Aran Sei

சமத்துவத்திற்கான நீண்ட போராட்டமும் மறுக்கப்படும் அரசியல் உரிமைகளும் – மீனா கந்தசாமி

சில சமயத்தில் ஒரு புகைப்படம் உங்கள் கவனத்தை ஈர்த்து உங்களை அதற்கு அடிமையாக்கி விடலாம். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் அதனை ஒரு அடையாளச் சின்னமாக உணர்வீர்கள். இந்தப் படம்தான் வெளியின் முப்பரிமாணங்களுடன் நேரத்தையும் சேர்த்து அதன் நான்கு பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக உங்கள் நினைவில் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த ஒரு படம் கடந்த கால வரலாறாகவும், அதே சமயம் எதிர்காலமாகவும் இருக்கும். இனி நடக்கப்போகும் நிகழ்வுகளை  குறிப்பிடுவதாக அந்த ஒரு படம் இருக்கும். அது ஏதோ ஒரு புதிய நிகழ்வுக்கு கட்டியம் கூறுவதாக இருக்கும். அது காலவரையறையற்ற ஏதோ ஒன்றை ஒன்றிணைத்து இழுக்கும்.

நான் வாட்சாப்பில் அந்த கதிரவனின் ஒளியில் நனைந்திருந்த அந்த படத்தை கண்ணுற்ற போது பெல்ஜியத்தில் இருந்தேன்.  ஒளிர் நீலச் சேலை அணிந்த ஒரு பெண் பெருமையுடன் அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு வர, அவருக்குப் பின்னால், மற்றொரு பெண் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் (சுருக்கமாக விசிக) நிறமான சிவப்பு மற்றும் நீல வண்ணங்கள் பூசிய கொடி மரத்தை தன் வளைகரங்களால் தூக்கிக் கொண்டு வருகிறார். இது நடந்தது செப்டம்பர் ஆறாம் நாள். மக்கள் கடலுக்குப் பின்னால் இரண்டு பிஞ்சு குழந்தைகள் நான்கு விசிக கொடிகளைப் பிடித்துக் கொண்டு முன்னேறி வந்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு நடுத்தர வயதுடையவர்களும் இருந்தனர். அவர்கள்  இருவரும் பார்வையாளர்கள். அதோ அந்த படத்தின் நடுவே அழையா விருந்தாளியாக தோற்றமளிக்காத,  இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்த ஒரு இளைஞர் எங்கேயோ தொலை தூரத்தை நோக்கிய கண்களுடன், தீவிரமாக பறையை முழக்கிக் கொண்டிருக்கிறார்.

நிலக்கரி பற்றாக்குறைக்கு யார் காரணம்? – தனியார் முதலாளிகளா? அரசா?

இந்த விழா கொண்டாட்டத்தில் அவர் அங்கே இருக்கிறார். ஆனால் அமைதியாக இல்லை. ஒரு போர் முரசைப் போல- அந்தக் கருவி அவரோடு பேசியது- முறையான எண்ணிக்கையில் ஓய்வின்றி அது ஒலித்துக் கொண்டிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளின் இனிய முழக்கங்களைக் கேட்க முடிகிறது.  சிறிதும் தயக்கமின்றி அம்பேத்கரின் உருவப்படத்தை சுமந்து செல்லும் பெண்ணின் வீர உருவம் உங்களை எழுந்து உட்கார வைத்து கைதட்ட வைக்கும். அவர் நேராக புகைப்பட கருவியைப் பார்க்கிறார். நம்மைப் பார்க்கிறார்‌. அது அவளது வீரத்திற்குச் சாட்சியாக நம்மையும் வருமாறு அறைகூவல் விடுப்பது போல் அது இருக்கிறது.

