Aran Sei

டொனால்ட் டிரம்ப் – உள்நாட்டு கலகத்தை மூட்டும் அதிபர்

ந்த மாதம், மிச்சிகனைச் சேர்ந்த 13 பேரை தீவிரவாதம், சதி, ஆயுதங்கள் வைத்திருந்தது ஆகிய குற்றங்களுக்காக நடுவண், மாநில அரசு அதிகாரிகள் கைது செய்தனர். இதில் ஆறு பேர் , மிச்சிகன் ஆளுநர் க்ரெட்சன் விட்மரை கடத்த சதி செய்ததாக கூறப்படுகிறது. மற்ற மாநில ஆளுநர்களைப் போலவே, கொரோனா நோய் தொற்றும் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அது பரவத் துவங்கிய முதல் வாரத்திலேயே எடுத்ததற்காக விட்மெர் மீது கோபம் கொண்டவர்கள்தான், அந்த கைது செய்யப்பட்டவர்கள்..

திருமதி விட்மரின் நடவடிக்கைகள் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது என்றே கூறலாம். ஆனால், ஊரடங்கை எதிர்த்த பல நூற்றுக்கணக்கானவர்களும், கைது செய்யப்பட்டவர்களும் மாநில தலைநகர் லான்சிங்கில் விட்மரை ‘ கொடுங்கோல் ஆளுநர்’ என முழங்கினர்.

எதிர்ப்புப் போராட்டங்கள் ஏப்ரலில் அதிகமான போதே, கடினமான சூழ்நிலையை கையாண்டு, கொரோனா தொற்று பரவல் பற்றி அமெரிக்கர்களுக்கு நினைவுபடுத்தியதற்காக விட்மருக்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால் அவரோ, “மிச்சிகனை விடுவிப்போம்” என ட்விட்டரில் பதிவிட்டார். இதுவரை இதற்கு 2 லட்சம் விருப்பங்களும், 30,000 மறு பதிவுகளும் வந்துள்ளன.

இதே பதிவை ஜனநாயக கட்சி ஆளுநர்களாக உள்ள பிற மாநிலங்கள் குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார். அரசியல் அமைப்பின் இரண்டாவது சட்டத்திருத்தம் (மக்களை ஆயுதங்களை வைத்துக் கொள்ளும் உரிமை) ”முடக்கப்பட்டுள்ளதாக” அவர் கூறினார்

டிரம்பே அரசுக்கெதிரான‌ கலவரக்காரராக தன்னைக் கருதிக் கொள்வதாக இது காட்டுகிறது.

இது ஒரு செய்தியை மிகத் தெளிவாக, வலிமையாக உணர்த்துகிறது. டிரம்பின் செயல்களால் போராட்டக்காரர்கள் உற்சாகம் அடைந்து, கையில் துப்பாக்கிகளுடன் மிச்சிகன் சட்டமன்றதத்திற்குள் புகுந்து சட்டமன்றத்தையே வலுக்கட்டாயமாக மூடச் செய்துவிட்டனர். இந்த ஆயுதத் தாக்குதலுக்குப் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டிரம்ப் இந்த போராட்டக்காரர்களை ஆதரித்து, “ அவர்கள் மிக நல்ல மனிதர்கள். ஆனால் கோபத்தில் உள்ளார்கள்” என ட்விட்டரில் பதிவிட்டார்.

“அவர்கள் டிரம்பின் கூற்றுக்களை கண்டனமாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக , செயல்படுவதற்கான உற்சாக முழக்கமாக எடுத்துக் கொண்டனர். நமது தலைவர்கள் பேசுவது அது முக்கியமானதாகி விடுகிறது. நமது தலைவர்கள், உள்நாட்டு பயங்கவாதிகளை சந்தித்து, ஊக்கப்படுத்தி அவர்களை அரவணைக்க நினைத்தால், அவர்கள் பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்துவதுடன் அதற்கு உடந்தையாகவும் உள்ளனர். தங்களது வெறுப்புப் பேச்சால் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுகின்றனர்.” என்கிறார் ஆளுநர்.

அவர்கள் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட பின்னரும் டிரம்ம் அந்த வன்முறை கும்பல கண்டித்து பேச மறுத்து விட்டார். அதற்கு மாறாக மேலும் தீயை வளர்க்கிறார். கடந்த செவ்வாயன்று ‘ ஃபாக்ஸ் பிஸினஸ்’ ல் பேசும் போது “அவர் மிச்சிகனின் சர்வாதிகாரியாக இருக்க விரும்புகிறார். மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்” என விட்மெரைப் பற்றி கூறி உள்ளார்.

