Aran Sei

அமெரிக்க அதிபர் தேர்தல் – முடிவு தெரிவதில் தாமதம் ஏன்? – நவநீத கண்ணன்.

உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், கடந்த நவம்பர் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முடிவுப்பெற்று, வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக நடைப்பெற்று வருகின்றன. வெற்றியைத் தீர்மானிக்கும் அதிமுக்கிய மாநிலங்களான (Battleground states) பென்சில்வேனியா, ஜார்ஜியா, அரிசோனா, நிவேடா, நார்த் கரோலினா போன்ற மாநிலங்களில் இழுபறி நீடிப்பதால், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனுக்கும் குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் பலத்த போட்டி நிலவுகிறது.

இந்த ஐந்து மாநிலங்களில் நான்கில் தற்போது ஜோ பைடன் நல்ல முன்னணியில் உள்ளதாக, வாக்கு எண்ணிக்கை மையங்களுடன் இணைந்த அனைத்து முன்னணி ஊடகங்களும் தெரிவிக்கின்றன.

தற்போதைய தகவலின்படி,

  • பென்சில்வேனியா (96% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன) – பைடன் 28,833 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
  • ஜார்ஜியா (99% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன) – பைடன் 4,022 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
  • அரிசோனா (97% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன) – பைடன் 36,835 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
  • நிவேடா (93% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன) – பைடன் 22,657 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

இந்நான்கு மாநில தேர்தவுக் குழு வாக்குகளையும்(53) ஜோ பைடன் வெல்லும் பட்சத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான 270 தேர்வுக் குழு வாக்குகளைவிட கூடுதலாகப் பெற்று 306 வாக்குகளைப் பெறுவார் என சிஎன்என், ஏபிசி, என்பிசி, போன்ற முண்ணனி ஊடகங்கள் கணித்துள்ளன. இந்த எண்ணிக்கையானது கடந்த 2016 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வென்ற தேர்வுக் குழு வாக்குகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜியா மாநிலத்தில் பைடனுக்கும் ட்ரம்பிற்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 0.1%க்கும் குறைவாக இருப்பதால், அம்மாநிலத்தின் தேர்தல் சட்டவிதிகளின்படி, மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 0.5% குறைவாக இருக்கும் பட்சத்தில், யாரும் கேட்காமலேயே மறுவாக்கு எண்ணிக்கை (Automatically trigger state-funded election recounts) என்ற நடைமுறைப்படி செய்யப்படும் வழக்கமான நடைமுறை.

பென்சில்வேனியா மாநிலத்திலும் வாக்கு வித்தியாசம் 0.3% இருப்பதால், அங்கும் மறு எண்ணிக்கை நடைபெற வாய்ப்புள்ளதாக, தேர்தல் நிலவரங்களை உடனுக்குடன் வழங்கிவரும் தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று அதிபர் ட்ரம்ப், அப்போது பல மில்லியன் வாக்குகள் எண்ணிமுடிக்கப்படுவதற்கு முன்பே, தாம் வெற்றிப் பெற்றுவிட்டதாக அவர் அறிவித்துக்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “இந்த தேர்தலில் நாம் வெற்றி பெறுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். வெளிப்படையாகச் சொன்னால் வெற்றிப் பெற்றுவிட்டோம். ஆனால் ஜனநாயக் கட்சி நாம் பெற்ற வெற்றியைத் திருடப் பார்க்கிறது. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

“தேர்தல் நாளுக்குப் பிறகான தபால் வாக்குப்பதிவுகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். தேர்தலில் பல்வேறு மோசடிகள் நடைப்பெற்றுவருகிறது, சட்டம் முறையாகப் பயன்படுத்தப்படவேண்டும். எனவே நாங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம். வாக்கு எண்ணிக்கையும் உடனடியாக நிறுத்தவேண்டும்” என்று சர்வாதிகார தொனியில் செய்தியாளர்களிடத்திலும் ட்விட்டரிலும் ட்ரம்ப் தெரிவித்தார்.

நேற்று மதியம் மீண்டும் வெள்ளை மாளிகையில் பேசும்போது, “சட்டப்படியான வாக்குகள் மட்டும் எண்ணப்பட்டால், நான் எளிதாக அதிபர் பதவியை மீண்டும் வென்றுவிடுவேன். ஆனால் ஜனநாயக் கட்சியினர் ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டே சட்டவிரோதமாக அளிக்கப்பட்ட தபால் வாக்குகளை எண்ணுவதால், பென்சில்வேனியா, ஜார்ஜியா, மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா போன்ற முக்கிய மாநிலங்களின் வெற்றியை என்னிடமிருந்து அபகரிக்கப்பார்க்கிறார்கள்” என்று கூறினார்.