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் சாதி மோதல்கள் புதிதல்ல. உண்மையில் அது, இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினரின்  அரசியல் வலியுறுத்தலின் பிறப்பிடமாகும். பல பத்தாண்டுகளாக, ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட சாதி அடுக்கும், அரசியல் சுதந்திரத்தை சுவாசித்ததால், எதிர்பார்த்தது போலவே  அடித்தளத்திலிருந்து பிரிந்து, மேல்தளத்திற்கு வந்து மிதந்து, தலித்துகளை அடியில் தள்ளிவிட்டு, உயர்சாதி அடுக்குகளுடன் தம்மை இணைத்துக் கொண்டனர். திமுகவின் தேர்தல் கூட்டணியில் ஒரு கூட்டணிக் கட்சியாக இருக்கும் விசிக, கடந்த சில ஆண்டுகளில், தலித்துகளின் அரசியல் வலியுறுத்தலின் குவிமையமாக மாறிவிட்டது, தவிர்க்க இயலாமல் பதட்டத்திற்கு வழி வகுத்துள்ளது.

`சர்தார் உத்தம்’ – பிற தேச பக்தி திரைப்படங்களில் இருந்து ஏன் மாறுபடுகிறது?

காலப் போக்கில், தமிழ்நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் இந்தப் பதட்டம்,  சமூகப் படிநிலையில் மேலே வந்து விட்ட பிற சாதியினர் அனைவரும் ஒன்றிணைந்து தலித்துகளை சமூகப் புறக்கணிப்பு செய்யும் நிலையை உருவாக்கி வருகிறது. கிராமப்புற தலித்துகள் பெரும்பாலும் நிலமற்றவர்களாக இருப்பதால் இது அவர்களை முட்டுச் சுவரில் கொண்டு போய் விட்டு விட்டது. வேறு வழியின்றி, அதற்கு எதிர்வினையாக  தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதத்தில், பொது வெளியில் தலித்துகளின் இருப்பை வலியுறுத்தும் ஒரு வடிவமாக  விசிக கொடியை ஏற்றுவது, அத்துடன் பாபாசாகிப் அம்பேத்கரின் உருவப்படத்தை முக்கிய இடங்களில் வைப்பது ஆகியவற்றை செய்கின்றனர். இது போன்ற எதையும் அடக்கு முறை சாதியினர் அனுமதிக்க விரும்புவதில்லை. சில வேளைகளில் சாதிப் பெருமைக்காக பொது இடங்களில் தாங்கள் வைத்துள்ளவற்றை அகற்றிக் கொள்ளவும் செய்கிறார்கள். எனது ஒரு கண் போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்பது போன்றது இது.

அந்த வியர்க்க வைக்கும் செப்டம்பர் காலை வேளையில், பெரம்பலூர் மாவட்டத்தின், ஆலத்தூரைச் சேர்ந்த சின்னஞ்சிறு கிராமமான புது விராலிப்பட்டியைச் சேர்ந்த, அன்றாடம் ஒதுக்கப்படுவதன் வேதனைகளைத் தாங்கிக் கொண்டு, அந்த தலித் பெண் விசிக கொடியை நிறுவவுதற்கான ஜனநாயக உரிமையை நிலைநாட்ட, சாதி இந்துக்களின் அச்சுறுத்தலையும், காவல்துறையின் கைது எச்சரிக்கையையும் எதிர்த்து நிற்கிறார்.

‘காட்டுயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு’ – சதீஷ் லெட்சுமணன்

நான் இந்தியா திரும்பியதும் அந்த வீரப் பெண்மணியை சந்திக்கச் சென்றேன். பலரது விருப்பங்களை அடையாளப்படுத்தும் அந்த விசிக கொடி. 1990, ஏப்ரல் 14 ம் நாள் மதுரையில், இந்திய தலித் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரான தொல்காப்பியன். திருமாவளவனால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் கொடியின்  நீலம் மற்றும் சிவப்புப் பட்டைகளுக்கு நடுவே ஐந்து முனை வெண் தாரகை உள்ளது. நீல நிறம் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய தலித் அரசியல் கொடிகளிலேயே தனித்துவமாக உள்ள சிவப்பு நிறம் மார்க்சியம் மற்றும் புரட்சிப் பாதையை காட்டுவதாக உள்ளது. நட்சத்திரத்தின் ஐந்து முனைகளில் ஒவ்வொன்றும் -சாதி ஒழிப்பு, பெண்கள் விடுதலை, பாட்டாளிகள் சுதந்திரம், மொழிவழி/தமிழ் தேசியம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் ஆகிய கட்சியின் மையமான ஐந்து கோரிக்கைகளைப்  பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