ஒரு அதிபரின் சொற்கள், அவருடைய வலிமையான ஆபத்து நிறையத கருவிகளாக உள்ளன. அது ஒரு பொதுவான இலட்சியத்திற்காக அமெரிக்க பொது மக்களை ஒன்று திரள அவை பயன்படும். அது அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் நாட்டின் தளர்ந்த நரம்புகளை மெல்ல நீவி விடும் அல்லது சோக காலங்களில் வலி நிவாரணியாகவும் இருக்கும். ஒரு அதிபரின் சொற்களை உலக நிதிச் சந்தைகளையும், விண்வெளிப் போர்களையும் (star wars) இயங்க வைக்கலாம், தனிப்பட்ட வன்முறையாளர்களை ஊக்கப்படுத்தவும் செய்யலாம்.

2015-ல் தனது அதிபர் தேர்தலுக்கானப் பரப்புரையைத் துவங்கியதிலிருந்தே, மக்கள் தங்கள் அதிபர் எப்படி பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பை டிரம்ப் தலைகீழாக மாற்றி விட்டார். அவர், தன் கருத்துக்களை எதிர்ப்பவர்களை, குரூரமாக அவமானப்படுத்தி, அற்பமான தாக்குதல்களை நடத்தி, தொடர்ந்து எள்ளி நகையாடி மகிழ்ச்சி அடைந்தார்.

இது பல மட்டங்களில் மோசமானது. தற்போது தன்னார்வ மக்களாட்சி பாதுகாப்புக் குழு ஒன்றை நடத்தி வரும், முன்னாள் அதிபர் ஒபாமாவின் அரசில், வெள்ளை மாளிகையில் பணி புரிந்து வந்த இயான் பாசின் என்பவர், ‘அதிபர் என்பவர் நிர்வாக பிரிவின் தலைவர் மட்டுமல்ல. ஒட்டு மொத்த அரசின் தலைவரும் ஆவார்.” என்கிறார்.

“இதன் பொருள், அதிபர் என்பவர் ஆட்சி நடைமுறைகளை உருவாக்குபவராக உள்ளார் என்பதாகும். இயலாமையில் இருக்கும் மக்களை ஏளனம் செய்யலாம் அல்லது இனவெறியராக இருக்கலாம் அல்லது பொய் கூறலாம் அல்லது பெண்களை இழிவுபடுத்துபவராக இருக்கலாம் இவற்றைதான் ஒரு அதிபர் நிறுவ விரும்புகிறார் என்றால்,  அவை யாவும் சமூகத்தில் எதிரொலிக்கும். இது வியப்புக்குரியதல்ல.”

டிரம்ப் எதிரிகளை ஏளனம் செய்வதோடு, அவர்களை கொடூரமானவர்களாகவும், மனிதத்தன்மை நீங்கியவர்களாக  சித்தரிக்கிறார். அவரது தாக்குதல்களுக்கு இலக்கான மின்னசோட்டா மக்கள் பிரதிநிதி லான் ஓமர் அல்லது ஃ பாக்ஸ் நியூசின் முன்னாள் பிரபலமான மெகைன் கெல்லி அல்லது அரசு அறிவியலாளர் ஆண்டனி பவுசி அல்லது ஒரு சாதாரண அமெரிக்க குடிமகன், யாராக இருந்தாலும் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, சிலநேரங்களில் சொந்த பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டியது ஏற்படுகிறது.

இந்த வன்முறை பேச்சுக்களும், அதன் தாக்கங்களும் டிரம்ப் அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையை தொடங்கியதிலிருந்தே ஆரம்பித்துவிட்டன.

ஆகஸ்ட் 2015-ல், குடிபெயர்ந்த மெக்சிகோவினரை ”பாலியல் வன்புணர்வு செய்பவர்கள்” என அறிவித்து அதிபர் வேட்பாளரான டிரம்ப் பேசிய இரண்டே மாதத்தில், போஸ்டனைச் சேர்ந்த இரண்டு பேர் , ஒரு வீடற்றவரை இரும்புத் தடியால் தாக்கி, அவன் மீது சிறுநீர் கழித்தனர். ”டிரம்ப் கூறியது சரிதான். இந்த சட்ட விரோதிகளை துரத்த வேண்டும்” என அவர்கள் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் ”இது பயங்கரமானது. நான் ஒரு போதும் இதனை மன்னிக்க மாட்டேன்” என்று கூறிய டிரம்ப் ஆனால், தொடர்ந்து ஒவ்வொரு பரப்புரையிலும் வெறுப்பை பரப்புவதையே செய்தார்.

பிப்ரவரி 2016-ல், பரப்புரை பேரணி ஒன்றில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய டிரம்ப், “உங்கள் முகத்தில் யாராவது தக்காளியை வீசினால், நீங்கள் அவர்களை அடித்துத் துவைத்து விடுங்கள், அவர்களை அடித்து நொறுக்குங்கள். உண்மையாகத்தான் சொல்கின்றேன். நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். உங்கள் வழக்குச் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.” என பேசினார்.’

