Aran Sei

செப்-11 இரட்டைக் கோபுர தாக்குதல் – பின்னணியும் வரலாறும்

ந்த நாள் உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினமாக அனுசரிக்கப்பட உள்ளது என்பதை அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை, அமெரிக்கர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளில் மூழ்கியிருந்தனர். தேர்தல் முடிவுகளில் முறைகேடு செய்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றிருந்த ஜார்ஜ் டபுள்யு. புஷ், ஃப்லோரிடா மாநிலத்தில் இருக்கும் சிறுவர்கள் பள்ளியில், சிறார்களுக்கு ”மை பெட் கோட்” (My Pet Goat) எனும் பாடலை சொல்லி கொடுத்து கொண்டிருந்தார்.

அப்போது, அமெரிக்க வானில் பறந்துகொண்டிருந்த நான்கு விமானங்கள், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்படுகிறது. நான்கு விமானங்களையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த கடத்தல்காரர்கள், அந்த விமானங்களையே ஏவுகணையாக (Missile) பயன்படுத்தி அமெரிக்காவை தாக்க முற்படுகின்றனர்.

முதல் இரண்டு விமானங்கள், நியூயார்க் நகரில் இருந்த 110 மாடி கட்டிடமான உலக வர்த்தக மையத்தை (இரட்டை கோபுரங்கள்) தகர்க்கின்றன. இந்த தாக்குதல் நடந்த அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள், புகை மண்டலமான அக்கட்டிடம், முற்றிலும் சிதைந்து தரை மட்டமாகிறது.

மூன்றாவது விமானம், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனை தாக்குகிறது. நான்காவது விமானம் பெனிசில்வேனியா மாநிலத்தில் விபத்துக்குள்ளாகிறது. அவ்விமானம் வெள்ளை மாளிகையை குறிவைத்து செலுத்தப்பட்டது என்றும் அவ்விமானத்தில் இருந்த பயணிகள் கடத்தல்காரர்களுடன் சண்டையிட்டதால் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அந்த நான்கு விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மரணமடைந்தனர் (246). இரட்டை கோபுர தாக்குதலில் மட்டும் 2606 பேர் கொல்லப்பட்டனர். பென்டகனில் நடைபெற்ற தாக்குதலில் 125 பேர் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 11 தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 3000 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் நடைபெற்ற இரவே, அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ) இயக்குநர், ஜார்ஜ் டெனட், அப்போதைய அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷிடமும் மற்ற முக்கிய அதிகாரிகளிடமும், சிஐஏவின் தீவிரவாத தடுப்பு பிரிவிடமும் ”இந்த தாக்குதலுக்கு காரணம் ஒசாமா பின் லேடன் மற்றும் அல்காய்தா தான்” என்று தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் புஷ், “இந்தத் தாக்குதல் அமெரிக்க மண்ணில் நடைபெற்று இருக்கலாம், ஆனால் இது நாகரிகமான மனிதகுலத்தின் மனதுக்கும் ஆன்மாவுக்கும் எதிராக நடைபெற்றுள்ள தாக்குதல். இதனால், முற்றிலும் மாறுபட்ட போரை தொடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளது. இந்த யுத்தம், தீவிரவாதத்தைப் பரப்ப நினைக்கும் நபர்களுக்கும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கங்களுக்கும் எதிரான யுத்தம். இந்த 21 ஆம் நூற்றாண்டில், இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையடுத்து, செப் 20 2000 ஆம் ஆண்டு, “தீவிரவாதத்திற்கு எதிரான போரை” புஷ் பிரகடனப்படுத்தினார். “நமது தீவிரவாதத்திற்கு எதிரான போர் அல்கொய்தாவிடமிருந்து தொடங்குகிறது, ஆனால் அது அல்கொய்தாவுடன் முடிவடையப் போவதில்லை. சர்வதேச அளவில் செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்புகளும் கண்டறியப்பட்டு களையெடுக்கப்படும் வரை இந்த போர் தொடரும்” என்று அறிவித்தார்.

இந்தத் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த ஒசாமா பின் லேடன், 1996 ஆம் ஆண்டு தொடங்கி, தாலிபான்கள் ஆட்சி செய்த ஆஃப்கானில் வசித்து வந்தார். இவரை ஒப்படைக்குமாறு தாலிபான்களிடம் அமெரிக்க கோரிக்கை வைத்தது, இதற்கு தாலிபான்கள் மறுப்பு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை ஆஃப்கான் மீது போர் தொடுத்தது. இந்த போரில் தாலிபான்கள் தோல்வி அடைந்தனர். அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு ஆஃப்கானில் உருவானது. 2011 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் அபோடாபாத் பகுதியில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

செப் 11 தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின்லேடன், கொலை செய்யப்படாலும், இந்த சம்பவத்தில் பல்வேறு விடைதெரியாத கேள்விகள் பல இன்றுவரை தொடர்கிறது.

