Aran Sei

பணக்கார விவசாயிகள், உலகளாவிய சதிகள், உள்நாட்டு முட்டாள்தனம் – பி சாய்நாத்

Image Credit : thewire.in

ட்சக்கணக்கான மனிதர்களுக்கு தண்ணீரையும், மின்சாரத்தையும் துண்டித்தல், அதன் மூலம் அவர்களை கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாக்குவது, இத்தகைய ஆபத்தான சுகாதாரக் கேடான நிலைமைகளை அவர்கள் மீது சுமத்தும் அதே நேரம் காவல்துறையையும் துணை ராணுவத்தையும் பயன்படுத்தி தடுப்புகளை அமைத்து அவர்களை சமூகத்திலிருந்து துண்டித்தல், ஊடகவியலாளர்கள் போராட்டக்காரர்களை சந்திப்பதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குவது, ஏற்கனவே இரண்டு மாதங்களில் 200 உயிரிழப்புகளை எதிர்கொண்ட ஒரு குழுவை மேலும் தண்டிப்பது (கொல்லப்பட்ட பலர் கடும் குளிரால் உயிரிழந்தனர்) இவை அனைத்தும் உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலும் காட்டுமிராண்டித்தனமானதாகவும் மனித உரிமைகள் மீதும், சுயமரியாதையின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகவும் பார்க்கப்படும்.

ஆனால், நாமும், நமது அரசாங்கமும், ஆளும் மேட்டுக் குடியினரும் இதை விட மிக அதிக முக்கியத்துவம் கொண்டவற்றைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறோம். பூமியின் மகத்தான ஒரு தேசத்தை இழிவுபடுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பயங்கரமான உலகளாவிய பயங்கரவாதிகள் ரிஹானா, கிரேட்டா துன்பெர்க் ஆகியோரின் சதியை எவ்வாறு அடித்து நொறுக்குவது போன்றவை குறித்து கவலைப்படுகிறோம்.

இது ஒரு புனைகதையாக இருந்தால் கிறுக்குத்தனமான நகைச்சுவையாக இருந்திருக்கும், நிஜ வாழ்வில் வெறும் கிறுக்குத்தனமாக உள்ளது.

இவை அனைத்தும் அதிர்ச்சியளித்தாலும் ஆச்சரியப்படுத்தக் கூடாது. “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச அரசாளுகை” என்ற முழக்கத்தை ஆதரித்தவர்கள், அவர்கள் உண்மையாக ஏற்றுக் கொண்டது, “அதிகபட்ச வன்முறையுடனான அரசாங்கம், அதிகபட்ச கொடூரமான அரசாளுகை” என்பதைத்தான் என்பதை இப்போது புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

வழக்கமாக உரத்து ஒலிக்கும் பல குரல்களின் மௌனம்தான் கவலைக்குரியது. அவர்களில் சிலர் அதிகாரத்தை நியாயப்படுத்துவதற்கு ஒரு போதும் தயங்கியதில்லை, இது போன்ற எல்லா சட்டங்களையும் புகழ்வதற்கு தவறியதில்லை. அவர்கள் கூட, ஜனநாயகம் இது போன்று அன்றாடம் அடித்து நொறுக்கப்படுவதை எதிர்ப்பார்கள் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.

நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஒரு தீர்வைக் காண்பதற்கு எது தடையாக இருக்கிறது என்பது மத்திய அமைச்சரவையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தெரியும்.

இந்த மூன்று சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் எந்தவொரு ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் – இவை அவசரச் சட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்தே இவை தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் கேட்டு வந்திருக்கின்றனர்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி விவசாயம் மாநிலப் பட்டியலில் இருந்த போதிலும், இந்தச் சட்டங்களை தயாரிப்பதில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை.

நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் எதிர்க்கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை.

பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களுக்கும், மத்திய அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்பது தெரியும் – ஏனென்றால் அவர்களுடனும் இது தொடர்பாக ஒருபோதும் கலந்தாலோசிக்கப்படவில்லை. இந்தப் பிரச்சினையிலும் சரி, வேறு முக்கியமான பிரச்சினைகளிலும் அவர்கள் கலந்தாலோசிக்கப்படுவதில்லை.

தலைவர் உத்தரவிடும்போது, எதிர்ப்பின் அலைகளை எதிர்த்து நிற்பதுதான் அவர்களது வேலை.

இதுவரை, எதிர்ப்பின் அலைகள் அரசின் துதிபாடிகளை விட சிறப்பாக செயல்படுவதாகத் தெரிகிறது.

