Aran Sei

டெல்லி கலவரம் எவ்வாறு திட்டமிடப்பட்டது? – விரிவான புலனாய்வின் இரண்டாம் பகுதி

2020, பிப்ரவரி இறுதி வாரத்தில் தில்லியில் நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.  கொல்லப்பட்டவர்களில் நான்கில் மூன்று பங்கினர் முஸ்லீம்களாக இருந்தபோதும், மிக அதிகமான சொத்து சேதங்கள் முஸ்லீம்களுக்கே ஏற்பட்டிருந்தாலும், பாஜக தலைவர்கள், நடந்தது இந்து எதிர்ப்பு கலவரம் என்று கூறுகின்றனர்.

இதனை மூடிமறைத்து, சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம்கள் மற்றும் முற்போக்குவாதிகளால், வன்முறையை தூண்டிவிட போடப்பட்ட சதித் திட்டம்தான் தில்லி கலவரம் என தில்லி காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

எங்கள் புலனாய்வின் முதல் பகுதியில் நாங்கள், தீபக் சிங் மற்றும் அன்கிட் திவாரி என்ற இரண்டு இந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கை பரிசீலனை செய்தோம். ஆனால், அதை காவல்துறை புறக்கணித்து விட்டது‌.

இப்போது, யாருடைய வெறுப்பு பேச்சுக்களும், தூண்டுதலும் கலவரக்கார்களைத் தீவிரமாக்கியதில் முக்கிய பங்காற்றி, இறுதியில் 2020, பிப்ரவரியில், வடகிழக்கு தில்லியை இரத்தத்தில் குளிப்பாட்ட காரணமாக இருந்ததோ, அந்த யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மற்றும் அவரது கூட்டாளிகளை இப்போது ஆராய்வோம்.

முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கான இடைவிடாத அழைப்பு, ஒரு கருத்தியலான வாதம் அல்ல, மாறாக காவல்துறை தங்களை ஒரு போதும் தொடாது என்று தெரிந்தே, வெளிப்படையாக நிறைவேற்றிய உண்மையான சதித்திட்டத்தின் கூறு என்பது, இப்போது தெளிவாகத் தெரிகிறது.

காசியாபாத்

உத்திரப் பிரதேசமும், தில்லியும் சந்திக்கும் காசியாபாத்தில் உள்ள தாஸ்னாவில் யதி நரசிங்கானந்த் என்ற தீவிர இந்துத்துவா தலைவரின் தலைமையகம் உள்ளது. கபில் மிஸ்ரா போன்ற பாஜக தலைவர்களுடன் வைத்திருந்த தொடர்பும், முஸ்லீம்களைப் பற்றி முக்கிய இந்துத்துவா அரசியல்வாதிகள் சொல்லத் தயங்குவதை வெளிப்படையாகவும், அப்பட்டமாகவும் சொல்வதாலும், அவரது செல்வாக்கு தில்லியின் மேல் தளத்திலும், மறைமுகமாக இந்துத்துவா வலைப்பின்னலுடன் அடிப்புறமாகவும் அதிவேகமாக வளர்ந்தது.

எடுத்துக்காட்டாக, தில்லி கலவரத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன், நரசிங்கானந்த் முஸ்லீம்களை அரக்கர்கள் அல்லது பேய்கள் என விவரித்தார். “நாம் நமது தற்போதைய யுகத்தில் முஸ்லீம்கள் என்று அழைப்பவர்கள், முந்தைய யுகங்களில் பேய்கள் என அழைக்கப்பட்டனர்.” என்று அவர் கூறினார்.

நரசிங்கானந்த் தன்னை, காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் ஆதரவாளரென தனக்குத்தானே அறிவித்துக் கொண்டவர். ” நாதுராம் கோட்சே ஜியை பாராட்ட  போதுமான வார்த்தைகளை நாம் கண்டுபிடிக்க முடியாது. நான் வீரசாவர்க்கர் ஜியையும், நாதுராம் கோட்சே ஜியையும் எனது மிகப்பெரிய கதாநாயகர்களாகக் கருதுகிறேன்.” என்று கூறியுள்ளார் அவர். நரசிங்கானந்தின் இந்த  முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கான அழைப்புகள், சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களுக்கும் முந்தியவை. 2019, அக்டோபரில் லக்னோவில் தீவிர இந்துத்துவா தலைவரான கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்டதிலிருந்தே, அவர் அனைத்து முஸ்லீம்களுக்கும் வன்முறை அச்சறுத்தலை விடுத்து வருவதுடன், இஸ்லாமை இந்தியாவிலிருந்து அழிப்பேன் என்றும் கூறிவந்துள்ளார்.

