Aran Sei

அர்னாப் ஜாமீன் விவகாரம் – மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறியது என்ன?

ரிப்ளிக் தொலைகாட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோசுவாமியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரித்து அவரை ஜாமீனில் விடுவித்தது. இதுகுறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, உச்சநீதிமன்ற பதிவாளருக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு.

பெறுநர்

தலைமை செயலாளர்,

உயர் நீதிமன்றம்,

புது டெல்லி.

பொருள்: வழக்கத்திற்கு மாறாக, திரு. அர்னாப் கோஸ்சுவாமியின் சார்பாக பதிவு செய்துள்ள சிறப்பு விடுமுறை மனுவை பட்டியலிட்டிருப்பது – தொடர்பாக

ஐயா,

நான், தலைமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் என்ற அடிப்படையில், நாளை மாண்புமிகு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மாண்புமிகு நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வின் முன்  பொருளில் குறிப்பிட்டுள்ளதை பட்டியலிடப்பட்டுள்ளதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க, இந்த கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்.

எனக்கு தனிப்பட்ட விதத்தில் திரு. கோஸ்சுவாமியின் மீது எந்த விருப்பு வெறுப்பும் இல்லை. மேலும் அவருக்கு தலைமை நீதிமன்றத்தை அணுகுவதற்கு உள்ள உரிமையில் எந்த விதத்திலும் தலையிடவும் இந்த கடிதத்தை எழுதவில்லை. மற்ற எல்லா குடிமக்களையும் போல் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தில் நீதி கேட்க அவருக்கு உரிமை உள்ளது.

இங்கு முக்கியமான பிரச்சினை என்னவென்றால், இந்த கொரோனா நெருக்கடியில் கடந்த எட்டு மாதங்களாக உங்கள் தலைமையின் கீழுள்ள பதிவகம் (registry) குறிப்பிட்டவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து பட்டியலிடுவதுதான். ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் இருக்கும் போது, தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தங்கள் மனு பலவாரங்களாக , மாதங்களாக பட்டியலிடப்படாமல் கிடப்பதைக் கண்டு,  நீண்ட காலமாக வாடிக் கொண்டிருக்கும் போது, திரு. கோஸ்சுவாமி, அணுகும் ஒவ்வொரு முறையும் ஏன், எப்படி உடனடியாக பட்டியலிடப்படுகிறது என்பது  உண்மையில், மிக ஆழமாக கவலையுறச் செய்கிறது.

இதுகுறித்து மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களிடமிருந்தோ, அமர்வுகளை தேர்வு செய்பவரிடமிருந்தோ சிறப்பு உத்தரவு ஏதேனும் உள்ளதா? இது போன்ற வழக்கத்திற்கு மீறிய அவசர பட்டியலிடுதல் தலைமை நீதிபதி அவர்களின் குறிப்பான  ஆணை இல்லாமல் நடைபெற இயலாது, நடைபெறாது. அல்லது நிர்வாகத்தின் தலைவர் என்பதால் நீங்களோ அல்லது பதிவாளரோ திரு.கோஸ்சுவாமிக்கு ஏதாவது  சிறப்பு சலுகை கொடுத்து பட்டியலிடச் செய்துள்ளீர்களா?  பிணை உட்பட மிக அவசரமாக, தலைமை நீதிமன்றம் தலையிட வேண்டிய பல முக்கிய அவசர பிரச்சினைகள் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் பட்டியலிடப்படாமல் இருப்பது குறித்து பல வழக்கறிஞர்களிடமிருந்து, எனக்கு ஆவணப்படுத்தப்பட்ட வேண்டுகோள்கள் அடிக்கடி வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவை ஆவணமாகவும் உள்ளன. அவர்களில் பலர், தாங்கள் நீண்டகாலமாக, நீண்ட வரிசையில் காத்து நிற்கும் போது, சில குறிப்பிட்ட வழக்கறிஞர்களின் மனுக்கள் மட்டும் உடனடியாக பட்டியலிடப்படுவதாகவும், பெயர்களை குறிப்பிட்டுக் கூட புகார்களைத் தெரிவித்துள்ளனர். சில சமயங்களில் அதே தீர்ப்பிற்கு எதிராக மீண்டும் மேல்முறையீடும் செய்யப்படுகிறது.

சில வழக்குகளில் நீங்களே கருணையுடன் உதவி அவற்றைப் பட்டியலிடச் செய்துள்ளீர்கள் என்பதை நான் இங்கு வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன். ஆனால் அது இப்போது பிரச்சினை இல்லை. பிரச்சினை என்னவென்றால், முழுவதும் கணினி மயமாக்கப்பட்டிருக்கும் போது, பணிகள் தாமாகவே நடக்கும் போது, ஏன் இப்படி தேர்ந்தெடுத்து பட்டியலிடுவது நடக்கிறது? இதே போல, ஒரு சில நீதிபதிகளின் அமர்வுகளுக்கு இடையே மட்டும் இது ஏன் நடைபெறுகிறது? ஏன் எல்லா குடிமக்களுக்கும், எல்லா வழக்கறிஞர்களுக்கும் நியாயமான,  நேர்மையான, முற்றிலும் சரியான ஒரு நடைமுறை  இல்லை?