உளவுத்துறையின் எச்சரிக்கை:

ஆகஸ்ட் 7, 1998 – கென்யாவில் மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெறுகிறது. இந்த தாக்குதல்களில் 12 அமெரிக்கர்கள் உட்பட 224 பேர் படுகொலை செய்யப்பட்டனர், 4500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆகஸ்ட் 20, 1998 – இந்த தாக்குதலுக்கு காரணம் ஒசாமா பின்லேடன் என அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் குற்றம் சாட்டினார். ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் பின்லேடனின் முகாம்கள் அமெரிக்காவால் தாக்கப்படுகிறது.

டிசம்பர் 1998 – அமெரிக்க உளவுத்துறையின் (சிஐஏ) கீழ் இயங்கும் தீவிரவாத தடுப்பு பிரிவு, தீவிரவாத இயக்கமான அல் கொய்தா விமானங்களை கடத்தி, அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறது என்று அமெரிக்க அதிபர் கிளிண்டனிடம் தெரிவிக்கிறது.

மார்ச் 2001 – விமானங்களை பயன்படுத்தி அமெரிக்காவில் அல்கொய்தா தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இத்தாலியின் உளவுத்துறை, அமெரிக்காவை எச்சரிக்கிறது.

ஏப்ரல் 2001 – இரட்டை கோபுர தாக்குதல் நடைபெறுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர், பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசிய ஆஃப்கானைச் சேர்ந்த அகமது ஷா மசூத், தன்னுடைய உளவுப்பிரிவு கொடுத்த தகவலின்படி, அமெரிக்க மண்ணில் மிகப் பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதல் நடக்க இருக்கிறது என எச்சரிக்கின்றார்.

மே 1, 2001 – அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ), அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஒரு அமைப்பு, தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டு கொண்டிருக்கிறது என வெள்ளை மாளிகையிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கிறது.

ஜுன் 2001 – இங்கிலாந்து மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் நடத்திய மாநாட்டில், ”அமெரிக்காவில், ஒரு மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளது” என்பது பற்றி விவாதிக்கப்படுகிறது.

ஜுன் 29, 2001 – ஒவ்வொரு காலையும் அமெரிக்க அதிபருக்கு பிரத்யேகமாக வழங்கப்படும் (சிஐஏ அறிக்கை) ரகசிய தகவல்களில் (Presidents Daily Briefing), ஒசாமா பின்லேடனால் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜுலை 2, 2001 – அமெரிக்காவின் அரசு தரப்பு வழக்கறிஞராக, புஷ்ஷால் நியமிக்கப்பட்ட ஜானி ஏஷ்க்ராஃப்ட், ”தீவிரவாதிகளால் நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது” என அமெரிக்க புலனாய்வுத்துறை (FBI) இயக்குநர் டாம் பிக்கர்ட் கொடுத்த தகவலுக்கு எரிச்சலுடன் ”நான் இதைப்பற்றி எதுவும் கேட்க விரும்பவில்லை” என தெரிவிதக்கிறார். பின்நாட்களில், தான் இது போன்று கூறவில்லை என ஆஷ்க்ராஃப்ட் கூறினாலும், 9/11 விசாரணை ஆணையத்திடம் சாட்சியம் அளித்த புனாய்வுத்துறை இயக்குநர் டாம் பிக்கர்ட், ”இந்த சம்பவம் நடந்தது உண்மை” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜுலை 2001 – அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த 20 பேர் விமான பயிற்சி எடுத்துவருவதாக எகிப்தின் உளவுத்துறை சிஐஏவிடம் தெரியப்படுத்துகிறது.

ஜுலை 10, 2001 – அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான கண்டோலீசா ரைசை சந்தித்த சிஐஏவின் இயக்குநர் ஜார்ஜ் டெனட், அல் கொய்தா மிக விரைவில் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கிறார்.

ஜுலை 2001 – ஒசாமா பின்லேடனின் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் மேற்கத்திய நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இங்கிலாந்து உளவுத்துறை எச்சரிக்கிறது.

ஆகஸ்ட் 2001 – இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட், 19 தீவிரவாதிகளின் பெயர் பட்டியலை வழங்கி, இவர்கள் வெகு விரைவில் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவை எச்சரிக்கிறது.

ஆகஸ்ட் 6, 2001 – பின் லேடன் அமெரிக்காவை தாக்க திட்டமிட்டிருக்கிறார் எனும் தலைப்பில், அமெரிக்க அதிபருக்கு வழங்கப்படும் பிரத்யேக தகவல்களில் தெரிவிக்கப்படுகிறது.

