Aran Sei

டெல்லி வன்முறை : இசுலாமியர்களுக்கு எதிராக போலீஸ் பாரபட்சம்

புகார்கள் விசாரிக்கப்படாமலே போவதால், டெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் காவல்துறை ஒரு சார்பாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டுகின்றனர். டெல்லி கலவரத்தில் காவல்துறை கலவரக்காரர்களுக்கு உடந்தையாக இருந்தது குறித்த புகார்களை கையாளும் விதமும், அதுபற்றிய புகார்களை நீதிமன்றங்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி காவல்துறையின் நடத்தைக்கு சான்று கூறும் புகார்கள்:

ஒரு மசூதி தாக்கப்பட்ட போது

அந்த மாலை நேர கொடூர நிகழ்ச்சிகளை குர்ஷித் சஃபியால் மறக்கவே முடியவில்லை. “என் கண்ணை மூடினால் அந்த ஒட்டு மொத்த கொடூரங்களும் திரைப்படம் போல் மனதில் ஓடுகின்றன‌.. நடு இரவில் திடீரென விழிப்பு வந்து விடுகிறது.. இதயம் படபடக்கிறது. உடல் முழுதும் வேர்வையில் நனைந்து போகிறது.“ என்கிறார் குர்ஷித்.

அந்தத் தாக்குதல் பிப்ரவரி 25-ம் நாள் மாலை 6:30 மணிக்கு நடந்தது. குர்ஷித் இதை நேரில் பார்த்தவர் மட்டுமல்ல, அந்தத் தாக்குதலுக்கு இரையாகி ஒரு கண்ணையே இழந்ததோடு தலையில் பல தையல்கள் போடப்பட்டுள்ளன.

“நான் மோகன் நகரிலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். எனது பகுதியில் கலவரம் நடப்பது பற்றி அறியாமலே உள்ளே போய் விட்டேன். எனினும் கலவரக்காரர்களிடமிருந்து தப்பித்து அருகில் இருந்த மசூதிக்குள் புகுந்து விட்டேன். ஆனால் கலவரக்காரர்கள் மசூதிக்குள் புகுந்து என்னிடம் அடையாள அட்டையைக் காட்டச் சொன்னார்கள். அவர்கள் காவல் துறையினர் அல்ல. ஆனால் துணை ராணுவச் சீருடை அணிந்திருந்தனர். என் அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு நான் முஸ்லீம் என தெரிந்ததும் என்னை கண்டபடி அடிக்க ஆரம்பித்தனர்.” என்கிறார் குர்ஷித்‌.

குர்ஷித்தால் அவர்களை அடையாளம் காட்ட முடியும் என்றாலும் அவர்கள் சீருடை அணிந்திருந்ததால் காவல் நிலையம் செல்லவே அஞ்சுகிறார். “இனி என்றைக்கும் சீருடை அணிந்தவர்கள் மீது எனக்கு நம்பிக்கை வராது “ என்கிறார் அவர்.

கலவரம் நடந்து முடிந்த அடுத்த இரு வாரங்களில் முஸ்தபா பாத், சந்த்பாக் மற்றும் கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்த இளைஞர்களை டெல்லி சிறப்பு காவல் பிரிவினர் கைது செய்ய ஆரம்பித்தனர். இப்படி தெரு முனைகளிலும், வீடுகளிலும் திடீரென புகுந்து கைது செய்வதை அறிந்த மக்கள் மேலும் பீதி அடைந்தனர். அதோடு காவல் நிலையத்தில் புகார் செய்பவர்களை காவல் துறை கைது செய்து சித்திரவதை செய்வதாக வதந்தியும் பரவியது. இதனால் குர்ஷித் வீட்டுக்குள்ளேயே கிடந்தார். உதவி கேட்டு வெளியே வரவும் அஞ்சினார். இறுதியாக சில வழக்கறிஞர்கள் குழு அவருக்கு தைரியம் கொடுத்ததால் அவர் காவல் துறையில் புகார் அளிக்க ஒப்புக் கொண்டார்.

