Aran Sei

இந்தியாவின் புதிய ஆளும் மேட்டுக்குடி – இன்னும் எதிர்ப்பை எதிர்கொள்ளும்

Image Credit : thewire.in

முதலில் கொஞ்சம் வரலாறு.

2012 டிசம்பர் 24, புது டெல்லி.

இரண்டு நாட்கள் சீற்றத்தின், கோபத்தின் முறையான, அமைதியான வெளிப்பாட்டிற்குப் பிறகு, சமூக விரோத சக்திகள் தமது இருப்பை வெளிப்படுத்திய போது, நிர்பயா கிளர்ச்சி அசிங்கமான வன்முறையாக வெடித்தது. புகழ் பெற்ற இந்தியா கேட் பகுதியைச் சுற்றிலும் குழப்பமும், சீர்குலைவுமாக காட்சி அளித்தது.

இதன் விளைவாக ரசிய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு ஹைதராபாத் இல்லத்திலிருந்து ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்த பிரதமரின் இல்லத்திற்கு மாற்றப்பட வேண்டியது ஏற்பட்டது. கும்பல்கள் வெற்றி பெற்று விட்டன.

இது ஒரு தேசிய அவமானமாக இருந்தது. ஆனால், ஒரு மதிப்பிழந்த ஆட்சியின் மீது, நியாயபூர்வமான சரியான கண்டனமாக அதற்கு புகழ்மாலை சூட்டப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் ஒரு பிரிவினரிடையே ஜனவரி 26 அன்று, ஒழுங்கு குலைந்தது குறித்து இன்று “குழப்பம்”, “அவமானம் ” என்று கத்திக் கொண்டிருப்பவர்கள் அனைவரும், அன்று இந்தியா கேட் அருகில் ஒழுங்கு குலையும் வண்ணம் போராடியவர்களை ஓங்கிய குரலில் பாராட்டியவர்கள் என்பதை நினைவூட்டுவதை யாரும் விரும்பமாட்டார்கள்.

அன்று அவர்கள் அந்த ஒழுங்கு சீர்குலைவை, குடிமைச் சமூகம் தன்னை மறு உறுதிப்படுத்திக் கொண்டது என்றும் சுரணை இல்லாத அரசுக்கு எதிரான அதன் மன உளைச்சலை குடிமை சமூகம் வெளிப்படுத்தும்  உரிமையின் வலிமையான வெளிப்பாடு என்றும் கொண்டாடினார்கள்.

அது ‘பழைய இந்தியா.’

நாம் இன்று ‘ புதிய இந்தியாவைப்’ பிரகடனப்படுத்தி உள்ளோம். அப்போதைய பணியாமையையும் எதிர்ப்புகளையும் ஆதரவித்தவர்கள் இன்று போலீஸ் அரசின் அப்ரூவர்கள் ஆகி விட்டனர். ஜனவரி 26 அன்று அப்பட்டமாக வெளிப்பட்ட, உளவுத்துறையின் மாபெரும் தோல்வியும் காவல்துறையின் திறமையின்மையும் போராடும் விவசாய சங்கத் தலைவர்கள் மீதும் அவர்கள் மத்திய அரசின் விருப்பங்களிலிருந்து வேறுபட்டு நிற்க துணிந்ததன் மீதும் வசதியாக மடைமாற்றப்பட்டன.

மிக அதிக எண்ணிக்கையிலான மக்களை கையாள்வது என்ற ஒரு விஷயத்தில் இந்திய காவல்துறையினர் திறமையானவர்கள் என்பதை நாம் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. பெருங் கூட்டங்களை கையாள்வது இந்திய காவல்துறை அதிகாரி ஒருவரின் சிறப்புத் திறமை ஆகும். ஓரளவு உருப்படியான எந்த ஒரு நல்ல போலீஸ் துணை ஆய்வாளரும், ஒரு ஒழுங்கான கூட்டம் எப்போது ஒழுங்கற்ற கும்பலாக உருமாறும் என்பதைக் கண்டுபிடிக்க தொழில் ரீதியாக பயிற்சி பெற்றவர்.

மிகப்பெரிய கூட்டங்களையும் அவை குறைந்தபட்ச ஒழுங்குடன் நடந்து கொள்வதை உறுதி செய்வதற்கான உத்தி இது. இப்போது டெல்லி போலீசை வழிநடத்தும் அரசியல் தலைகளுக்கும், நட்சத்திரங்கள் பொறித்த போலீஸ் ஆணையர்களுக்கும் இந்த அடிப்படை திறமை இல்லாமல் போய் விட்டதாகத் தெரிகிறது.

