Aran Sei

E-அடிமைகள் : முதல் அடிமையின் கதை – அதிஷா (பகுதி 2)

1995-ம் ஆண்டு… நியூயார்க்கில் வாழ்ந்து வந்தனர் அந்த தம்பதியர். காதல் திருமணம்தான். தலைவனும் தலைவியும் ஒருநாளும் ஒருபொழுதும் பிரியாமல் வாழுகிற அளவுக்கு அத்தனை அன்னியோன்யமானவர்கள். எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. 1995-ம் ஆண்டின் இரண்டாம் பாகத்தில்தான் பிரச்சனை எழத்தொடங்கியது.

தலைவன் தன் தலைவியோடு போதிய அளவு நேரம் செலவழிப்பதில்லை என்பதில் தொடங்கியது சிக்கல். மெதுமெதுவாக ஒரு பற்றவைக்கப்பட்ட வெடிகுண்டின் திரிபோல… வீட்டுக்குள் வேகமெடுக்கத் தொடங்கியது. ஊடலும் கூடலும் காதல்வாழ்வில் சகஜம்தானே…

ஆனால் இது சகஜமாக இருக்கவில்லை. நாளுக்குநாள் அதிகமானது. என்னோடு பேசுவதில்லை… என்னோடு சிரிப்பதில்லை… என்னோடு வெளியே ஊர் சுற்ற வருவதில்லை… குடும்பச் செலவுக்குப் பணம் தருவதில்லை… என்மேல உனக்கு லவ் இல்லை.. என் மேல உனக்கு ப்ரியம் இல்லை… என்னை ஏன்டா கண்டுக்க மாட்டேங்குற என்று ஏகப்பட்ட பிரச்சனைகள்.

அதே ஆண்டின் இறுதியில் இருவரும் விவகாரத்து பெற முடிவெடுத்தனர். ஆனால் அவர்களுடைய நண்பர்களோ அதற்கு முன்னால் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற வலியுறுத்தினர்.

இந்தச் சந்திரமுகி கதைக்குள் வந்து சேர்ந்தார் ரஜினிகாந்த். அவர் பெயர் கிம்பெர்லி யங் என்கிற மனநல மருத்துவர். அந்த மருத்துவர் இதுவரை இப்படி ஒரு பிரச்சனையை எதிர்கொண்டதே இல்லை. கணவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை; வேறு பெண்களோடு தொடர்புகள் இல்லை; நன்றாகச் சம்பாதிக்கிறார்; மனைவியின் மேல் பிரியமாகத்தான் இருக்கிறார். ஆனால் ஏன் விரிசல்…

இன்டர்நெட்!

ஆமாம் உலகில் அதற்கு முன்புவரை இல்லாத ஒரு பிரச்சனை. இன்டர்நெட்டால் ஒரு மனிதன் தன்னை இழந்து போதையில் விழுகிறான். ஒரு குடும்பம் பிரிகிறது. ஒரு மனிதனின் வாழ்வே மாறுகிறது. எல்லாமே அதுதான் முதன்முறை!

அந்தக் காலகட்டத்தில் ஃபேஸ்புக் கிடையாது; வாட்ஸ்அப் கிடையாது… சாட்டிங் ரூம்கள்தான் சமூகவலைதளங்களாக விளங்கின. ஏஓஎல் (AOL) ­சாட் ரூம்களில் வெவ்வேறு ஆட்களோடு முகம் தெரியாதவர்களோடு கண்டமேனிக்குப் பேசிக்கொண்டிருப்பதுதான் அன்றைய காலகட்டத்தில் அமெரிக்க ட்ரெண்ட். தலைவன் அதைதான் செய்துகொண்டிருந்தார். அன்பே டயானா என்று காதலர்தினம் கவுண்டமணி போல கணினி முன் விடிந்ததும் முதல்வேளையாக அமர்ந்துவிடுவார். நிஜமான பெண்ணா ‘பேக் ஐடி’யா எதுவும் தெரியாது… விரல் தேயத் தேய உரையாடுவார்.

ஆரம்பத்தில் ஒருநாளைக்கு இரண்டு மணிநேரம் சாட்டிங் செய்துகொண்டிருந்தவர்.. போகப்போக நான்கு மணிநேரம் ஐந்து மணிநேரம் என ஒருநாளில் பத்து மணி நேரமெல்லாம் சாட் பண்ண ஆரம்பித்திருக்கிறார்.

இன்று போல அன்றைக்கு ஜிபி ஜிபியாக சல்லிசு ரேட்டில் டேட்டா கொடுக்க ஜியோ இல்லை. அப்போதெல்லாம் இன்டர்நெட் என்பதே எலைட் சமாச்சாரம்தான். அந்தக் கால பணமதிப்பில் இணையம் பயன்படுத்த ஒரு மணிநேரத்திற்கு ரூ.500 ஆகும்… என்றால் ஒருநாளைக்கு எவ்வளவு ஆகும்… ஒரு மாதத்திற்கு எவ்வளவு ஆகும் எனக் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். (அன்றைக்கு ஒரு கிராம் தங்கத்தின் விலை!)

இப்படிச் சம்பாதிக்கிற பணத்தில் பாதியை இணைய சேவைக்கே கொடுத்துக் கொண்டிருந்தார் தலைவன். இது என்ன மாதிரி நோய் என்பதைத் தலைவியால் மட்டுமல்ல மனநல மருத்துவர் கிம்பர்லியாலும் புரிந்துகொள்ள முடியவில்லை! அதனாலேயே இதற்கு அந்தக் காலக்கட்டத்தில் எந்த சிகிச்சையும் அளிக்க முடியவில்லை. தலைவனையும் மீட்க முடியவில்லை. கடைசியில் தலைவனும் தலைவியும் விவாகரத்து செய்துகொண்டு பிரிந்துவிட்டனர்.

