Aran Sei

விவசாய சட்டங்கள் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பி சாய்நாத்

ந்தச் சட்டங்களுக்குப் பின்னே தெளிவானதொரு கார்ப்பரேட் ஆதரவு நோக்கம் ஒரு பக்கம் உள்ள போதும், இது இடைத்தரகர்கள் விவசாயிகள் மீது கொண்டுள்ள பிடியை மேலும் இறுகச் செய்யும் வாய்ப்பும் உள்ளது என்கிறார் ஊடகவியலாளர் சாய்நாத்.

கடுமையான எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே சர்ச்சைக்குரிய மூன்று விவசாய மசோதாக்கள் நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாய சட்டங்களை மாற்றும் இந்த மசோதாக்கள் ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டு, மக்களவையில் ஒப்புதலை பெற்று விட்டன.

இந்த மூன்று மசோதாக்களும் விவசாயச் சந்தைகளை திறந்துவிடுவதை பின்புலமாகக் கொண்டு, அதன் மூலம், சந்தையை இன்னமும் வீரியமாக செயல்படச் செய்வதுடன், தொடர்புடைய அனைவருக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கு நல்ல விலையை பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது இருப்பதைவிட அதிக வருமானத்தை தரக்கூடியதாக விவசாயத்தை மாற்றுவதே இந்த மசோதாக்களின் மைய நோக்கம். எனினும், இச்சட்டங்கள் மிகப் பரந்த எதிர்ப்பை, குறிப்பாக அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் சந்தித்து வருகின்றன.

இந்தச் சட்டங்கள் ஏன் எதிர்க்கப்படுகின்றன, விவசாயத்துறை மற்றும் அது சார்ந்தவர்களின் கவலைக்குரியதாக உள்ள அம்சங்கள் யாவை, என்பனவற்றை புரிந்து கொள்ள ‘தி வயர்’ (TheWire) ஊடகத்தின் மித்தாலி முகர்ஜி, “இந்திய கிராமப்புறங்களின் மக்கள் கோப்பகம்’ (People’s Archive of Rural India ) என்ற திட்டத்தை தோற்றுவித்த அதன் பதிப்பாசிரியரும், தி இந்து பத்திரிகையின் முன்னாள் கிராமப்புற விவகாரத்துறை ஆசிரியருமான, பி. சாய்நாத்துடன் நடத்திய பேட்டியை சிறியதாக செழுமைப்படுத்திய உரைவடிவமே பின்வர இருப்பது.

கேள்வி:

என்னோடு பேசுவதற்கு ஒப்புக் கொண்டு இணைந்தமைக்கு நன்றி , சாய்நாத். கடந்த சில நாட்கள் கொந்தளிப்பானவை, இந்நிலையில் நான் மூன்று மசோதாக்களைப் பற்றி கேட்க விரும்புகிறேன், அவற்றில் இரண்டு ஏற்கனவே மேலவையில் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இதனைச் சுற்றியுள்ள முக்கிய பிரச்சினைகள் என்ன?

ஏனெனில் இதை ஆதரிப்பவர்கள் இதில் பெரிதாய் தவறு காண ஏதுமில்லை என்று கருதுகின்றனர். எனவே நாம் முதலில் ‘ விவசாயிகளின் விளைபொருள் விற்பனை மற்றும் வர்த்தக சட்டம்’ (Farmers’ Produce Trade and Commerce Ordinance) குறித்து பார்க்கலாம். சிலர் இதனை APMC – வேளாண் விளைபொருளுக்கான சந்தைக் குழு (Agriculture Produce Market Committee) வை தவிர்ப்பதற்கான மாற்றுவழி என்றும் கூறுகிறார்கள்.

எனவே, இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு விளக்குங்கள், இதன் பொருள் என்ன, விவசாயிகள் ஏன் இதனை எதிர்க்கின்றனர் என?

சாய்நாத் :

நான், இதன் பொருள் என்ன, இது எதனை ஆதாரமாகக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறேன். மிகச் சுருக்கமாக, இந்த மூன்று மசோதாக்கள் பற்றி – முதலில், நீங்கள் சொன்ன இந்த மசோதா, வேளாண் விளைபொருள் சந்தைக் குழுதான் (APMC) கேடுகளின் மையப்புள்ளி என்ற முன்முடிவின் அடிப்படையில், அதன் ஏகபோகத்தை உடைப்பதற்கானது எனக் கூறி, அதற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து, வெற்று முழக்கங்களால் முட்டுக் கொடுக்கிறார்கள். இதே நபர்கள்தான் அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் இதே போல முட்டுக் கொடுத்தார்கள், பிறகு ஆறு மாதத்திற்குப் பின் தாம் சொன்னவற்றை மறைத்தழிக்கும் வேலையில் ஆழ்ந்தனர்.
ஆக, APMC ஒரு தரங்கெட்ட ஏகபோக அமைப்பு என்ற கருத்தின் அடிப்படையில், அதன் பிடியிலிருந்து அடிமைப்பட்ட விவசாயிகளை இந்த மசோதாவானது, விடுதலை செய்வதாகச் சொல்கிறார்கள் இல்லையா?

