Aran Sei

வரலாற்றை சார்வர்க்கருக்கு சாதகமாக எழுதாதீர்கள் – அருஞ்சொல் கட்டுரையும் ராஜன் குறை எதிர்வினையும்

ருஞ்சொல் இணையதளத்தில் சாவர்க்கர்  குறித்து வெளியான கட்டுரைக்கு பேராசிரியரும் ஆய்வாளருமான ராஜன் குறை எதிர்வினையாற்றியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,

அன்புள்ள சமஸ்,

சாவர்க்கர் குறித்த ஒரு மினி கட்டுரைத் தொடரை உங்கள் அருஞ்சொல் தளத்தில் வெளியிட்டுள்ளீர்கள். நான் என்னுடைய கண்டனத்தை அந்த தளத்தில்தான் எழுதவேண்டும். ஆனால் நீங்கள் நான் பிறந்த என் சமூகத்தை பார்ப்பனர்கள் என்று அழைக்கும் உரிமையை எனக்கு தரமாட்டீர்கள். பிராமணர்கள் என்று இந்து தர்மப்படி மாற்றித்தான் வெளியிடுவீர்கள் என்பதால் என்னுடைய முகநூல் திரியிலேயே பதிகிறேன்.

இந்த கட்டுரை தொடரை வெளியிடுவதில் உங்கள் நோக்கம் என்ன, உள்நோக்கம் என்ன என்பதை பற்றியெல்லாம் நான் சந்தேகிப்பதில்லை. நீங்கள் உங்களை காந்தியர் என்று சொல்வதை நான் ஏற்கிறேன், நம்புகிறேன். ஒரு நல்ல ஆரோக்கியமான ஊடகவியலாளர் என்றும் உறுதிபட எண்ணுவேன். ஆனால் நீங்கள் இந்த தொடரை வெளியிட்டது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. அதற்கான காரணங்களை சுருக்கமாக கூறுகிறேன்.

1. இந்த தொடரின் மூலம் எந்த புதிய வெளிச்சமும் சாவர்க்கரின் மீது பாய்ச்சப்படவில்லை. சாவர்க்கர் இந்தியா இந்துக்களின் நாடென்று நினைத்தார். இந்த மண்ணில் தோன்றிய மதங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தியர்கள் என்றார். முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பை விதைத்தார். முஸ்லீம்கள் மீது இன்றும் தொடரும் வன்முறைக்கு சித்தாந்த அடிப்படைகளை அளித்தார். காந்தியின் மீது, அஹிம்சை என்ற காந்தியின் உன்னதக் கோட்பாட்டின் மீதும் கடும் வெறுப்பை விதைத்தார். உங்கள் கட்டுரையாளர் தெளிவாகச் சொல்லும்படி நிச்சயம் தார்மீக ரீதியாக காந்தி கொலைக்கு காரணமானவர்; அவரது சிந்தனையே கோட்சேவின் கைகளில் துப்பாக்கியை இருத்தியது. சட்டத்தின் பார்வையில் அவர் கொலைக்கு உடந்தையா என்பது விவாதத்திற்கு உரியதாக இருக்கலாம்; ஆனால் அந்த நிகழ்விற்கு அவர் சித்தாந்தமே அடிப்படை என்பது அனைவரும் ஏற்றுக்கொள்வது. உங்கள் அருஞ்சொல் மினி தொடரும் ஏற்கிறது. இதைத்தவிர சாவர்க்கர் குறித்து வரலாற்று ரீதியாக அறிய, அல்லது இந்த உண்மையை மறுபரிசீலனை செய்யும்படி இந்த தொடரில் என்ன இருக்கிறது? சாவர்க்கரின் இறுதியான, உறுதியான வரலாற்றுப் பங்களிப்பு என்பது இதுதான் என்று தெரியும்போது அவரைக்குறித்த இன்னபிற தகவல்களால் என்ன கூடுதல் புரிதல் வரப்போகிறது?

