Aran Sei

தில்லி கலவரம்: வெற்றுத் தாளில் கையொப்பம் வாங்கிக் கொண்டு 16 மாதங்களாக சிறை வைக்கப்பட்ட இஸ்லாமியர்

டகிழக்கு டெல்லியின் கஜூரிகாஸ் பகுதியைச் சேர்ந்த ஃபர்மான் தன் குடும்பத்துடன் அமர்ந்து தனது நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார். 22 வயதான அவர், கடினமாக வேலை செய்து, பணம் சம்பாதித்து ஆறு பேர் கொண்ட தனது குடும்பத்தைக் காப்பாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.

கடந்த காலத்தை, குறிப்பாக கடந்த 16 மாதங்களை அவர் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. அந்த மாதங்கள் அதிர்ச்சியானவை. ஏனெனில் மற்ற இஸ்லாமிய இளைஞர்களைப் போலவே ஃபர்மானும் 2020, பிப்ரவரி கலவரத்தை ஒட்டி வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தற்போது மண்டோலி சிறையிலிருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

கடந்த மார்ச்சு மாதம் கஜுரிகாஸை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பாபுகான் என்பவரை கொலை செய்தது தொடர்பாக ஃபர்மானை காவல் துறை கைது செய்தது. 2020, பிப்ரவரி 25 ல் கஜூரி காஸில் ஒரு கும்பலால் அவர் படுகொலை செய்யப்பட்டார். டெல்லி கலவரத்தில் இறந்த 53 பேரில் பாபுகானும் ஒருவர். இதில் நூற்றுக்கணக்கான வர்கள் காயமுற்றனர். ஆனால் மார்ச் 20 அன்று இரவு தன்வீட்டில் வைத்துக் காவல்துறை தன்னைக் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது அவருக்கு எதற்காக தான் கைது செய்யப் பட்டிருக்கிறோம் என்பது பற்றிக் கூட எதுவும் தெரியாது.

“நான் எனது குடும்பத்துடன் இருந்தபோது திடீரெனக் காவலர்கள் உள்ளே  நுழைந்து கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என் பெயரை கேட்டதும் என்னை அழைத்துக் கொண்டு ‌அருகில் உள்ள காவல் நிலையம் சென்றனர். அன்றிரவு முழுவதும் என்னை அங்கேயே காக்க வைத்துவிட்டு,  மறுநாள் காலை என்னை மண்டோலி சிறைக்கு மாற்றி விட்டனர்,” என்கிறார் அவர். சிறைச்சாலைக்குள் சென்ற பிறகு தான் பாபுகானை கொலை செய்தவர்களில் ஒருவராகத் தன் பெயர் இருப்பதே அவருக்குத் தெரியும்.

‘நூற்றாண்டுகளாக நாம் கட்டியெழுப்பியதை, சில நொடிகளில் அழிக்கப்பட்டது’ – மோடி அரசு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

“அவர்கள் காவல் நிலையத்தில் என்னிடம் ஒரு வெற்றுத் தாளில் ‌கையெழுத்து வாங்கிக் கொண்டு மண்டோலி ‌சிறைக்கு வரும்வரை என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அங்குதான் என்னிடம்‌ குற்றப்பத்திரிகைப் பற்றியும், என்மீதான குற்றம் பற்றியும் ‌கூறினார்கள்,” என்கிறார் ஃபர்மான்.