செப்.25 ம் நாள் நான்  விராலிப்பட்டி சென்ற போது விசிக கொடி நம்மை  வரவேற்றது. அது பேருந்து நிலையத்தின் அருகில் இருந்தது. விண்ணில் தெரிந்த ஒரே கொடி அதுதான்.

‘டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றம் உலக மக்களின் சிந்தனையை தூண்டும்’ – அறிஞர் அண்ணா

காவல்துறையினர் மற்றும் அடக்குமுறை சாதி எதிர்ப்பாளர்களை எதிர்த்த வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு மூன்று வாரங்களுக்குப் பின், நான் புது விராலிப்பட்டியைச் சேர்ந்த அந்த தலித் பெண்ணை மாலையில், அவர் வயல்வெளியிலிருந்து திரும்பி வந்ததும் சந்தித்தேன். இரவு உணவிற்காக அரிசி உணவை சமைத்துக் கொண்டிருந்த அந்த நேரம், அவர்களுக்கு கடுமையான வேலை நேரம். இருப்பினும் அவர்கள் நேர்காணலுக்கு இடமளித்தனர். ஒட்டு மொத்த கிராமத்தினரும் பெண்கள் அதிகமாக பேசிக் கொள்ளும் இடமான சேரியில் (தலித்துகள் வாழும் பகுதி) உள்ள மாரியம்மன் கோவிலில் கூடினர்.

நான் அவர்கள் கூறியதைக் கேட்டேன். கற்றுக் கொண்டேன். நான் கோபமுற்றேன். எண்ணிக்கையில் வெறும் 200 தலித் குடும்பங்களை  ஒன்றுமில்லாதவர்களாக்கும்  வகையில், நாயுடு, செட்டியார், வேளாளர் ஆகிய அடக்குமுறை சாதிகளைச் சேர்ந்த 800 குடும்பங்கள் அந்த கிராமத்தில் இருந்தன. முதன்மையாக நிலமற்ற விவசாயக் கூலிகளாக உள்ள அல்லது மிகச் சிறிய நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக  இருப்பதால் தவிர்க்க இயலாமல் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு சாதி இந்துக்களையே சார்ந்துள்ளனர். அடக்குமுறை சாதிகளின் சிறு குழந்தைகள் கூட தலித் இனத்தைச் சேர்ந்த பெரியவர்களை வழக்கமான மரியாதை விளிக் கூட இன்றி பெயர் சொல்லித்தான் அழைப்பர். கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் வரும் நல்லேந்திர சுவாமி பெருமாள்  கோவிலுக்குள் இன்றும் தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. அத்துடன் அந்தக் கோவிலுக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை விவசாயத்திற்காக ஆண்டு குத்தகைக்குக் கூட அவர்களால் எடுக்க முடியாது. சுகாதார வசதிகளும் கிடையாது. குழந்தைகள் சில கி.மீ. நடந்தே சென்றுதான் இயற்கைக் கடன்களைக் கழிக்க முடியும். பெரிய குழந்தைகளுக்கு அவர்கள் அருகிலிலுள்ள செட்டி குளம் அரசு பள்ளிக்குச் செல்லப் பேருந்து காலை 6:30 வரும். அடுத்த பேருந்து 9:30  மணிக்குத்தான் வரும். எனவே காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டுப் சென்றால் மாலை ஆறு மணிக்குத்தான் அவர்கள் வீட்டிற்குத் திரும்புவார்கள். காலை உணவு சாப்பிடாததால் பலரும் பள்ளிகளில் மயக்கமடைந்து விழுகின்றனர். அடக்குமுறை சாதிகளின் பிள்ளைகள் இந்த விதியிலிருந்து தப்பித்து விடுகின்றனர். அவர்களை பள்ளிகளுக்குக் கூட்டிச் செல்லவும், அழைத்து வரவும் அவர்களின் தந்தைகள்  ஜீப் வைத்துள்ளனர். பெரும்பாலும் இந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். 1995 ல் பஞ்சமி நிலத் திட்டத்தின் கீழ்  நிலங்களைப் பெற்ற 95 பேரில் 37 பேர் தங்கள் நிலத்தை  இன்னும் அணுகக் கூட இயலாமல், தங்கள் நிலத்தை அடைவதற்கான வழித்தடம் கூட இல்லாமல் உள்ளனர். பொது சுடுகாட்டிலும் கூட பிரிவினை இருப்பதாகவும், சாதி இந்துக்கள் அதிக வசதிகளை அனுபவிப்பதாகவும் தலித் ஆண்கள் தெரிவிக்கின்றனர்.