யதிக்கு இடது புறத்தில் வெள்ளை சட்டை அணிந்து மீசையுடன் நிற்கும் மனிதர், இந்து ரக்ஷா தல் அமைப்பைச் சேர்ந்த பிங்கி சௌத்ரி. இவர் 2020, ஜனவரியில், ஜேஎன்யூ மாணவர்கள் மீதான வன்முறைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, ஒரு காணொளியைப் பதிவிட்டிருந்தார். சாம்பல் நிற சட்டை அணிந்து கழுத்தில் காவித் துணியை சுற்றியுள்ளவர் தீபக் சிங் இந்து. இவர்தான் 2020, பிப்ரவரி 23 அன்று 2:30 மணிக்கு, தில்லி மௌஜ்பூர் சௌக்கில் கூட வேண்டும் என, அன்று காலையில் அழைப்பு விடுக்கும் காணொளியை பதிவிட்டவர். அதற்குப் பிறகுதான் கலவரம் மூண்டது. ஆறு வாரங்கள் கழித்து, 2019 டிசம்பர் 4 ம் நாள், நரசிங்கானந்த் ஆற்றிய ஒரு உரையில், முஸ்லீம்களை எதிர்த்து சண்டை போடும் மன உறுதியை இந்துக்கள் இழந்து விட்டனர் என்று தனது வழக்கமான கருத்தை விரிவாக்கினார். கலவரங்கள் நடக்காததற்கு, இந்துக்கள் ஆயுதங்களுடன் வீதியில் இறங்கத் தவறியது தான் காரணம் என புலம்பினார்.

“இன்று பல இந்துக்கள் என்னிடம் மகராஜ் எங்கேயும் கலவரம் நடக்கவில்லை. ஏன் கலவரங்கள் நடக்கவில்லை? என்று கேட்கின்றனர். இந்துக்கள் ஆயுதங்களுடன் வீதிக்கு வர வேண்டிய பிரச்சினைகளின் போது, எந்த  ஒரு இந்துவுக்கும் பிரச்சனைகளுக்காக குரல் எழுப்பும் துணிவு கூட இல்லை. நமது அமைப்புகளால் என்ன பயன் என்று எனக்குத் தெரியவில்லை. பெரிதோ, சிறிதோ நாம் நமது சகோதரர்களுக்காக சண்டை போடத் தயாரில்லை. நமது சகோதரர்களுக்காகப் பேசக்கூடத் தயாரில்லை. சில முஸ்லீம்கள் இந்துக்களின் கழுத்தை அறுக்கும் நாள் கூட இந்தியாவில் வரலாம்.” என்று பேசியுள்ளார்.

2020, பிப்ரவரிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தில்லியிலும் அதைச்  சுற்றியுள்ள இடங்களிலும் பொது கூட்டங்களில் யதி பேசிய பேச்சுக்கள், அவரது மேற்கூறிய குறையைப் போக்கும் மருந்தாக கலவரங்களையே நோக்கமாகக் கொண்டிருந்தன. இந்துக்களை ஆயுதங்களுடன் வீதிக்கு வர வைத்து, அதன் மூலம் கலவரத்தைத் தூண்டி, முஸ்லீம்களுக்கு பாடம் புகட்டலாம் என்பதே அவரது அறிவிப்புகளின் நோக்கம்.