செப் 2001 – அல் கொய்தா, அமெரிக்க மண்ணில் மிக விரைவில் தாக்குதல் நடத்தலாம் என எகிப்து நாட்டின் உளவுத்துறை எச்சரிக்கிறது.

செப் 9, 2001 – அல்கொய்தா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அமெரிக்க மண்ணில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என முன்கூட்டியே எச்சரித்த அகமது ஷா மசூத் படுகொலை செய்யப்படுகிறார்.

செப் 11, 2001 – அமெரிக்காவின் நான்கு இடங்களில் அல் கொய்தா நடத்திய தாக்குதலில் 3000 மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.

இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளின் உளவுப்பிரிவுகள், அமெரிக்காவின் உளவு நிறுவனம் என அனைவரும் எச்சரித்தும், அமெரிக்க அதிபர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அரசு தரப்பு வழக்கறிஞர் என அனைவர் மட்டத்திலும், ”வெகு விரைவில் விமானங்களை பயன்படுத்தி ஒரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம்” என தகவல்கள் சென்றடைந்தும், அமெரிக்க அரசு குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தாது எதனால்? உளவுப்பிரிவுகளின் அறிக்கைகளை பெரிதுபடுத்தாது எதனால்? எனும் கேள்விகள் எழுகின்றன.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகான நாட்களில், அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டு, விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. முன்னாள் அமெரிக்க அதிபரும், ஜார்ஜ் புஷ்ஷின் தந்தையுமான ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்ஷின் பயணமும், புகழ்பெற்ற பாடகருமான ரிக்கி மார்ட்டின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவில் உள்ள முக்கிய புள்ளிகளின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், வெள்ளை மாளிகையின் சிறப்பு அனுமதியைப் பெற்ற, 6 தனி விமானங்கள் மற்றும் 24 விமானங்கள் முக்கிய நபர்களை அமெரிக்காவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு கூட்டிச் சென்றது. இந்த விமானத்தில், பின் லேடன் குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர் உட்பட 142 நபர்கள் சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர்

இது தொடர்பாக அமெரிக்காவுக்காவில் உள்ள சவுதி அரேபிய தூதுவர் பிரின்ஸ் பேண்டார் பேசுகையில், சவுதி மன்னரின் கோரிக்கைக்கு இணங்க அமெரிக்க புலனாய்வுத்துறையுடன் இணைந்து, அமெரிக்காவில் வசித்து வந்த பின் லேடன் குடும்பத்தினைச் சேர்ந்த 24 நபர்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்தார்.

செப்டம்பர் 11 தாக்குதலின் மூளையாக செயல்பட்டது அல் கொய்தா மற்றும் ஒசாமா பின் லேடன் என்று குற்றம் சாட்டிய அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல அப்பாவிகளை விசாரித்த போதும், பின் லேடன் குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பு அளித்து, பாதுகாப்பாக அமெரிக்காவில் இருந்து சவுதி அரேபியா அழைத்துச் சென்றது எதனால் எனும் கேள்வியெழுகிறது.

ஒரு வேளை புஷ் குடும்பத்திற்கும் பின் லேடன் குடும்பத்திற்கும் உறவின் அடிப்படையிலா?

புஷ் மற்றும் பின்லேடன்:

1978 ஆம் ஆண்டு, புஷ் மற்றும் ஒசாமா பின் லேடனின் சகோதரரான சலிம் பின் லேடன், டெக்சாஸ் மாநிலத்தில், அர்பஸ்டோ எனர்ஜி எனும் எண்ணெய் நிறுவனத்தை தொடங்கினர். புஷ் அதிபராக பொறுப்பேற்கும் முன் செய்த பல்வேறு தொழில்களில், பின் லேடன் குழுமம் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. புஷ்ஷின் பல்வேறு தொழில்கள் நஷ்டமடையும் போதெல்லாம் சவுதி அரேபியாதான் அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளது.

இது மட்டுமின்றி, 1997 ஆம் ஆண்டு, டெக்சாஸ் மாநிலத்தில் செயல்பட்டு வந்த யுனோகால் எனும் நிறுவனம், காஸ்பியன் கடலில் இருந்து இயற்கை வாயுவை ஆஃப்கானிஸ்தான் வழியாக மத்திய ஆசியா கொண்டுவருவதற்கான எரிவாயுக் குழாயை (Natural Gas pipeline) அமைக்க, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. அப்போது பல தாலிபான் தலைவர்கள் டெக்சஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்த புஷ்ஷை, ஹியூஸ்டன் நகருக்கு வந்து சந்தித்துச் சென்றனர். இதன் பின்னர் தான், 9/11 தாக்குதலும் அதற்கு பதிலடி என கூறப்பட்ட ஆஃப்கானிஸ்தான் போரும் தொடங்குகிறது. இந்த போரில் அமெரிக்கா வெற்றி பெற்று, ஆஃப்கானிஸ்தான் அதிபராக ஹாமித் கர்சாய் பொறுப்பேற்றார். ஆனால், இதே ஹமித் கார்சாய் தான் யுனோகால் நிறுவனத்தின் முன்னாள் ஆலோசகர் எனும் தகவல் அதிர்ச்சியடையவைக்கிறது.

