதாரங்களின் அளவுகோல்கள்’ என்ற காரணத்தைக் காட்டி அரசு ஏற்படுத்தி இருக்கும் நுகர்வோர் வாரியம் மூலமாக ‘முனைக்கு முனை (end-to-end) ‘ செயல்படுத்தி, பல்வேறு மாநிலங்களிலும் அதனை(மதிப்புச் சங்கிலி கூட்டமைப்பை) பரவலாக்க முடியும்.

இந்த அறிக்கையின் ஒரு பிரிவு “விவசாயிகளின் கவலைகள்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் வேலையாட்களின் இருப்பை உறுதி செய்ய நூறுநாள் வேலைத்திட்ட (MGNREGA) பணியாளர்களை வேளாண் நடவடிக்கைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பச்சைக் கொடி காட்டுகிறது. ஆக உண்மையில், கார்ப்பரேட் துகள் தங்கள் லாபத்தை ஊதிப் பெருக்கிக் கொள்ள நூறுநாள் வேலைத் திட்ட பொது நிதியை, அவர்களுடைய ஊதியச் செலவை சேமிக்கும் செயல்முறையாக அவர்கள் கையிலேயே கொடுத்துவிடலாம் என அறிக்கை முன்மொழிகின்றது.

இந்த ஏற்றுமதி திட்டத்தை மேலும் உறுதிப்படுத்த அந்த அறிக்கை  மூன்று விவசாயப் சட்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்புக்காக அரசு ஒதுக்கும் நிதி, விவசாயிகளையும், தனியார் துறையையும் நேரடியாக இணைப்பதற்கு வசதி செய்து தரும் மையமாக இருக்கிறது  என்பதை உறுதி செய்கிறது.

“எளிதாக வணிகத்தை நடத்துவது, வணிக மோதல் விவகாரங்களை  விரைவாகத் தீர்ப்பது மற்றும் முதலீடு, ஏற்றுமதி ஊக்கத் தொகை, பொது உள்கட்டமைப்பு, இலக்கு சந்தைகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றில் ஏற்படும் தடைகளை விரைவாக நீக்குவது ஆகியவற்றை ஆதரிக்கும் கொள்கைகளைப் பின்பற்றுவதில் மத்திய அரசு ஒரு பங்காற்ற வேண்டும், என்று அது கூறுகிறது.

பயிர்களின் போட்டித்தன்மையை உணர சந்தைகளில் ஏற்படும் சிதைவுகளைக் குறைப்பதன் அவசியத்தையும் அது தெளிவாகக் கூறுகிறது. ” அரசுகள் உள்ளீடுகளுக்கான மானியங்களை ‘நேரடி பலன் மாற்றம்’ மூலம் மறு கட்டமைப்புப் செய்ய வேண்டிய அழுத்தமான தேவை உள்ளது. மேலும் குறைந்த பட்ச ஆதார விலையை,’ பற்றாக்குறை விலை செலுத்தும் திட்டம்’ என அரசு மறு கட்டமைப்புச் செய்ய வேண்டும்’ என்று விளக்குவதன் மூலம் மேற்கூறிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த அது வலியுறுத்துகிறது.

அரிசி, இறால், எருமைகள், நறுமணப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மாம்பழம் ஆகிய ஏழினையும் கட்டாய ஏற்றுமதி மதிப்புச் சங்கிலி பயிர்களாகவும், உணவு எண்ணெய் மற்றும் மரம் ஆகியவற்றை மாற்று இறக்குமதிப் பயிர்களாகவும் அது பச்சைக் கொடி காட்டி உள்ளது. மருந்து, நறுமணச் செடிகள் மற்றும் இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களை பெரிய அளவு பணச் சுழற்சிக்கானவையாக அது குறிப்பிடுகிறது.