அடுத்ததாக உள்ள மசோதா, ஒப்பந்தங்கள் (contract) பற்றியது, இந்த மொத்த மசோதாவும் எழுத்துபூர்வமான உடன்படிக்கைகள் பற்றியது ஆனால் எங்குமே எழுத்துபூர்வமான ஒப்பந்தங்களை கட்டாயமாக்கி குறிப்பிடவில்லை, எழுத்துபூர்வமாக இருக்க வேண்டியது கட்டாயமல்ல, சுயவிருப்பம் எனச் சொல்கிறது. அடுத்து உள்ளது அத்தியாவசிய பண்டங்கள் பற்றிய மசோதா, இது இருப்பு வைப்பதற்கான உச்ச வரம்பை நீக்கியதன் மூலம், மிகப் பெரும் வணிகர்களின் பதுக்கலுக்கு சட்ட உரிமை கொடுத்துள்ளது.

போராடும் பஞ்சாப் விவசாயிகள்
போராடும் பஞ்சாப் விவசாயிகள்

முதல் மசோதாவுக்கு வருவோம், APMC-தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது என்ற வாதமே படு முட்டாள்தனமானது. ஏனெனில், வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனையின் பெரும்பகுதி இந்த APMC-களுக்கு வெளியேதான் எப்போதுமே நடந்து வருகிறது. பெரும்பாலான விவசாயிகள், பகுதிக்கு பகுதி வேறுபட்டிருந்தாலும் மிக அதிக சதவீதமான விவசாயிகள், தங்கள் உற்பத்திப் பொருட்களை பண்ணை வாசலிலேயே ஒப்படைத்து விடுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே கந்து வட்டிக் காரர்களுடன், இடைத் தரகர்களுடன், மிகப் பெரும் நிதி நிறுவனங்களுடன் எழுதப்படாத ‘முன் ஒப்பந்தம்’ செய்து கொண்டுள்ளனர் என்பதால் பண்ணை வாசலோடு விற்பனை முடிந்துவிடும். அவர்களுக்கு APMC மூலம் அடையக்கூடிய குறைந்த பட்ச ஆதார விலை கூட (MSP) கிடைப்பதில்லை.

எனவே, இந்தச் சட்டம் மூலம் உண்மையில் என்ன செய்கிறோம் என்றால், அரசு சாரா ஏகபோக கொள்முதலாளர்களை பன்மடங்காக பெருக்கப் போகிறோம். நீங்கள் 98% வர்த்தகம் இந்த APMC மூலம்தான் நடைபெறுகிறது எனக் கூறினால், அதை நீங்கள் முறியடிக்கப் போவதாகக் கூறினால், எத்தனை விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலையையை பெறுகிறார்கள், எத்தனை பேரால் பெற முடிகிறது என்பதை நீங்கள் சோதித்து அறிய வேண்டும். உங்களால் விவசாயிகளின் கடன்சுமையை தகர்க்க முடியவில்லை, உங்களால் வேளாண் விளைபொருள் மீதான தனியார் முதலாளிகளின் பிடியை உடைக்க முடியவில்லை. எப்படிப் பார்த்தாலும், விவசாயிகள் தாம் விளைவித்த பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதில்லை..

இது எங்கிருந்து வருகிறது என்பதை இப்போது பார்க்க வேண்டும். இது மற்ற துறைகளிலிருந்து வேறுபட்டதல்ல. இது ஒரு சித்தாந்தத்தின் படிப்படியான முன்னேற்றம். 1991-லிருந்தே பல்வேறு தடைகளை கடந்து வருகிறது. இதுவரை இந்த அளவு மோசமாக வராமலிருந்ததற்கு காரணம் விவசாயிகளின் எதிர்ப்புதான். விவசாயிகளுக்கென இதுவரை நடந்தவற்றிலேயே மிகச் சிறந்தது என நம்மிடம் சொல்லப்பட்ட இதை எதிர்த்துதான் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இன்னொரு கவனித்தக்கத்த விசயம்.