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு போராட்டக்காரரைப் பார்த்து, ”நான் அவன் முகத்தில் குத்த வேண்டும்.” என்று பேசினார்.

வேறொரு பேரணியில் ஒரு எதிர்ப்பாளரை காவல் துறையினர் பாதுகாப்பாகக் கூட்டிச் செல்லும் போது, பின்னாலிருந்து அவர் முதுகில் குத்தப்பட்டதைப் பற்றி குறிப்பிட்ட டிரம்ப், ”மிக மிகச் சரியான செயல். இது போன்ற செயல்கள் இன்னும் நிறைய நடக்க வேண்டும்” என பேசினார்.

ஆகஸ்ட் 2016-ல், ”ஹிலாரி கிளின்டன் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ‘துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்களுக்கு’ ஆதரவாக தீர்ப்பு சொல்லக் கூடிய நீதிபதிகளை நியமிப்பார். உங்களால் எதுவும் செய்ய முடியாது நண்பர்களே. இங்கே 2-வது அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தை (பொது பாதுகாப்பிற்காக மக்கள் ஆயுதம் வைத்துக் கொள்ளும் உரிமை) ஏற்றுக் கொள்பவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை” என  வன்முறை கலாச்சாரத்துக்கு ஆதரவாகப் பேசினார்..

ஒரு வேட்பாளரின் வாயிலிருந்து வரும் இத்தகைய வார்த்தைகள் மிகவும் ஆபத்தானவை. டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து இதன் மோசமான விளைவுகள் மிகவும் விரிவாகவும், அதிகமாகவும் நடந்தன.
பதவி ஏற்ற சில மாதங்களுக்குப் பின் நடந்த ஒரு காவல் துறை அதிகாரிகளின் கூட்டத்தில், ”கைதிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு நல்லவர்களாக இருக்காதீர்கள்,” என பலத்த கைத் தட்டலுக்கிடையே கூறினார்.

ஒரு முறை தனது கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதியிடம் கேள்வி கேட்ட நிருபரை அவர் தாக்கியபோது, ”யார் வேண்டுமானாலும் தாக்கலாம். அப்படி தாக்கும் நபர் என்னுடைய ஆள்.” என வெட்கமின்றி அறிவித்தார்.

மே மாதம் எதிர்ப்புப் போராட்டங்களில் காவல் துறை அத்துமீறல் அதிகரித்த போது, ”கொள்ளையடிப்பு துவங்கிய போது துப்பாக்கிச் சூடும் துவங்கியது ” எனக் கூறினார். விஸ்கான்சிலில் நடந்த போராட்டத்தில் 20 கி,மீ. தூரத்திலிருந்து, துப்பாக்கியுடன் வந்த 17 வயது சிறுவன், 3 பேர் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அவன் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிறகும் டிரம்ப் அது தற்காப்புக்காக நடந்தது என கருத்து தெரிவித்து அந்த குற்றவாளியை நியாயப்படுத்தினார்.

அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையேயான பொது விவாதத்தின் போது வெள்ளை நிறவெறியர்களைப் பாகுபாடின்றி கண்டிக்குமாறு கேட்டதற்கு டிரம்ப் மறுத்து விட்டார். மாறாக அந்த வலதுசாரி இளைஞர்கள் குழுவின் ‘பெருமைமிக்க பையன்களை’  (Proud Boys) ஆதரித்து, அதனையே ஏற்று அப்படியே நில்லுங்கள்” என வாழ்த்தினார்.

டிரம்பும் அவரது ஆதரவாளர்களும், அவரை தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகவும், அதிபர் வரலாற்றிலேயே வெள்ளையின மேலாதிக்கத்தை அதிகமாக எதிர்ப்பவர் டிரம்ப்தான் என்றும் தம்பட்டம் அடிக்கிறார்கள்.

அடிக்கடி அவர் பெயராலேயே ஏராளமான வன்முறைகள் நடைபெறுவதால் அதனை கண்டிக்குமாறு நிருபர்கள் கேட்கிறார்கள். குறிப்பாக வலதுசாரி இளைஞர்கள் குழுவின் ‘பெருமைமிக்க பையன்கள்’ இவரது பேச்சை கண்டனமாகவே நினைப்பதில்லை. ”அவர், அவர்களையும் அவர்களது ஆதரவையும் பாராட்டுவதாகவே நான் கருதுகிறேன்” என்கிறார் அந்த வெள்ளை நிறவெறி கும்பலை துவக்கியவர்.