இரகசியத்தை வெளியிடும் பயிர்கள்: அரிசி,பாமாலின் எண்ணெய் மற்றும் மரம்

உள்ளூர் கொள்முதல் மற்றும் அதிகரித்த குறைந்த பட்ச ஆதார விலைகள் ஆகியவை ஏற்றுமதிக்கான முக்கியத் தடைகளாக உள்ளன. ஏனெனில்,  இந்திய உணவுக் கழகம், உணவுப் பாதுகாப்புக் கருதி ‘முடைக்கால இருப்பு (buffer stock)’ விதிகளின் படி தீவிரமாக கொள்முதல் செய்வது, ஏற்றுமதிக்கான உபரி சேமிப்பு குறைந்து வருவதற்கு வழிவகுக்கிறது. இது சந்தை சீர்குலைவை ஏற்படுத்தி அதன் மூலம் இந்திய விலைகள் ஏற்றுமதியில் போட்டியிட இயலாமல் செய்கிறது,” என்கிறது அறிக்கை.

இந்திய உணவு கழகத்தின் கொள்முதல் முறையை மாற்றுவதே முதன்மை பரிந்துரை ஆகும். அதன்படி ‘முடைக்கால இருப்புத்’ தேவைகள் விலை வேறுபாட்டு திட்டத்தின்படி கட்டமைக்கப்பட வேண்டும். அதாவது குறைந்த பட்ச ஆதார விலைக்கும், திறந்த வெளிச் சந்தை விலைக்குமிடையே உள்ள வேறுபாடு ‘நேரடி பணப்பயனாக’ விவசாயிகளின் கணக்கில் நேரடியாகப் போடப்பட வேண்டும்.

இதனால், ஏற்றுமதிக்கான உபரி அதிகரிக்கும் என்றும், ‘முடைக்கால இருப்புக்கும்’ மேலுள்ள உபரி,  சந்தை விலையில் திறந்த வெளிச் சந்தைகளில் விற்கப்பட வேண்டும் என்றும் அது வாதிடுகிறது. ஏற்றுமதிக்கான போட்டி விலையை உயர்த்த தற்போது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) மட்டுமே தரப்பட்டு வரும் 3-5% துணைவட்டிச் சலுகையை (அரசே வட்டியை செலுத்துவது) பெரிய ஏற்றுமதி நிறுவனங்களுக்கும், பெயரை கட்டமைக்க (brand building) ஆகும் செலவிற்கான  மானியத்துடன் சேர்த்துத் தர வேண்டும் என்றும் அது வாதிடுகிறது. முந்தைய அரசாங்கங்களுடன் ஒப்பிடும் போது, இப்போது முன்மொழியப்பட்டுள்ளத் திட்டம், தற்போதைய ஆட்சியின் மாற்ற முடியாத நிலையை வலுப்படுத்துகிறது. ஒரு சமீபத்திய அறிக்கை,” உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான விவசாயக் கொள்கைகளில் கவனம் செலுத்திய முந்தைய அரசாங்கங்களின் தொடர்ச்சியான நிலையான நிலைப்பாடுகள், இந்தத் துறையில் உள்ள பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதில் இந்தியாவிற்கு நல்ல பயனைக் கொடுத்துள்ளது. என்கிறது. இதனால்தான், உலக வர்த்தக அமைப்பு மற்றும் இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் போன்ற பன்னாட்டு வர்த்தக பேச்சுவார்த்தைகளில், மொத்த விவசாய நில உடைமைகளில் 86% உள்ள சிறு, குறு நில உடைமையாளர்களுக்கான அரசின் விவசாயக் கொள்கைகள் முக்கியமாக உணவு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டவை என ஏற்றுக் கொள்ளும் வகையில் வாதிட முடிந்தது என்றும் அது கூறுகிறது. “இது உலகளாவிய வேளாண் வணிகத்தின் நேர்மையற்ற போட்டியை சந்திக்கும் சிறு உற்பத்தியாளர்களுக்காக அரசு பயனுள்ள கட்டண பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அனுமதித்தது மட்டுமின்றி, விவசாயத்தை ஒரு சாத்தியமானத் தொழிலாக மாற்றுவதற்குப் போதுமான மானியங்களையும் வழங்க முடிந்தது.” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

எனினும், இன்று இந்திய மற்றும் உலகளாவிய வேளாண் வணிகம் பகிர்ந்து கொள்ளும் நலன்கள் உள்ளன. அவை அரசின் நலன்களோடு இணைந்ததாகவும் உள்ளன.  எனவேதான், முதன் முறையாக ஒரு அதிகாரபூராவ அரசு அறிக்கை, இந்தியா ‘முடைக்கால இருப்பு’ விதிமுறைகளுக்கு மேல் அரிசியை கொள்முதல் செய்யக் கூடாது என்றும், அதனையே ஏற்றுமதிக்காக வைக்க வேண்டும் என்று உறுதி செய்தது.