மூன்றாவது என்னவென்றால் இதே விசயங்கள் இதற்கு முன்பும் நடைபெற்றுள்ளன. நான் இங்கு மகாராட்டிராவில், வாஷி APMC-க்கு (Vashi APMC) அருகாமையில்தான் இருக்கிறேன். இங்கு சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் அரசால் இதே திட்டம் கொண்டு வரப்பட்டது – APMC-யின் கரங்கள் முடக்கப்பட்டுவிட்டன, அதன் கட்டுப்பாடு சில சதுரடி அளவில்தான் எனச் சொல்லப்பட்டது –

இதன் நோக்கம் என்ன? இதன் நோக்கம் ஏராளமான தனியார் சந்தைகளை உள்ளே கொண்டு வந்து, கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்து – தனியார் சந்தைகளை திறந்து விட்டு, அதன் மூலம் போட்டி உருவாகும் என்பதே. ஆனால், இந்திய கார்ப்பரேட்டுகள் எந்த வகையான போட்டியையும் ஒருபோதும் விரும்புவதில்லை. அரசு மூலம் பொதுத்துறை சொத்து கிடைத்தால் கூட, அதையும் அழகான பொட்டலத்தில் மடித்து – பரிசு பொருள் போல அமேசான் மூலம் வீட்டு வாசலிலேயே கையளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள்.

எனவே, வாஷியில் எதுவும் நடக்கவில்லை, இந்த முன்மாதிரி APMC-யால் எதுவும் நடக்கவில்லை. தனியார் சந்தைகள் எதுவும் வளர்ந்து செழிக்கவில்லை.

அடுத்து பீகார், அவர்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லும் பீகார், அந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூட செய்யவில்லை. சரியான விலை தரும் தனியார் சந்தைகளின் பரவலும் அங்கு நடக்கவில்லை. கேரளாவில் இந்த APMC இல்லவே இல்லை. ஆனால் அங்கு தனியார் சந்தைகளும் இல்லை. அதாவது அங்கே மாபெரும் கார்ப்பரேட் சங்கிலித் தொடர்கள் ஒரு மாற்றாக உருவாகவில்லை.

அடுத்தது, இதன் மூலம் உங்களுக்கு மிக அதிக விலை கிடைக்கும் என்ற எண்ணம். நான் சொல்கிறேன், இந்த எண்ணத்தின் சித்தாந்த, தத்துவார்த்த ரீதியான அடிப்படை, கடந்த 20 ஆண்டுகளில் படு மோசமாக மதிப்பிழந்து விட்டதும், அதே நேரத்தில் சிந்தைக்கு எளிமையான மயக்கும் கருத்துமான, ”கட்டற்ற சந்தையே சுதந்திரம், அரசு ஏழைமக்களை ஆதரிப்பதோ அடிமைத்தனம்.” என்பதே ஆகும்.

ஆம், ‘கட்டற்ற சந்தையே சுதந்திரம்’, இப்போது இந்த கருத்தாக்கம் மருத்துவம் போன்ற பிற துறைகளில் எப்படி வேலை செய்துள்ளது என்பதை, இந்த உலகத்திலேயே கொரோனா தொற்றில் மோசமான நாடாக இந்தியா மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதிலிருந்து நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். ஒரு நாளைக்கு 90-98000 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஐம்பது லட்சத்தை தாண்டிவிட்டது,

உங்களையும் உள்ளிட்டு இந்த விவரங்களை வெளியிடுபவர்களுக்கே கூட தெரியும் இந்த புள்ளிவிவரங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டவை, தவறானவை என்று. கொரானாவை கண்காணிக்க உதவும் உங்களது குறைபாடான Rapid Antigen Tests கருவிகளின் எண்ணிக்கைதான், கொரோனவை கண்டறிய உதவும் RT-PCR கருவிகளை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.

இதோ நான் மும்பையில் இருக்கிறேன், ஐந்து நிமிட நடை தூரத்தில், ஐந்து நிமிட பயண தூரத்தில் மூன்று ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளைப் பார்க்கிறேன் – கார்பரேட்டுகள் வழங்கும் விலைதேர்வுக்கும், சேவைத் தெரிவுகளுக்குமான பகுதியான இங்கு 6500 ரூபாய்க்கு குறைவான விலையில் கோவிட்-19-க்கான பரிசோதனையை யாராலும் கண்டறிய முடியாது, அனேகமாக 10,000 ரூபாய்க்கு மேல்தான் இருக்கும்.

