Aran Sei

வெறுப்பு அரசியலின் அடியாள் – யார் இந்த ‘தீபக் சர்மா’? – அலிஷான் ஜஃப்ரி

கஸ்ட் 2017-ல்,  இந்துத்துவா ஆதரவாளன் ஒருவன், கடா மீசையை முறுக்கிக் கொண்டு முஸ்லீம்களையும் ‘தேச விரோதிகளையும்’ பற்றிய தனது வெறுப்பைக் கக்கும் பதிவுகளை விமர்சனம் செய்த நடுநிலை இந்து மதத்தவரை வசைமாரி பொழிந்த காணொளி அதிவிரைவாக பரவியது. பலரும் அதை வெறிப்பிடித்த வேடிக்கையான காணொளியாகவே பார்த்தனர். ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகு, அந்த ஆதரவாளன் தீபக் சர்மா, தான் ஒருவழியாக  இந்தியாவின் வெறுப்பு அரசியல் சூழலில்.     ‘விளிம்பில் நின்று வேடிக்கை பார்ப்பவனாக’ இருந்த நிலையிலிருந்து, இன்று இந்துத்துவாவின் முதன்மை  போக்கில் மட்டுமின்றி வன்முறையை பயன்படுத்துவதிலும் முக்கிய ஆட்டக்காரனாக வளர்திருப்பதாக எக்காளமிடுகிறான்.

உத்தர பிரதேசத்தின் பாஜக அரசு, ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்புணர்வு, கொலை விவகாரத்தை மோசமாக கையாண்டது அம்பலப்பட்ட போது, ஹத்ராஸை சேர்ந்த சர்மா களத்தில் இறங்கி அந்த இளம் தலித் பெண்ணைப் பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் தவறான, பொய்யான தகவல்களை உருவாக்கி, பரப்புவதில் முக்கிய பங்காற்றினான். அத்துடன் எதிர் கட்சியினர் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தி பொய் கதைகளை கட்டவிழ்த்து விட்டான். அவை மிக விரைவாக ஆதித்ய நாத் அரசின் அலுவலக வலைத்தளத்திலும் ஏறியது. பாலியல்  வன்புணர்வு  குற்றம், இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியின் இஸ்லாமிய “சதித்திட்டம்” என்று அவை ஊளையிட்டன.

திறமையான காணொளி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் சர்மா இதை கச்சிதமாகச் செய்தான். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தடையின்றி தாவினான். சில சமயம் பல்லூடகத்திற்கான (multimedia) பொருளை உருவாக்குபவனாக இருந்து, தனது ஆதரவாளர்களுக்கு செய்திகளை அள்ளி விடுவான். மற்ற சமயங்களில் களத்தில் இறங்கி போராட்டங்களையும், வன்முறையையும் கூட அரங்கேற்றுவான். சில முக்கிய ஊடகங்களில் அவனைப்பற்றிய செய்தி காணொலியில் சாதாரண பொது மக்களில் ஒருவனாகக்கூட காட்டப்படுவான்.

ஹத்ராஸில் அவனது பங்கு எளிய நிகழ்வு அல்ல. சர்மா, தனிஷ்க் விளம்பரம் அல்லது “காஸ்கன்ஞ்”-சில் இந்துக்கள் மொத்தமாக வெளியேறியதாக பரப்பப்பட்ட பொய்யான தகவல்களை தீப்பற்றும் செய்தியாக மாற்றுவது, மறுபுறம் ‌டெல்லியில் உள்ள அக்பர் சாலையை ‘ அடல் பிகாரி வாஜ்பாய் மார்க்’ என பெயர் மாற்றம் செய்யும் முயற்சி போன்ற இந்துத்துவா நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அவை முக்கிய செய்தியாக மாறுவதற்கு முன் ஊதிப் பற்ற வைக்கும் வேலையை ஆத்திரமூட்டும் வகையில் வெளிப்படுத்தும் இடைத்தரகனாக தலையைக் காட்டுவான்.

