Aran Sei

துப்பறியும் தங்கச்சியின் அட்டகாசங்கள் – Enola holmes பட விமர்சனம்

’துப்பறியும் புலி’ ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை செய்யும் சேட்டைகள் தான் நெட்ஃபிளிக்சின் எனோலா ஹோம்ஸ் திரைப்படம்.

நான்சி ஸ்பிரிங்கர் ’எனோலா ஹோம்ஸை’ கதை நாயகியாக கொண்டு எழுதிய ‘எனோலா ஹோம்ஸ் மிஸ்ட்ரீஸ்’ (எனோலா ஹோம்ஸ் மர்மங்கள்) என்ற துப்பறியும் நாவல் தொடரை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இதை ’ஜாக் தொர்னே’ எழுத, ’ஹாரி ப்ராட்பீர்’ இயக்கி இருக்கிறார்கள்.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் புகழ் மில்லி ப்ரவுன் இதில் எனோலா ஹோம்ஸாக அட்டகாசம் செய்திருக்கிறார். சூப்பர் மேனாக நடித்து வரும் ஹென்றி கேவில், ஷெர்லாக் ஹோம்ஸின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

நன்றி : Netflix

பதினாறு வயதான எனோலோ தன் தாயுடன், இங்கிலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெரிய மாளிகையில் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட, அண்ணன்களான ஷெர்லாக்கும் மைக்ராஃப்ட்டும் லண்டனுக்கு போய் விட, பின் தாயின் அரவணைப்பிலேயே வளர்கிறார்.

மிகவும் சுட்டிப்பெண்ணாகவும், அதே நேரம் புத்திசாலியாகவும், பாதுகாப்பு கலைகள் அறிந்த பெண்ணாகவும், முற்போக்கு கருத்துகள் கொண்ட பெண்ணாகவும் எனோலாவை அவள் தாய் வளர்க்கிறாள். எனோலாவின் உலகமே அவள் தாய் தான் என்று ஆகிறது. ஒருநாள் காலை எழுந்து தாயை தேடும் போது, அவள் வீட்டில் எங்கும் இல்லை. அதோடு அவளின் ஒரு அத்தியாயம் முடிகிறது.

இதனை அடுத்து அவளின் அண்ணன்களான ஷெர்லாக்கும் மைக்ரோஃப்ட்டும் லண்டனிலிருந்து அவர்களது கிராமத்திற்கு வருகிறார்கள். அவர்களால் எனோலாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அவளுடைய தாயை கண்டுபிடித்தாளா என்ற கேள்விக்கான பதிலையும் தான் திரைப்படம் ஜாலியாக, கொஞ்சம் உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கிறது.

முதல் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே வரும் தாயின் கதாபாத்திரத்தின் பாதிப்பு படம் முழுவதும் தெரிகிறது. தாய்க்கும் அவளுக்குமான உறவை, திரைக்கதையில் கிடைத்த இடங்களில் எல்லாம் அழகாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள உணர்வு புரிதலை, துப்பறியும் காட்சிகளின் வாயிலாக சொல்லியது, கதையோட்டத்தை மேலும் உயிர்ப்புள்ளதாக மாற்றியது.

நன்றி : Netflix

பொதுவாக சிடுசிடுக்காரராகவே வரும் ஷெர்லாக் இதில் தன் தங்கையின் மீது அன்பும் கனிவும் கொண்டவராக வருகிறார். ஆனாலும் சில இடங்களில் அவரின் துப்பறியும் புத்தி துள்ளிக்குதித்து வெளியே வந்து விடுகிறது. குறைந்த காட்சிகளே வந்தாலும், வந்த இடங்களில் எல்லாம் தனித்துவமான ஒரு முத்திரையை குத்திவிடுகிறார். அதிலும், தங்கையோடு பழைய நினைவுகளை பற்றி பேசும் இடத்திலாகட்டும், அவளுக்கு தன் பாசத்தை புரிய வைக்கும் இடத்திலாகட்டும் ”யய்யா அண்ணாமலை எங்கய்யா இருந்த இத்தன நாளா?” என்று அண்ணாமலை பட மனோரமா ஆச்சி குரலில் சொல்ல வைக்கிறார்.

இன்னொரு அண்ணனாக வரும் மைக்ராஃப்ட் ‘மதில் மேல் பூனை மேலாக’ வந்து போகிறார். சிறுவயதில் இருந்து, தாயால் சுதந்திரமாக  கல்வி புகட்டப்பட்ட எலோனாவை, அடிமை முறைபோல நடத்தப்படும் பள்ளியில் சேர்க்க முயற்சிக்கிறார். அதில் தோற்றுப் போகிறார். அவளுக்கு ரயிலில் கிடைக்கும் தோழனான லூயிஸோடு, லண்டனில் செய்யும் துப்பறியும் நடவடிக்கைகள், குதுகலமாக போகிறது.

இருவருக்குமான நட்பும், தாயின் வார்த்தை விளையாட்டுகளும், அதை வைத்துக்கொண்டு துப்பறிவதும் என எனோலாவுடனான வாழ்க்கை ஒருபக்கம் சொல்லப்பட்டாலும், மறுபக்கம் இங்கிலாந்தில் நடக்கும் தேர்தல், அதையொட்டி அரச குடும்பங்களில் ஏற்படும் கொலைகள், எலோனாவின் தாய் பங்கு வகிக்கும் புரட்சிகர கருத்துகளை கொண்டுள்ள பெண்கள் அமைப்பு, அக்காலத்திய லண்டன் நகரமும் அதன் துறைமுகமும் ரயில்களும் என புற விஷயங்கள் வழியாகவும் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.

இரண்டு மணி நேரம் எந்த அடிபுடியும், திக்கு திக்கும் இல்லாமல் ஒரு மிருதுவான துப்பறியும் படத்தை பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எனோலா ஹோம்ஸ்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்