சமூக ஊடகங்களையும், காணொளிகளையும் பயன்படுத்தியது நரசிங்கானந்திற்கு கூடுதல் திறனைக் கொடுத்தது‌. அவர் நியூஸ் நேஷன், சுதர்சன் டிவி, ஆஜ்தக் போன்ற இந்தி செய்தி தொலைகாட்சிகளில் தொடர்ந்து நிலைய வர்ணணையாளராக இருந்தார், இருக்கிறார். மேலும், தனது செய்தி பல லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், பல தீவிர இந்துத்துவா காணொளி வலைப்பின்னல்களில் கதாநாயகனாகவும் இருக்கிறார். 2019, டிசம்பர் மற்றும் 2020 பிப்ரவரி ஆகிய மாதங்களில் அவர் பேசியவை, வெறுப்பூட்டும் பேச்சுக்கள் என்பதற்கு தகுதியானவை. ஆனால் இறுதியில் நடந்த முஸ்லீம்- விரோத  வன்முறையின் பின்னணியில் பார்க்கும் போது, அவரது பேச்சுக்கள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களை  அணிதிரண்டு, வன்முறையில் ஈடுபடுவதற்கும் ஒரு முக்கிய கருவியாக இருந்தன என்பது தெளிவு. இதனால்தான் யதியை கலவரத்தின் ஒரு  முக்கிய சதிகாரராக கருதாமல் இருப்பது விந்தையாக உள்ளது. ஜாஃப்ராபாத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்துதான் கலவரங்கள் துவங்கின என்பதும், உடனடியாக வடகிழக்கு தில்லியில், மூன்று நாட்கள் முஸ்லீம்களின் உயிர்களையும், சொத்துக்களையும் தாக்கும் மிக மோசமான, கலவரமாக வேகமாக உருவெடுத்தது என்பதும் நமக்குத் தெரியும்.

2019, டிசம்பர் 14 ஆம் நாள், சிஏஏ வுக்கு எதிரான முஸ்லீம் பெண்களின் போராட்டத்தை அடுத்து, சிஐஏ-வுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில், யதி தீவிரமாகப் பங்கேற்றார். இந்த நிகழ்வுகளின் நோக்கம், போராடும் முஸ்லீம்களை கேலி செய்வது, அவர்களை பேயாக, இந்துக்களின் எதிரியாக காட்டுவதோடு வலுக்கட்டாயமாக அவர்களுடைய சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது ஆகியனவாகும். 2019 டிசம்பரிலிருந்து, வன்முறை துவங்கிய 2020, பிப்ரவரி 22 வரை, அவரது வன்முறைக்கு அழைப்பு விடுவது உள்ளிட்ட  ஆரவாரப் பேச்சுகள், படிப்படியாக உயர்ந்தது என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன.

தில்லி காவல்துறை விரும்பினால், அதன் அதிகாரபூர்வ குற்றப் பத்திரிகையில் உள்ள சிஏஏ எதிர்ப்பு செயற்பாட்டாளர்களின் மென்மையான உரைகளை விட, மிகக் கொடிய காணொளி ஆதாரங்களை யதிக்கு எதிராக அள்ளிக் கொட்ட முடியும். உமர் காலித் மற்றும் பிறர் மீதான வழக்கில் காவல்துறை, வன்முறைக்கு வாதாடும் பேச்சுக்களையோ, எந்த ஒரு மதத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், எந்த ஒரு தனி நபரும் வன்முறையோடு தொடர்பு கொண்டிருந்ததற்கான சாட்சிகளும் இல்லை. ஆனால், இவற்றிற்கு எல்லாம் பொருந்தும் யதி மீது எந்த வழக்கும் இல்லை.

நஞ்சு நிறைந்த வாரங்கள்

சிஏஏ ஆதரவு முகாமின் தீப்பிடிக்கும், வன்முறை ஆரவாரப் பேச்சுக்களை புலனாய்வு முகமைகள் கண்காணித்திருந்தால், மொட்டாக அரும்பித் தொடங்கிய வன்முறையை, கிள்ளி எறிந்திருக்க முடியும். ஆனால் காவல்துறை வீதிகளிலும் இணையத்திலும் வளர்ந்த இதனை கண்டும் காணாமல் இருந்து விட்டனர். 2019, டிசம்பர் 22 அன்று, தில்லி ஜந்தர் மந்தரில் அவர், “சிஏஏ, முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. ஆனால் துரோகிகளுக்கு எதிரானது. அவர்கள் தங்கள் மக்கள் தொகையைப் பெருக்கி நாட்டைக் கைப்பற்றி விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் மோடிஜியும் அமித் ஷாவும் இந்த சட்டத்தைக் கொண்டு வந்து, அவர்களுடைய கனவை நொறுக்கி விட்டனர். அவர்களிடம் நான், பின்வாங்க வேண்டாம் என்றும், முன்னே சென்று என்ஆர்சியையும், பொது சிவில் சட்டத்தையும் அதன்பிறகு  மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்தையும் கொண்டுவருமாறு வலியுறுத்துகிறேன்” என்று கூறினார்.

