Aran Sei

காந்தியாரும் “அந்த” ஐம்பத்தைந்து கோடியும் – திப்பு

Credit : https://www.patrika.com

காந்தியார் பிறந்த நாள், நினைவு நாள் எது வந்தாலும் சமூக ஊடகங்களில் தவறாமல் பரப்பப்படும் செய்திகளில் ஒன்று , காந்தியார் பாகிஸ்தானுக்கு ஐம்பத்தி ஐந்து கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். அதனால் ஆத்திரம் கொண்ட கோட்சே காந்தியாரை கொலை செய்தான் என்பதுதான் அது.

காந்தியாரை பாகிஸ்தான் ஆதரவாளராகவும், இந்தியாவின் எதிரியாகவும் துரோகியாகவும் காட்டி கோட்சே அவரை கொன்றது சரிதான் என நியாயப்படுத்த இந்த பரப்புரை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் அப்பாவிகள் சிலர் இதை நம்பவும் தலைப்பட்டு, மேற்கொண்டு அவர்களும் இதனை பரப்புகிறார்கள். குறிப்பாக வாட்ஸ் ஆப்பில் ”பார்வெர்ட்” செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஐம்பத்தைந்து கோடி விவகாரம்தான் என்ன?

ஆங்கிலேயர்கள் பிரித்தானிய இந்தியாவை இந்தியா பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரித்து சுதந்திரம் வழங்கியபோது நிலப்பரப்பை பிரித்தது போன்று அதன் சொத்துக்களையும் பிரித்துக் கொடுத்தார்கள். அப்படி இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பு தொகை 400 கோடி ரூபாயையும் பிரித்தார்கள். அதில் ரூ. 325 கோடி இந்தியாவுக்கும் ரூ. 75 கோடி பாகிஸ்தானுக்கும் உரியது என முடிவானது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டதால் ரூ. 75 கோடி பணம் கொடுக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டு முதல் தவணையாக ரூ. 20 கோடி ரூபாயை 1947 லேயே பாகிஸ்தானுக்கு கொடுத்து விட்டது.

இந்நிலையில் காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடித்தது. அதைக் காரணம் காட்டி இந்திய அரசு மீதி ரூ 55 கோடியை பாகிஸ்தானுக்கு தர மறுத்தது. பாகிஸ்தான் தலைமை ஆளுநர் மவுண்ட்பேட்டனிடம் முறையிட்டது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்து விட்ட ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு எதுவும் போட முடியாத நிலையில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.இந்திய அரசுக்கு பணத்தை கொடுத்து விடுமாறு அறிவுரை மட்டுமே சொல்ல முடிந்தது. ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் அதை ஏற்கவில்லை.

இதுவரை காந்தியாருக்கு இந்த பண விவகாரம் எதுவும் தெரியாது. மவுண்ட்பேட்டன்தான் இதனை அவரிடம் தெரிவிக்கிறார். இந்திய அரசு செய்வது நேர்மையற்ற செயல் என விமர்சிக்கிறார். இவ்வளவு சிரமப்பட்டு விடுதலை பெற்றது நேர்மையற்ற செயல்களை செய்வதற்குத்தானா என்று காந்தியாரும் வருத்தமடைகிறார். காந்தியாரின் வருத்தமும் ஆடசியாளர்களை அசைக்கவில்லை

இந்த சமயத்தில்தான் தில்லியில் முசுலீம் மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைகின்றன. பெருத்த உயிர் சேதத்துக்கு இடையே அவர்களுடைய வீடுகள் கடைகள் பறிக்கப்படுகின்றன, மசூதிகள் கோவில்களாக மாற்றப்படுகின்றன. தில்லி மட்டுமல்ல இந்தியாவின் பல நகரங்களிலும் இதுதான் நிலைமை.

இந்த நிகழ்வுகள் காந்தியாரை வெகுவாக பாதித்தன. அமைதியை நிலைநாட்டுமாறு இந்திய அரசை வலியுறுத்தி 1948 சனவரி திங்கள் 13-ம் நாள் காந்தியார் உண்ணாநோன்பு இருக்க துவங்குகிறார். ஆம் இதுகாறும் அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக உண்ணாநோன்பு போராட்டம் நடத்தி வந்த காந்தியார் சொந்த ஆடசியாளர்களுக்கு எதிராக உண்ணாநோன்பிருக்கிறார். அவரது ஐந்து போராட்ட கோரிக்கைகளில் அந்த 55 கோடி ரூபாய் இடம் பெறவே இல்லை. ஆட்சியாளர்கள்தான் அந்தப் பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்து விட்டால் காந்தியார் சமாதானமாகி உண்ணாநோன்பை கைவிட்டு விடுவார் என நினைத்துக்கொண்டு அந்தப் பணத்தை அனுப்பி வைத்தனர். காந்தியாரோ இந்திய அரசு அமைதியை நிலை நாட்டாத வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அறிவித்து விட்டார்.

ஆம், ரூ.55 கோடி அவரது கோரிக்கையல்ல, அமைதியே அவரது கோரிக்கை.

ஆதாரம்: மகாத்மா காந்தி கொலை வழக்கு நூல்
பக்கம் 78 முதல் 88 வரை
ஆசிரியர். என்.சொக்கன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

(கட்டுரையாளர் திப்பு சமூக ஆர்வலர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்