உத்தரபிரதேசத்தில் மாபெரும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அரசு அவரை ஒழித்துக் கட்ட முயற்சித்தற்கு முன்பு இருந்ததை விட வலுவான தலைவராக ஆகி விட்டிருக்கிறார், ராகேஷ் திகாயத்.

ஜனவரி 25-ம் தேதி மஹாராஷ்டிராவில் மிகப் பெரிய விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது.

ராஜஸ்தானிலும், கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் கூட குறிப்பிடத்தக்க போராட்டங்கள் நடந்தன.
கர்நாடகாவில் பெங்களூருக்குள் டிராக்டர் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

முதலமைச்சர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாத நிலை நிலவும் மாநிலமாக, ஹரியானாவில் அரசாங்கம் செயல்படுவதற்கு திணறி வருகிறது.

பஞ்சாபில், கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பமும் போராட்டத்துடன் இணைந்துள்ளது. பலர் போராட்டத்தில் இணைய துடித்துக் கொண்டிருக்கின்றனர், சிலர் ஏற்கனவே இணைந்து கொண்டுள்ளனர். பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கு,  வேட்பாளர்கள் கிடைக்காமல் திணறுகிறது, பாஜக. அக்கட்சியில் இருக்கும் பழைய விசுவாசிகள் கூட கட்சி சின்னத்தைப் பயன்படுத்த தயங்குகிறார்கள். இதற்கிடையில், பஞ்சாபின் ஒரு தலைமுறை இளைஞர்கள் அனைவரும் அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர், இது எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பாரம்பரியமாக எதிரெதிர் நிலையில் நிற்கும் விவசாயிகளும் விவசாய சந்தை தரகர்களும் உள்ளிட்டு மிகப்பெரிய, வழக்கமாக ஒன்றிணையாத சமூக சக்திகளை ஒருங்கிணைத்திருப்பது இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது. அதற்கு மேல் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் ஜாட்டுகளும் ஜாட் அல்லாதவர்களும், காப் பஞ்சாயத்துகளையும் கான் மார்க்கெட் கூட்டத்தையும் கூட ஒன்றிணைத்துள்ளது ஆச்சரியப்படக் கூடியதுதான்.

இது “பஞ்சாப், ஹரியானா பற்றிய பிரச்சினை மட்டும்தான்” என்று அமைதியான குரல்கள் இரண்டு மாதங்களாக நமக்கு உறுதி அளித்து வந்தன. ‘வேறு யாரும் பாதிக்கப்படவில்லை. அதனால், கவலைப்படத் தேவையில்லை.’ என்றார்கள், அவர்கள்.

வேடிக்கைதான். ‘உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படாத’ ஒரு கமிட்டி கடைசியாக சரிபார்த்த போது பஞ்சாபும் ஹரியானாவும் இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகவே இருந்தன. எனவே, அங்கு நடப்பது நம் அனைவருக்கும் முக்கியமானது என்றுதான் நினைக்க வேண்டும்.

உரக்க ஒலித்த குரல்கள் முன்பு ஒரு காலத்திலும், இப்போதும் தொடர்ந்து கிசுகிசுப்பான குரலில் சொல்கின்றன. ‘இவர்கள் எல்லோரும் சீர்திருத்தங்களை எதிர்க்கும் “பணக்கார விவசாயிகள்” என்று.

மிகச் சிறப்புதான். கடந்த தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி பஞ்சாபில் ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ 18,059 ஆகும். ஒரு விவசாய குடும்பத்தில் சராசரி நபர்களின் எண்ணிக்கை 5.24. எனவே மாத தனிநபர் வருமானம் சுமார் 3,450 ரூபாய். அமைப்புசார் துறையில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் ஊழியரின் வருமானத்தை விட இது குறைவானது.

ஓகோ! அவ்வளவு பணம்!!

மீதி விபரங்கள் நம்மிடம் சொல்லப்படவில்லை.

ஹரியானாவில் இதே புள்ளிவிவரங்கள் (விவசாயக் குடும்பத்தின் அளவு 5.9 நபர்கள்) சராசரி மாத வருமானம் ரூ 14,434, தனிநபர் வருமானம் ரூ 2,450. இந்த மோசமான வருமானம் கூட, மற்ற இந்திய விவசாயிகளை விட அவர்களை நிச்சயமாக மேம்பட்ட நிலையில் வைக்கின்றன.