“வாக்கு எண்ணிக்கையை உடனே நிறுத்துங்கள்; நான் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறேன், யார் வெற்றியாளர் என்பதை உச்சநீதிமன்றம் முடிவுசெய்யட்டும்” என்று மற்றுமொருமுறை செய்தியாளர்கள் சந்திப்பிலும் ட்விட்டரிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கைச் சம்மந்தமாகத் தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார்.

பழம்பெரும் அமெரிக்க தேர்தல் ஜனநாயகத்தின்மீது அபாண்டமாக ஆதாரப்பூர்வமற்ற சதிக்கோட்பாடுகள் ரீதியான குற்றச்சாட்டுகளை அதிபர் ட்ரம்ப் வைப்பதாக, முக்கிய ஊடகங்களான சிஎன்பிசி, எம்எஸ்என்பிசி போன்ற ஊடகங்களின் நெறியாளர்கள் நேரலையிலேயே கண்டித்து, அதிபரின் செய்தியாளர் சந்திப்பு ஒளிபரப்பை பாதியிலேயே நிறுத்தினார்கள். இது கடந்த கால அமெரிக்க ஊடக வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒன்றாகும்.

 

ஏபிசி, சிபிஎஸ், என்பிசி போன்ற ஊடகங்களும் “ட்ரம்ப் தனது வெற்றியை திருடப்பார்ப்பதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதால், வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் இருந்து விலகுவதாக” தி அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் சொல்வதைப் போல, “தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதா? ஏன் வாக்கு எண்ணிக்கையில் இத்தனை காலத்தாமதம் ஏற்படுகிறது? வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களில் (Battleground states) எவ்வாறு முன்பு முன்னிலையில் இருந்துவிட்டு, பிறகு தபால் வாக்குகள் எண்ணப்படும்போது அவர் சரிவைச் சந்திக்கிறார்?” போன்ற கேள்விகளுக்கு ஆராய்ந்து விடைகாண்பது அவசியமாகிறது.

முதலில் இதற்கு முன்பு எந்தத் தேர்தலிலும் இல்லாத நிலையில், நடந்து முடிந்த 2020 அதிபர் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பிருந்தே வாக்களிக்க தொடங்கிவிட்டனர். அமெரிக்க அரசமைப்புச் சட்டமும், அந்தந்த மாநிலத்தின் சட்டவிதிகளும் மக்களுக்கு இந்த உரிமையை வழங்குகின்றன. இதற்கான கால இடைவெளி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வேறுபடும். மேலும் 23 மாநிலங்கள் தேர்தல் நாளுக்கு பிறகும்கூட வாக்காளர்களின் தபால் வாக்குகளை ஏற்றுக்கொள்கின்றன.

மாநிலங்கள் சட்டபூர்வமாக வழங்கும் இந்த உரிமைகளாலும், கொரோனா பெருந்தொற்று அமெரிக்காவில் மீண்டும் தீவிரமாகப் பரவிவருவதாலும், கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள் இந்தாண்டு தேர்தல் நாளுக்கு முன்பே ‘தங்கள் வாக்குகளை நேரடியாக வாக்குச்சாவடியில் செலுத்தியும் (Early in-person voting before the election day), தபால் வாக்குகள் மூலமாகவும் (Mail-in ballot/ Absentee ballot)’ தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

“10.12 கோடிப் பேர் தேர்தலுக்கு முன்பாகவே வாக்களித்துள்ளனர் என்றும், இது 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலோடு ஒப்பிடுகையில்  73 சதவீத ஓட்டுப்பதிவு தேர்தல் நாளுக்கு முன்பே நடைப்பெற்று சாதனை படைக்கப்பட்டதாக” தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

  • அமெரிக்காவில் தகுதிப்பெற்ற பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை – 23.92 கோடி பேர்
  • 2016 அதிபர் தேர்தலில் வாக்களித்த மொத்த வாக்காளர்கள் – 13.6 கோடி பேர்
  • இந்த தேர்தலில் வாக்களித்த மொத்த வாக்காளர்கள் – 16 கோடி பேர்(66.9%)
  • இதில் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களித்த மொத்த வாக்காளர்கள் – 10.12 கோடி பேர்(மொத்த வாக்குப்பதிவில் 63.4%)

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வழக்கமாக தேர்தல் நடந்த நாளன்றே  தெரிந்துவிடும். எல்லா மாநிலங்களும் வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நிமிடம் முதலே வாக்குகளை எண்ணத் தொடங்கிவிடுவார்கள். புளோரிடா போன்ற 16 மாநிலங்கள் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதிலிருந்தே எண்ணத் தொடங்கிவிடுவார்கள்.