ஒரு பொய் வழக்கு

தி வயர் பெற்ற 119/20 என எண்ணிடப்பட்ட குற்றப் பத்திரிகையைப் பார்த்ததில் அதில் ஃபர்மான் உள்ளிட்ட இந்து, முஸ்லீம் வகுப்புகளைச் சேர்ந்த 18 பேர் மீது பாபுகானை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்ப்பட்டிருந்தது. இவர்கள் ஒவ்வொருவர் மீதும் கொலை, கலவரம் செய்தல், பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துதல், மற்றும் பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது ஆகியவை தொடர்பாக இந்திய குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்செயலாக, இறந்து போன பாபு கானின் பெயரும்கூட  குற்றப்பத்திரிகையில் இருந்தது. அவர் கொலை தவிர மற்றவர்கள் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன. பாபுகான் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி டெல்லி காவல்துறையிடம் தி வயர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ஃபர்மான் தன்னை இந்தக் கொலை வழக்கில் வேண்டுமென்றே சேர்த்திருப்பதாகவும், குற்றப்பத்திரிகையில் உள்ள எந்தக் குற்றத்துடனும் தனக்கு தொடர்பில்லை என்று கூறுகிறார். “கலவரம் நடந்த போது நான் வீட்டில் இருந்தேன். அன்று என்ன நடந்தது என்பதே எனக்குத் தெரியாது. காவல்துறை என் பெயரை தவறான வழக்கில் சேர்த்ததால் இத்தனை நீண்ட காலம் நான் சிறையில் கழிக்க வேண்டியதாயிற்று,” என்று கூறுகிறார்.

கண்காணிப்பின் அரசியல் – அமேசானும் தொழிலாளர் பிரச்சினையும்

சாட்சிகளின் அறிக்கை இல்லாமல் கைது

ஃபர்மானுக்கு ஜூன் 22 ம் தேதி கர்கர்டூமா மாவட்ட நீதிமன்றம் பிணை விடுதலை அளித்தது. ஆனால் பிணைத் தொகையான 20,000 ரூபாயை  கட்ட சில நாட்கள் எடுத்துக் கொண்டதால் ஜூலை 5 ம் தேதிதான் அவர் விடுதலையானார். அவரது பிணை மனுவைத் துவக்கத்தில் அரசு வழக்கறிஞர் எதிர்த்த போதும், குற்றப் பத்திரிகையில் உள்ள மற்ற அனைவரும் சிறைக்கு வெளியே இருப்பதால் இவருக்கு பிணை விடுதலை அளிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.

“நன்கு படித்த சிறப்பு அரசு வழக்கறிஞர் பிணை மனுவை சலுகை அடிப்படையில் தரக்கூடாது என எதிர்த்த போதும், மனுதாரரின் பங்கு பிற உடன் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் பங்கை ஒத்ததல்ல என நிரூபிக்க இயலவில்லை. ஏனெனில் இதே பங்கிற்காக,  டெல்லி உயர்நீதிமன்றம் 9/12/20, 8/4/21, 4/6/21 ஆகிய தேதிகளில் முறையே ஜூபைர், இக்பால், தர்மேந்தர் கிரி  மற்றும் சகாபுதீன் ஆகியோருக்கு பிணை விடுதலை அளித்துள்ளது. அதே போல் மனுதாரரின் பங்கை பிணை விடுதலைப் பெற்ற மற்றவர்களின் பங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும் படித்த அரசு வழக்கறிஞரால் முடியவில்லை,” என்கிறது பிணை உத்தரவு.

பெருமையோடு திரியும் ஜாமியா துப்பாக்கிச் சூடு நடத்தியவன் – கவலையற்று இருக்கும் காவல்துறை

மேலும், மார்ச் 20 ல் ஃபர்மானை கைது செய்த போது சாட்சியின் வாக்கு மூலம் பெறப்படவில்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். மாறாக சாட்சி  இரண்டு வாரங்கள் கழித்து, ஏப்ரல் 4 ல் தான் காவல்துறையை அணுகி உள்ளார். அவ்வாறு இருந்தும் சாட்சி ஃபர்மானின் பெயரை உண்மையில் குறிப்பிடவில்லை என்பதை நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இரண்டு வாரத்திற்கு பிறகு சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட போதுதான் அதாவது ஏப்ரல் 25 அன்றுதான் ஃபர்மானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

“முதன்மை சாட்சியான திலீப் சர்மா முதலில் 4/3/20ல் காவல்துறையை அணுகி புகார் கொடுத்த போதும், தனது புகாரில் மனுதாரரின் பெயரை குறிப்பிடவோ குறிப்பாக அடையாளம் காட்டவோ இல்லை. அதற்கு மாறாக 15/4/20 ல் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 161 படி பதிவு செய்யப்பட்ட போதுதான் அவர் அடையாளம் காட்டியுள்ளார்.  ஆனால் அதற்கு முன்னரே மனுதாரர் கைது செய்யப்பட்டு விட்டார்,” என்று தனது பிணை விடுதலை உத்தரவில் நீதிபதி வினோத் யாதவ் கூறியுள்ளார்.