ஒன்றிய விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமார்
ஒன்றிய விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமார்

இதோ இன்று, எந்த கார்ப்பரேட்டுகளுக்காக, மருத்துவத்தை திறந்து விட்டும், தளர்வுபடுத்தியும் என நாம் எல்லாவற்றையும் செய்திருந்தோமோ, அந்த கார்ப்பரேட்டுகளின் மேலாண்மையின் கீழ் மாவட்ட மருத்துவமனைகளை தாரை வார்த்து கொடுக்க இந்த அரசு கடந்த நிதி நிலை அறிக்கையில் முடிவு செய்தது. உங்களது இந்த வடிவம், அமெரிக்காவில் நடந்து வருவதன் அப்பட்டமான நகல், ஆனால் அதன் விளைவுகளோ இங்கு மிக மோசமானவை, ஏனெனில் இங்கு மக்கள் ஏழைகளாகவும், வலுவற்றவர்களாகவும் உள்ளனர்.

ஆகவே, இதுதான் ‘கட்டற்ற சந்தையே சுதந்திரம்’ என்பதன் பொருள். தற்போது மிக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளைப் பாருங்கள், அயர்லாந்து, ஸ்பெயின் போன்றவை – தொற்று தாக்கிய முதல் வாரத்தில் என்ன செய்தார்கள்? மருத்துவத்துறை சார்ந்த அனைத்தையும் தேசியமயமாக்கினார்கள் – தனியார் வசமிருந்த மருத்துவ சேவை ஒவ்வொன்றும் நாட்டுடைமையாக்கப்பட்டது.

நாம் என்ன செய்தோம்? கார்ப்பரேட் வசம் உள்ள படுக்கைகளில் குறிப்பிட்ட அளவை அரசிடம் தர வேண்டும் என டெல்லி அரசு கேட்பதற்கே இரண்டு மாதங்கள் ஆயின. அதற்கு பிறகுதான் மகாராட்டிர அரசு 80% படுக்கைகளை அரசிடம் ஒப்படைக்கக் கூறியது. இதுதான் அந்த வேறுபாடு.

ஆகவே, நீங்கள் இதில் ஒன்றை பார்க்கத் தவறுகிறீர்கள். விவசாய மசோதா குறித்த உங்களது தத்துவம், மருத்துவத் துறை குறித்த உங்களது தத்துவத்திலிருந்து வேறுபட்டதல்ல. இதையே கல்வித் துறைக்கும் பொருத்த முடியும்.

நான் இந்த APMC‌ பற்றிய புரிதலை இறுதி செய்ய விரும்புகிறேன் சாய்நாத், ஏனெனில், மக்கள் இதில் புரிந்து கொள்ளாமலிருப்பது எதுவென்றால் அதன் பின்விளைவுகளை குறித்தே என கருதுகிறேன்.

கேள்வி:

எனவே, நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியதிலிருந்து – ஒன்று, ஏகபோக ஆதிக்கம் பற்றிய பயம், அதாவது சில பெரும் கார்ப்பரேட்டுகள் புகுந்து விலையை தரைமட்டத்துக்கு நிர்ணயம் செய்வது – இது எந்த வகையிலும் விவசாயிகளுக்கு ஏற்றதாக இருக்காது. இரண்டாவதாக, நீங்கள் கூறியது போல, பீகார் அனுபவத்திலேயே கூட, தனியார் மண்டிகள் அமைக்கப்பட்ட பிறகும் விலை சீரடைவதற்குப் பதில் தீவிர ஏற்ற இறக்கத்தில்தான் உள்ளது. இது விவசாயிகளைப் பொறுத்த வரை, மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி விழுவது போலாகும், இல்லையா?

சாய்நாத்:

கடந்த மாதத்தில் மகாராட்டிரத்தில் முற்றிலும் APMC-க்கு வெளியில் நடந்ததைப் பாருங்கள். பால் விற்பனையை எடுத்துக் கொள்வோம். தற்போது இங்கு பால் விற்பனையில் மொத்தமாக கொள்முதல் செய்வோர் உள்ளனர். அவை அனைத்தும் தனியாரே. ஒரே ஒரு அரசு கொள்முதல் நிலையம் இருந்தாலும் அதன் மூலமும் தனியாரே அதிகம் பயனடைகின்றனர். கொரோனா தொற்றின் தொடக்கத்தில் நாங்கள் மும்பையில் பசும்பால் ஒரு லிட்டர் 48 ரூபாய்க்கும், எருமைப்பால் 60 ரூபாய்க்கும் வாங்கினோம்.