டிசம்பர் 25, 2019 அன்று. தீவிரவாத அமைப்பான விஸ்வ சனாதன் சங் என்ற அமைப்பை நிறுவிய உப்தேஷ் ரானா, சிஏஏ ஆதரவு பேரணி ஒன்றை நடத்தினார். யதி நரசிங்கானந்த், அதில் நட்சத்திர பேச்சாளராக கலந்து கொண்டார். அதற்குள் அவரது பகட்டு, ஆரவாரப் பேச்சு, பல படிகள் மேலேறி விட்டது. சிஏஏ-வால் இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்து இல்லை என அமித் ஷா வலியுறுத்தலாம். ஆனால் யதியை பொறுத்தவரை இது, இந்திய முஸ்லீம்களின் மக்கள் தொகையைக் குறைக்க எடுத்து வைக்கப்பட்ட  முதல் அடி. அன்று ஜந்தர்மந்தரில் முதல் முறையாக, முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்றுத் தர இந்துக்கள் வீதிக்கு வர வேண்டும் என அவர் கூறினார்:

“வீதிக்கு வந்து கொண்டிருக்கும் இந்த முஸ்லீம்கள், நாம் வீதிக்கு வரும் நாளில் என்ன நடக்கும் என்பதை காண வேண்டும் என எல்லா இளைஞர்களிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவிற்கும் தயவுசெய்து நீங்கள் கவலைப்படாதீர்கள். நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் சிஏஏவை கொண்டு வந்துள்ளீர்கள். இதன்பிறகு  தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டு வாருங்கள். அதன்பிறகு கதுவான்களின் (முஸ்லீம்களைக் குறிக்கப் பயன்படுத்தும் மோசமான வார்த்தை) எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இந்த பன்றிகள் தங்கள் எண்ணிக்கையை அதிகரித்தால், குப்பைகளைப் பரப்பி விடுவார்கள். எனவே இந்த நாட்டை குப்பைகளிலிருந்தும், அசுத்தத்திலிருந்தும் பாதுகாக்க அவர்களுடைய மக்கள் தொகையைக் குறைக்க தயவுசெய்து சட்டங்களை கொண்டு வாருங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம்,” என்று பேசினார்.

நரசிங்கானந்த், முஸ்லீம்களை ‘பன்றி’, ‘கதுவான்’  போன்ற தவறான சொற்களால் அழைப்பதுடன், அவர்கள் கண்களைத் தோண்டி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். “நீங்கள் எல்லோரும் தர்மத்திற்காக சண்டையிடுபவர்கள். நீங்கள் ஒரு புலி. 1,25,000 பன்றிகளுக்கும் மேலானவர்கள். முஸ்லீம்கள் இந்த நாட்டை எடுத்துக்கொள்ள நினைத்தால், அவர்கள் கண்களைத் தோண்டி எடுத்து விடுவோம் என்று கூறுங்கள்,” என்கிறார் அவர். நரசிங்கானந்தின் இந்த காலத்திய ஆரவாரப் பேச்சுக்கள், ஒரு இறுதிப் போர் மற்றும் ஒரு இறுதி தீர்வு நெருங்கி வருகிறது என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தின.

கலவரத்திற்கு எட்டு வாரங்களுக்கு முன், 2019 டிசம்பர் 25 ஆம் தேதி, ” நான் இந்துக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். இன்று நேரம் வந்து விட்டது. இப்போதும் கூட நாம் எழுந்து நிற்கவில்லை என்றால், நம்மால் பிழைக்க முடியாது. இதுதான் கடைசி யுத்தம் என்பதை இந்துக்களுக்குக் கூற விரும்புகிறேன். இந்தப் போரில் தோற்றால் எதுவும் மிஞ்சாது” என்று கூறினார்.

யதி அன்று நிறைய கூற வேண்டியிருந்தது. தனது தூண்டிவிடும் சொற்பொழிவிற்குப்பின், பல இந்துத்துவா யூடியூப் சேனல்களுக்கு, தனது வெறிபிடித்த ஆரவார பேச்சுடன் பேட்டி அளித்தார். இவற்றிலிருந்து ‘இந்து பப்ளிஷர்’ என்ற சேனலின் செய்தியாளர், யதியிடம் சிஏஏவை எதிர்ப்பவர்கள் பற்றியும், ‘நாட்டை எரிப்பது’ பற்றியும் அவர் கூறியுள்ளது குறித்து அவரது கருத்தைக் கேட்ட போது “இந்த மக்கள் நாட்டின் எதிரிகள். அவர்களை சிறையில் வைக்க வேண்டும். சிறையில் வைக்கப்பட்டும் திருந்தவில்லை என்றால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்,” என்று கூறினார்.

