2020-க்கான நடப்பு விலையிலான ஒரு நபருக்கான ஆண்டு வருமானம் வங்கதேசத்தில் $1887.97 ஆகவும், இந்தியாவில் $1816.04 ஆகவும் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) மதிப்பிட்டுள்ளது. 2019-ல் இது இந்தியாவில் $2097.78, வங்கதேசத்தில் $1816.04 ஆக இருந்தது.
கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதிலும் வங்கதேசம் இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் உலகிலேயே மோசமான அளவில் சுருங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 5,534 ஆக இருக்கும் போது வங்கதேசத்தில் 2,380 ஆக (பாதிக்கும் கீழே) உள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் “போட்டியிடும் திறனுக்கான நிலையம், இந்தியா” என்ற நிறுவனத்தின் தலைவரும் ஸ்டேன்போர்ட் பல்கலைக் கழகத்தின் வருகை பேராசிரியருமான அமித் கபூரும் அந்நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் சிராக் யாதவும் எழுதிய கட்டுரை குறிப்பிடுகிறது.
மாறா விலைகளின் அடிப்படையில் இந்தியாவின் ஒரு நபருக்கான ஆண்டு வருமானம் $5944 ஆகவும் அதுவே வங்கதேசத்தில் $4861 ஆகவும் உள்ளது. இந்த அடிப்படையில் உண்மையான விலைகளில் இந்தியா வங்கதேசத்தை விட இன்னும் முன்னிலையில் உள்ளது. என்றாலும், 2016-ல் இந்தியாவின் ஒரு நபருக்கான உள்நாட்டு உற்பத்தி வங்கதேசத்தை விட 1.4 மடங்காக இருந்தது, 4 ஆண்டுகளில் அது 1.2 மடங்காக குறைந்திருக்கிறது என்கிறது எகனாமிக் டைம்ஸ் கட்டுரை.
2010-ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வங்கதேசத்தின் ஜிடிபியை விட 14.8 மடங்காக இருந்தது, 2020-ல் அது 8.15 மடங்காக வீழ்ச்சியடைந்திருக்கிறது.
ஏன்?
வங்க தேசம் கிழக்காசிய நாடுகளும் சீனாவும் பின்பற்றிய பொருளாதார உத்தியை பயன்படுத்தியுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியான கட்டுரை குறிப்பிடுகிறது.
வங்கதேசம் சாமான்ய திறன் கொண்ட தொழிலாளர்களை ஈடுபடுத்தும் ஆயத்த ஆடை போன்ற ஏற்றுமதி சார்ந்த துறைகளை வளர்த்துள்ளது. வியட்னாமும் அதே போன்ற உத்தியை பயன்படுத்தியது. இப்போது சீனாவிலிருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களில் பெரும்பகுதியை வங்கதேசமும் வியட்னாமும் ஈர்க்கின்றன என்கின்றனர் அமித் கபூரும், சிராக் யாதவும்
இந்தியாவிலோ சாமான்ய திறன் படைத்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் உற்பத்தித் துறைக்கு பதிலாக படித்த, ஆங்கிலம் பேசும் திறன் படைத்த தொழிலாளர்களுக்கான ஐ.டி சேவைத் துறை பொருளாதார வளர்ச்சிக்கான உந்துதலாக இருக்கிறது.
விவசாயத்தில் குறைந்து செல்லும் வேலை வாய்ப்புகளை ஈடு கட்டும் அளவுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சேவைத் துறையில் சாத்தியமில்லை, மாறாக, வங்கதேசம், வியட்னாம் போன்ற நாடுகளும் முன்னதாக சீனாவும் உற்பத்தித் துறை வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை சாதித்து வருகின்றன.
இந்திய உற்பத்தித் துறையில், செய்யும் வேலைக்குத் தேவையானதை விட அதிகம் படித்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தித் துறையில் 68% வரை (2011-12ல்) உள்ளது என்கிறது ஒரு ஆய்வு.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானின் பொருளாதாரத்தின் அளவு வங்கதேசத்தை விட $600 கோடி அதிகமாக இருந்தது. இன்றைக்கு வங்கதேசம் பாகிஸ்தானை முந்தி அதே அளவுக்கு முன்னிலையில் இருக்கிறது என்கிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தெற்காசிய துறையின் இயக்குநர் சி ராஜா மோகன். இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானிய அரசியல் செயல்பாட்டாளரும் பாகிஸ்தானுக்கான முன்னாள் வெளிநாட்டுத் தூதருமான உசைன் ஹக்கானி, “1971-ல் சுதந்திரம் அடைந்த போது $133 ஆக இருந்த வங்க தேசத்தின் ஒரு நபருக்கான ஆண்டு வருமானம் இப்போது $1906-ஐ எட்டியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யும் $870 கோடியிலிருந்து $30,200 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், இப்போது பாகிஸ்தானின் ஜிடிபி $27,800 கோடி அளவிலேயே உள்ளது” என்கிறார். இவ்வாறு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை வங்கதேசம் பாகிஸ்தானை விட முன்னேறியுள்ளது.