சர்மாவின் வன்முறை வாழ்க்கை அவனை பலமுறை சிறைக்குள் தள்ளி இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் தனது விரிவான செயல்பாடுகளுக்கு அவனது அவசியத்தை உணர்ந்துள்ள இந்துத்துவா, அவன் மீண்டும் பழையபடி செயல்பட வழி செய்து விடும். சங்பரிவாரின் குரலை எதிரொலிக்கும் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் சர்மா போன்றவர்களிடமிருந்து விலகி நிற்பதாக காட்டிக் கொள்வார்கள். ஆனால் கபில்மிஸ்ரா (தமிழகத்தில் எச்.ராஜா) போன்ற, கும்பலை வெறியூட்டும், பாஜக தலைவர்கள், ஆளும் அரசுக்கும் இவன் போன்றவர்களுக்கும் இணைப்பு பாலமாக,  இடையாட்களாக முன்னே வந்து முக்கிய பங்காற்றுவார்கள். சர்மாவும் அவனை ஒத்த இந்துத்துவாவின் முட்டாள் அடியாட்களும், நிலைமைக்கு ஏற்ப வெறுப்பு அரசியலை நிகழ்நிலையிலும், நடைமுறையிலும் பரப்புவார்கள். அவற்றை கையாளும் இந்துத்துவா தலைவர்கள் எதையெதை முன்னெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். இந்த கேடு கெட்ட செயலில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் பாஜகவின் உயர் மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு ஊடகங்களில் விதைக்கப்படுவார்கள்.

இந்த கும்பலின் மற்றும் வெறுப்பு அரசியலின் வெற்றியில் மூன்றாவது ஒன்றும் உள்ளது. சர்மா போன்றவர்கள் நீர்மூழ்கி போல் சமூகத்தின் அடியில் ஒளிந்து கொண்டுள்ள காணொளிக் குழுக்களை கைவசப்படுத்தி தங்கள் ஆரம்ப நிலை செய்திகள் கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதை  உறுதி செய்து கொள்வார்கள்.

வெறுப்பின் வரலாறு

இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வெறியுடன் சண்டையிடும்  நிரந்தர ” சிங்கமாக” அவப் பெயரை ஊதியமாக பெற்றபின்,  அவனும் அவனது ஆதரவாளர்களும் (கபில்மிஸ்ரா போன்ற பல பாஜக தலைவர்களும்) தாஜ் மகால் முற்காலத்தில் ‘தோஜோமயா’  எனப்பட்ட சிவாலயம் என ஓலமிடுவது போல, சர்மா தாஜ்மகாலுக்குச் சென்றான்.  தனது வெறிப்பிடித்த தேசியவாத இந்துத்துவா ஆதரவாளர்களை ‘ராஷ்டிரிய சுவாபினன் தல்’ என்ற அமைப்பின் பெயரில்   சேர்த்துக் கொண்டு தாஜ்மகாலுக்குள் புகுந்து ‘சிவமந்திரங்களை ‘ ஓதினான்.

கடந்த பல வருடங்களாக சர்மா ஏராளமான வெறுப்பை உமிழும் காணொளிகளை தயாரித்துள்ளான். இவற்றில், ‘ தேசத் துரோகிகள்’  என்ற நீண்ட பட்டியலில் வைத்துள்ளவர்களை மிரட்டுவதை காணலாம். அவன் குறிடப்பிட்ட சில பல்கலைக்கழகங்களின் மாணவர்களையும், மிதவாதிகளையும், அறிவார்ந்தவர்களையும், பத்திரிகையாளர்களையும், பீம் ஆர்மி ஆதரவாளர்களையும், முஸ்லீம்களையும், திரைப்பட நடிகர்களையும், கம்யூனிஸ்ட்டுகளையும், ஜோமோட்டோ மற்றும் தனிஷ்க் போன்றவற்றையும் குறி வைத்துத் தாக்க சிறிதும் தயங்கவில்லை. சில மாதங்களுக்கு முன் அய்ஜாஸ் கான் என்ற மும்பை நடிகருக்கு எதிராக ஒரு காணொளியில், ஒரு வாளை  சுழற்றிக் காட்டி, அவர் ஒழுங்காக நடக்காவிட்டால், அவரது மர்ம உறுப்பை எப்படி சீவுவேன் என நடித்துக் காட்டினான்.