இந்த 48 ரூபாயில் விவசாயிகளுக்கு 30 ரூபாய் கிடைக்கும்‌. அதுவும் 2018-2019 ல் விவசாயிகள் நடத்திய மிகப் பெரிய போராட்டங்களுக்கு பிறகே கிடைத்தது. இப்போது ஊரடங்கு ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள், அதாவது ஏப்ரலுக்குப் பிறகு, முன்பு 30 ரூபாய் வாங்கிய விவசாயிகளுக்கு இப்போது கிடைப்பதோ வெறும் 17 ரூபாய்தான், ஆனால், நாங்கள் அதே 48/60 ரூபாய்க்குதான் இன்னமும் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இங்கு எந்த APMC-யும் விவசாயிகளை கைதிகளாய் பிடித்து வைத்திருக்கவில்லை, எந்த APMC-யும் விலையை குறைக்கவில்லை. APMC என்ற வடிவம் தீவிரமான பல சிக்கல்கள் உள்ள அமைப்பு என்பது முற்றிலும் வேறொரு உரையாடல். ஆனால், இங்கே நடந்த விற்பனை பரிவர்த்தனை முற்றிலும் தனியார் மூலம் நடந்து அதில் விவசாயிகள் ஏறத்தாழ தமது 50% வருவாயை இழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி போராடியதை ஒரு சில தொலைக்காட்சிகள் காட்டியதை பார்த்திருப்பீர்கள். இதில் எங்கே APMC. வில்லனாக செயல்பட்டது என்று கூறுங்கள்?

இரண்டாவது, மீண்டும் சொல்கிறேன், எப்படிப் பார்த்தாலும் பெரும்பாலான பரிவர்த்தனைகள் APMC-க்கு வெளியேதான் நடக்கின்றன, அப்புறம் நீங்கள் சொல்கிறீர்கள், ‘ஓ கவலைப்படவேண்டாம், APMC இருக்கத்தான் போகிறது’ என. ஆமாம் அவை கண்டிப்பாக இருக்கத்தான் போகின்றன,
எப்படி அரசுப் பள்ளிகளுக்கு எந்த வசதிகளும் செய்து தராமல், தனியார் துறையானது கல்வியை எடுத்துக் கொள்ள எல்லா வசதிகளும் செய்து வைத்துள்ளீர்களோ அப்படியாக அவை இருக்கும். இன்று நமது பிள்ளைகள் தனியாருக்கு போகும் சூழலை பார்க்கிறோம்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் அனைவருக்கும் ஒரேயளவில் கிடைக்கப் பெறாத நிலையான – டிஜிட்டல் பிளவு – (digital divide) பற்றிப் பேசிக் கொண்டிருப்போம் இல்லையா, இனி டிஜிட்டல் சமூகப் பிளவு (digital partisan) பற்றி பேச வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உங்கள் பிள்ளைகள் இந்தக் கல்வி முறையில் முற்றிலும் நாசமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் மீண்டும் சொல்கிறேன், கடந்த 28 ஆண்டுகளாக சொல்லமுடியாத நாசத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் இந்த தத்துவத்திலிருந்து விவசாயிகள் மசோதாக்களைப் பிரித்துப் பார்க்காதீர்கள். மீண்டும் கல்வியை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த சில மாதங்களில் BYJU என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் மதிப்பு இருமடங்காகி உள்ளது. 12 மாதங்களில் ரூ.550 கோடியிலிருந்து ரூ.1050 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி கொரோனா நெருக்கடியின் போது நடந்தது.

இப்போது, லட்சக்கணக்கானோர், குறிப்பாக பெண் குழந்தைகளை, நினைத்துப் பாருங்கள். 15 வயதிற்குட்பட்ட எத்தனை பெண் குழந்தைகளிடம் திறன் பேசிகள் (Smart Phone) உள்ளன?

உங்களுக்காக, நான் சொல்ல முடியும்,

வங்காளத்தில் கிட்டத்தட்ட ஒருவரிடம் கூட இல்லை. மகாராட்டிரத்திலோ, அதுவும் குறிப்பாகப் பெண் குழந்தைகள், அவர்களுடைய சகோதரர்களுக்காக காத்திருக்க வேண்டும். 17 வயதைக் கடந்த அந்த சகோதரர், செங்கல் சூளையில் வாரம் முழுவதும் வேலை செய்து விட்டு சனி, ஞாயிறுகளில் வீட்டிற்கு வந்து திறன் பேசியை கையளித்த பின்பு பாடங்களை பதிவிறக்க வேண்டும். அதுவும் கூடுதல் விலை கேட்கும் இணைய நேரத்தை (package) வாங்க வேண்டும். ஏனெனில் அவர்கள் வைத்துள்ள சாதாரண சேவை மிக மலிவானது – 200 ரூபாய்க்கு, ஒரு நாளைக்கு 2GB தரும். தற்போது பள்ளி பாடங்களை, படிப்பு சார்ந்தவற்றை, வகுப்புப் பதிவுகளை முழுவதும் பதிவிறக்கம் செய்ய இந்த மலிவான சேவையிலிருந்து விலை அதிகமான இணைய சேவைக்கு மாற அதிகப்படியாக செலவிட வேண்டும். எந்த வருமானமுமில்லாமல் மொத்த குடும்பமும் வீட்டிலே இருக்கும் நிலையில் இது சாத்தியமா?