திட்டமிடப்பட்டோ அல்லது தற்செயலாகவோ ஏற்பட்ட இந்த ஒழுங்கு குலைவை பிடித்துக் கொண்ட கார்ப்பரேட் ஊதுகுழல்களான பத்திரிகைகள் “இனிமேலும் சலுகை காட்ட முடியாது” என்று அறிவித்து விட்டன. இந்த மகிழ்ச்சியற்ற திருப்பத்தில் அவர்களுக்கு ஒரு துன்பியல் மனநிறைவு உள்ளது; 40 க்கும் மேற்பட்ட நகரங்களில் அமைதியாக, முறையாக நடந்த ஆர்பாட்டங்களை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

சிங்கு எல்லையில் திரண்டு வரும் கூட்டம் ஒரு தேங்கிப் போன பெருங்கூட்டமாக மாறி வருவதையும், அதன் திரண்டு நிற்கும் உணர்ச்சி சுமைகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் ஒரு சுரணை உள்ள அரசு புரிந்து கொண்டிருக்கும். ஜனவரி 26 பேரணி அந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒரு “சாதனை கணத்தை” , “வெற்றி தருணத்தை” கூட அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு நியாயமான வழியாக திட்டமிடப்பட்டது. ஆனால், அது அப்படி நடக்கவில்லை.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

எல்லாம் அறிந்த, எல்லாம் தெரிந்த ஆளும் குறுங்குழு, இயக்கத்தை ஒரு பிற்பகலில் அடுத்தடுத்து தவறுகள் இழைக்கும் வகையில் தந்திரமாக திசை திருப்பி விட்டது. அதன்பிறகு ‘வெகு மக்கள் இயக்கம்’ பிசுபிசுத்து விட்டதாக உடனடியாக அறிவிக்கப்பட்டது. அதுவே ‘தலைப்புச் செய்திகளானது’.

சில மணிநேரத்தில் நடுத்தர வர்க்கத்தினர் தமது குழப்பத்திலிருந்து விடுபட்டனர்; ஜனவரி 26 காலை வரை விவசாயிகளின் திரள் உருவாக்கிய தார்மீக வலிமையை அவர்களால் எளிதில் புறக்கணிக்க முடியவில்லை. ஒரு ஒழுக்க ரீதியான, தகுதியான காரணத்துடன் இணைந்து கொள்வது என்பது நடுத்தர வர்க்கத்தின் இயல்பு.

ஆனால் எங்கே சீர்குலைவோ அல்லது குழப்பமோ ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருந்தனர். அதுவும் நாட்டின் தலைநகரின் இதயத்தில் அவ்வாறு நேர்ந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் இருந்தனர்.

எனவே இப்போது ‘அதிகாரத்தில் இருப்பவர்கள்’ டெல்லியின் புறநகர் பகுதியில் வன்முறையையும், வலிமையையும் விவசாயிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டதை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், பாராட்டுவதற்கு அவசரப்படுகிறார்கள். மிரட்டலும் ‘அமைதிப்படுத்தலும்’ என்ற புதிய நீலப் புத்தகத்தின்படி, விவசாய சங்கத் தலைவர்களை சோர்வடையச் செய்வது என்ற இழி நோக்கத்தில் அவர்கள் பல சட்ட வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இருந்தாலும் விவசாயிகள் அனுபவித்த கோபமும், மனக்கசப்பும் இருத்தலியல் அச்சங்களும் என்னவாயின என்றும், முதலில் எது அவர்களை சிங்கு எல்லையிலும் டெல்லியைச் சுற்றியுள்ள பிற இடங்களிலும் திரளத் தூண்டியது என்றும் கேட்க வேண்டும். ஒரு சில குற்றவாளிகள் வழி தவறியதால் அந்த உணர்ச்சிகரமான அச்சமும், ஐயமும் தமது நியாயத்தை இழந்துவிட்டனவா? உண்மையில் ‘இயக்கம்’ அதன் புனிதத்தன்மையும், நம்பகத்தன்மையையும் இழந்து விட்டதா?