2. உங்கள் மினி கட்டுரைத் தொடர் என்ன செய்கிறது என்றால் அரசியல் சித்தாந்தி என்ற அளவில் நியாயமாக காந்தியர்களாலும், உங்கள் கட்டுரையாளருக்கு நீங்கள் கொடுத்த அடைமொழியின்படி நேருவியர்களாலும் முற்றிலும் புறமொதுக்கப்படவேண்டிய, ஆபத்தான, அருவருக்கத்தக்க ஒரு அரசியலாளரின் மேல் அனுதாபத்தையும், மரியாதையையும் ஏற்படுத்த முயற்சிக்கிறது. அவர் முதலில் நல்லவர்தான்; பின்னாளில்தான் கெட்டுப்போனார். அவரை எல்லா தலைவர்களும் மிகவும் மதித்தார்கள். அவர் மீன் சாப்பிடுவார். ஜாதி வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பல தகவல்களை சொல்கிறது. இது சாவர்க்கர் என்ற தனி நபரைப் பற்றிய வர்ணனை. வரலாற்றில் எல்லா கொடுங்கோலர்களும், பாசிஸ்டுகளும் பல்வேறு கோணங்களில் நாம் அனுதாபம் கொள்ளத்தக்க வாழ்க்கையைத்தான் கொண்டிருப்பார்கள். தியாகங்கள் பல புரிந்திருப்பார்கள். ஹிட்லர், முசோலினி ஆகியவர்கள் முதலில் மேற்குலகின் சிந்தனையாளர்கள், அரசியலாளர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள், புகழப்பட்டவர்கள்தான். இரண்டாம் உலகப் போர் தொடங்கும் வரை அவர்கள் தேசிய தலைவர்களாக கருதப்பட்டார்கள். அதற்குப் பிறகு நடந்த யூத இனப் படுகொலையும், பாசிச ஒடுக்குமுறைகளும் அவர்களை மிக மோசமான அரசியல் முன்மாதிரிகளாக மாற்றியது.

3. யாருடைய அரசியல் இயக்கமும் இறுதியில் எவ்விதமான வரலாற்றுத் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை வைத்துத்தான் மதிப்பிடுகிறோமே தவிர, அவர் பள்ளியில் படிக்கும்போது தன் கையில் இருந்த மிட்டாயை காக்காய் கடி கடித்து சக மாணவருக்கு தந்தாரா, எந்த நேரத்தில் யார் ஏற்படுத்திய பாதிப்பினால் அவர் வன்முறையாளராக ஆனார் என்பது போன்ற அம்சங்களை அறிந்துகொள்வதால் வரலாற்றிற்கு பயன் எதுவும் கிடையாது. அது அந்த தனி மனிதரை அறிந்துகொள்ளும் ஆர்வத்திற்கு உதவலாம். ஆனால் மிக மோசமான வன்முறையை தூண்டிய மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வின் சிறப்பம்சங்களை எழுதுவது என்பதெல்லாம் பொதுவெளியில் நடு நிலை வரலாறு என்று மீட்டெடுப்பது அவர்களை கெளரவப்படுத்துவதற்கான முயற்சிதான். மூடுபனி படத்தின் இறுதியில் ஒரு ஃபீரிஷ் ஷாட் வரும். அப்போது பின்னணியில் ஒரு குரல் “சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்புகளால்தான் கதாநாயகன் சீரியல் கொலைகாரன் ஆனான்” என்று விளக்கும். அந்த புரிதல் சமூக இயக்கத்தை, தனி மனிதர்களை உருவாக்குவதில் சமூகத்தின் பங்கினை புரிந்துகொள்ள உதவலாம். ஆனால் உங்கள் கட்டுரைத்தொடரில் அந்தமான் சிறையில் இருந்த பதான் வார்டர்கள் அவரைக் கொடுமைப்படுத்தியது அவரது முஸ்லீம் வெறுப்பிற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற யூகம் நகைப்பிற்குரியது மட்டுமல்ல மிக மோசமான திசைதிருப்பலும்கூட. மிகத் தெளிவாக சித்தாந்தரீதியாக இந்துத்துவத்தை வடித்தெடுத்த ஒருவரை மூடுபனி பிரதாப் போத்தன் ரேஞ்சிற்கு மாற்றுவது வரலாற்றிற்கு செய்யும் நியாயமல்ல. மோசமான திசைதிருப்பல்.