உதாரணமாக, குஜராத்தில் விவசாய குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ 7,926. ஒரு விவசாய குடும்பத்திற்கு சராசரியாக 5.2 நபர்கள் என்ற கணக்கில், ஒரு மாத தனிநபர் வருமானம் ரூ 1,524.

ஒரு விவசாய குடும்பத்தின் மாத வருமானத்திற்கான அகில இந்திய சராசரி ரூ 6,426 (தனிநபர் வருமானம் ரூ 1,300).

இன்னும் ஒரு விஷயம் – இந்த சராசரி மாத வருமானங்கள் சாகுபடியிலிருந்து மட்டுமல்ல, கால்நடை வளர்ப்பு, விவசாயம் அல்லாத வியாபாரம், கூலி வருமானம் சம்பள வருமானம் அனைத்தையும் உள்ளடக்கியவை.

‘இந்தியாவில் விவசாய குடும்பங்களின் நிலை பற்றிய முக்கிய குறியீடுகள்’ (2013) என்ற தேசிய மாதிரி கணக்கெடுப்பு 70-வது சுற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி இதுதான் இந்திய விவசாயியின் நிலை.

2022-ம் ஆண்டில், அதாவது அடுத்த 12 மாதங்களில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்பதை நினைவில் கொள்க. அது ஒரு கடினமான பணி, எனவே ரிஹானாக்களும் துன்பெர்குகளும் செய்யும் சீர்குலைக்கும் குறுக்கீடுகள் இன்னும் அதிக எரிச்சலூட்டுவதாக உள்ளது.

ஓ! டெல்லியின் எல்லையில் உள்ளவர்கள் பணக்கார விவசாயிகள்! அவர்கள் 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் உலோக டிராலிகளில் தூங்குகிறார்கள்! திறந்த வெளியில் 5-6 டிகிரியில் குளிக்கிறார்கள்.

இந்திய பணக்காரர்களைப் பற்றிய எனது கருத்தை அவர்கள் நிச்சயம் மேம்படுத்தியுள்ளனர். நாம் நினைத்ததை விட வலுத்த ஆட்கள்தான் இந்தப் பணக்காரர்கள்!

இதற்கிடையில், விவசாயிகளுடன் பேச உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, தனக்குள்ளேயே ஒத்திசைவாக பேச முடியவில்லை என்று தோன்றுகிறது – அதன் நான்கு உறுப்பினர்களில் ஒருவர் அதன் முதல் கூட்டத்திற்கு முன்பே விலகி விட்டார். உண்மையான போராட்டக்காரர்களுடன் பேசுவது இதுவரை நடக்கவில்லை.

மார்ச் 12 அன்று, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டு மாத காலக் கெடு முடிந்திருக்கும். (விவசாயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, மகரந்தச் சேர்க்கை பூச்சிகளின் அதிகபட்ச ஆயுட்காலம் இது).

இந்தக் காலக் கெடுவின் இறுதியில், இந்தக் குழுவிடம் அவர்கள் பேசாத நபர்களின் நீண்ட பட்டியலும், அவர்களுடன் பேசாத நபர்களின் நீண்ட பட்டியலும் இருக்கும். ஒருவேளை அவர்கள் ஒருபோதும் பேசியிருக்கக் கூடாதவர்களின் சிறிய பட்டியலும் இருக்கும்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கொடுமைப்படுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் அவர்களின் எண்ணிக்கை பெருகி வளர்வதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. அவர்களை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒவ்வொரு செயலும் மையநீரோட்ட ஊடகங்களில் ஊடகங்களில் பெரும் ஆதரவைப் பெற்றது. ஆனால், களத்தில் நிலைமை தலைகீழாக மாறியது.

இந்த அரசாங்கம் அதிக சர்வாதிகார, உடல் ரீதியான மிருகத்தனமான முயற்சிகளை தீவிரப்படுத்துவதை இது எந்த வகையிலும் தடுக்காது என்பதுதான் பயங்கரமானது

கார்ப்பரேட் ஊடகங்களில் பலருக்கும், பாஜகவுக்குள் உள்ள பலருக்கு இன்னும் நன்றாகவும் தெரிந்தது இந்தப் பிரச்சினையில் தீர்க்கமுடியாத தடையாக இருப்பது கொள்கை அல்ல, தனிப்பட்ட கௌரவம்தான். பணக்கார நிறுவனங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்பது கூட இல்லை. (அவை நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் நிறைவேற்றப்படும்). சட்டங்களின் புனிதத்தன்மை அல்ல (அரசாங்கமே சொல்வது போல அவற்றில் பல திருத்தங்கள் செய்ய முடியும்.)

