Aran Sei

டெல்லி கலவரம் – துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர்கள் – மறுபரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

2020 பிப்ரவரி 25 அன்று, 22 வயதான முகமது இம்ரானும், அவருடைய நண்பர்களும் பழைய முஸ்தஃபாபாத்தில் அவர்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெருவில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கம்பிகளும், துப்பாக்கிகளும், கத்திகளும் கையில் வைத்துக் கொண்டிருந்த ஒரு கலவர கும்பல் அங்கு வந்தது. அவர்களிடமிருந்து இம்ரானும் அவருடைய நண்பரும் தப்பித்து ஓட முயற்சித்த போது, துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

இந்த நேரத்தில் இம்ரானின் அப்பா சம்சுதீனும் சில மீட்டர் தொலைவில் தான் நின்று கொண்டிருந்தார். “என்னுடைய கால்கள் உறைந்துவிட்டன, ஆனாலும் எப்படியோ தப்பி வந்தேன்” என்று அவர் நினைவுகூர்கிறார்.

இம்ரானின் உடலில் இரத்தம் வழிவதை அவர் பார்த்தார். அவரும், குடும்பத்தில் உள்ள வேறோரு நபரும் சேர்ந்து இம்ரானை தூக்கிக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அப்போது தான் இம்ரானின் பிறப்புறுப்பில் தோட்டா பாய்ந்திருப்பதும், அவருடைய ஸ்க்ரோட்டம் ( Scrotum – விதைப்பை) சேதமாகியிருப்பதும் தெரிந்தது.

அன்று மாலை, இம்ரானை அல்-ஹிந்த் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கே அவருடைய வலது ஸ்க்ரோட்டல் பை நீக்கப்பட்டது, அவருக்கு 85 தையல்கள் போடப்பட்டன. அவருடைய அறுவை சிகிச்சைக்கு பிறகு, எந்த மருத்துவ பதிவுகளையோ விவரங்களையோ கொடுக்காமல் எம்.எல்.சி (மருத்துவ-சட்ட அறிக்கை) தயார் செய்ய லோக் நாயக் மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார்.

லோக் நாயக் மருத்துவமனையில், எம்.எல்.சியும், மருத்துவ பதிவும் தயார் செய்து கொடுக்கப்பட்டதாக குடும்பத்தை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.  லோக் நாயக் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மருத்துவ பதிவுகளில், எம்.எல்.சி எண் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட, அதன் பிரதி இம்ரானுக்கு கொடுக்கப்படவில்லை.

அவருக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ பதிவுகளில்,  கலவரத்தின் போது இம்ரான் காயமடைந்ததாகவும், பிறப்புறுப்பு பகுதியில் 15 செமீ நீளத்திற்கு தையல் போடப்பட்டிருப்பதாகவும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருடைய விதைப்பை நீக்கப்பட்டிருப்பது பற்றி மருத்துவக் குறிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கலவரத்தின் போது தான் இம்ரான் தாக்கப்பட்டார் எனக் குறிப்பிட்டிருந்தாலும், லோக்நாயக் மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது என்பதையும் மருத்துவ பதிவுகளில் எழுதவில்லை. மேலும், ‘எந்த அறுவை சிகிச்சையும் தேவைப்படவில்லை’ எனவும், மருத்துகள் மட்டுமே கொடுத்து மருத்துவமனையில் இருந்து விடுவித்ததாகவும் அம்மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.

தன்னை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று இம்ரான் கேட்ட போது காலி படுக்கைகள் எதுவும் இல்லை என்று அவருக்குக் குறிப்பாகச் சொல்லப்பட்டது. உள்ளூர் அரசு சாரா அமைப்புகளின் உதவியோடு தான் அவர், அதற்கு மேற்பட்ட அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொண்டார்.

காயமடைந்த இடத்தில் தொடர்ந்து வலி இருப்பதாக இம்ரான் பல மருத்துவர்களிடம் சென்றார். அவர்கள் அனைவருமே அவருடைய வலது ஸ்க்ரோட்டல் பை அறுவை சிகிச்சையின் போது நீக்கப்பட்டிருப்பதாகதெரிவித்தனர்.