இவ்வாறு கல்வியிலும், மருத்துவத்திலும் பெரும் துயரத்தை வழங்கி வரும் கார்ப்பரேட் துறையானது, விவசாயத்துறையில் மட்டும் எப்படியாவது வானத்தை கிழித்து வைகுண்டத்தை காட்டிவிடுமா என்ன?

கேள்வி:

நான் இரண்டாவது பிரச்சினைக்கு வருகிறேன். இந்த மொத்த விவசாய அமைப்பில், குறைந்த பட்ச ஆதார விலை (MSP) குறித்து பிரதமர் குறிப்பிடும் போது, அரசு இந்த MSP-ஐ தொடர்ந்து கொடுக்க உள்ளது ஆனால் அரசு மட்டுமே இனி அதைத் தொடர்ந்து கொடுக்கும் என சொல்கிறார். நான் இந்தக் கேள்வியை சில குறிப்பான தகவல்கள் சார்ந்து கேட்க உள்ளேன். சாந்த குமார் குழு அறிக்கையின் தரவுகள் படி 6%-க்கும் குறைவானவர்களே இந்த குறைந்தபட்ச ஆதார விலையை பெறுவதாக அறிகிறோம். இதனால்தான் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் மொத்தமாக தற்போது வீதிக்கு வந்துள்ளனரா?

சாய்நாத்:

இல்லை. இது ஒரு உடனடி வெளிப்பாடுதான். இன்னும் நிறைய உள்ளது. அவர்கள் APMC மற்றும் உத்தரவாதமான விலையைப் பற்றி கவலைப் படுகிறார்கள். மித்தாலி இப்போது நீங்கள் சாந்த குமார் குழு பற்றி பேசுகிறீர்கள். ஆனால் அதற்குப்பின், சுவாமிநாதன் குழு அறிக்கை என்று ஒன்று வந்துள்ளது. இது அதை விட பெரிய அளவில் விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தியது. ஏனெனில் அது வெறும் சுவாமிநாதனின் குழு அல்ல, அது புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் தலைமையில் அமைந்த விவசாயிகளின் தேசியக் குழு.

பெங்களூருவில் போராடும் விவசாயிகள்
பெங்களூருவில் போராடும் விவசாயிகள்

இங்கு நாம் பிரதம மந்திரியின் யோக்யதை என்னவென்று சிறிது பார்ப்போம். கடந்த ஆறு ஆண்டு கால MSP பற்றி வேகமாக ஒரு மீள்பார்வை செய்வோம். எனக்குத் தெரியவில்லை இதை எத்தனை முறை நான் திரும்ப திரும்ப சொல்கிறேன் என்று. நீங்களே பாருங்கள், இந்த அரசும் அதன் நிறுவனங்களும் அறியாமையையும், ஊடகங்களின் சுயநலமான சார்பையும் தமக்கு சாதகமான அம்சங்களாக கணக்கிடுகிறார்கள். ஆனால் கெடுவாய்ப்பாக அவர்கள் கணக்கு தப்புவதில்லை, சரியாகவே இருக்கிறது.

அவர்கள் செய்தது என்ன? ஒருவரை அவர்கள் செய்த செயல் மூலம்தான் மதிப்பிட முடியும்.
2014 தேர்தலின் போது பாஜகவும், தேசிய முற்போக்கு கூட்டணியும் 12 மாதங்களில் – சில கூட்டங்களில் ஒரு மாதத்திற்குள் என்று கூட சொன்னார்கள்- நாங்கள் சுவாமிநாதன் குழு அறிக்கையில் உள்ள முக்கிய பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என உறுதிமொழி அளித்தார்கள். அதிலும் குறிப்பாக உற்பத்திவிலை2 + 50% (COP2 +50%) உட்பட. சுவாமிநாதன் தனது உற்பத்தி விலை பற்றிய கணக்கெடுப்பில் சிறப்பான அளவுகோலை வைத்திருந்தார். அது “அனைத்தையும் உள்ளடக்கிய உற்பத்தி விலை” (Comprehensive Cost of Production). இதைத்தான் 12 மாதங்களில் உற்பத்தி செலவு கணக்கிடுவதிலும், MSP-யிலும் அமல்படுத்துவோம் என்று கூறினார்கள்.