பிறகு அந்த ‘ இந்து பப்ளிஷர்’ செய்தியாளர் யதியிடம், யார் இவர்கள், வங்கதேசத்திலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் அகதிகளுக்கு கதவுகளை திறந்து விட விரும்புபவர்கள்? என்று கேட்டார். அதற்கு யதி கூறிய பதில் அதிர்ச்சி தரக் கூடியது. அவர், இந்திய முஸ்லீம்களை, இந்தியாவையும் இந்துக்களையும் நாசமாக்க வந்த ஜிகாதிகள் என்றும், அவர்களை வேரோடு அழிப்பதே இந்துக்களின் அடிப்படை மதக் கடமை என்றும் கூறினார். “இவர்கள் இந்த நாட்டில் அசுத்தத்தை பரப்ப விரும்பும் ஜிகாதிகள். இந்த நாட்டை நாசமாக்க விரும்பும் ஜிகாதிகள். நம்முடைய வளத்தை எல்லாம் எடுத்துக்கொள்ள விரும்பும் ஜிகாதிகள். நம்மை எல்லாம் கொல்ல விரும்பும் ஜிகாதிகள். நம்முடைய சகோதரிகளையும், மகள்களையும் விபச்சாரிகளாக்க விரும்பும் ஜிகாதிகள். இத்தகையவர்கள் வேரிலிருந்தே அழிக்கப்பட வேண்டும். இதுவே நமது அடிப்படை மதக் கடமை” என்று பதிலளித்தார்.

சிஏஏ பற்றி மோடி அரசு, சொல்லாமல் விடப்பட வேண்டும் என விரும்பிய கருத்துகளை, நரசிங்கானந்த் சொல்லத் தயாராக இருந்தார். இந்துத்துவா குழுக்கள் கூறுவது போல பிரிவினையின் முடிக்கப்படாத நிகழ்ச்சி நிரலான, அதாவது இந்தியாவிலிருந்து அனைத்து முஸ்லீம்களையும் வெளியேற்றுவது என்பதன் முக்கிய பகுதியே சிஏஏ ஆகும்.

“பிரிவினைக்குப் பின் ஜிகாதிகளான காந்தியும், நேருவும் இந்தத் துரோகிகளை இந்த நாட்டிலேயே வைத்துக்கொண்டனர். இது மிகப்பெரிய துரதிஷ்டம்” என்கிறார் யதி.

கேள்வி: ஆனால் மகராஜ் ஜி, இவர்கள் தாங்கள் விரும்பியே, இங்கே இருப்பதாகக் கூறுகின்றனர்.

யதி: இது அவர்கள் விருப்பம் அல்ல. நமது பலவீனம். நாம் அவர்களைத் துரத்தியிருக்க வேண்டும்… இவர்கள் நம் மக்கள் அல்ல, இவர்கள் ஜிகாதிகள், நாம் அவர்களை முடித்துக் கட்ட வேண்டும், இது நமது மதம், இது தான் தேசப்பற்று என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதேபோல், கபர் இந்தியா என்ற சேனலுக்கு, நரசிங்கானந்த் அளித்த பேட்டியை  பார்க்கலாம்.

யதி: சீனா முஸ்லீம்களை என்ன செய்கிறது என உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டுள்ளது. சீன அதிபர், இஸ்லாம் ஒரு மன நோய் என்றும் அந்த நோய்க்கு நமது நாடு இரையாவதை  அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறி உள்ளார்.

கேள்வி: அப்படியானால், நாம் நமது நாட்டை எவ்வாறு பாதுகாப்பது?