தலித்துகள் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கிடையே ஊசலாடும் தங்கள் அரசியல் தொடர்புகளை நிராகரித்து, விசிகவைத் தழுவி உள்ளனர். இது பல நூற்றாண்டுகளாக எதிர்க்கப்படாமல், இன்றளவும் நடந்து வரும் கொடுமைகளுக்கு எதிரான தவிர்க்க முடியாத எதிர்ப்பு. விடுதலை சிறுத்தைகள் கொடியை ஏற்றிய பிறகு அடக்குமுறை சாதியினர் தங்கள் வெறுப்பை இருமடங்காக்கிக் கொண்டனர். அந்த நீல சிவப்பு வண்ண கொடி, கொடி மரத்தில் பறக்க துவங்கிய உடனேயே புது விராலிப்பட்டியில் உள்ள சாதி இந்துக்கள் தங்கள் நிலங்களில் தலித்துகளை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்திக் கொண்டார்கள்.  இதன் நோக்கம் சாதியத்தின்  பாலபாடம்- தலித்துகளின் வாழ்வாதாரத்தை பறித்து விடுதல்.

நல்ல இஸ்லாமியர், கெட்ட இஸ்லாமியர் – அக்பரை முன்வைத்து வலதுசாரிகள் கட்டமைக்கும் கருத்தியல்

பொது நிலத்தில், தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்ட விசிக கொடியை ஏற்றுவதற்கான தலித்துகளின் கோரிக்கை, அவர்களுடைய அன்றாட நடைமுறைகளுடன் கலாச்சார தொடர்புடைய அந்த நிலத்தில்தான் வேரூன்றி உள்ளது. ” எங்கள் திருமண நிகழ்ச்சிகளில், இந்த இடத்திலிருந்துதான் நாங்கள் எங்கள் மணப்பெண்களை ஊர்வலமாக அழைத்துச் செல்வோம். கோடைக்காலத்தில் சித்திரை திருவிழாவின் போது இந்த இடத்தில்தான் முயல் வேட்டைக்குச் செல்லும் ஆண்களுக்கு வழியனுப்பு விழா நடத்துவோம். இது இங்கு நிலவும் பாரம்பரியம். அந்த நிலம் யாருக்கும் சொந்தமானதல்ல. மற்றவர்களுடையது போலவே அது எங்களுடையதும்தான்,” என்கிறார் கொடியேற்று பேரணியை முன்னின்று நடத்திய பெண்களில் ஒருவரான சித்ரா.