இந்த 12 மாதங்களில் என்ன செய்தார்கள்? அது சாத்தியமில்லை என நீதிமன்றத்தில் ஒரு உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்தார்கள். ஏனெனில் அது சந்தை விலையில் சீர்குலைவை உருவாக்கும் என்றார்கள். எந்த வாக்குறுதியை கொடுத்து கோடிக்கணக்கான விவசாயிகளின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தார்களோ, அவர்கள் நீதிமன்றத்தில், ”இதை எங்களால் செய்ய முடியாது” என்று கூறினார்கள். அதாவது விவசாயிகள் வாழ்வு சீர்குலைவது எக்கேடு கெட்டும் போகட்டும், ஆனால் சந்தை விலையை சீர்குலைப்பதா? முடியவே முடியாது என்றனர். இது 2015-ன் கதை.

2016-ல் ராதா மோகன் சிங், அன்றைய வேளாண் அமைச்சர் (அமைச்சர்களா இந்த முடிவுகளையெல்லாம் எடுக்கிறார்கள்? உங்கள் அமைச்சரவையின் பெரும்பாலான அமைச்சர்களுக்கு முகமே கிடையாது, ஊடகத்துறை ஆசிரியர்களில் எத்தனை பேரால் வேளாண் அமைச்சர் பெயரை சரியாக சொல்ல முடியும்? இப்படித்தான் ஒருநாள், ஒரு பெரிய சேனலில் பாஜக சார்பில் பேசியவரால் வேளாண் அமைச்சர் பெயரை, நரேந்திர சிங் தோமர் என சொல்ல இயலவில்லை. அரசியல் களத்தில், எந்த தகுதியுமில்லாத, எங்குமே தென்பட்டிராத, எங்குமே அறியப்பட்டிராதவைகள்தான் இவைகள் எல்லாம்.)

ஆக, 2014-ல், ”12 மாதங்களில் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம்.”
2015-ல், ”எங்களால் இதைச் செய்ய முடியாது, ஏனெனில் சந்தை விலை சீர்குலைந்து விடும்” என நீதிமன்றப் பத்திரம்.

2016-ல் ராதாமோகன் சொல்கிறார், “நாங்கள் அப்படி ஒரு உறுதிமொழியே தரவில்லை.”

2017-ல், ராதா மோகன் சிங், ”அந்த சுவாமிநாதன் குழு அறிக்கையை விட்டுத் தள்ளுங்கள், மத்திய பிரதேசத்தின் சிவராஜ் சிங் சவுகான் மாதிரியைப் பாருங்கள். அது சுவாமிநாதனை விட பல படி முன்னேறியது.” என்கிறார்.

நமக்கு மத்தியப்பிரதேச தேர்தல் முடிவுகள் பற்றி தெரியும். ஆகவே, இதற்குமேல் அதுபற்றி பேச விரும்பவில்லை. அது ஒரு பக்கமிருக்க, ம.பி. வடிவம் பற்றி இவ்வாறு அவர்கள் கதையளந்த கொண்டிருந்த காலத்தில், யாரோ எழுதிய ஒரு புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், அங்கிருந்து அறிவுஜீவிகளில் ஒருவர் ம.பி. வடிவம் பற்றியும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அந்த வாரம்தான் மாண்டேசர் எனும் ஊரில் விவசாயிகளில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

2018-19 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து அருண் ஜேட்லி ஆற்றிய உரையை தயை கூர்ந்து கேளுங்கள், குறிப்பாக கடைசியாக பேசியது, உரையின் பத்தி 13 மற்றும் 14-ல், ”நாங்கள் ஏற்கனவே குறுவை சாகுபடியில் இதை அமலாக்கி விட்டோம். தற்போது சம்பா சாகுபடியில் நடைமுறைப்படுத்த தயாராகிக் கொண்டுள்ளோம்.” என்றார்.

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த நானே சுருக்கித் தருகிறேன்,
2014 – 12 மாதங்களில் நடக்கும்,
2015 – செய்ய இயலாது,
2016 – அப்படிச் சொல்லவேயில்லை,
2017 – மபியில் இதைவிட முன்னேறிய திட்டமுள்ளது,
2018-19 – நிதிநிலை உரையில், சுவாமிநாதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டன.

தற்போது 2020-ல், நாடாளுமன்றத்தில் உங்கள் ‘பெயர் தெரியாத’ வேளாண் அமைச்சர், தோமர், அவருடைய பெயர் பலருக்கும் தெரியாது – அதில் வியப்பொன்றுமில்லை – ஏனெனில் அவர் முக்கியத்துவமில்லாதவர்.. எல்லா குழப்பங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கும் சூழலில் அவர் சொல்கிறார், “எங்கள் கட்சி மட்டுமே சுவாமிநாதன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தியது, நாங்கள் மட்டுமே அந்த பரிந்துரைகளுக்காக நின்றோம். நாங்கள்தான் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கொடுத்தோம்” என.