தீர்க்க முடியாத தடையாக இருப்பது, பேரரசர் எந்தத் தவறும் செய்ய முடியாது என்பது மட்டும்தான். ஒரு தவறை ஒப்புக்கொள்வது அல்லது அதைவிட மோசமாக அதிலிருந்து பின்வாங்குவது நினைத்துப் பார்க்க முடியாதது. எனவே, நாட்டின் ஒவ்வொரு விவசாயியும் அந்நியப்பட்டாலும் பரவாயில்லை – தலைவர் தவறு செய்திருக்க முடியாது, அவர் தன் கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாது.

பெரிய நாளிதழ்களில் ஒரு தலையங்கம் கூட இதை கிசுகிசுப்பாகக் கூட பேசுவதை நான் பார்க்கவில்லை. ஆனால் அது உண்மை என்று அவர்களுக்குத் தெரியும்.

இந்தப் பிரச்சினையில் ஈகோ எவ்வளவு முக்கியமானது?

இணைய தடை பற்றிய, “இதைப் பற்றி நாம் ஏன் பேசவில்லை” என்ற ரிதம் மற்றும் ப்ளூஸ் நட்சத்திரத்தின் எளிய ட்வீட்டுக்கான எதிர்வினையைப் பாருங்கள். ஆனால் அதைப் பற்றிய விவாதம் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு தற்கொலைப்படை போல பயங்கரவாத எதிர்ப்பு சாகசத்தில் இறங்கும் மட்டத்துக்கு தாழ்ந்தது.

Image Credit : thewire.in
கிரேட்டா துன்பெர்க், மீனா ஹாரிஸ் படங்களை எரித்த ஐக்கிய இந்து முன்னணி – Image Credit : thewire.in

அது, தேசபக்த பிரபலங்களின் ஒளி பொருந்திய படையணியின் இணைய வழி தாக்குதலுக்கு இட்டுச் சென்றது. (அழிவின் டிஜிட்டல் பள்ளத்தாக்குக்குள் ட்வீட்டுகள் பாய்ந்தன, இடி முழக்கம் செய்தன, அதிகரித்து வரும் அழிவை பொருட்படுத்தாமல் மகத்தான அறுநூற்றுவர் படை சீறிப் பாய்ந்தது).

இவர்களை புண்படுத்திய ட்வீட், நாம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை என்று ஆச்சரியத்தை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தது. ஒரு வெளிப்படையான நிலைப்பாட்டையோ, சார்புநிலையையோ எடுக்கவில்லை.

ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணரும் தகவல் தொடர்பு இயக்குனரும் தமது அறிக்கைகளில் விவசாயச் சட்டங்களை வெளிப்படையாக பாராட்டினர். (‘பாதுகாப்பு வலைகள்’ பற்றிய ‘எச்சரிக்கை’களையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர் – சிகரெட் பொதிகளில் சட்டரீதியான எச்சரிக்கையை சேர்க்கும் வியாபாரிகளின் நேர்மையுடன்).

இல்லை, ஒரு ஆர்&பி கலைஞரும், ஒரு 18 வயது பள்ளி மாணவியான பருவநிலை செயல்பாட்டாளரும் ஆபத்தானவர்கள் என்பது வெளிப்படையானது, அவர்களை உறுதியாகவும் சமரசமின்றியும் கையாள வேண்டும். இந்த விஷயத்தில் டெல்லி காவல்துறையினரின் உறுதியான செயல்பாடு ஆறுதலளிக்கிறது!

உலகளாவிய சதித்திட்டத்திற்கு அப்பால் சென்று, வெளி உலக கோணத்தையும் அவர்கள் கண்டு பிடிக்க முடிந்தால், – இன்று உலகம், நாளை விண்மீன் மண்டலம் – அவர்களை கேலி செய்பவர்களில் நான் இருக்க மாட்டேன்.

இணையத்தில் பரவலாக பேசப்படும், எனக்கு பிடித்தமான ஒரு கருத்து :

“இந்த உலகத்துக்கு வெளியே புத்திசாலியான உயிர் இருப்பதற்கான உறுதியான ஆதாரம், அவர்கள் நம்மை தொடர்பு கொள்ளாமல் விட்டு வைத்திருப்பதுதான்.”

பி. சாய்நாத் கிராமப்புற இந்தியாவுக்கான மக்கள் காப்பகத்தின் நிறுவன ஆசிரியர் ஆவார்.

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்