மேலும், பின் லேடன் குழுமம், பல லட்சம் கோடிகளில் முதலீடு செய்திருந்த கார்லைல் குழுமத்தில் ஜார்ஜ் ஹெச்.டபுள்யு புஷ் மற்றும் ஜார்ஜ் டபிள்யு புஷ் என இருவரும் (தந்தையும் மகனும்) இடம்பெற்றிருந்தனர். செப்டம்பர் 11 அன்று, கார்லைல் குழுமத்தின் வருடாந்திர சந்திப்பு வாஷிங்டனில் உள்ள ரிட்ஸ் கார்ல்டனில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது (அமெரிக்காவின் முன்னாள் அதிபர்) ஜார்ஜ் ஹெச்.டபுள்யு.புஷ், (அமெரிக்காவின் முன்னாள் அரசு செயலாளர்) ஜிம் பேக்கர்,  பின் லேடனின் சகோதரரான ஷாஃபின் பின் லேடன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

9/11 தாக்குதலின் பின்னணியில் தான் போர்க்கருவிகள், ஆயுதங்கள், போர் வாகனங்கள் போன்றவற்றின் உற்பத்தி பல மடங்கு பெருகின. கார்லைல் குழுமம் தொலைதொடர்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் செயல்படும் நிறுவனம். குறிப்பாக அமெரிக்காவில் ராணுவ ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 11-வது இடத்தை வகித்தது. செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் கார்லைல் குழுமம், ஒரு நாளைக்கு 1700 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியது. இதனால் இந்நிறுவனத்தில் பங்கு வகித்த அனைவரும் கணக்கில் அடங்காத பணத்தை ஈட்டினர். செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகும் கார்லைல் குழுமத்தின் ஆசியாவின் ஆலோசகராக சீனியர் புஷ் (அடுத்த இரண்டு ஆண்டுகள்) செயல்பட்டார்.

விசாரணை ஆணையம்:

உலகத்தையே உலுக்கிய 9/11 தாக்குதலை விசாரிக்க ஆணையம் அமைப்பதிலும் புஷ் முனைப்புடன் செயல்படவில்லை என கூறப்படுகிறது. பெர்ல் ஹார்பர் (Pearl Harbour) சம்பவத்தின் போதும், முன்னாள் அதிபர் கென்னடி படுகொலையின் போதும் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் காங்கிரஸ் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்) தன்னிச்சையாக நடத்திய விசாரணையிலும், 28 பக்கங்களை புஷ் அரசாங்கம் மறைத்துள்ளது. 9/11 தாக்குதல் சம்பவம் சரியான முறையில் விசாரிக்கப்படவில்லை என புஷ் நிர்வாகத்துக்கு எதிராக 500 பேர் வழக்கு தொடுத்தனர்.

செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு உலகம் மாறிவிட்டது, நாம் பாதுகாப்பாக இல்லை, தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்கிறது என தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்ட அமெரிக்கா, ஒரு வகையான அச்சத்தையுன் பீதியையும் அமெரிக்கா முழுவதும் பரப்பியிருந்தது. இதன் பின்னணியில், தீவிரவாத தாக்குதல்களில் இருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறி பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் அமெரிக்காவில் சந்தைப்படுத்தப்பட்டன.

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின் லேடனை கைது செய்வதில் காட்டிய முனைப்பை விட, ஆஃப்கானிஸ்தனில் தனக்கு ஆதரவான அரசாங்கத்தை உருவாக்கி, ஆஃப்கானிஸ்தான் வழியாக எண்ணெய் குழாயை உருவாக்குவதிலேயே அமெரிக்கா முனைப்பாக இருந்தது. எண்ணெய் வளங்கள் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகளில் ஊடுருவி அராஜகம் செய்ய அமெரிக்காவுக்கு 9/11 தாக்குதல் வழிவகை செய்தது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என பிரகடனப்படுத்தி, மத்திய கிழக்கு நாடுகளுக்குள் நுழைந்த அமெரிக்கா, யாரை தீவிரவாதிகள் என்று கூறியதோ இன்று அவர்களிடமே ஆஃப்கானிஸ்தானை ஒப்படைத்துவிட்டு திரும்புவது, அமெரிக்காவின் உண்மையான நோக்கத்தை என்ன என்பதை அம்பலப்படுத்துகிறது.

Source: BBC, Washingtonpost, Newyorktimes, Denverpost, NBC News, CNN

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்