யதி: சீன எடுத்துக்காட்டை பின்பற்றுவதன் மூலம். நமது நாடு தன்னை பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

‘தரம் சன்சத்’ தின் பங்கு

ஜந்தர் மந்தர் நிகழ்விற்குப் பிறகு யதி, மேலும் தீவிர போதனைக்கு இளம் இந்துக்களை அணிதிரட்ட தனது ஆற்றலைக் குவித்தார். டிசம்பர் 29 ஆம் நாள், தான் வெளியிட்ட ஒரு காணொளியில் அவர், “எங்கெல்லாம் என்னுடைய குரல் கேட்கிறதோ, அங்கெல்லாம் உள்ள இளம் இந்துக்கள், ஜனவரி 12,13  தேதிகளில், காசியாபாத்தில் நடைபெற உள்ள தரம் சன்சத் தில் கலந்து கொள்ள வேண்டும். இது எனது வேண்டுகோள்.எனது குழந்தைகளே, எனது சிங்கங்களே, நீங்கள் எனக்கு உதவவில்லை என்றால் எதுவும் நடக்காது,” என்று கூறினார்.

ஜனவரி 12 மற்றும் 13 ல் நடைபெற்ற  தரம் சன்சத் அல்லது மதக் கூட்டத்தில், இந்துத்துவா சித்தாந்தவாதிகளும், மத பிரமுகர்களும் தீப்பறக்கும் உரைகளை நிகழ்த்தினர். ஜனவரி 16 ஆம் தேதி, சத்ய சனாதன் எனும் யூடியூப் சேனலில், ஒரு காணொளி  பதிவிடப்பட்டது. அதில் நரசிங்கானந்த், அன்கூர் ஆர்யா மற்றும் யதிமா சேத்னா சரஸ்வதி ஆகியோர் தரம் சன்சத்தின் முக்கிய தீர்மானங்கள் மற்றும் செய்திகளைப் பற்றி பேசியிருந்தனர். “இந்துக்கள் காவல்துறையையும், இராணுவத்தையும் சார்ந்து இருக்கக் கூடாது. ஆனால் அவர்கள் ஒரு ஆளாக அங்கே இருப்பதை உறுதி செய்து கொண்டு, தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள வேண்டும்” என்ற ஒரு முடிவை நரசிங்கானந்த் அதில் தெரிவித்தார்.

ஒவ்வொரு இந்து குடும்பமும், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்து குடும்பமும் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

“நமது தரம் சன்சத் டொனால்ட் டிரம்ப்பிற்கு மரியாதை செலுத்துவதுடன், அடுத்த தரம் சன்சத்திற்கு அவரை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை அவர்களுடைய சொந்த வீடுகளிலேயே கொல்லும் அவரது வழிமுறை, உலகம் முழுவதிற்கும் தேவையானது. நாங்கள் ட்ரம்ப்பை எங்கள் கதாநாயகனாக கருதுகிறோம்,” என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப்பைப் பற்றிய இந்த குறிப்பு, 2019 டிசம்பர் முதல், நரசிங்கானந்த் பேசிக் கொண்டிருந்த இறுதிப் போரின் நேரம் குறித்த நுட்பமான செய்தியா?

நரசிங்கானந்த்தின் செய்திகளால் ஊக்குவிக்கப்பட்ட தீவிர இந்துத்துவா ஆர்வலர்கள், தங்கள் கதாநாயகன் வரும்போது, அவருக்கு மரியாதைக் செலுத்தும் வகையில், குறி வைத்து முஸ்லீம்களை அவர்கள் வீட்டிலேயே தாக்குதல் நடத்துவதை தேர்வு செய்திருப்பார்களா?

உண்மையான சதித்திட்டத்தை புலனாய்வு செய்திருந்தால், தில்லி காவல்துறை இந்தக் கேள்விக்கு விடையளித்திருக்க முடியும்.

கொல்வதற்கு வெளிப்படையாக அழைப்பு

தில்லி கலவரம் நடைபெற்ற காலவரிசையில், யதியின் தரம் சன்சத் ஒரு முக்கிய நிகழ்வாக தோன்றுவதற்கான காரணம் என்னவென்றால், அதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளம் இந்துக்களுக்கு, அவர்களின் உண்மையான எதிரி முஸ்லீம்கள் என்றும் அந்த எதிரி கொல்லப்பட வேண்டும் என்றும் கூறிய செய்தி. சத்ய சனாதன் சேனலை நடத்தும் அன்கூர் ஆர்ய,  இந்தச் செய்தியின் முதல் பகுதியை மிக நேரடியாக விளக்கினார்.