20 நாட்களுக்குப் பிறகு மார்ச் 15-ம் நாள் குர்ஷித் இத்கா நிவாரண முகாமிலிருந்த காவல்நிலைய உதவி மையத்தில் புகார் செய்தார். இந்த புகார் வடகிழக்கு டெல்லி தயால்பூர் காவல் நிலைய முத்திரையுடன் டயரி குறிப்பு எண் 61 ஆக பதிவாகி உள்ளது. தனது புகாரில் குர்ஷித் பிரிஜ்பூரைச் சேர்ந்த மூன்று பேரை அடையாளம் காட்டினார். ராகுல் வர்மா, அருண் பசோயா, சாவ்லா ஆகியோர் அந்த கும்பலோடு சேர்ந்து தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

“அந்தப் பகுதியில் அப்போது நிறைய பெண்களும் இருந்ததனர். கலகக்காரர்கள் மரத்தடிகளையும், வாட்களையும், இரும்பு கம்பிகளையும், பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வைத்திருந்தனர். பெண்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கற்களை வீசினர். அப்போது ராகுல் வர்மாவும் அருண் பசோயாவும் கூடாரத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால் மக்கள் சிதறி ஓடினர். நான் அப்போது மசூதியின் வாயிலில் நின்றிருந்தேன். நீல நிறச் சீருடை அணிந்திருந்தவர்கள் கலவரக்காரர்களுடன் சேர்ந்து மசூதிக்குள் புகுந்து, உள்ளே பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தவர்களைத் தாக்கினர். அங்கிருந்து தப்பி ஓடி வந்தவர்களை சாலையிலிருந்த காவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அருண் பசோயா மசூதிக்குள் அலமாரியில் இருந்த புனித குரான் மீது பெட்ரோல் குண்டை வீசினான்.

“இவற்றைத்தானே நீங்கள் மிக உயர்வாக கருதுகிறீர்கள். எப்படி அவற்றை தீக்கிரையாக்குகிறோம் பாருங்கள்“ என்று கூறிக் கொண்டே மீண்டும் ஒரு குண்டை வீசி அனைத்தையும் தீக்கிரையாக்கினான். பின் தன் நண்பர்களைப் பார்த்து,”மௌல்வியை கொல்லுங்கள். அவன் நண்பர்களையும் கொல்லுங்கள்‌ இந்த இடத்தில் ஒரு கோவிலை எழுப்புவோம் என்று கத்தினான்.

அதன்பின் அவர்கள் மௌல்வியையும், முசின் சாகிப்பையும் இரும்புத் தடிகளால் தாக்கினார்கள். அவர்களைக் காப்பாற்ற நான் முன்னே சென்ற போது ராகுல் வர்மா என்னை இரும்புத்தடியால் தாக்கினான். அடி என் கண்ணில் பட்டது.. அடுத்த அடி என் தலைமீது விழுந்தது‌ . நான் கீழே விழுந்து விட்டேன். அதற்குப் பின்னும் என்னைத் தாக்கினார்கள். நான் எப்படியோ தப்பித்து ஓடி வந்து விட்டேன்.” என்கிறார் அவர்.

குர்ஷித்தின் புகார் மார்ச் 15-ம் தேதி பெறப்பட்டுள்ளது. முதலில் புகாரை ஏற்க மறுத்ததாகவும் அவர் கூறுகிறார். டெல்லி போலீஸ், கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் கொடுக்கும் புகாரை ஏற்க மறுப்பதாக செய்திகள் பரவியதாலும், முஸ்தபாபாத் மக்கள் கொடுத்த அழுத்தத்தாலும் வேறு வழியின்றி ஒரு போலீஸ் உதவி மையம் மார்ச் 7-ம் தேதி இத்கா நிவாரண முகாமில் அமைக்கப்பட்டது. புகார்கள் டயரி குறிப்புகளாகவே பதிவு செய்யப்பட்டன.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த டெல்லி காவல் துறை அதிகாரி, ராந்தவா, ”15/3/20அன்று குர்ஷித்தின் புகார் டயரி எண் 61 மூலம் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் (எண் 64/20) உள்ளது. விசாரணை நடந்து வருகிறது ‌. இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.” என்று கூறுகிறார்.

ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ, புகார் கொடுத்தவர்களுக்கோ இது பற்றி எதுவும் தெரியாது. முதல் தகவல் அறிக்கை நகல் கூட அவர்களுக்குத் தரப்படவில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 154-ன் படி காவல் துறை குற்றம் நடந்ததாக அறிந்தாலே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அதன் நகல் புகார்தாரர்களுக்கு தரப்பட வேண்டும். இதில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படியானால் சட்டப்படி டெல்லி போலீஸ் செய்தது தவறில்லையா?