ஏழைகளின் வயிற்றில் அடித்துள்ளதா ஜிஎஸ்டி: அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

தற்செயலாக, காவல்துறையிடம் ஃபர்மான் இருக்கும் மறைகாணி பதிவு எதுவும் இல்லை. இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் கலவரத்திற்குப் பின் மறைகாணி பதிவுகளைப் கொண்டுதான் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போதைக்கு விடுதலை

ஜூன் 15 ல் ஃபர்மான் குடும்பம் வீதியில் பிச்சை எடுப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டிருந்தது. ஏழு பேர் கொண்ட அந்த குடும்பத்தில் ஃபர்மான் மட்டுமே வருமானத்தை ஈட்டுபவராக இருந்தார். சிறையில் இருக்கும் போது ஃபர்மான் தன் குடும்பத்தினருடன்  தொடர்பு கொள்ள வில்லை. ஏனெனில் அவர்களால் அவரைக் காப்பாற்றுவதற்கான வளத்தை திரட்ட முடியாது என்பதும் அவருக்குத் தெரியும்.

மதுரையில் மீட்கப்பட்ட பஞ்சமி நிலம் – நடவடிக்கை தொடருமா?

“இந்த வழக்குத் தொடர்பாக ஏதாவது செய்ய வழக்கறிஞர்களை அமர்த்துவதற்குக் கூட எங்களுக்கு வழியில்லை,” என்கிறார் ஃபர்மான்.” சிறையில் நிலைமை மிக மோசமானது,” சிறையில் இருப்பவர்கள் எப்படி அங்கே இருக்கிறார்கள் என்பதை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. மீண்டும் அங்கு செல்லவே கூடாது என நான் வேண்டுகிறேன்‌‌. நான் வேலை செய்து வருமானத்தை ஈட்டப் போகிறேன்,” என்று கூறும் ஃபர்மான், ” இந்த வழக்குப் போலியானது. நான் நிராபராதி,” என்று மேலும் கூறினார்.

அவர் சிறையில் இருக்கும்போது, அவரது குடும்பம் வடகிழக்கு டெல்லியில் உள்ள கஜூரிகாஸ் புஷ்டாவில் பழைய வாஜிராபாத் சாலையோரத்தில் உள்ள பாழடைந்த பூங்காவின் நடுவில் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தனர். எனினும் அவர்கள் பிறகு அருகில் உள்ள ஒரு சிறு அறைக்கு மாறிவிட்டார்கள்.

இந்த வழக்கு பற்றி அறிந்ததும் செயற்பாட்டாளர் சாந்த் பீ  அவர்களுக்கு உதவியாக இருந்தார். அவர் ஃபர்மானின் விடுதலை அவர்கள் குடும்பத்தை  மீண்டும் மகிழ்ச்சியாக ஒன்று சேர்த்தது என்கிறார்.” நாங்கள் அவருக்கு ஒரு ரிக்சா வாங்கித்தர முயற்சிக்கிறோம். அதன் மூலம் அவர் சிறிது வருமானம் ஈட்டலாம்,” என்கிறார் அவர்.

பசுஞ்சாணமும் கொரோனாவும்; மோடி அரசின் அறிவியல் ஆலோசனைகள் – சத்யசாகர்

ஃபர்மானுக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்னும் துவங்கவில்லை ஆதலால் ஃபர்மானும் அவரது குடும்பமும் தற்சமயம் மகிழ்ச்சியாக உள்ளது. வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 2020 ல் நடந்த வன்முறையின் நினைவுகள்    இன்னும் பல குடும்பத்தினரை நடுநடுங்கச் செய்கிறது. பல   குடும்பங்கள் இன்னும் கெட்ட கனவு கண்டு விழித்தெழுகிறார்கள்.  ஆனால் ஃபர்மானுக்கு இந்த கெட்ட கனவிலருந்து மீண்டெழ ஒரு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. அதை அவர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்திருக்கிறார்.

 

www.thewire.in இணையதளத்தில் நிகிதா ஜெயின் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்