“குரு கோவிந்த் ஒருமுறை, எதிரிகளுக்கு எதிராக 1,25,000 குழிகளை வெட்டுவோம் என்று கூறினார். அப்போதிலிருந்து யார் அந்த 1,25,000 பேர் என நாங்கள் ஆச்சர்யப்பட்டோம். யதிஜி, யார் அந்த 1,25,000 என்பதை மிகத் தெளிவான சொற்களில் கூறிவிட்டார். அவர்கள் ஜிகாதிகள். அவர்கள் நமது மதத்தின் எதிரிகள். நாங்கள் எப்போதும் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தோம். யாரும் எங்களுக்கு விளக்கவில்லை. பெரிய தரம் சன்சத்கள் கூட, எங்களுக்கு யார் அந்த எதிர்கள் என்று கூறவில்லை. ஆனால் சுவாமிஜி தெளிவான சொற்களில் எங்களுக்கு விளக்கி விட்டார். இங்கு வந்து, இளைஞர்கள் வார்த்தை விளையாட்டை புரிந்து கொண்டனர். ஏனெனில் முன்பு குரு கோவிந்த் ஜி அவர் காலத்தில், யாரை எதிர்த்து சண்டையிட வேண்டும் என்றும், யாரை வெட்ட வேண்டும் என்றும், யார் அந்த 1,25,000 என்று குறிப்பிட்டார் என்பதையும்  அவர்கள் ஒருபோதும் உணரவில்லை.” என்று கூறினார்.

நரசிங்கானந்த் பிறகு கடைசி கருத்தைக் கூறி முடிக்கத் தனது நெருங்கிய கூட்டாளியான யதிமா சேத்னா சரஸ்வதிக்கு, மேடையைக் கொடுத்தார். அவர், கொலை செய்வதற்கான வெளிப்படையான அறிவுரைகளை பல வார்த்தைகளில் கூறினார். ” இன்று, நமது குரு நரசிங்கானந்த் ஜி, நமக்கு கொடுத்துள்ள செய்தி இது; நாம் ஆயுதம் ஏந்தி எதிரிகளை படுகொலை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனெனில் நீங்கள் ஆயதம் வைத்திருந்தால் தான், இந்த பிசாசுகளின் கணக்கை சரி செய்ய முடியும் என்பதுடன், உங்கள் நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம். எனவே இந்த செய்தி சென்று சேர்ந்தவர்களுக்கு எனது வேண்டுகோள், அவர்கள் இந்த செய்தியை கவனமாக கேட்க வேண்டும். காலம் இப்போது அவர்களிடமிருந்து என்ன கேட்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

இந்த சிலிர்க்க வைக்கும் செய்திகள் சொல்லப்பட்ட, பரப்பப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின் வடகிழக்கு தில்லி வீதிகளில், நரசிங்கானந்த்தின் தரம் சன்சத் கூறிய ‘சங்கார் (sanghaar) அல்லது படுகொலை நடந்தேறியது. கட்டவிழ்த்து விடப்பட்ட இளம் சிங்கங்கள் யாரை எதிர்த்து சண்டையிட வேண்டும், யாரை வெட்ட வேண்டும், யாருடைய கண்களைத் தோண்ட வேண்டும் என்பதை ஐயமின்றி அறிந்து கொண்டிருந்தனர்.

முஸ்லீம்கள் உயிரோடு இருக்க உயிமை அற்றவர்கள்’

2020, பிப்ரவரி 22 ம் நாள், நரசிங்கானந்த், முஸ்லீம்கள் எதிர்ப்பு வன்முறை நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு கடைசி அழைப்பை விடுத்தார். அதில் அவர், முஸ்லீம்கள் வாழ உரிமையற்றவர்கள் என்றார்.