இது, பொது விநியோக முறையின் இலக்கை நிறைவு செய்ய போதிய ‘முடைக்கால இருப்பு’ என்ற அசல் கருத்திற்கு நம்மை திரும்ப கொண்டு செல்கிறது. “‘முடைக்கால இருப்பு’, ‘உபரி’ என தவறாகக் கூறப்படுகிறது, அது அனைவருக்குமான பொது விநியோக முறை மூலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்” என்று உணவு உரிமை செயற்பாட்டாளர்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர். அவர்கள் பொது விநியோக முறையை அனைவருக்குமானதாக, மாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகின்றனர். அதிலும்  மிகப் பெரிய அளவில் வாழ்வாதாரங்கள் அழிவு, வேலைவாய்ப்பின்மை,பட்டினி ஆகியவை அதிகரித்துக் கொண்டே வரும் இந்த கோவிட் 19 சூழலில் அது மிகவும் அவசியமானது என்கின்றனர் அவர்கள்.

எண்ணெய் தன்னிறைவிற்காக பனைமரத் தோட்டங்கள்- வெட்கங்கெட்ட நில அபகரிப்பை மூடி மறைக்கவே

“நிலத்தடி நீர்மட்டம் மிகவும் வேகமாக குறைந்து வருவதால் பஞ்சாப்பில் இருந்து அரிசியை நகர்த்தி, அரசிக்கு மிகவும் ஏதுவான வேளாண் சூழல் உள்ள சட்டிஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்குக் கொண்டு செல்லுங்கள்,” என்று கூறுகிறது அந்த அறிக்கை. முரண்பாடாக, இந்தியாவை எண்ணெய் தேவையில் தன்னிறைவு அடையச் செய்ய  தீவிரமாக பனைமரத் தோட்டங்களை உருவாக்கலாம் என்று பரிந்துரைக்கும் வல்லுநர்கள், அதே மூச்சில், ஒரு நாளைக்கு ஒரு பனை மரம் 300 லிட்டர் நீரைக் குடிக்கும் என்பதால் நீர் பற்றாக்குறை உள்ள இந்தியாவில் அது சுற்றுப்புற சூழல் பேரழிவை ஏற்படுத்தி விடும் என்றும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆரம்பத்திலேயே, 1990 களில் எண்ணெயில் தன்னிறைவு பெற்றிருந்த நிலையில் இருந்து, அடுத்தடுத்த அரசாங்கங்கள் எவ்வாறு நகர்ந்து 60% எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்தன. அதிலும் 2020 ம் ஆண்டின்  இறக்குமதியில் 50% பாமாலின் எண்ணெய்தான். அதற்கும் மேலாக, விவசாயிகளை பனைமரத் தோட்டங்களை வளர்ப்பதற்கு மாறுவதற்கு அரசு குறைந்த பட்ச ஆதார விலை கொடுக்க வேண்டும் என்பதுடன், பனைமரம் காய்க்க ஆகும் முதல் ஆறு வருடங்களுக்கு விவசாயிகளுக்கு மானியமும் தர வேண்டும். ஆகவே, நேரடியாக விவசாயிகளுக்கு உதவ வேண்டிய நிலையைத் தவிர்ப்பதற்காக இதுவரை  தோட்டக்கலைப் பயிராக இருந்த பனையைத், தனியார் முதலீட்டைக் கவரும் வகையில்   தோட்டப் பயிராக மாற்ற பரிந்துரை செய்கிறார்கள்.

