Aran Sei

‘தலித் மக்களுக்கான ஆயுதப்படை’ உருவாக்க முயற்சி – என்ஐஏ குற்றச்சாட்டு

Credit : thewire.in

ல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், “தலித் மக்களுக்கான ஆயுதப்படையை” உருவாக்க முயற்சித்ததாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்ததாகவும் சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, பல மாணவர் தலைவர்கள், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசியர்கள், ஒன்று மாவோயிஸ்ட் கட்சின் ஆதரவாளர்களாகவோ அல்லது கட்சியின் நகர்ப்புற அமைப்பின் உறுப்பினர்களாகவோ இருப்பதாக சாட்சிகள் தெரிவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி வயர் இணையதளம் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு சாட்சி, எழுத்தாளர் வரவர ராவுடன் வேலை செய்ததாக கூறியுள்ளார். மாவோயிஸ்ட்டுகளால் நடத்தப்படும் ‘அவாமி ஜங்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி, வரவர ராவ் கேட்டுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். அவாமி ஜங் அல்லது ஜங் என்று பொதுவாக அழைக்கப்படும் அந்த பத்திரிகை மாவோயிஸ்ட் கட்சியின் உள்சுற்றுக்கான பத்திரிகையாகும். 2012 வரை அந்தப் பத்திரிகையை மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் நடத்தி வந்தனர். வரவர ராவின் புரட்கர எழுத்தாலும், அவரால் 1970-களில் உருவாக்கப்பட்டு தற்போதுவரை செயல்பட்டு வரும் புரட்சிகர எழுத்தாளர்கள் அமைப்பாலும் ஈர்க்கப்பட்டதால் தான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக அந்த சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜங் பத்திரிகையில் வேலை செய்யும் போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள, நாக்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சோமா சென், வழக்கறிஞர் மற்றும் சிறைக் கைதிகள் உரிமைக்காக போராடிய அருண் ஃபெரேரா, டெல்லி பல்கலைக்கழக பேராசியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி, அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசியர் சாய்பாபா, செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே உட்பட மேலும் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் தானும் பங்கேற்றதாக அந்த சாட்சி கூறியுள்ளார்.

சோமா சென், ஃபெராரே, ஆனந்த டெல்டும்டே ஆகியோர் எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிலானி மரணமடைந்தார். இந்த நிகழ்ச்சி புரட்சிகர ஜனநாயக முன்னணி என்ற அமைப்பால் நடத்தப்பட்டதாகவும், அந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஆந்திர அரசு அந்த அமைப்பை தடை செய்து விட்டதாகவும் அந்தச் சாட்சி தெரிவித்துள்ளார்.

அந்தக் கூட்டத்தில் “தலித் மக்கள் ஆயுதப்படையை” மீண்டும் உருவாக்க வேண்டும் என்றும் நம் நாட்டில் “மாவோயிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் புரட்சிகர எழுச்சியை” உருவாக்க வேண்டும் என்றும் ஆனந்த் டெல்டும்டே கூறியதாக அந்தச் சாட்சி தெரிவித்துள்ளார்.

கல்வியாளர் என்ற அடிப்படையில் டெல்டும்டே மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களும் என்ஐஏவால் விசாராணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. “பெரு, பிலிப்பைன்ஸ், துருக்கி மற்றும் மேலும் பல நாடுகளில் நடைபெற்ற கூட்டங்களில் பேச்சாளராக கலந்து கொள்வதாக கூறிக்கொண்டு, மாவோயிஸ்டுகளுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் வீடியோக்களை கொண்டுவந்தார்” என்று டெல்டும்டேவுக்கு எதிராக அந்த சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கட்சிரோலி மாவட்டத்தில் ஆதிவாசி சமூகத்தினர் காடுகளிலிருந்து பீடி சுற்றும் இலைகளை சேகரித்து விற்பனை செய்வதையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் நிலையில், மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அவர்களிடமிருந்து வரி வசூல் செய்ததாகவும், ஒப்பந்ததாரரிடமோ அல்லது பழங்குடியினரிடமோ 1000 இலைகளுக்கு 350 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும் சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் ஆண்டுக்கு 2.5 முதல் 3 கோடி ரூபாய் வரை மாவோயிஸ்டுகள் வசூலித்ததாக மற்றொரு சாட்சி என்ஐஏவிடம் கூறியுள்ளார். இது மாவோயிஸ்ட்டுகள் விதித்துள்ள 7% ‘வன வரி’ என்று மற்றுமொருவர் கூறியுள்ளார்.

2012 முதல் 2016 வரை மஹாராஷ்ட்ராவின் கட்சிரோலி மற்றும் பஸ்தர் பிராந்தியத்தின் அபுஜ்மாத் பகுதியில் ஆயுதக்குழுவில் இருந்ததாக கூறியுள்ள ஒரு சாட்சி, அந்த சமயத்தில் ‘கபிர் கலா மஞ்ச்’ கலாச்சார குழுவை சேர்ந்தவர்கள் கட்சிரோலிக்கு வந்து 20 நாட்கள் தங்கியிருந்து ஆயுதப் பயிற்சி எடுத்ததாக கூறியுள்ளார்.