புது விராலிப்பட்டிக்கு விசிக கொடி புதியது அல்ல. 1990 களில் விசிக, இந்திய தலித் சிறுத்தைகள் என்று இருந்த போது, அது  அரசியல் கட்சியாக இல்லாமல் மக்கள் இயக்கமாக இருந்த போது,  மூங்கில் கம்பத்தில் ஒரு கொடி ஏற்றப்பட்டது. அது எப்படி மறைந்தது என்ற விவரங்கள் தெளிவற்றவை. பல்வேறு கதைகளுக்கு நடுவே அது மக்கள் நினைவிலிருந்து மறைந்து விட்டது. இந்த ஆண்டு கட்சியின் நிறுவனர் திருமாவளவனின் பிறந்த நாளான ஆகஸ்ட் 17ல் விசிகவைச் சேர்ந்த கண்ணதாசனும், நித்யவளவனும் ஒரு மரம் நடுவிழா, இனிப்புகள் வழங்குதல், கொடியேற்று விழா ஆகியவற்றை நடத்த விரும்பினர். அதற்கு விசிக வின் கொடியை ஏற்றுவது வகுப்புவாத பதட்டத்தை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தைக் கூறி காவல்துறை அனுமதி மறுத்து விட்டது.

அதன்பிறகு செப். 3 ம் நாள் விசிக மற்றும் சாதி இந்துக்களின் பிரதிநிதிகள் அடங்கிய முதல் அமைதிக் குழுக் கூட்டம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. சாதி இந்துக்கள் விசிக கொடியை ஏற்றி அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினர்.  அதேசமயம் விசிக தனது விழா எடுக்கும் முடிவில் உறுதியாக இருந்தனர்.

அடக்குமுறை சாதியினர் தங்கள் திராவிட கொடிகளைக்கூட ( திமுக, அதிமுக) அகற்றிக் கொள்ளும் அளவு விசிக அடையாளத்தையும் அதன் தெரிவுநிலையையும் எதிர்த்தனர். சமத்துவம் என்ற பெயரில் வட்டாட்சியர் விடுதலை சிறுத்தைகளை தங்கள் கோரிக்கையை கைவிட சமாதானம் செய்ய முயன்றார்.

அமித்ஷா கூறும் நாட்டுப்பற்றும் முன்னேற்றமும் – ஹிட்லரை நினைவு படுத்துகிறதா?

இவ்வாறுதான் முக்கிய கட்சிகளின் கருத்தியல் மையம் உள்ளூர் அளவில் செயல்படுகிறது. எங்கெல்லாம் சாதி எதிர்ப்பு கூர்மை அடைகிறதோ அங்கெல்லாம் சாதியுடன் நேரடியாக மோதுவதற்குப் பதிலாக  தங்கள் விஷமத்தனமான கூறுகளுடன் அவர்கள்  சமாதானத்திற்கு முன்வருவர் என்கிறார் என்னுடன் பேசிய ஒரு தலித் பெண்.

முன்னதாக, செப். 4 ம் நாள், விசிக தங்கள் கொடி பேரணியைத் துவங்குமுன், காவல்துறை,  விழாவை நடத்த முயன்றால் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தது. இதில் சட்டவிரோதமானது எதுவும் இல்லை என காவல்துறையினருக்கு நன்றாகத் தெரியும். அதனால் விசிகவினரைத்  தங்கள் நிகழ்ச்சி நிரலை நடத்த விடாமல் தடுக்க அவர்களுக்கு இருந்த ஒரே வழி அவர்கள் தேவையான அனுமதி பெறவில்லை என்று கூறுவது மட்டும் தான். அந்த இடத்தில் பறக்கும் பிற எந்த கொடியும் அந்த அனுமதி எதையும் பெறவில்லை என சுட்டிக் காட்டிய போது, அவர்கள் அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்றி விடுவதாக கூறினர்.

செப்டம்பர் 5 ம் தேதி அதிகாலையில் 20-30 காவலர்கள் கிராமத்தில் இறக்கப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் வருவாய் அதிகாரி அருகானந்தம், ஆய்வாளர் ஜெயராமன், துணை காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் ஆகியோர் அந்த இடத்திற்கு வந்தனர். 40 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட அடக்குமுறை சாதி இந்துக்கள் கற்களுடன், அந்த தளத்திற்கு அருகே கூடி, தலித்துகளை ஏசியும், கொலை மிரட்டல் விடுத்தும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். மணலை வாரி இறைத்து தலித்துகளுக்கு கெடுதல் நடக்க வேண்டும் என சாபமிட்டனர்.