4. இந்த கட்டுரையை எழுதுவதில் உங்கள் நேருவீய கட்டுரையாளருக்கு உள்ள ஆர்வத்தை ஒரு முக்கியமான வரி சுட்டிக் காட்டுகிறது. அது என்னவென்றால் சாவர்க்கர் தமிழ் நாடு வந்த கதை. உங்கள் கட்டுரையாளர் சொல்கிறார்.

“சாவர்க்கர் 1940-ல் தமிழகம் வந்தார். மதுரையில் பேசினார். இந்துக்கள் ஒரு தனி இனம் என்றார். கவனிக்க: இனம். பெரியார் திராவிடர்கள் தனி இனம் என்று சொன்னதுபோல! ”

நேரூவியர் என்று நீங்கள் நற்சான்றிதழ் வழங்கும் உங்கள் நவ-பார்ப்பனீய கட்டுரையாளர் காந்தியின் அஹிம்சா தர்மத்தை தன் வாழ் நாள் முழுவதும் கடைபிடித்த பெரியாரை நாஜி என்று அழைப்பது உங்களுக்கு தெரியாதிருக்க வாய்ப்பில்லை. அவருடைய நோக்கம் சாவர்க்கர் பாசிஸ்ட், நாஜி மனோநிலை கொண்டவர் என்றால் பெரியாரும் அப்படித்தான் என்று சொல்வது. இந்த அபத்தமான ஒப்பீடு உங்கள் கண்களில் படாமல்தான் நீங்கள் பிரசுரித்தீர்கள் என நான் நம்பவில்லை. கருத்துக்களுக்கு கட்டுரையாளரே பொறுப்பு, ஆசிரியரல்ல என்று நீங்கள் கூற முடியும்தான். ஆனாலும் இந்த ஒப்பீடு வன்மையான கண்டனத்திற்குரியது. ஆரிய இனம், திராவிட இனம் ஆகிய கருத்தாக்கங்களை முன்மொழிந்தவர்கள் பட்டியல் மிக நீண்டது. மொழியியலாளர்கள், தொல்லியலாளர்கள், மானுடவியலாளர்கள், மத ஆய்வாளர்கள் என மிக மிக நீண்ட பட்டியல் ஆரிய இனம், திராவிட இனம் ஆகியவை வேறுபட்ட இனவியல் மூலங்களை கொண்டவை என கூறியுள்ளது. பெரியார் ஆரிய, திராவிட இனங்கள் கலந்துவிட்டன என்பதையும் தூய இன அடிப்படையிலான பிரிவினை சாத்தியமில்லை என்பதையும் புரிந்துகொண்டவர், ஏற்றுக்கொண்டவர். ஆனால் அவர் திராவிட பண்பாடென்பது ஆரிய பண்பாட்டிலிருந்து வேறுபட்டது, குறிப்பாக திராவிட பண்பாடு பார்ப்பனீய, ஜாதீய சிந்தனையை ஏற்காதது என்பதையே முன்மொழிந்தார். சாவர்க்கர் இந்துவை வரையறுத்தது அப்படியல்ல. அவர் இந்திய தேசத்தின் எல்லைக்குள் தோன்றாத மதங்களைச் சார்ந்தவர்கள் இந்தியர்கள் அல்ல என்ற அடிப்படையிலேயே இந்துத்துவத்தை கட்டமைத்தார்.

5. உங்கள் நேரூவிய கட்டுரையாளர் காந்தியுடனும் சாவர்க்கரை சமன்செய்து காண்கிறார். “காந்தியும் தன்னளவில் இந்துக்களை ஒன்றுதிரட்டினார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” அப்படியென்றால் என்ன பொருள் என்று புரியவில்லை. காந்தி எங்கே இந்துக்கள் எல்லாம் ஒன்றுபட வேண்டும் என்று அமைப்பாக்கம் செய்தார்? எப்போது செய்தார்? அவர் ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்றெல்லவா பாடினார்? காந்தியரான நீங்கள்தான் இந்தக் கூற்றிற்கு விளக்கம் சொல்லவேண்டும்.