“2012-ம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம், ரமேஷ் கய்ச்சோர், சாகர் கார்க்கி, புனேவை சேர்ந்த மற்றும் ஒருவர், கட்ரிசோலியின், கோர்ச்சி வனப்பகுதிக்கு டிவிசி உறுப்பினர் அருண் பேல்கே என்பவருடன் வந்தனர். அவர்கள் நகர்ப்புறங்களில் கட்சியின் செயல்பாடு குறித்து (மாவோயிஸ்ட் கட்சியின்) மஹாராஷ்ட்ரா கமிட்டி செயலாளர் தீபக் என்ற மிலிந்த் டெல்டும்டேவுடனும், டிவிசி உறுப்பினர் அனில் நாபுரேவுடனும் விவாதிப்பார்கள்” என்று அந்தச் சாட்சி தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படும் மிலிந்த் டெல்டும்டே, 1996 முதல் பல தலைமறைவு இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர். குற்றப்பத்திரிகையில் அவர் தலைமறைவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1996-ம் ஆண்டு அவர் இயக்கத்தில் சேர்ந்திருந்தாலும், அவருடைய சகோதரர் ஆனந்த் டெல்டும்டேவேயின் உந்துதல் காரணமாகவே மிலிந்த் டெல்டும்டே ஆயுத இயக்கத்தில் சேர்ந்ததாக இரண்டு சாட்சிகள் கூறியுள்ளனர்.

ஆனந்த் டெல்டும்டே எப்போதுமே கல்வியாளராகவும், செயல்பாட்டாளராகவுமே பொதுவாழ்க்கையில் இருந்துள்ளார்.

மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஆயுத பயிற்சி, வெடிகுண்டுகளை கையாளும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பயிற்சி ஆகியவை காட்டிற்குள் வழங்கப்படும் என்று ஒருவர் சாட்சியளித்துள்ளார். அதன்படி, கைசோர், கார்கே மற்றும் ஒரு பெண் காட்டிற்குள் வந்தபோது, துப்பாக்கியை கையாளவும், தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகளை அடையாளம் காண்பதற்கும் அத்துடன் உடற்பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டதாக சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு, மஹராஷ்ட்ராவின் தீவிரவாத தடுப்பு பிரிவினர், கய்ச்சோர் மற்றும் கார்க்கி மீது இதே குற்றச்சாட்டையே முன்வைத்தனர். இதற்காக 2013-ம் ஆண்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எல்கர் பரிஷத் வழக்கில் முதல் முதலில் கைது செய்யப்பட்ட மூத்த மனிதஉரிமை வழக்கறிஞர் சுரேந்ரா கட்லிங்கின் செல்வாக்கினால், பலர் ஆயுதக் குழுவில் இணைந்ததாக சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு மனித உரிமை செயல்பாட்டாளர் ரோனா வில்சன் 10 நாட்களுக்கு மேல் காட்டில் தங்கியிருந்ததாக ஒருவர் சாட்சியளித்துள்ளார்.

2018-ம் ஆண்டு தொடங்கி இந்த வழக்கில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. முதலில், புனேவின் புற நகர் பகுதியான பீமா கோரேகானில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக துவங்கிய விசாரணை, ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக கூறப்படும் ‘நகர்ப்புற நக்சல்’ களுக்கும் (Urban Naxals) இதில் தொடர்புள்ளது என்பதாக விரிவடைந்தது. முதலில் புனே காவல்துறையினர் விசாரணை நடத்திய இந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் என்ஐஏ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

பின்னர் இந்த குற்றச்சாட்டு பின்னுக்கு தள்ளப்பட்டு தற்போது, கைது செய்யப்பட்டவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் நெருக்கமான தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள், விசாரணை நடத்தியவர்கள் மட்டுமின்றி மேலும் பலர் சாட்சிகளால் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஏற்கனவே வேறு சில வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், வேறு சிலரோ எந்த குற்ற வழக்கும் இல்லாத சமூகத்தில் நன்மதிப்பை பெற்ற நபர்கள். சிலர், அறியப்பட்ட மனித உரிமை வழக்கறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள்.

‘இந்திய மக்கள் வழக்கறிஞர் சங்கம்’ நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டதாக கூறியுள்ள ஒரு சாட்சி, கைது செய்யப்பட்டுள்ள வில்சனும் டெல்லி பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஹனி பாபுவும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறியுள்ளார். “நக்சல் வழக்குகளில் அவர்களுக்கு உதவவும், அரசியல் கைதிகளை அரசால் துன்புறுத்தப்பட்டவர்களாக காட்டுவதற்கு வற்புறுத்தப்பட்டதாகவும்” ஒரு சாட்சி கூறியுள்ளார். அந்த இருவரும், டெல்லியில் மாணவர்கள் மற்றும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவாளர்களை உருவாக்கியதாகவும் சாட்சியளிக்கப்பட்டுள்ளது.

வில்சனும், ஹனியும் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களுடனே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். சிறைக் கைதிகளின் உரிமைக்காக வில்சன் வேலை செய்துள்ளார். ஹனி, சாதி ஒழிப்பு இயக்கத்தில் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்துள்ளார். அவருடைய ஆய்வுகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் குறிப்பாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இடம் இல்லாததையே மையப்படுத்தியது.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்