நிகழ்நிலை மதவெறி

கடந்த காலத்தில், சர்மா தனி ஆளாகவே இரண்டு மிகப் பெரிய டிவிட்டர் பரப்புரைகளை நடத்தினான். முதலாவது தனிஷ்க் கிற்கு எதிரானது. ‘தனிஷ்க் மன்னிப்பு கேள்’ என்று பதிவிட்டு டாடா நிறுவனத்தின்,  இரு வேறு மதங்களைச் சேர்ந்த ஒரு இணைகள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவது போல் வரும் ஒரு நகை விளம்பரத்தை திரும்பப் பெற வற்புறுத்தினான். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நாடு முழுவதும் உள்ள அவர்கள் கடைகளுக்கு முன் ‘மக்களை’த் திரட்டி போராட்டம் நடத்துவேன் என தனிஷ்க் நிறுவனத்தை எச்சரித்தான். இந்த விவகாரம் குறித்து அமித் ஷாவிடம்  கேட்ட போது அவர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிரட்டல்களை கண்டிக்க மறுத்து, ஒரு எல்லைக்குள் நின்று “அதிக செயல் வீரம் கூடாது” என்று அமுக்கமாக கூறி ஒதுங்கிக் கொண்டார்.

சர்மாவின் இரண்டாவது நிகழ்நிலை பரப்புரை மதரசாக்களை எதிர்த்தது.    ‘மதராசாக்களில் தீவிரவாதம்’ என்பது தீபக் சவுராசியா என்ற செய்தி நெறியாளரால் துவக்கப்பட்டது. தீபக் சர்மாவின் தலையீட்டால் அது உடனே பல லட்சக்கணக்கான டிவிட்டர் மறு பதிவுகளையும், விமர்சனங்களையும் பெற்றது.

நிகழ்நிலையில் மதவெறி கருத்துக்களைப்  பரப்புவது மட்டுமல்ல, அவன் நடைமுறையில் இந்துத்துவா ஆதரவாளர்களை திரட்டி, சில நேரங்களில் சிறுபான்மையினர் மீது வன்முறைகளையும் முன்னின்று நடத்தி இருக்கிறான்.

ஹத்ராஸ் விவகாரத்தில் பெரும்பாலான முக்கிய ஊடகங்களும் உத்தர பிரதேச அரசை கேள்வி கேட்க துவங்கின. திடீரென குற்றவாளிகளுக்கு ஆதரவாக வலதுசாரி கும்பல் திரண்டது. அதில் முதல் ஆளாக நின்றவன் தீபக் சர்மா. அவன் களத்தில் இறங்கி. “தாக்கூர் பக்க” கதைகளை அவிழ்த்து விட்டான். வியப்பிற்குரிய வகையில் அவனது காணொளி லட்சக்கணக்கான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான டிவிட்டர் மறுபதிவுகளையும் பெற்றது.

அடுத்த நாள் இந்த “மக்கள் செய்தியாளன்” அங்கு சென்று, அடியாளாக மாறி தனது சொந்த வடிவிலான கதைகளை நடத்தினான். அவனும், அவனது  ஆதரவாளர்களும் வீதியில் இறங்கி,  குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள், அந்தப் பெண்ணின் மரணம் ஆணவக் கொலை என கதைக் கட்டினர். குற்றவாளிக்கும், அந்த பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக  புதிய பொய்யை அவிழ்த்து விட்டான் சர்மா. இதனை இந்துத்துவா துதிபாடிகள் பிடித்துக் கொண்டாலும்,  பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அடியோடு மறுத்து அவர்கள் முகத்தில் கரி பூசினர்.