தேர்தல் நடந்த அன்றிரவே எந்தெந்த வேட்பாளர்கள் எத்தனை மாநில தேர்வுக் குழு வாக்குகளைப் பெற்றார்கள் என்பது ஓரளவிற்கு தெரிந்துவிடும். எல்லா வாக்குகளும் தேர்தல் நடைபெற்ற நாளன்றே எண்ணி முடிக்கப்படுவதில்லை. ஆனால் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் அளவிற்கு வாக்குகள் அன்றிரவே எண்ணி முடிக்கப்படும்.

ஒரு வேட்பாளர் இனி தோற்கடிக்கப்படவே முடியாத அளவிற்கு முன்னிலை பெற்றவுடன் முன்னணி செய்தி நிறுவனங்கள் அவர் வெற்றி பெற்றதாக முன் மதிப்பீடு செய்வார்கள் (Projection). இவ்வாறு ஒரு வேட்பாளர் ‘ப்ரோஜெக்ட்’ செய்யப்படுவது அதிகாரபூர்வமான முடிவல்ல, பெரும்பாலும் பல சமயங்களில் இது சரியானதாகவே இருக்கும். இதன்படிதான் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், தேர்தல் நடைபெற்ற அடுத்த நாளில் வாஷிங்டன் டி.சி. நேரப்படி அதிகாலை 2.30 மணி அளவில் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மக்கள் அதிக அளவில் தபால் வழியாக வாக்குகளை செலுத்தியதால், இதனை முழுமையாக எண்ணுவது இயல்பாகவே தாமதமான காரியமாகும். ஏனெனில் தபால் வாக்குகள் அனைத்தும் வாக்குச்சீட்டு (Paper ballot) முறையில் போடப்படுவதாலும், அதனை தேர்தல் பணியாளர்கள் பல இடங்களில் கைகளாலேயே எண்ணுவதாலும், முடிவு வருவதற்கு இத்தனை நாட்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தபால் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பு வாக்காளர்களின் முகவரி, கையெழுத்து, புகைப்படம், தொடர்புடைய அடையாள ஆவணங்கள் போன்றவை சரி பார்க்கப்படவேண்டும். புளோரிடா, ஒக்லஹாமா, மிசோரி,  ஐயோவா, ஒஹையோ போன்ற சில மாநிலங்கள் இந்த நடைமுறையைத் தேர்தலுக்குச் சில நாட்கள் முன்பாகவே ஆரம்பித்துவிட்டன.

தபால் முறையில் வரும் வாக்குகள் எண்ணுவதற்குத் தயாராக இருந்தன. அதனால்தான் இந்த மாநில முடிவுகள் முழுவதும் உடனடியாக வெளிவரத் தொடங்கின. பென்சில்வேனியா, விஸ்கான்சின், நிவேதா போன்ற மாநிலங்களில், தபால் வாக்குகளைச் சரிபார்க்கும் நடைமுறைகூட, தேர்தல் நாளிற்கு முன்புவரை அனுமதி கொடுக்கப்படவில்லை. யார் அடுத்த அதிபராகிறார் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இம்மாநிலங்களில் தாமதமாகத் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. முடிவுகள் வெளியாவதில் தாமதமாவதற்கும், அதிபர் ட்ரம்ப் தபால் வாக்குகளே மோசடியானவை என்று குற்றஞ்சாட்டுவதற்கும் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தபால் வாக்குகள் நம்பகத்தன்மை வாய்ந்ததா என்ற கேள்விக்கு, ‘Brennan Center for Justice’ என்ற நிறுவனம் 2017 ஆம் ஆண்டு நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வின் முடிவில், “தபால் வாக்குப்பதிவில் வாக்காளர் மோசடி என்பது 0.00004% முதல் 0.0009% வரைதான் உள்ளதாக தெரியவந்ததாகவும், இவ்வாறு நமது ஜனநாயக நடைமுறைமீது தவறான தகவல்கள் பரப்புவதை அதிபர் நிறுத்துக்கொள்ளும்படியும்” கேட்டுக்கொண்டனர்.

அமெரிக்க கூட்டரசின் தேர்தல் ஆணையத் தலைவர் எலன் வெயிண்ட்ராப், நேற்று பிபிசி செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, “தபால் மூலம் வாக்களிப்பது மோசடிக்கு வழிவகுக்கும் என்ற சதி கோட்பாட்டிற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும்  இல்லை. பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான ஆய்வுகளும் அமெரிக்க தேர்தலில் வாக்காளர் மோசடி செய்வதென்பது மிகவும் அரிதானது என்பதையே உறுதிப்படுத்துகின்றன. தேர்தல் அதிகாரிகளும் அஞ்சல் ஊழியர்களும்  மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வாக்குகளைச் செயலாக்குவதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு அபாண்டமாகக் குற்றஞ்சாட்டுவது அவர்களின் சேவையைக் கொச்சைப்படுத்துவதாகும்” என்றார்.