ஏர் இந்தியா – வரலாறும் செயல்பாடுகளும்

இத்தகைய கடினமான சூழ்நிலையில் தலித் பெண்கள், ஒரு சில ஆண்களுடன் சேர்ந்து, ஒரு மிகப்பெரிய, சட்டமிடப்பட்ட அம்பேத்கரின் உருவப்படம் பொருத்தப்பட்ட, நீலம் மற்றும் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட கம்பத்தைத் தூக்கிக் கொண்டு, விழாக் கொண்டாட்டப் பறையின் ஒலிக்கு ஏற்ப சிறுத்தைகளின் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு சேரியிலிருந்து முக்கிய சாலைக்கு ஒரு ஊர்வலத்தை முன்னின்று நடத்தி வந்தனர். காவல்துறையினரைப்  பின்னுக்குத்தள்ளி வேகமாக  அவர்கள் முன்னேறினர். மோதலைத் தவிர்க்க விரும்பிய உள்ளூர் விசிக நிர்வாகிகள் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கவும், பதட்டம் அதிகரிப்பதை தடுக்கவும் தங்களால் இயன்றதனைத்தையும்  செய்தனர். ஒரு சிறிய ஒலிபெருக்கியில் விசிக நிர்வாகி ஒருவர் சமாதானத்தின் அடையாளமாக  சாதி இந்து எதிர்ப்பாளர்களை நோக்கி ஒரு ஆலிவ் கிளையை நீட்டி,” தயவு செய்து வந்து விசிக கொடியை ஏற்றுங்கள். இந்தக் கட்சி அனைவருக்குமானது. எங்கள் தலைவர்கள் எப்போதும் உங்கள் பிரச்சனைகளையும் எடுத்துப் பேசி உள்ளனர். மருத்துவ படிப்பில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிற்காக முதலில் போராடியது நாங்கள்தான். நீங்கள் மனமுவந்து இந்தக் கொடியை ஏற்றினால் அது மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்,” என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் இந்த வேண்டுகோள்கள் செவிமடுக்கப்படவில்லை. அவர்கள் எதிர்ப்பைக் காட்டும் வண்ணம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தலித் செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, மோதல்களைத் தவிர்க்க சேரிக்குப் பின்வாங்கினர். மாலை நான்கு மணியளவில் 10 மரக்கன்றுகளை நட்டு விட்டு கட்சி நிர்வாகிகள் கிராமத்தை விட்டு வெளியேறினர். செப்டம்பர் 6 ம் தேதி வல்லுந்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் விடுதலைச் சிறுத்தைகளின் கொடியை கிழித்து எடுத்துக் கொண்டு போயினர். உடனே தலித் பெண்கள் அந்த இரவிலும் வேறு ஒரு புதிய கொடியை ஏற்றிவிட்டு, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி ஒரு உள்ளிருப்பு போராட்டத்தைத் துவக்கினர். காவல்துறையினர் இரண்டு பேரைக் கைது செய்திருந்தாலும், அவர்கள் மீது எஸ் சி /எஸ் டி பிரிவினர் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்படவில்லை.