‘இயக்கத்தைப்’ பற்றியும், அதன் நோக்கங்களையும் குறித்தும் எந்த தவறான கருத்தையும் வைத்திருக்க வேண்டாம். இந்த இயக்கத்தின் பின்னும் வலுவான அணி திரட்டல் உள்ளது; இயக்கத் தலைவர்கள் பஞ்சாப் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் இயக்கத்தின் இணைத்தனர். ஹரியானா மற்றும் மேற்கு உத்திரப்பிரதேச விவசாயிகள் இந்தக் கலவையில் பெரும்பகுதியாக இருந்தனர்; இது நீடித்து அனுபவிக்கப்பட வேண்டிய கலாச்சார அனுபவமாகும்.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

சமீபத்திய ஆண்டுகளில் அரசியல் செயல்பாட்டில் இரண்டு நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அணிதிரட்டல் ஒரு திட்டமான வலிமையை அடைந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.

முதலாவதாக, யார் இந்தியனாக கருதப்படலாம் என்பதற்கு நாக்பூரில் உருவாக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலான ஒருபடித்தன்மைக்கு அடிபணிதல் கோரப்பட்டது. இதனால் சிறுபான்மையினரின், குறிப்பாக பஞ்சாபில், அனைத்து தரப்பினரும் இந்துத்துவ ஏகாதிபத்திய திட்டத்தின் வலிமையை உணரத் தொடங்கி உள்ளனர். மந்தமானதும் அமைதியானதுமான கோபம் நாடு முழுவதும் வளர்ந்து வருகிறது.

இரண்டாவது வீரிய ஊசி ஒரு பழைய அடிப்படையைக் கொண்டது. உழைக்கும் வர்க்கத்தினரும், நிலமற்ற கூலி விவசாயிகளும், குறு விவசாயிகளும், நகர்ப்புற கீழ்த்தட்டு மக்களும், சூறையாடும், தடுக்க முடியாத முதலாளித்துவ அணிவகுப்பு தொடர்பாக அதிருப்தி அடைவதற்கான காரணம் உள்ளது.

மோடி சகாப்தத்தில், “சீர்திருத்த” மரபு அரசால் ஆணையிடப்பட்ட மதத்தின் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கேள்விகள் கூடாது, எதிர்ப்பு கூடாது, சந்தேகங்கள் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆளும் குறுங்குழுவும், அதனால் ஆசீர்வதிக்கப்பட்ட பூசாரிகளும் மட்டுமே நாட்டிற்கு எது நல்லது என அறிவார்கள். இந்த மர்மமான ‘சீர்திருத்தங்களை’ செய்து முடிப்பதற்கு நாட்டின் பொது வளங்களை எவ்வாறு ஒதுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஒரு ‘புதிய இந்தியா’ உள்ளது, அதற்கே சொந்தமான ‘புதிய ஆளும் மேல்தட்டையும்” அது இப்போது பெற்றுள்ளது. அந்த மேல் தட்டு கடும் செயல்பாடுகள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. இது பாரம்பரியமாக இந்திய அரசின் ஆயுத தளவாடங்களில் ஒரு பகுதியாகும்.

அதன் விருப்பங்களுக்கும் தப்பெண்ணங்களுக்கும் எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் அது அற்பமாக பாவிக்கிறது. இந்த புதிய ஆளும் மேல்தட்டு சமூகத்தின் ஒரு பகுதியை கடித்துக் குதறவும் தயங்குவதில்லை. அதன் உறுதிப்படுத்தப்பட்ட ஆணவத்தின்கீழ், மனக்கசப்புகளை சமாளித்து விட முடியும் என்றும், மனக்கசப்பு அடைபவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க முடியும் என்றும் அது நம்புகிறது.

விவசாயிகள் தடுப்புகளுக்குப் பின்னால் சென்று, நீண்ட போராட்டத்தைத் தொடர தயாராக உள்ளனர். சமூகத்தின் எந்த ஒரு பிரிவும் தனது அதிகாரம் பறிக்கப்படுவதை எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. அதிலும் சுயமரியாதையையும் கௌரவத்தையும் ‌புண்படுத்தும் வகையில் அது செய்யப்படும் போது நிச்சயமாக ஏற்றுக் கொள்வதில்லை.

பஞ்சாபிலும் பிற பகுதிகளிலும் உள்ள விவசாய சமுதாயங்கள் பல சமூக நற்பண்புகளில் குறைபாடு உடையவையாக இருக்கலாம். ஆனால், தாக்குப் பிடிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் தேவையான கூட்டு வலிமை அவற்றிடம் நிறையவே இருக்கிறது. காலம் காலமாக நீடிக்கும் இந்த அம்சத்தை மிகப்பெரிய தேசிய இழப்பின் மூலமாகவே டெல்லியில் ஆளும் எந்தவொரு ஆட்சியும் புறக்கணிக்க முடியும்.

www.thewire.in இணையதளத்தில் வெளியான ஹரிஷ் காரேவின் கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்