கோவிட், வழக்கறிஞர்களுக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தி உள்ளதுடன் வாழ்வாதாரப் பிரச்சினயையும் உருவாக்கி உள்ளது என்பதை நான் அடிக்கடி உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும்.பலரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தலைமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அவர்களுக்கு நிதி உதவி அளிக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் எங்களால் குறிப்பிட்ட அளவே உதவ முடியும். தலைமை நீதிமன்றத்தில் மேலும் சிறந்த தொழில்நுட்ப இயங்குதளத்தில், காணொளி வசதிகளை ஏற்படுத்தி, நிகழ்நிலை விசாரணையை மேம்படுத்துவதுதான் இதற்கு தீர்வு.

தலைமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இந்தத் துறையில் சிறந்து விளங்கும் முன்னோடி நிறுவனங்களுடன் கலந்து பேசி, அதில் உலகிலேயே தலைசிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து பல மாதங்களுக்கு முன்பே உங்களுக்கும், அதேபோல மின்னணு குழுவிற்கும் (e-committee), கணினி குழுவிற்கும் கருத்துரு அனுப்பி இருந்தது. அவை பரிசீலனையில் இருப்பதாகவும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பிற உயர் நீதிமன்றங்கள் எல்லாம் ஒப்பந்த புள்ளிகளை வெளியிடாமலே சிறந்த இயங்குதளத்தைத் தேர்ந்தெடுத்து,  மேலான நீதி வழங்கி வரும்போது, நீங்கள் ஒப்பந்த புள்ளிகளை வெளியிட்டீர்கள்‌. அதிர்ச்சியூட்டும் விதமாக, தலைமை நீதிபதி அவர்கள், ஒரு விசாரணையின் போது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை விட சிறந்த இயங்குதளத்தைத் தர ஒப்பந்தப் புள்ளிகள் தரப்பட்டிருந்த போதும்,  ஜியோ நிறுவனத்தையே  பதிவகத்தை தொடர்பு கொள்ள கூறினார். இது சற்றும் எதிர்பாராதது, அதிர்ச்சியானது.

அது ஒருபுறம் இருக்க, தெரியாத காரணங்களால்,  தலைமை நீதிமன்றம் மேலான இயங்குதளத்திற்கு மாறத் தவறிவிட்டதால், அதன் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டதாகவும்,  எல்லைக்குட்பட்டதாகவும்  ஆகிவிட்டன. மிகக் குறைந்த அளவிலான அமர்வுகளே தினமும் நடக்கின்றன, அவற்றிலும் சில, நீதிமன்ற பணி நேரத்திலும் கூட அமராததற்குக் காரணம் தெரியவில்லை. ஒரு வேளை தொழில்நுட்பக் காரணங்கள் இருக்கலாம். நேரடியான மற்றும் வெளிப்படையான விளைவுகள், தீர்ப்புகள் தருவதன் மீதும், குடிமக்களின், குறைந்தது பொதுமக்களின் உரிமைகளின் மீதும்தான் உள்ளது.

எனவே, எளிய இந்திய குடிமகன் பலமுறை சட்ட விரோதமான, சிறை உட்பட பலவகையில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், கோஸ்சுவாமி போன்றவர்களுக்கு சிறப்பு கவனிப்புத் தரப்படுகிறது.

திரு. சிதம்பரம் போன்றவர்களுக்குக் கூட, அவர் மூத்த வழக்கறிஞராக இருந்தும், இதுபோன்ற விரைவான பட்டியலிடுவது நடைபெறவில்லை. மேலும் அவர், தலைமை நீதிமன்றத்தால் பிணை பெற தகுதியானவர் என்று இறுதியாக அறிவிக்கும் வரை பல மாதங்கள் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

ஐயா, நேற்றுத்தான் மேற்கண்ட திரு.கோஸ்சுவாமியின்மனு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது உடனடியாக நாட்குறிப்பு எண்ணைப் (diary number) பெற்று விட்டது. இதுவே இறுதியானது இல்லை எனினும், நாளைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. நிர்வாகத் தரப்பில் இதை யார் செய்திருந்தாலும், இது ஒட்டு மொத்தமாக நிர்வாக அதிகாரத்தை மீறிய செயலாகும். இது, சில வழக்கறிஞர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வாதிகள் சிறப்பு கவனிப்பைப் பெறுகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அது உயர்ந்த நிறுவனமாக கருதப்படும் தலைமை நீதிமன்றத்திற்கு அழகல்ல.

நீங்கள், நன்கு அறியப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில், குறையற்ற நடைமுறையை அவசர பட்டியலிடுதலுக்கு உருவாக்கும் வரை, நவம்பர் 10 க்கு முன்னர் அவசர பட்டியலிடுதலுக்காக பல வழக்கறிஞர்களும் பதிவு செய்துள்ளவற்றை பட்டியலிடும் வரை, இதனை விசாரிக்க அனுமதி அளிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இது குறித்து, நாளை விசாரணை நடத்தப்போகும் நீதிமன்ற அமர்வின் முன் இந்த கடிதத்தை வைக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

ரிபப்ளிக் தொலைகாட்சியின் மூத்த ஆசிரியர் அர்னாப் கோசாமி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, அவசர வழக்காக உச்சநீதிமன்றம் விசாரித்து அவருக்கு ஜாமீன் வழங்கியது. முன்னதாக, இதை அவசர வழக்காக ஏன் விசாரிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த தவே, உச்சநீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதினார்.

உண்மையுள்ள,

துஷ்யந்த் தவே,

தலைவர்,

தலைமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்,

நவம்பர் 10, 2020,

புது டெல்லி,

8:15 இரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்