இதில் தந்திரம் என்னவென்றால், 2017-லிருந்து “உற்பத்தி விலை“ என்பதாக ஒன்று விளக்கப்பட்டதே, அதனை கணக்கிடுவதில் பல்வேறு முறைகள் உள்ளன. A2 என்பது வெறும் உரம், விதைகள், மருந்துகள் ஆகியவற்றிற்கு நீங்கள் கொடுத்த விலை மட்டும். இன்னொரு முறை A2+FL (A2 மற்றும் விவசாய கூலி). சுவாமிநாதன் குழு எந்த காலத்திலும் இந்த இரண்டையும் பரிந்துரைத்ததில்லை. அது பரிந்துரைத்த COP2+50%, விரிவான உற்பத்தி விலை – அதில் விவசாய கூலி, மற்ற முதலீடுகள், மற்றும் நிலவாடகை உள்ளிட்ட பிற வகையீனங்களை உள்ளடக்கியது.

A2 வுக்கும் COP2+50% திற்கும் இடையிலான விலை வித்தியாசம் ஒரு குவிண்டாலுக்கு 800 ரூபாய்! அதேபோல் A2+FLயை விட COP2+50% 300ரூபாய் அதிகம். இந்த விலையையும் அரை மனதோடு நடைமுறைப்படுத்தியதைத்தான் ஜேட்லி தனது உரையில் தம்பட்டம் அடித்துள்ளார்.

நான் இந்த எல்லா முட்டாள்தனங்களையும் பற்றிக் கூறுகிறேன், மிக குறைந்த அளவிலான விவசாயிகள் MSP-யை பெற்றனர் என்பது உண்மைதான் என்ற போதும். ஆகவேதான், ஆவணங்களைப் பரிசோதியுங்கள் என்கிறேன், ஒரு ஊடகவியலாளராக மட்டும் அல்ல, Nation for Farmers forumல் காத்திரமாக பங்கெடுத்தவன் என்ற முறையில், பல கோரிக்கைகள், பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில் நீங்கள் இருப்பதையும் பிடுங்காதிருக்க வேண்டும்.

MSP, APMC பற்றி அவர்கள் சொல்வது இதைத்தான், ”ஒருவன் நோய்வாய்பட்டுள்ளானா. கொன்று விடுங்கள்”. அதற்குப் பதில் இருப்பதை முதலில் விவசாயிகளுக்கு வழங்குங்கள் என்பதே தேவை. இப்போது விவசாயிகளின் தேவை என்ன? விவசாயிகள் உத்தரவாதமான விலை, நிலையான விலையைக் கேட்கிறார்கள். நீங்கள் அவர்கள் மீது எதை திணிக்கிறீர்கள்? பால் கொள்முதல் விலையை 13 நாட்களில் ரூ.30-லிருந்து ரூ.17-க்கு குறைத்தது போன்ற பைத்தியக்காரத்தனமான ஏற்ற இறக்கத்தை. APMCயா இதை செய்தது?

இப்போது என்ன நடக்கும் என்றால் பாருங்கள், அவர்கள் ஒரு சுத்தமான கார்ப்பரேட் ஆதரவு நோக்குநிலை கொண்டவர்கள்.. ஆனால் இது அவர்கள் நினைத்தபடி நடைபெறாது. இது மிகுந்த நாசத்தை விளைவிக்கும். குழப்பத்தில் கொண்டு போய் தள்ளும். அதில் இடைத்தரகர்கள் மேலும் விவசாயிகளின் கழுத்தை நெரிப்பர். ஏனெனில் பெரும்பாலான விவசாயிகள் இதுவரை இருந்த வாய்ப்பையும் இழந்து விடுவார்கள்.. தனியார் பரிவர்த்தனையின் பிடிக்கு மேலும் பல விவசாயிகள் அரசின் எந்த தடுப்புமின்றி தள்ளப்படுவது அதிகரிக்கும். வாஷியை எடுத்துக்காட்டாக் கொண்டால், எந்த தனியாரும் உங்களைத் தேடி வந்து வாங்கப் போவதில்லை, தாம்பாளத் தட்டில் வைத்து அவர்களை தாங்கினால் தவிர்த்து.

(நேர்முகத்தின் இறுதிப் பகுதி விரைவில் வெளியாகும்)

கட்டுரை & படங்கள் – நன்றி : thewire.in
மொழியாக்கம் செய்யப்பட்டது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்