பிப்ரவரி கலவரத்திற்கு டெல்லி அரசு அறிவித்த நிவாரண உதவி திட்டத்தின் கீழ், ஒரு சாதாரண காயத்திற்கு 20,000 ரூபாயும், பெரிய காயத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும், நிரந்த பாதிப்பிற்கு ஐந்து லட்சம் ரூபாயும் கொடுக்கப்பட வேண்டும். இதைப் பெறுவதற்கு, நோயாளியை கவனித்துக் கொண்ட மருத்துவர் மேற்சொன்ன பிரிவுகளில் எதாவது ஒன்றை தேர்வு செய்து எம்.எல்.சியில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இம்ரானுக்கு எம்.எல்.சி கொடுக்கப்படாததால், நிவாரண விண்ணப்பத்தோடு அதை இணைத்துக் கொடுக்க முடியவில்லை. இதனால், ஆறு மாதங்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அலைந்த பிறகு,  வலது ஸ்க்ரோட்டல் பையை இழந்தததற்காக இம்ரானுக்கு இருபதாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. இம்ரானுக்கு வழங்கப்பட்ட மருத்துவ பதிவுகளில் தவறான விவரங்களே இருப்பதால், எம்.எல்.சியும் அவருக்கு உதவிகரமானதாக இருந்திருக்காது.

இம்ரானின் சிகிச்சைக்கு பணம் இல்லாததால், போதுமான இழப்பீடு கோரி அவருடைய குடும்பம் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. டிசம்பர் 4-ம் தேதி, லோக் நாயக் மருத்துவமனை கொடுத்த மருத்துவ பதிவுகளும்,  இம்ரான் கொடுத்த மருத்துவ பதிவுகளும்  (வெளி மருத்துவர்கள் அளித்த பதிவுகள்) வேறுபடுவதால், இம்ரானை மறுபடி பரிசோதனை செய்து, புதிதாக ஒரு மருத்துவ அறிக்கை தயார் செய்ய வேண்டுமென நீதிபதி நவீன் சாவ்லா லோக் நாயக் மருத்துவமனையின் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

டெல்லி கலவரங்களில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை மருத்துவமனை மறுபரிசோதனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது இதுவே முதல்முறை. இவ்வழக்கில், வழக்கறிஞர் ஆஞ்சல் திக்மணி வாதாடினார்.

இம்ரானின் அப்பா சம்சுதீன், லோக் நாயக் மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் தங்களிடம் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார். “கல்லெறியும் போது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இப்போது துப்பாக்கியால் சுடப்பட்டதும் எப்படி எங்களிடம் வந்து உதவி கேட்கிறீர்கள்?” என மருத்துவமனையின் வரவேற்பறையில் இருந்த பெண் கூறியதாக அவர் தெரிவித்தார்.

“எல்லோரும் இப்போது என்னுடைய மகன் எதற்கும் உதவாதவன் என்கின்றனர். அவனுக்கு திருமணம் நடக்கவிருந்தது, இப்போது அதுவும் நின்றுவிட்டது” என கண்களில் நீர் தேங்க சம்சூதின் சொல்கிறார்.

இம்ரானுக்கோ, எப்போதும் இருக்கும் உடல் வலி, அவர் இழந்ததை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. வெல்டர் வேலை செய்யும் அவர், தினசரி வேலைகளை செய்ய முடியாத அளவு வலியை அனுபவிக்கிறார். “ எப்படி இருக்கிறாய் என்னிடம் யாராவது கேட்கும் போது, எனக்கு சொல்வதற்கு பதிலே இல்லை. கடந்த ஒன்பது மாதங்களாக நான் வலியில் தான் இருக்கிறேன்” என்கிறார்.

காயத்தினால் உண்டான பாதிப்பால், இம்ரானால் எதிரே நிற்பவரின் கண்ணை பார்த்துக் கூட பேச முடியவில்லை. தன்னுடைய வாழ்க்கை துன்புறுத்தல்களின் சுழற்சியாக மாறி விட்டதாக அவர் சொல்கிறார்.

இதே மனுவில் இருக்கும் மற்றொரு பாதிக்கப்பட்ட நபர் சோகத் அலி. பிப்ரவரி 25-ம் தேதி சாமன் பூங்காவில் உள்ள அக்சா மசூதியை கடந்து கொண்டிருந்த போது தொடையில் சுடப்பட்டார். அவரையும் மருத்துவ வாரியம் மறு பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

லோக் நாயக் மருத்துவமனை அளித்த மருத்துவ பதிவுகளில் : “முஸ்தாஃபாதில் நடந்த போராட்டங்களின் போது மதியம் 1 மணிக்கு காயம் ஏற்பட்டது” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ ஆவணங்களும், காயங்கள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை குறித்து எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை. சோகத் அலிக்கும் அவரது எம்.எல்.சி பிரதி இதுவரை கொடுக்கப்படவில்லை.

முறையான விசாரணைகளுக்கும் நடைமுறைகளுக்கும் பிறகு, லோக் நாயக் மருத்துவமனையில் அமைக்கப்படவிருக்கும் ஒரு மருத்துவர் குழு முன்பு, மீண்டும் பரிசோதனை செய்து கொள்ள, இம்ரானும், சோகத்தும் டிசம்பர் 18-ம் தேதி செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்