டிரம்பின் ஆதரவாளர்கள் மட்டுமே அரசியல் வன்முறைகளை செய்வதில்லைதான். ஆனால் கடந்த ஐந்து ஆண்டு குற்றவியல் வழக்குகளை ஆய்வு செய்த ABC செய்தி நிறுவனம், வன்முறை, வன்முறைக்கான அச்சுறுத்தல், கொலை போன்ற பல நிகழ்வுகளில் டிரம்பின் பெயர் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோனோர் டிரம்ப் எப்போதும் குறிவைத்து தாக்கிப் பேசும் சிறுபான்மையோர்தான். 2015-ல் போஸ்டனில் ஆதரவற்ற ஒருவரைத் தாக்கிய நிகழ்வுக்குப் பிறகு 12-க்கும் மேற்பட்ட குழாய் வெடி குண்டுகள் டிரம்பை விமர்சனம் செய்பவர்களுக்கும், முன்னணி பத்திரிகையாளர்களுக்கும் டிரம்ப் ஆதரவாளர் ஒருவரால் அனுப்பப்பட்டது.

எல் பாசோ வால்மார்டில் நடந்த படுகொலையில் 23 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்,  தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 21 வயது பையன் “டெக்சாசில் நடந்து வரும் ஸ்பானிய விரிவாக்கத்திற்கு” எதிராக இதைச் செய்வதாகக் கூறினான்.

அதன்பின் நியூசிலாந்தில் மசூதியில் தொழுகையின் போது 51 பேரை படுகொலை செய்தவன், “டிரம்பை வெள்ளை இன மீட்பின், பொது நோக்கத்தின் அடையாளமாக காண்கிறேன்” என்று கூறினார்.

2017-ல் ஒரு நடுவண் நீதிபதி, டிரம்ப் 2016-ல் நடந்த ஒரு பேரணியில், “அவர்களை இங்கிருந்து வெளியேற்றுங்கள்” என்ற கொடுத்த ஆணைதான் பலர் கொல்லப்பட்டதற்குக் காரணம். எனவே அவர் மீது வழக்குத் தொடரலாம் என உத்தரவு கொடுத்தார். டிரம்பின் அந்த வார்த்தைகள், “ஒரு ஆணை, ஒரு கட்டளை, ஒரு உத்தரவு” என்று கூறிய அவர், போராளிகளின் காயங்கள் யாவும் அதன் நேரடியான, துல்லியமான விளைவுகள்” எனத் தெளிவாகக் கூறினார்.

மேல்முறையீட்டில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், அவரது தீர்ப்பு மிகச் சரியானதே. அவரது முதல் கருத்து, அவரது நம்பிக்கையின் உண்மையான வெளிப்பாடு அது என்று டிரம்பின் ஆதரவாளர்களுக்குத் தெரியும். அதே போல், கபட நாடகம் ஆடும் டிரம்புக்குத் தெரியும், தான் என்ன சொல்கிறோம் என்று.

இந்தக் கேடு டிரம்போடு முடிந்து விடாது. அவரது இந்த பகட்டு ஆரவார சொற்கள் துவக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை மாணவர்கள் அடிக்கடி உச்சரிக்கும் சொற்கள் ஆகிவிட்டன. நூற்றுக் கணக்கான மாணவர்கள் அன்றாடம் தாங்கள் ஸ்பானியர்கள், கருப்பர்கள் அல்லது முஸ்லீம்கள் என்பதால் அவமானப்படுத்தப்படுவதாகவும், தாக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இவற்றில் பெரும்பாலானவை மெக்சிகோ சுவருடன் தொடர்புடையனவாகவே இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் நடத்திய சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. சென்ற ஆண்டு ஒரு 13 வயது நியூஜெர்சி மாணவன் தன் சக மெக்சிகோ மாணவனைப் பார்த்து, “மெக்சிகோவினர் அனைவரும் சுவருக்கு அப்பால் மீண்டும் போய் விட வேண்டும்” என்று கூறியிருக்கிறான். சிறிது நேரத்தில் அந்த 13 வயது மாணவன் தனது மெக்சிக அமெரிக்க சக மாணவனை தாக்கினான், அவனது தாயை நினைவிழக்கச் செய்தான்.

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் அமெரிக்க-மெக்சிக இன மாணவி ஆஷாந்தி போனிலா, “டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது” எனக் கூறுகிறார். அவர் பல பள்ளிகளில் சக மாணவர்களால் அவமானப்பட்டு, பல பள்ளிகள் மாறித் தாக்குப் பிடித்து வருவதாக கூறுகிறார்..

“அவர்கள் இத்தகைய கருத்துக்களை கேட்கிறார்கள். அவற்றை தவறில்லை என நினைக்கிறார்கள். அதிபர் அப்படி பேசும் போது ……ஏன் நாமும் பேசக் கூடாது என்று நினைக்கிறார்கள்”

– ஜெஸ் வெக்மன்
கட்டுரை & படங்கள் – நன்றி : www.nytimes.com
மொழியாக்கம் செய்யப்பட்டது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்