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் முகமது பராச்சா, ”புகார்தாரர் தரும் உண்மையான தகவல்கள் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்படுவதே இல்லை.. அவர்கள் செயல்கள் யாவும் தங்களையும், ஆர்.எஸ்.எஸ்-காரர்களையும், பா.ஜ.க-வினரையும் காப்பாற்றிக் கொள்ளும் வகையிலேயே தயாரிக்கப்படுகின்றன. கண் துடைப்பாகவே குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதற்காகவே அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதோடு அது பற்றி புகார்தாரர்களுக்கே கூட தெரிவிக்காமல் உள்ளனர். ஊடகங்களுக்குக் கூட அந்த முதல் தகவல் அறிக்கையை தரவில்லை.

குர்ஷித் தனது புகாரில் கொலை, கொலை முயற்சி, மத அடிப்படையில் தாக்குதல், சீருடை அணிந்த நபர்கள் செய்த கொலை, புனித நூல்களை எரித்தது, மதவாத அடிப்படையில் பேசி கலவரத்தை தூண்டுதல், குற்றத்தில் ஈடுபட்ட குறிப்பிட்ட நன்கு அறிந்த நபர்கள் ஆகிய அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் போலீஸ் தயாரித்த முதல் தகவல் அறிக்கையில் இந்த எந்தக் குற்றமும் காட்டப்படவே இல்லை.

மாறாக, அதில் கலவரம் செய்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு ஊழியர் மீது தாக்குதல், வெறும் 50 ரூபாய் அளவிற்கான பொருட் சேதம் விளைவித்தல், மத வழிபாட்டுத் தலங்களின் மீது தாக்குதல், தீவைத்தல், தன்னை தாக்குதல்களிலிருந்து தற்காத்து கொள்ளத் தாக்குவது என்பதன்றி வேண்டுமென்றே ஒருவரைத் தாக்குவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை. “இதைவிட கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியாது. இதில் எங்களுக்கு ஆச்சரியம் இல்லை. ஏனெனில் போலீஸ் திட்டமிட்டே புகார்களை திசை திருப்பவே முயற்சிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும். “ என்கிறார்.

புகார் எண்: 2

குர்ஷித்தின் புகார்களை உண்மையென சான்று கூறும் புகார் எண் 2

புது முஸ்தபாபாத்தில் வசிக்கும் குல்ஃபாம் தன் கண்முன்னே தனது 24 வயது சகோதரன் அந்த மாலை நேரத்தில் மசூதிக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அளித்த புகார் டயரி குறிப்பு 60-ல் மார்ச் 15-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த புகாரில் அவர், “ பிப்ரவரி 25-ம் நாள் என்னைப் பார்க்க என் சகோதரன் ஜாகீர் வந்திருந்தான். மாலை 6 மணிக்கு என் வீட்டிற்கு எதிரே உள்ள மசூதிக்கு தொழுகைக்காகச் சென்றான். திடீரென தெருவில் பெருங் கூச்சல் கேட்டது. நான் வெளியில் வந்து பார்த்த போது ‘ கபில் மிஸ்ரா வாழ்க! ‘கட்டுவா’ (katue- இஸ்லாமியர்களின் சுன்னத் முறையை வைத்து அவர்களை திட்டுவதற்கு பயன்படுத்தும் கெட்டவார்த்தை) ஒழிக! ஜகதீஷ் ப்ரதான் வாழ்க! இதோ இந்த மசூதிக்கு தீவைப்போம். ஒருவரையும் தப்பிக்க விடாதீர்கள்” என்று கத்திக் கொண்டே வந்தனர்.

அந்த கும்பலில் ஜகதீஷ் ப்ரதானுடன் சுற்றும் அவனது நண்பர்கள் இருந்தனர். அவர்கள் கையில் குண்டாந்தடிகள், கூரான இரும்புத் தடிகள், வாள்கள், திரிசூலங்கள், போன்றவற்றை வைத்திருந்தனர். அவர்களோடு நிறைய காவலர்களும் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் கைகளில் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்தனர். அந்த சமயத்தில் என் சகோதரன் மசூதியை விட்டு வெளியே வந்து, எங்களை நோக்கி ஓடிவந்தான். ‌ நான் நன்றாகப் பார்த்தேன். சீருடையில் இருந்த காவலர்களில் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்த ஒருவன் என் சகோதரனை நோக்கிச் சுட்டான். குண்டு என் சகோதரனின் பின் தலையை துளைத்தது. என் சகோதரன் என் கண் முன்னாலேயே கீழே விழுந்து இறந்தான். “ என்கிறார் கண்ணில் நீர் பெருக.

“ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த கலவரத்தில் சீருடை அணிந்தவர்களும், அந்தக் குண்டர்களுடன் சேர்ந்து முஸ்லீம்களை தாக்கிக் கொன்றனர். அவர்கள் நாலாபுறமும் கண்மூடித்தனமாக சுட்டனர். பின் அவர்கள் மசூதிக்குள் புகுந்து தொழுகை செய்து கொண்டு இருந்தவர்களை தாக்கினர்‌ . தப்பி ஓடி வந்தவர்களை வெளியே சீருடையில் இருந்தவர்கள் சுட்டனர்.. இறந்தவர்களை துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசினர். இறந்து கிடந்த என் சகோதரனின் உடலைக் கூட ஒருவன் இரும்பு கம்பியால் குத்தி தூக்கிக் கொண்டு. வந்தான். கூடவே வந்த காவலர்கள், “இந்த முஸ்லீம்களுக்கு விடுதலை கொடுங்கள்” என்று கூவினர். அவர்கள் மசூதிக்குள் புகுந்து, தாக்கி, தீ வைத்தனர் அவர்களை நிச்சயம் நேரில் கண்டால் அடையாளம் காட்ட முடியும்” என்கிறார் குல்ஃபாம்

குல்ஃபாம் தான் நேரில் கண்ட தன் சகோதரன் ஜாகீரின் கொலை பற்றியும், நடந்த வன்முறை குறித்தும் புகாரளித்து நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. இதுவரை அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல் துறை முதல் தகவல் அறிக்கை 77/20 ஜாகீர் மரணம் பற்றி கூறுகிறது. ஆனால் இது குறித்து எந்த தகவலும் புகார்தாரருக்கே தெரிவிக்கப்படவில்லை. ‌ நீதிமன்றத்தில் அது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் மூலம்தான் அவர்களும் அவர்களது வழக்கறிஞர்களும் தெரிந்து கொண்டுள்ளனர். ஒருசில டெல்லி காவல்துறை அதிகாரிகள்தான் இந்த முஸ்லீம்கள் மற்றும் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை திட்டமிட்டு நடத்திய குற்றவாளிகள். அவர்கள் தங்கள் எசமானர்களான மத்திய உள்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்காக இவற்றைச் செய்கின்றனர். எனவே இவர்களிடம் நேர்மையான விசாரணை நடக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும் என்கிறார் பராச்சா. இது அவர்கள் இந்த வழக்கில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட புகார்தாரர்களிடமிருந்து மறைப்பதிலிருந்தே தெளிவாக புரிகிறது.

துப்பாக்கியால் சுட்ட அந்த சீருடை காவலர்கள் யார் என்பதே இன்று மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. ஏனெனில், இந்தத் தாக்குதல் நடந்ததற்கு மறுநாள் அதாவது பிப்ரவரி 26-ம் தேதி மத்திய உள்துறை செயலாளர் அஜித் தோவல் நேரில் வந்து கலவரப் பகுதிகளை பார்த்துவிட்டு சென்ற பிறகே மத்திய துணை ராணுவப்படை இங்கு வந்துள்ளது. அப்படியானால் அதே சீருடையில் முன்தினம் இருந்தது யார் என்பது யாருக்குத்தான் தெரியாது?

அதுமட்டுமல்ல பிப்ரவரி 26 அன்று வடகிழக்கு டெல்லியில் கலவரம் தீவிரமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது, கலவரத்தை அடக்க இராணுவ சீருடை அணிந்த காவலர்களை பயன்படுத்துவதற்கு பாதுகாப்புத்துறை உள்துறையிடம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் இராணுவத்தினர் அத்தகைய சீருடைகளை அணிய மாட்டார்கள். ஆனால் உள்துறை அமைச்சகம் தொடர்ந்து உள்ளூர் காவல் துறையினரை அத்தகைய உடை அணிந்து பணியாற்றச் செய்வது குறித்து பலமுறை பாதுகாப்பு த்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதி உள்ளது‌. (இந்தியன் எக்ஸ்பிரஸ்)