வாக்கு எண்ணிக்கையில் முக்கிய மாநிலங்களில் ட்ரம்ப் முதலில் முன்னிலைப் பெற்றார், பிறகு தபால் வாக்குகள் எண்ணப்பட்டதும் பின்னடைவைச் சந்தித்தார்.

தேர்தல் நாளன்று தி நியூயார்க் டைம்ஸ்  பத்திரிக்கை நடத்திய கள ஆய்வில், “குடியரசு கட்சியினரைவிட ஜனநாயக கட்சியினரே அதிகளவில் தபால் மூலம் வாக்களிக்க ஆர்வம் காட்டியதாகவும், தபால் வாக்களிப்பு மீது ட்ரம்ப் வைத்த விமர்சனங்களால் குடியரசு கட்சியினர் பெரும்பாலும் தேர்தல் நாளில் நேரில் சென்று வாக்களிக்கவே அதிகம் விரும்பினார்கள் எனவும், தெரிவிக்கிறது. வெற்றியைத் தீர்மானிக்கும் பென்சில்வேனியா, நார்த் கரோலினா போன்ற மாநிலங்களில் தபால் வாக்குப்பதிவிற்குக் கோரிக்கை வைத்தவர்களில் பெரும்பாலானோர் ஜனநாயக கட்சியினர்” என தெரிவித்துள்ளது.

தேர்தல் வாக்களிப்பு முறைகள்  மற்றும் தபால் வாக்கு நம்பகத்தன்மை தொடர்பாக என்பிசி  செய்தி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதமே நாடுதழுவிய அளவில் மிகப்பெரிய கருத்துக் கணிப்பை நடந்தியிருந்தது.

கருத்துக்கணிப்பில் “தேர்தலில் அனைத்து வாக்குகளும் முறையாக எண்ணப்படுமா” என்ற கேள்விக்கு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 55% பேர் அனைத்து வாக்குகளும் முறையாக எண்ணப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்திருந்தனர். தபால் வாக்குகள் பற்றிய கேள்விக்கு, இன்னும் அதிகமாக 65% பேர் தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

குடியரசு கட்சியினரோ அனைத்து வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் பற்றிய கேள்விக்கு முறையே 36% மற்றும் 23% மட்டுமே நியாயமாகத் தங்கள் வாக்குகள் எண்ணப்படும் என்று கருத்துத் தெரிவித்தனர். மொத்தமாக 45% மக்கள் மட்டுமே முறையாகத் தங்கள் வாக்குகள் எண்ணப்படும் என்று நம்பினர்.

வாக்களிக்கும் முறைகள் பற்றிய கேள்விக்கு “ட்ரம்ப் ஆதரவாளர்களைவிட (11%) நான்கு மடங்கிற்கு அதிகமாகப் பிடன் ஆதரவாளர்கள் (47%) தபால் மூலம் வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தனர். ட்ரம்ப் ஆதரவாளர்களில் மூன்றில் இருவர் (66%) தேர்தல் நாளில் நேரடியாகச் சென்று வாக்களிக்கும் திட்டத்தில் உள்ளதாகவும், பிடன் ஆதரவாளர்களில் வெறும் 26%  தேர்தல் நாளில் வாக்களிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மொத்தமாக 30% மக்கள் தபால் முறையில் வாக்களிக்க இருப்பதாக கூறியிருந்தனர்”. கிட்டத்தட்ட அதே அளவிலான விகிதத்தில்தான் தபால் வாக்குகளும் மற்ற இரண்டு வாக்குமுறைகளிலும் வாக்குகள் பதிவாகின.

தேர்தல் நாளன்று பதிவான வாக்குகளைத்தான் முதலில் எண்ணுவார்கள் என்பதால், ட்ரம்ப் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களில் முதலில் முன்னிலை வகிக்கத் துவங்குவார் என்றும், பிறகு தேர்தலுக்கு முந்தைய நாட்களில் நேரடியாகச் சென்று வாக்களித்த வாக்காளர்களின் வாக்குகளையும் (Early in-person votes), தபால் வாக்குகளையும் (Mail-in ballot) எண்ணும்போது, அவர் பல மாநிலங்களிலும் மாகாணங்களிலும் சரிவை சந்திக்க ஆரம்பிப்பார் என்றும் மூன்று மாதங்களுக்கு முன்பே வாக்கு எண்ணிக்கையின் போக்கை துல்லியமாக கணித்திருந்தனர். அவ்வாறாகவே தற்போதும் நடத்துவருகின்றது.

(கட்டுரையாளர் நவநீத கண்ணன் மருத்துவம் படிக்கும் மாணவர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்