6. இது போன்ற சாவர்க்கர் மீள்வாசிப்புகளில் அவர் பார்ப்பனர் என்று கூறப்பட்டாலும் ஏன் ஹிந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ் ஆகிய இயக்கங்களை மராத்திய பார்ப்பனர்கள் உருவாக்குகிறார்கள் என்பது குறித்து ஆய்வதில்லை. சாவர்க்கர், கோட்ஸே, ஹெட்கவார், கோல்வால்கர் அனைவரும் மராத்திய பார்ப்பனர்களாக அமைந்தது தற்செயலா? அதே பகுதியில் ஏன் புலேவும், அம்பேத்கரும் தோன்றுகிறார்கள்? பேஷ்வாக்களின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் வீழ்த்திய பீமா கோரேகான் போரில் மஹர்கள் பங்கேற்றதை கொண்டாட வேண்டும் என ஏன் அம்பேத்கர் முடிவு செய்தார்? அந்த பீமா கோரேகான் நிகழ்வையொட்டி எல்கர் பரிஷத் என்ற கருத்தரங்கை உருவாக்கியதற்காக ஏன் பல மனித உரிமையாளர்களும், சிந்தனையாளர்களும் பொய் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வாழுகிறார்கள்? ஸ்டேன் சாமி மரணமடைகிறார்? இந்திய சமூக வரலாற்றில் பேஷ்வாக்களின் ஆட்சியின் முக்கியத்துவம் என்ன? இந்துத்துவம் என்பது சாரம்சத்தில் பார்ப்பன மேலாதிக்கம் என்பதை புரிந்துகொள்வது கடினமா என்ன? பார்ப்பனீயத்தையும், சமஸ்கிருதத்தையும் தவிர்த்தால் இந்து என்ற கட்டமைப்பு சாத்தியமா? இதை விவாதிக்காமல் சாவர்க்கர் நாத்திகர், அவர் தீண்டாமையை எதிர்த்தார் என்று சொல்வதில் பொருள் என்ன? இது போன்ற கேள்விகளை கேட்டதால்தானே பெரியார் உங்கள் கட்டுரையாளரால் வெறுக்கப்படுகிறார்?

7. சாவர்க்கார் என்பவரது வரலாற்றுப் பங்களிப்பு ஒன்றே ஒன்றுதான். அது காந்தியின் அஹிம்சை, மத நல்லிணக்கத்தையும், நேருவின் சோஷலிஸம், மதச்சார்பின்மையையும் குழி தோண்டிப் புதைப்பது. இதை அனைவருக்கும் புரியவைப்பது இந்தியாவில் மக்களாட்சியை காப்பாற்ற இன்றியமையாதது. காந்தியரான நீங்களும், நேருவியரான உங்கள் கட்டுரையாளரும் செய்வது அதுவல்ல. சாவர்க்காரின் கருத்தியலை முக்கியத்துவப்படுத்தாமல், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விவாதித்து அதைவைத்து வரலாற்றுப் புரிதலை உருவாக்கும் முயற்சியை செய்கிறீர்கள். அது சாவர்க்காருக்கு வாசகர்களிடையே நன்மதிப்பை ஈட்டித்தரும் செயலாகவே முடியும். பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலைதான்.

எப்படியோ இந்த விவாதம் உங்கள் அருஞ்சொல் தளத்திற்கு வாசகர்களின் எண்ணிக்கையை கூட்டித் தந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். அதற்காக அடுத்து கோட்ஸேவின் வாழ்க்கையை நடுநிலைக் கண்ணோடு ஆராய்ந்து அவரது தேசபக்தியை நிறுவ முற்பட மாட்டீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்,

ராஜன் குறை

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்