“நாட்டு நிலவரங்களை தேசிய ஊடகங்களும், உலக ஊடகங்களும் மக்களுக்கு காட்டும் போது உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்தைப் பயன்படுத்துவதை இராணுவம் விரும்பவில்லை” என்று கூறும் இராணுவத் துறை, “இராணுவச் சீருடையில் துணை ராணுவ ப்படையையும் , காவல் துறையையும் பயன்படுத்துவது தேர்தல், உள்நாட்டு பாதுகாப்பிற்கென இராணுவம் பயன்படுத்தப்படுவதாக தவறாக புரிந்து கொள்ள நேரிடும். இது நாட்டு நலனுக்கும், ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல” என்று கூறும் இராணுவத்துறை இது குறித்து தொடர்ந்து பல கடிதங்களை உள்துறைக்கு எழுதி உள்ளதாகவும் கூறுகிறது.

கலவரம் குறித்த முதல் தகவல் அறிக்கை குறித்து டெல்லி காவல் அதிகாரி ராந்தவாவிடம் கேட்ட போது, ”பெறப்பட்ட புகாரைக் கொண்டு அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பெறப்படும் புகார்களூம் அதில் சேர்க்கப்படுகின்றன. காவல்துறை அத்துமீறல் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. அது பாகுபாடு இன்றி, நேர்மையாக, வெளிப்படையாக , தொழில்முறை நேர்த்தியுடன் நடந்து வருகிறது. சட்டப்படி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என வழக்கமான பதிலை கொடுத்தார்.

புகார் எண்:3

மார்ச் 13-ல் ஷகீல் அகமது பதிவு செய்த புகாரின் விவரங்கள்

பிப்ரவர் 24-ம் நாள் காலை பத்து மணிக்கு எனது அண்டை வீட்டுக்காரர் ராகேஷ் சர்மா தயால்பூர் காவல் நிலைய அதிகாரி மற்றும் இரண்டு காவலரகளுடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். காவல் அதிகாரி எங்களிடம் தற்போது நகரின் நிலைமை மோசமாகி இருப்பதால் உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும் என கூறினார். நாங்கள் அவர்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்தோம். பின் துப்பாக்கியையும், குண்டுகளையும் அவரிடம் கொடுத்தோம். நிலைமை சீரடைந்த பின் காவல் நிலையத்தில் வந்து துப்பாக்கியைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். நாங்கள் அதற்கு ஒப்புதல் சீட்டு தருமாறு கேட்டதற்கு அதை பிறகு அனுப்பி வைப்பதாகக் கூறிவிட்டு சென்று விட்டார்.

“அதே நாள் 2 மணிக்கு ‘ ப்ரதான் வாழ்க’,’ ஜெய் ஸ்ரீ ராம்’, ‘தேச விரோதிகளை சுட்டுத்தள்ளுங்கள்’ என்ற முழக்கங்கள் கேட்டன. நாங்கள் வெளியில் வந்து பார்த்த போது எங்கள் வீட்டிற்கு வந்த காவலர்களுடன் ராகேஷ் சர்மா, அனில் சவுகான், தீபக் விஷ்ணு மற்றும் அவர்களின் நண்பர்கள் பலரும் கையில் கைத்தடி, இரும்பு தடிகள், திரிசூலங்கள் பெட்ரோல் குண்டுகள் ஆகியவற்றுடன் வந்து கொண்டிருந்தனர். உடனே கடைக்காரர்கள் எல்லாம் தங்கள் கடைகளை மூடினர். நாங்களும் எங்கள் கடையை மூடிவிட்டு மாடியில் உள்ள எங்கள் வீட்டிற்கு போய் விட்டோம்.

அந்தக் கும்பல் கூச்சலிட்டுக் கொண்டே கண்ணில் கண்ட முஸ்லீம்களை எல்லாம் தாக்கினர். . அவர்கள் எங்கள் கடையின் கதவைத் திறந்து அடித்து நொறுக்கினர். நானும் என் குடும்பத்தாரும் எங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினோம். அவர்கள் எங்களைச் பார்த்து, ”கட்டுவா (கெட்டவார்த்தை) உங்கள் ஒருவரையும் இங்கே வாழ விட மாட்டோம்.” என்று கத்தினர். ராகேஷ் சர்மா எங்களைப் பார்த்து சுட ஆரம்பித்தான்‌. நாங்கள் வீட்டிற்குளே போய் ஒளிந்து கொண்டோம். அவர்கள் கடையில் உள்ளவற்றை அடித்து நொறுக்கி விட்டு கல்லாவில் இருந்த 25-30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து விட்டு வெளியேறினர்.