ஏறத்தாழ 20 லட்சம் ‘தரிசு நிலங்கள்’ மற்றும் வேளாண்மைக்கு ஏற்ற காலநிலைக்குப் பொருந்தியுள்ள நீர்ப்பாசன வசதி உள்ள நிலங்களில் பிற பயிர்களிலிருந்து, குறிப்பாக நெல் மற்றும் கரும்பு சாகுபடியிலிருந்து மாற்றி பனைமரத்தோட்டங்களின் பரப்பை அதிகரிக்கும் யுக்திகளை வகுப்பதில் கட்டாயம் கவனம் செலுத்து வேண்டும் என்றும்,  தொழில்துறையை தனிப்பட்ட முறையில்  இந்தத் தோட்டங்களை சொந்தமாகவும், மேலாண்மை செய்யவும் முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு அறிக்கை பரிந்துரை செய்கிறது., விவசாயிகளிடமிருந்து நிலங்களை தனியார் பெற உதவும் வகையில், வெளிப்படையாக 30 ஆண்டுகளுக்கு நிலங்களைக் குத்தகை விடுவதற்கு ஏற்ப நிலக் குத்தகை விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று அது கூறுகிறது.

இது, சாகுபடியில் அதிவேக அதிகரிப்பையும், அதன் வழியாக 2024-25 ம் ஆண்டில் பாமாலின் எண்ணெய் இறக்குமதிக்கான செலவை 1,530 கோடி டாலரிலிருந்து 1,090 கோடி டாலராக குறைத்து, பொருளாதாரங்களை சமநிலைக்குக் கொண்டு வரும் என்று வாதிடுகிறது.

சுருக்கமாகக் கூறினால், இந்த நிலக் குத்தகை ஏற்பாடுகள் கார்ப்பரேட்டுகளின் மாபெரும் நில அபகரிப்பில்தான் முடியும்.(எனவேதான் நாடு முழுவதும் நில ஆவணங்களை எண்ணியலாக்குவது மிக அவசரமான முன் தேவையாக உள்ளது எனவும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.)  மேலும் அதே போல் ‘தரிசு நிலம்’ என்று கூறி கைப்பற்றப்படும் நிலங்கள் கூட தரிசு என்று கூற முடியாத வகையில் அவை முக்கிய சமூக வாழ்வாதாரங்களான விலங்குகளை மேய்ப்பது, பயிரிடப்படாமலே விளையும் உணவுகளை சேகரிப்பது மற்றும் விறகு போன்றவற்றிற்கு பயன்படுபவைதான்.

ஆதிவாசிகளின் உரிமைகள் மீறப்படுகின்றன

நில அபகரிப்பில் மூன்றாவது செயல் முறை, ஆதிவாசி சமூகங்கள் வாழும் பகுதிகளில், பெரும்பாலும் அட்டவணை V மற்றும் VI ன் கீழ் வரும் காடுகள் உள்ள நிலங்களை அப்பட்டமாக அபகரிக்க வழி செய்கிறது. இதனை நியாயப்படுத்த, 2025 ற்குள் எவ்வாறு இந்தியா மர இறக்குமதியை 950 கோடி டாலரிலிருந்து 650 கோடி டாலராக குறைப்பதுடன், காட்டுப் பகுதி தோட்டங்களை அதிகரிப்பதன் மூலம் 1.5% நிலத்தை வனப்பகுதியாக  மாற்ற முடியும் என்ற வாதத்தை முன் வைக்கிறது.

காடுகளை உருவாக்கும் வாய்ப்பாக அடையாளம் காட்டும் வனத் தோட்டங்கள்,

(1) தொழில்துறைக்கு (50 லட்சம் ஹெக்டேர் நிலத்தை) குத்தகைக்கு விட்டு, தொழில்துறையுடன் இணைந்த சலுகை மற்றும் மாதிரி மரத் தோட்டங்களை உருவாக்குவதன்மூலம் வன வளர்ச்சிக் கழகத்தின் உற்பத்தியை மேம்படுத்துவது,

(2) சீரழிந்த காடுகளை (30 லட்சம் ஹெக்டேர்) மலேசியா போன்ற தெற்காசிய நாடுகள் வழியில் கூட்டு தொழில்துறை குத்தகையின் கீழ் கொண்டு வருவது.