மற்றொரு இந்துத்துவா சேனல், அவரிடம் உங்களுக்கு முஸ்லீம்களுடன் ‘வாழு அல்லது வாழ விடு’ என்பதில் நம்பிக்கை உள்ளதா? என்று கேட்டது. அதற்கு அவர் “நல்ல மக்கள் வாழ வேண்டும். நல்ல மக்களை வாழ விட வேண்டும். ஆனால் நமது எதிரிகளை, நமது மதத்தின் எதிரிகளை, நம்மைத் துடைத்தெறிய வேண்டும் என்று விரும்புபவர்களை, அவர்களை முடித்துக்கட்டும் வரை, இந்த இஸ்லாம் என்ற  தீயதை நம்நாட்டை விட்டு நீக்கும் வரை நாம் எப்படி பிழைக்க முடியும்? வாழு அல்லது வாழ விடு என்பது நாகரீகமான மக்களுக்குத்தான். நாகரீகமற்றத் திருடர்களுக்கு அல்ல. தீவிரவாதிகளுக்கு அல்ல. ஜிகாதிகளுக்கு அல்ல. நாம் நமக்கு எந்தப் பிரச்சினையையும் தராத நமது நண்பர்களை வாழ விட வேண்டும். நமது குழந்தைகளைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கம் உடைய அவர்கள், உயிரோடு இருக்க உரிமை அற்றவர்கள்” என்று பதிலளித்துள்ளார்.

யதி நரசிங்கானந்தின் அழைப்பிற்குப் பிறகு நடந்த  படுகொலைகளில், அவருக்கு நேரடி பங்கு உள்ளதா என்பதை கண்டறிய, காவல்துறையின் முறையான புலனாய்வு தேவை.

  • ஜேஎன்யூ-வில் (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) நடந்த தாக்குதலுக்கு, இவரது உதவியாளர் மற்றம் இந்து ரக்ஷா தல் தலைவர் பிங்கி சௌத்ரி, பொறுப்பேற்றுள்ளதை நாம் அறிவோம்.
  • பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, ஆத்திரமூட்டும் உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சமயத்தில், தனது ஆதரவாளர்களை மௌஜ்பூர் சௌக்கிற்கு மாலை 2:30 மணிக்கு வருமாறு அவரது நெருங்கிய கூட்டாளியான “இந்து படை” யைச் சேர்ந்த தீபக் சிங் இந்து, பிப்ரவரி 23 அன்று காலையில், ஒரு காணொளியை பதிவிட்டதையும் நாம் அறிவோம்.
  • நமது முதல் பகுதி புலனாய்வில் இடம் பெற்றிருந்த ஆர்எஸ்எஸ் ஆர்வலர் அன்கிட் திவாரி, நரசிங்கானந்த் நடத்திய சில நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை நடந்த வேண்டும் என யதி அழைப்பு விடுத்த 2019, டிசம்பர் 25 ஆம் தேதி, ஜந்தர்மந்தர் நிகழ்விலும், அவர் ஒரு பார்வையாளராக இருந்துள்ளார். அதே காணொளி உரையை தனது முகநூலிலும் பதிவிட்டுள்ளார்.

எங்கள் முதல் பகுதி புலனாய்விற்குப் பிறகு, அன்கிட் திவாரி தனது சமூக ஊடக கணக்குகளை முடக்கிவிட்டார். ஆனால் ஒருவேளை காவல்துறை அவரை விசாரணை செய்ய முடிவு செய்தால், காட்டுவதற்காக நாங்கள் அவரது அனைத்து காணொளிகளையும் சேமித்து வைத்துள்ளோம்.

எங்களது புலனாய்வில் நாங்கள் நிறுவியுள்ள காலவரிசை, 2019 டிசம்பர் மாதத் துவக்கத்திலேயே, வன்முறையை நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், அதற்கான சூழல்கள் அடுத்த இரண்டு மாதங்களாக உருவாக்கப்பட்டு, அதன் உச்சக்கட்டமாக  53 உயிர்களைப் பறித்த வன்முறை நடத்தப்பட்டுள்ளது‌. ஆனால் வருத்தத்திற்குரிய வகையில், இந்த சதித்திட்டம் பற்றி தில்லி காவல்துறை புலனாய்வு செய்யவில்லை.

எங்கள் தொடரின் மூன்றாவது பகுதியில், தீவிர இந்துத்துவாவாதிகளான ராகினி திவாரி மற்றும் பலரை புலனாய்வு செய்து, அவர்கள் எவ்வாறு பாஜக மற்றும் சங் பரிவார் ஆகியவற்றின் விரிவான அரசியல் நிகழ்ச்சி நிரலின் முக்கிய பகுதியான, 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி கலவரத்தில் பொருந்தி உள்ளார்கள் என்பதை ஆய்வு செய்ய உள்ளோம்.

(www.thewire.in இணைய தளத்தில் வெளியான காணொளியின் கட்டுரை வடிவும்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்