மறுநாள் நானும் எனது தந்தையும் காவல் நிலையம் சென்று புகார் அளிக்கலாம் எனச் சென்ற போது, அனுராக், சத்யபாலின் மகன் சச்சின், ஷீப்பா, அமர்சிங், அவரது மகன் லாலா, தீபக், அனில் சவுகானின் மகன் தெபு, ராகேஷ் சர்மா மற்றும் அவர்களின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக எங்கள் வீட்டில் நுழைந்து, என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து, “நீ சென்ற சட்டமன்ற தேர்தலின் போது ஜகதீஷ் ப்ரதானுக்கு எதிராக நிறைய பேசி விட்டாய். உன்னை இன்று முடித்து விடுகிறோம்.” என்று மிரட்டினான். என் அம்மாவும், அண்ணியும் என்னை விட்டு விடுமாறு கெஞ்சினர்.

தெபுவும், லாலாவும் அவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டினர். அவர்களின் நண்பர்கள் மாடிக்குச் சென்று எங்கள் மூதாதையர்களின் நகைகள் மற்றும் எங்கள் நகைகளையும் 4 லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்து ஒரு பையில் போட்டுக்கொண்டு புகார் செய்தால் எங்கள் வீட்டை கொளுத்தி எங்களையும் உயிரோடு கொளுத்தி விடுவோம் என மிரட்டவிட்டு சென்று விட்டனர்.

நாங்கள் தடுத்தும் எங்கள் தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்ய என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் காவல் நிலையத்தில் முதல் நாள் நடந்தவற்றை அப்படியே கூறி எங்களுக்கு சுமார் 65லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டு விட்டதாகவும் அவற்றை மீட்டுத் தருமாறும் கேட்டுக் கொண்டோம். புகாரை பதிவு செய்து கொள்ள கூறினோம். ஆனால் அந்த அதிகாரியோ, “உங்களை உயிரோடு விட்டு விட்டதற்காக நன்றி சொல்லுங்கள்.. பொருளை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். உங்களிடம் கொள்ளை அடித்தவர்கள் ஜகதீஷ் ப்ரதான் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள். அவர்கள் மீது புகார் கொடுத்தால் நீங்கள் கொல்லப்படுவீர்கள்.“ என்று எகத்தாளமாக கூறினார்.

“எங்களுக்கு இந்த பொருட்கள் போனதே நாங்கள் இறந்ததற்கு சமம். எங்களுக்கு எங்கள் பொருளை மீட்டுத் தாருங்கள்” எனக் கெஞ்சினோம். அதற்கு, ‘வேண்டுமானால் தான் ஜகதீஷ்ப்ரதானுடன் பேசுவதாக‘ கூறினார். இதற்கு என் தந்தை மறுப்பு தெரிவிக்கவே அந்த அதிகாரி கோபத்துடன், “உங்கள் மீது பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவேன்.” என மிரட்டினார். இதற்குப் பிறகும் தினமும் என் தந்தை காவல் நிலையம் சென்று பொருளை மீட்டுத் தருமாறு கேட்டார்.

ஒரு வாரம் கழித்து அந்த அதிகாரி, “உங்கள் மகன் மீது முதல் தகவல் அறிக்கைப் போடப்பட்டுள்ளது. இனி உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது” எனக் கூறினார். அங்கிருந்த அனுஜ் என்ற அதிகாரியோ, “இரண்டு லட்ச ரூபாய் தந்தால் உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்” என்று எங்களை மிரட்டினான். மார்ச் 12-ம் தேதி என் சகோதரனை கைது செய்து மோசமாக சித்திரவதை செய்து பணம் கேட்டு மிரட்டியது காவல் துறை.”