Tribute must be paid to Bangladesh & its founder Bangabondhu Sheikh Mujib. Great economic strides since independence in 1971. From Per Capita GDP of $133, it is now $1906. Nominal GDP has also risen from $8.7 billion to $302 billion, more than Pakistan’s $278 b. pic.twitter.com/pshqV6WRaG
— Husain Haqqani (@husainhaqqani) October 16, 2020
வங்க தேசத்தின் திட்ட கமிஷனில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவரும் இப்போதைய வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் பொருளாதார கொள்கைகள் வகுப்பதில் முக்கிய பங்கு வகிப்பவருமான ஷம்சுல் அலம், “ஒரு நபருக்கான வருமானத்தைக் கூட ஒரு நிமிடம் மறந்து விடுவோம். பெண்களின் முன்னேற்றத்தில் நாங்கள் இந்தியாவை எப்படி தோற்கடித்திருக்கிறோம் என்று பாருங்கள்” என்று கேட்பதாக கூறுகிறது ஹஃபிங்டன் போஸ்ட் கட்டுரை.
உலக பொருளாதார மன்றத்தின் உலக பாலின பாகுபாடு குறியீட்டு எண்ணில் இந்தியா 153 நாடுகளில் 112-வது இடத்தில் பின்தங்கி இருக்கும் அதே நேரம், வங்கதேசம் 50-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. வங்கதேசம் தெற்காசியாவிலேயே முதலிடம் வகிக்கிறது என்கிறது ஹஃபிங்டன் போஸ்ட்.
வங்க தேசத்தின் ஆயத்த ஆடைத் துறை உற்பத்தி நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 80%-க்கு அதிகமான மதிப்பையும், மொத்த தேசிய பொருளாதார உற்பத்தியில் 20% ஆகவும் உள்ளது. 40 லட்சத்துக்கும் அதிகமான பேர் ஆயத்த ஆடை உற்பத்தி ஆலைகளில் வேலை செய்கின்றனர். அவர்களில் 80% பெண்கள்.
இதன் மூலம் வங்கதேசத்தில் பொருளாதார உற்பத்தியில் பங்கெடுக்கும் பெண்களின் வீதம் 37% ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலோ 1990ல் 30.3% ஆக இருந்த பெண்களின் பங்கேற்பு இப்போது 20.5% ஆகக் குறைந்திருக்கிறது என்கிறது உலக வங்கி.
தொழில்துறை உற்பத்தி, ஏற்றுமதி வளர்ச்சி, பிறப்பு வீதம், குழந்தை இறப்பு வீதம், கல்வியறிவு, பெண்கள் பொருளாதார பங்கேற்பு, நிதித்துறை பரவல் போன்ற சமூகக் குறியீடுகள் அனைத்திலும், இந்தியாவின் கிழக்கத்திய அண்டை நாடான வங்கதேசம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்கிறார் பல்லப் பட்டாசார்யா என்பவர் த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழில் வெளியான தனது கட்டுரையில்.
இருப்பினும் 2013-ல் ராணா பிளாசா என்ற கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1,100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டாலும், பெண் தொழிலாளர்கள் இன்னும் பணியிட வன்முறைகளை எதிர் கொண்டு வருவதாக ஹபிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.
ஆயத்த ஆடைத் துறையை வளர்ப்பதில் வங்க தேச அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவிய போது அரசு அறிவித்த நிதி உதவியில் பெரும்பகுதி ஆயத்த ஆடைத் துறைக்குச் சென்றது.
ஆனால், இந்தியாவிலோ கொரோனா முழு முடக்கத்தின் காரணமாக 20-30% ஆயத்த ஆடை ஆலைகள் மூடப்பட்டு விட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் போதுமான செயல்பாட்டுக்கான மூலதனம் இல்லாததே காரணம். ஆயத்த ஆடைத் துறை உற்பத்தியாளர் சங்கம் பல முறை துறைக்கு வேண்டுகோள் விடுத்தும் அரசு எதையும் செய்யவில்லை என்கிறார் அதன் முன்னாள் தலைவர் ராகுல் மேத்தா.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கதேசத்தின் ஒரு நபருக்கான ஆண்ட வருமானம் ஆண்டுக்கு 9.1% என்ற அளவில் வளர்ந்து வரும் அதே நேரம் இந்தியாவில் அது 3.1% அளவிலேயே வளர்ச்சியடைந்தது என்கிறது ஹபிங்டன் போஸ்ட். இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி தேங்கிப் போன அதே நேரம் வங்கதேசத்தின் ஏற்றுமதி வளர்ச்சியடைந்துள்ளது.
இந்தியா ஐந்தாண்டு திட்டங்களை கைவிட்ட அதே நேரத்தில் வங்கதேசம் திட்டமிடுதலில் அதிக கவனம் செலுத்துகிறது என்கிறார் சம்சுல் அலம். வங்கதேசத்தின் அரசியல் விவாதங்கள் மேலும் மேலும் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டதாக மாறி விட்டதாகவும், சமீப ஆண்டுகளில் மத தீவிரவாதம் அதிகரித்து வந்தாலும் அரசு அதனை எதிர்த்து உறுதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்கிறார் ஷம்சுல் அலம்.
மாறாக, இந்தியாவில் மத அடிப்படையிலான பிரிவினைகளும், தீவிரவாதமும் அதிகரித்து வருவதில் அரசே பங்களிப்பு செய்வது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.