‘காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக’ – பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல்

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 7 ம் நாள் துணை ஆட்சியாளர் ஒரு அமைதிக் குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அடக்குமுறை சாதியினரின் பிரதிநிதிகள் (நாயுடு, செட்டியார், வேளாளர்) தங்கள் கொடியை எடுத்துக் கொள்வதற்குக் கூட  முன்வந்தனர். விசிக பிரதிநிதிகள் தங்கள் நிலைபாட்டில் உறுதியாக நின்றனர். செப். 8ல் எந்த கொடி மரத்திற்கும் தேவையான அனுமதிப் பெற வில்லை என்ற பஞ்சாயத்து தலைவரின் அறிவிக்கையின் படி கிராமத்தில் வகுப்பு நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து கட்சியினர் அவரவர் சொந்த கொடிக்கம்பங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றிக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதிகார வர்க்கத்தின் “கொடிகளே கூடாது” என்ற கொள்கையை ஊக்குவிக்கும் வகையில் மறுநாள் திமுக, அதிமுக கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கொடிகள் கம்பங்களை காவல்துறையே பிடுங்க முழு ஒப்புதல் கொடுத்தனர். அதன்மூலம் விசிக தங்கள் கொடியையும், கொடிக்கம்பத்தையும் எடுக்க அழுத்தம் கொடுத்தனர். நடுநிலைமை, சமத்துவம், பொது இடத்தை அரசியலற்றத்தாக்குவது என்ற முகமூடியை அணிந்திருப்பது சாதியின் வேடம்தான். இது தலித்துகளின் ஆர்வங்களை தடுக்கவும், அழிக்கவும் எடுக்கும் முயற்சிதான்.

விராலிப்பட்டி பெண்களை சந்தித்த போது அவர்கள் தங்கள் வீரத்தை மிகவும் எளிதாக சுமந்து நின்றிருந்தனர். ” வேறொரு நாளாக இருந்திருந்தால் காவல்துறையினரைக் கண்டதும் நாங்கள் ஓடியிருப்போம். ஆனால் அந்த நாள் வேறுபட்டிருந்தது. எது வந்தாலும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம்,” என்றனர் அவர்கள். சாதி இந்து பெண்களின் மனப்பான்மையால் மன உறுத்தலுடன் இருந்த போதிலும்,” ஒரே இரவில் எங்கள் நட்பு ஆவியாகி விட்டது. என்று சித்ரா கூற,  எங்கள் பள்ளித் தோழர்கள் எங்களுடன் பேசுவதை நிறுத்தி விட்டனர். பேருந்திலும் கூட,” என்கிறார் அவருடன் சேர்ந்துக் கொண்ட  அவருடைய தோழி லட்சுமி. ” இத்தனை ஆண்டுகாலம் அவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இப்போது அவர்களுடைய உண்மையான இயல்பைக் அறிந்துக் கொண்டோம்,” என்கின்றனர் அவர்கள்.

அவர்களோடு எந்த ஒரு தொடர்பையும் தவிர்ப்பதன் மூலம் அவர்களை மேலும் ஒதுக்கி வைக்க ஒரு புதிய சாதிய கட்டாயம் உருவாகி இருப்பதை அவர்கள் உணர்கின்றனர். ” மற்றொரு  கிராமத்தில் நடந்த சமூக விழாவில் அவர்களை நாங்கள் சந்தித்த போது அவர்களோடு பேச முயற்சித்தோம். ஆனால் அதற்கு அவர்கள் எங்களை தவிர்த்து விட்டனர்,” என்கிறார் சித்ரா. மற்றொரு பெண்,” நாங்கள் அவர்களை எங்கள் எதிரிகளாகப் பார்க்கவில்லை. அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருப்பது போல் அவர்கள் செய்கிறார்கள்,” என்றார்.

அனல் மின் நிலையங்களால் ஏற்படும் பேரிழப்பு – C40 நகரங்கள் அமைப்பின் அறிக்கை

எதிர்பார்த்தது போலவே, ஆளும் வர்க்கத்தினர் மிக வசதியாக ஒன்று சேர்ந்துக் கொள்கின்றனர் என்கிறார் விசிக வின் புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் அம்பேத் கோகுல். ஜனநாயக சக்திகள் இது குறித்து அமைதி காப்பதில் அவர் மனவருத்தமடைந்துள்ளார். ” இது கட்சி பிரச்சனை அல்ல. ஆனால் ஒரு ஜனநாயக உரிமைப் பிரச்சனைகளுள் ஒன்று. முற்போக்குச் சக்திகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் ஏன் உரையாடலோ, விவாதமோ நடக்கவில்லை? இது விவாதத்தை உருவாக்கவில்லை என்றால் நாம் பொது மக்களிடம் மோதல் அல்ல, விவாதிப்பதுதான் முன்னே செல்வதற்கான வழி என்பதை எப்படி ஏற்கச் செய்வது?” என்று கேட்கிறார் அவர்.