டாக்டர் கிம்பர்லி யங்
டாக்டர் கிம்பர்லி யங்

அநேகமாக உலகில் முதன்முதலாகப் பதிவுசெய்யப்பட்ட இணைய அடிமை நம் தலைவனாகத்தான் இருக்க வேண்டும். அறம் சார்ந்த காரணங்களால் அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெயர் எங்குமே பதிவாகவில்லை. ஆனால், மருத்துவர் கிம்பர்லி யங்கின் பெயர் பதிவானது. காரணம் அவர் மேற்கொண்ட ஆய்வு.

1998-ல் அவர் Internet addiction: Emergence of a new clinical disorder (இணைய போதை : ஒரு புதிய உடல்நலக் கேட்டின் உருவாக்கம்) என்ற ஆய்வறிக்கையை எழுதி வெளியிட்டு… ஒரு புதிய மனநோய் சிகிச்சைக்கு முதல் அடியை எடுத்துவைத்தார். அவர் மூலமாகத்தான் INTERNET ADDICTION DISORDER (இணைய போதை நலக்கேடு) என்கிற நோய் பற்றிப் பலரும் பேசத்தொடங்கினர். அதற்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் இணைய போதை பற்றி எழுதப்பட்டுவிட்டன. ஆனால், விதை கிம்பர்லி போட்டது!

கிம்பர்லியிடம் நம் தலைவன் பேஷன்ட்டாக வந்து சேர்ந்த அதே ஆண்டில் இன்னொரு சம்பவமும் நடந்தது. PsyCom.net என்கிற இணையதளத்தில் (இப்போது இயங்கவில்லை) டாக்டர் இவான் கோல்ட்பெர்க் என்பவர் ஓர் ஆய்வுக்கட்டுரையை எழுதியிருந்தார்.

அதில் எதிர்காலத்தில் INTERNET ADDICTION DISORDER என்கிற ஓர் ஆபத்து வரக்கூடும்… அப்படி வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப்பற்றி நாம் சிந்திக்கவேண்டும் எனப் பகடிக்காக எழுதியிருந்தார். ஆனால் அவர் எழுதிய சில நாள்களிலேயே நூற்றுக்கணக்கான இணைய அடிமை நோயாளிகள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்கிற கோரிக்கையோடு அவரிடம் குவிந்துவிட்டனர். அவருக்கே இது என்ன நோய் இதை எப்படி குணப்படுத்துவது என்பது தெரியவில்லை.

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான இன்டர்நெட் அடிக்‌ஷன் மறுவாழ்வு மையங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. அதிலேயே விதவிதமான ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் வந்துவிட்டன. கேமிங் அடிக்‌ஷனுக்குத் தனி மருத்துவமனை, ஸ்க்ரீன் அடிக்‌ஷனுக்குத் தனி, மொபைல் அடிக்‌ஷனுக்குத் தனி, குழந்தைகளுக்கான டெக் அடிக்‌ஷன் மறுவாழ்வு மையங்கள் என இதிலும் பலவித சிறப்பு மருத்துவமனைகள் தோன்றிவிட்டன.

டாக்டர் கிம்பர்லி யங் இதையெல்லாம் யோசித்திருப்பாரா தெரியவில்லை. ஆனால் இதெல்லாம் காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டன. கணினி வைத்திருந்தவர்களை மட்டுமே தாக்கிக்கொண்டிருந்த நோய், ஸ்மார்ட்போன்களின் வரவால் அனைவரையும் பீடித்துவிட்டது.

இன்று உலகமே இந்த நோயிலிருந்து விடுபடத்தான் போராடுகிறது. இன்னொரு பக்கம் நம் அனைவரையும் மேலும் மேலும் எப்படியெல்லாம் போதையேற்றி அடிமையாக்குவது என்பதை பற்றி ஃபேஸ்புக்கும் கூகுளும் இன்னபிற இணைய ஜாம்பவான்களும் பல ஆயிரம் கோடிகளில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த மருத்துவமனைகளும் மறுவாழ்வு மையங்களும் நமக்குச் சொல்கிற செய்தி ஒன்றுதான். இணைய போதை என்பது உண்மையானது. அது ஆபத்தை விளைவிக்கக்கூடியது. அதிலிருந்து மீள்வது எல்லோருக்கும் சுலபமானது அல்ல என்பதையே!

சரி, இந்த இணைய போதை என்பதை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்.

1 – சைபர் செக்ஸ் நாட்டம்
2 – இணைய சூதாட்டம்
3 – இணைய உறவுகள் மீதான ஈர்ப்பு
4 – தகவல் அறியும் பேரார்வம்
5 – கேமிங் மீதான ஈர்ப்பு
6 – சமூகவலைத்தள ஈடுபாடு

அதிஷா
அதிஷா

ஏன் இப்படி பிரிக்கவேண்டும். இந்த ஆறு வகைகளும்தான் இணைய போதையின் அடிப்படையான வேர்கள். இதிலிருந்து கிளைபரப்பி இன்னும் எண்ணற்ற வகைமைகளை உருவாக்கலாம். ஆனால், இந்த ஆறு விதமான போதைகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். யாருக்கு முக்கியம்… இணைய அடிமைகளான நமக்கு…

ஆமாம் நாம் இந்த ஆறு கேட்டகரிக்குள் ஒன்றில் அடங்குவோம்!

எதில்… எப்படி…

விளக்கமாகப் பார்க்கும் முன்னர் நீங்களே யூகித்துப்பாருங்கள்…

– விலங்குகள் உடைப்போம்

– அதிஷா
(பத்திரிகையாளர் & எழுத்தாளர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்