Aran Sei

இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்க வேண்டும் – இரா.விக்ரமன்

ந்திய அரசமைப்புச் சட்டம் இந்த நாட்டில் அமலில் உள்ளதா, சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா எனும் அச்சம் எழும் அளவிற்கு அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது இந்திய ஒன்றியத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி. குடியுரிமை திருத்தச் சட்டம், பசுவதை தடைச் சட்டம், லவ் ஜிகாத் சட்டங்கள் மூலம் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக, சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஒடுக்கி வரும் ஒன்றிய அரசு தற்போது விவசாயிகளையும் விட்டுவைக்கவில்லை. தன் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போர் யாராயினும் அவர்களை உயிருடன் விடப்போவதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடக்கும் சமீபத்திய சம்பவங்கள் அதனை உறுதிசெய்கின்றன.

ஒன்றிய அரசின் அமைச்சகங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் எஸ்சி/எஸ்டி பணியிடங்கள் – 4 ஆண்டுகளில் இருமடங்கு உயர்வு

முப்பது விநாடி வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டக்களத்தில் கருப்புக்கொடியுடன் நடந்து செல்லும் விவசாயிகள் கூட்டத்தினுள் பின்னால் இருந்து ‘தார்’ எனும் கருப்பு நிற சொகுசு கார் ஒன்று சீறிப்பாய்கிறது. ஜேசிபி எந்திரத்தைக் கொண்டு செடி கொடிகளை கொத்தி வாரித் தூக்கி எறிவது போல் இரத்தமும், சதையுமாக கண் முன்னே நடமாடிக்கொண்டிருந்த, தங்கள் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருந்த விவசாயிகளைத் தூக்கி எறிந்துவிட்டு போகிறது.

அந்தக்காரில் அமர்ந்திருந்தவர் சமீபத்தில் ஒன்றிய அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராக புதிதாக சேர்க்கப்பட்ட பாஜக மக்களவை உறுப்பினர் அஜய் மிஷ்ராவும், அவரின் அருமை மகன் ஆஷிஷ் மிஷ்ராவும். அஜய் மிஷ்ரா மீது 17 ஆண்டுகளுக்கும் மேலாக கொலை வழக்கு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆக கொலை செய்வதில் முன்னனுபவம் கொண்ட இவரும், இவர் மகனும் அந்தக் காரில் இருந்தபடி சகட்டுமேனிக்கு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதைப் படம்பிடித்த பத்திரிகையாளர் ஒருவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இது முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதும் இந்தத் தருணம் வரை அதாவது மூன்று நாட்கள் கடந்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அமைச்சர் பொறுப்பில் இருந்து அஜய் மிஷ்ராவும் இன்னும் நீக்கப்படவில்லை. நாட்டின் சட்டம் ஒழுங்கு தன் தந்தை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் உள்துறை வசம் இருப்பதால், கைது மட்டுமல்ல, விசாரணையிலிருந்தும் கூட தப்பி விட்டார் ஆஷிஷ்.

லக்கிம்பூர் வன்முறை: இருவர் கைது; ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஜராக காவல்துறை சம்மன்

மாறாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லப்போகும் எதிர்க்கட்சியினர், அம்மாநிலத்திற்குள் நுழைய முடியாமல் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ஐ காரணம் காட்டி இந்தத் தடையை போட்டுள்ளது ஒன்றிய அரசின், அடியாள் அரசான உபி யோகி ஆதித்யனாத் அரசு. இந்தத் தடைச்சட்டம் அமலில் இருந்தால் நான்கு பேருக்கு மேல் கூட்டமாக செல்லக்கூடாது. ஆனால் காங்கிரசு கட்சியின் பிரியங்கா காந்தி தனியாளாக செல்வதையும் கூட தடுத்து, அவரைக் கைதும் செய்தது உபி அரசு, சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் கூட லக்னோ விமான நிலையத்தில் இருந்து வெளியே போக முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டார்.

லக்கிம்பூர் வன்முறை: ‘உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கோருவது இழப்பீட்டை அல்ல நீதியை’- பிரியங்கா காந்தி

கிரிக்கெட் வீரர்களின் கால் முட்டியில் காயம் என்றாலே பதறிப்போய் ஆறுதல் சொல்லும் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. தன் அமைச்சரவை சகாவையும் பதவி நீக்கம் செய்யவில்லை. இது தான் இராம இராஜ்ஜியம். இராம பக்தர்களின் பண்பாடு இது தான். ஜனநாயகத்தின் பாதுகாவலாக இருக்கும் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்து உபி அரசை அறிக்கை தாக்கல் செய்ய சொல்லியிருக்கிறது. வழக்கமான கண்துடைப்பு சடங்கு இது. ‘வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது விவசாயிகள் போராடலாமா?’, என கேட்ட நீதிமன்றம் தான் அது. பீமா கொரேகான் கைதுகள், ஸ்டான் சுவாமி, ரோகிங்கியா. கொட்டடிச் சித்ரவதைகள், ஷாகின்பாக். ஜே.என்.யூ போராட்டங்கள், தேச துரோக வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. நாட்டின் உயரிய ஜனநாயக அமைப்புகள் தேர்தல் ஆணையம் உட்பட அனைத்தும் பாசிச சக்திகளின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு கிடக்கும் இந்தச் சூழலில் சர்வாதிகாரம் எனும் பாதாளத்தை நோக்கி விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜனநாயக விழுமியங்களை மொத்தமாக மீட்கும் காலம் வந்துவிட்டது.

கட்டுரையாளர்: இரா. விக்ரமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்