பின் மார்ச் 15-ம் தேதி பதியப்பட்ட புகாருக்கு இன்றுவரை முதல் தகவல் அறிக்கை போடவில்லை‌. இதுபற்றி ராந்தவாவிடம் கேட்டபோது, ‘அந்த புகார்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்றவை. வேண்டுமென்றே கூறப்பட்டவை, ஷகீல் கொடுத்த புகாரை தீர விசாரித்ததில் அதில் உள்ள அத்தனையும் உண்மையற்றவை” எனத் தெரிவதாகக் கூறுகிறார். ”23 நாட்கள் கழித்து புகார் தருவது போலீசுக்கு அழுத்தம் தருவதற்காகவே. ஏதாவது ஒரு வகையில் உடனே புகார் அளித்திருக்க வேண்டும். குல்ஃபாம் கைதுக்குப் பிறகே 10/3/20 அன்று புகார் தரப்பட்டுள்ளது” எனத் திமிராக பதில் தருகிறார்.

காஜூரி காஸ் என்ற டெல்லி காவல் துறை அதிகாரி, ”கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை, காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க திரித்து எழுதப்பட்டவை. நாங்கள் பாகுபாடு இன்றி நேர்மையாகத்தான் விசாரணை மேற்கொள்கிறோம். “ என அப்பட்டமாக புளுகுகிறார். போலீசின் இந்த கூற்றே குற்றவியல் சட்டம் 154-ஐ மீறியதாகும் என்கிறார் வழக்கறிஞர்.

இது மட்டுமல்ல காவல் துறையின் இந்த வாதம் முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் வேலையாகும். புகார் அளிப்பவர் முஸ்லீமாக இருந்தால் புகாரைப் பெறவே மறுப்பதும், புகார்கள் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வினருக்கு எதிரானதென்றால் புகார் கொடுப்பவர் மீதே பொய்வழக்கு போடுவேன் என மிரட்டுவதும், இந்த ஒரு சில வழக்குகளில் மட்டுமல்ல நூற்றுக்கணக்கான வழக்குகளிலும் இதுதான் நடந்துள்ளது. தற்போது பெறப்பட்டுள்ள புகார்களும் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டத்தாலும் மக்களின் அழுத்தத்தாலும், மார்ச் மாதத்தில்தான் பெறப்பட்டுள்ளன‌.

இன்னும் ஒருபடி மேலே போய் பாதிக்கப்பட்டவர்களை கட்டாயப்படுத்தி புகார்களை கொடுக்க வைப்பதாக காவல்துறை கதை கட்டுவதாக வழக்கறிஞர் மிஷ்கின் சிங் கூறுகிறார். மக்கள் புகார் அளித்தால் அதை வெளியில் உள்ள அட்டைப் பெட்டியில் போட்டுவிட்டுப் போங்கள் என்று கூறும் அளவு போலீசின் ஆணவம் உள்ளது. புகார் ஆங்கிலத்தில் இருந்தால் இந்தியில் எழுதி வரும்படி சொல்வதும், இந்தியில் எழுதிக் கொடுத்தால் தெளிவாக இல்லை என திருப்பி அனுப்புவதும், மீறி பெறப்படும் புகார்களுக்கு ஒப்புதல் சீட்டு எதுவும் தரமுடியாது எனக் கூறுவதும் காவல்துறையின் சீர்கேட்டினை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.

“இதுவரை ஒரு புகார் கூட தனிப்பட்ட தகவல் அறிக்கையாக மாற்றப் படவில்லை. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் தனித்தனி விவரங்களாக குறிக்கப்படவில்லை. ஒரு பகுதி முழுவதையும் எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்த நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஒரு முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு புதிய புகார்கள் அதன் பின்னிணைப்பாக சேர்க்கப்படுகின்றன” என்கிறார் வழக்கறிஞர் மிஷ்கின் சிங்.
காவல் துறை முஸ்லீம் புகார்தாரர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதியை அரங்கேற்றி வருவதாக கூறும் வழக்கறிஞர் பராச்சா, புகார் தருவதே இயலாத காரியமாக உள்ளது. அதுவும் நீங்கள் முஸ்லீமாக இருந்து, புகார் ஆர்.எஸ்.எஸ் அல்லது பா.ஜ.க அல்லது காவல் துறைக்கு எதிரானது என்றால் ஒன்று மிரட்டப்படுவீர்கள் அல்லது திருப்பி அனுப்பப்படுவீர்கள் அல்லது பொய்வழக்கில் கைதாவீர்கள்..

சீமி பாஷா, தனி நிருபர்

நன்றி : https://thewire.in/
மொழியாக்கம் : நாராயணன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்