இதற்காக அட்டவணை V  பகுதிகளில் மிக அதிக ஆதிவாசிகள் வாழும் பகுதிகளான மத்தியப்பிரதேசம், மகாராட்டிரம், ஒடிஷா, சட்டீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள காடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் எளிதாக நிறைவேற்ற சுற்றுச்சூழல், காடு மற்றும் கால நிலை மாற்றத் துறை 1980 ம் ஆண்டின் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தனியார் துறை ஈடுபட ஏதுவாக வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்றும், மேலும் பயிரிடுவதற்கான நிதி காடுகள் வளர்ப்பு இழப்பீட்டு நிதியிலிருந்தும், பசுமை இந்தியா நடவடிக்கையிலிருந்தும் பெறப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.  இது, மரத்திலிருந்து மட்டுமல்ல உலகளாவிய கார்பன் வர்த்தக சந்தைகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமும் லாபம் அடைவதே அவர்கள் நோக்கம் என்பதை வெளிப்படுத்துகிறது. நில  உடைமையாளர்களுடனான தொழில்துறையுடன் தொடர்புடைய வேளாண்- வனவியல் தோட்டங்களுக்கான ஒப்பந்த வேளாண்மை,  ஒப்பந்தத்தை ஆணித்தரமாக்கி விடும் என்பதில் மிக அதிக உறுதியாக அவர்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. அட்டவணை V பகுதிகளில் எந்த வித வளர்ச்சி, சந்தை, அல்லது காடுகளில் தலையிடுவது ஆகியவற்றிற்கு கிராம சபையின் அனுமதி வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட முன் நிபந்தனையை வசதியாக அறிக்கை புறக்கணிக்கிறது.

கார்ப்பரேட்டுகளின் பைகளை நிரப்ப, வேளாண்- வணிகமும், அரசும் ஆதிவாசிகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள பாதுகாப்புகளை விரைவாக முடிக்கும் முறையை சந்தேகத்திற்கிடமின்றி இது வகுத்துள்ளது‌.

வியட்நாமின் ‘அதிசயம்’

தனது மக்களுக்கு மட்டுமே உணவளிக்கும் கூடிய அளவில் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த ஒரு நாடு உலகில் அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக மாற முடிந்ததையே  ‘ஒளிரும்’ எடுத்துக்காட்டாக, இங்கு உணவு பாதுகாப்பையும், வருவாய்களையும் கட்டி எழுப்ப, உயர்மட்டக்குழு உயர்த்திப் பிடிக்கிறது. இருப்பினும், இந்த  ” வெற்றிகரமான கதையாகக்’ கூறப்படுவதுதான், உணவு இறையாண்மை கூட்டணியில் உள்ள நம்மில் சிலர் கண்டுபிடித்தது போல, தென்கிழக்கு ஆசியாவின்  சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தோனேசியாவின் சிறு விவசாயி தனது இயற்கை வேளாண்மையில் விளைந்த சத்தான அரிசியை விற்று, விலை மலிவாகக் கிடைக்கும் வியட்நாமில் உற்பத்திச் செய்யப்பட்ட வேதியியல் முறையில் சாகுபடி செய்யப்பட்ட அரிசியை  சந்தையில் வாங்கி உண்கிறார். இந்தோனேசிய விவசாயிகள் தங்கள் நாட்டின்  உணவு பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக வியட்நாம் அரிசியை பெறுகிறார்கள்!

வியட்நாமின் விலை மலிவான அரிசி, கம்போடிய சிறு விவசாயிகளை  அவர்களின் முக்கிய உணவு ஆதாரம் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கு மூலமாக இருக்கும் தங்கள் சொந்த அரிசியை உற்பத்தி செய்ய இயலாத நிலைக்குத் தள்ளி விட்டது. மேலும் வியட்நாமிய சிறு விவசாயிகள் ஒட்டு மொத்த மதிப்புப் சங்கிலியையும் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள உலகளாவிய வேளாண்- வணிக நிறுவனங்களிடம்  கடன்பட்டு நிற்கின்றனர்.

நாமும் இந்த மூன்று விவசாயப் சட்டங்களும் திறவுகோலாக இருக்கும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் மாதிரியால், அதே போன்றதொரு பேரழிவை நோக்கிச் செல்லப் போகிறோம். எனவே விவசாயச் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளின் போராட்டம், நமது உணவு பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் வாழ்வதற்கான நமது அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான ஒரு உறுதிக் கூற்றாகும்.

(www.thewire.in இணைய தளத்தில், சாகரி ஆர்.ராம்தாஸ் மற்றும் ஆர்.சரண்யா ஆகியோர் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்