தலித்துகளின் ஜனநாயக உரிமைகள் தரையில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் போது, சாதி இந்துக்களின் சினத்தை தணிக்க வடிவமைக்கப்பட்டுள்ள அதிகார வர்க்கம் அதனை செயல்படுத்த ஒரு நொடி பொழுது கூட தயங்காது. அடக்குமுறையாளர்களுடன் முழுவதுமாக ஒருங்கிணைந்துள்ள அது அதை செய்வதில் மனநிறைவுடன் உள்ளது. அத்துடன் தலித்துகள் பொருளாதார, சமூகப் புறக்கணிப்பிற்கு ஆளாகும் போது அது தலையிடாது.

கடந்த சில ஆண்டுகளில் விசிக தன்னை ஒரு அரசியல் கட்சியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பது தலித்துகளுக்கு பிளவுபடுத்துவதையும், பாகுபாடு காட்டுவதையும் எதிர்க்க சிறிது உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. “ஏன் சாதி இந்துக்கள் விசிக வை ஒரு சாதிக் கட்சியாக அல்லது அதன் கொடியை ஒரு சாதியின் கொடியாகப் பார்க்கின்றார்கள்? எங்கள் கட்சியும், எங்கள் தலைவர்களும் தொடர்ந்து பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பிரச்சினைகளை எழுப்புகிறார்கள். இதனால் எதற்காக நாங்கள் எங்கள் கொடியை அகற்ற வேண்டும்? அது அவர்களுடைய கொடியும் கூடத்தான்,” என்பதே பெரும்பாலான தலித்துகளிடம் உள்ள பொதுவான பல்லவியாக உள்ளது. எனினும் பிற கட்சிகள் விசிகவிற்கு ஆதரவாக வெளியே வராததால் விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் பாதிப்பை தாங்களே எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு வகையில், 1950 களில் கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்ட அதே நிலையைதான் தற்போது விசிகவினரும் தமிழ்நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். செங்கொடி நிலப்பிரபுத்துவத்தாலும், சாதி ஏற்றத் தாழ்வான படிநிலையாலும் இகழ்ச்சியாகப் பார்க்கப்பட்டது.

தொழிலாளர் வர்க்கம் தங்களது உரிமைக்காக எழுந்து நின்றனர், ஆளும் சாதி/ வர்க்க கூட்டணியிடமிருந்து  ஒரு அச்சுறுத்தல் நிலவியது. இதனால்தான், இன்று தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடதுசாரிகள் சிறுத்தைகளுடன் தங்கள் ஒற்றுமையை விரிவாக்கிக்  கொள்ளதில் காட்டும் ஆயத்தமின்மை மேற்குறிப்பிட்ட இடதுசாரிகளுக்கு விரும்பத்தக்கதாக உள்ளது. அனைவருக்கும் கவலை தரும் ஒன்றான, ஒரு கட்சிக் கொடியை ஏற்றுவதற்கான உரிமை குறித்த கேள்வியில் முக்கிய கட்சிகள் அமைதியாக இருப்பது மனதை கலங்கச் செய்கிறது.இந்திய ஜனநாயகத்தின் பரிசோதனையில் அதன் இணைப்பு பிரிந்து வருகிறதோ என்ற அச்ச உணர்வுடனே நான் அந்த இடத்தை விட்டு வந்தேன்.

(தனிநபர்களின் அடையாளங்களை பாதுகாக்க அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன)

(www.outlookindia.com இதழில் எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர் மீனா கந்தசாமி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்