சதித்திட்டமாகத் திரிப்பது

இதற்கிடையில் சர்மா இந்துத்துவா சூழலுக்கேற்ப அடுத்த திசைதிருப்பலுக்கு அடித்தளமிட்டான். உ.பி. அரசின் உளவுத்துறையின். “வலுவான”  அறிக்கையின்படி சில எதிர்கட்சிகள் ஹத்ராசில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப முயல்வதாக புகாரைப் பரப்பினான். ஏற்கனவே ஹத்ராஸ் நிகழ்வு , இந்தியாவை அவமானப்படுத்தவும், சாதிச் சண்டைகளை ஊக்குவிக்கவும்  நடத்தப்படும் ஒரு பன்னாட்டு சதி என ஒரு அப்பட்டமான பொய்யைப் பரப்பி இருந்தான்.

ஜனநாயகத்தில், பாதிக்கப்பட்டவர்களை எதிர்கட்சியினர் சந்திப்பதும், ஊடகங்கள் அரசின் அக்கறையின்மையை கேள்வி கேட்பதும் இயல்பான ஒன்று‌. இருந்தாலும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங்கின் மீது மையை ஊற்றி.   ” PFI தரகனே திரும்பிப்போ” என கூச்சலிட்டு சர்மா தாக்குதல் நடத்தினான்.

காவல் துறையினர் வேறு வழியின்றி சர்மாவை கைது செய்தனர். அன்று மாலையே ‘சர்மாவை விடுதலை செய்’ என்பது டிவிட்டரில் அதிக பதிவுகளைப் பெற்றது. அவனது “கதாநாயக செயல்களை” பாஜக ஆதரவாளர்கள் பெரிதும் ஆதரித்தனர். அதனால் அவன் விடுதலையும் ஆனான். மறுநாள், # தீபக் சர்மா வருக என்பது டிவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. சஞ்சய் சிங்கைத் தாக்கிய பின், சர்மா,  திக் விஜய் சிங் ஹத்ராசுக்கு வருவதை எச்சரித்தான்.

சில நாட்கள் கழித்து  ஹத்ராசுக்கு செல்லவிருந்த மூன்று முஸ்லீம்கள் உள்ளிட்ட செய்தியாளர்கள் உ.பி. யின் அமைதியை கெடுப்பதற்கான “பன்னாட்டுச் சதியை” நிறைவேற்ற முயன்றதாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதில் கேலிக்குரியது, முஸ்லீம் என்பதாலேயே அவர்களது வாடகைக் கார் ஓட்டுநனரும் கைது செய்யப்பட்டதுதான். சுதர்சன் செய்திகளுக்காக,  சர்மா கொடுத்துள்ள ஒரு பேட்டியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, கலவரங்களுக்கு நிதி உதவி செய்வதாக தெரிவித்தான். முக்தார் அன்சாரியும், அடிக் அகமதும் அமைதியின்மையை ஊக்குவிக்கிறார்கள் என்று உளறினான். அமலாக்கத்துறை இது போன்ற சான்றில்லாத புகார்களை முற்றிலும் மறுத்து விட்ட போதிலும், சில முக்கிய ஊடகங்கள் இவற்றை வெளியிட்டன.  மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்த நூறு கோடி ரூபாய்களும், டெல்லி கலவரத்திற்காக நூறு கோடி  ரூபாய்களும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கொடுத்துள்ளதாக அவன் அள்ளி விட்டான்.

இதற்கு ஒருநாள் முன்பு, ராஷ்டிரிய லோக் தல் தலைவர் ஜெயந்த் சவுதிரி ஹத்ராசில் நுழைய முயன்றதற்காக  உ.பி. காவல்துறையினரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். சிங்கும் அவரது ஆதரவாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டனர். அதனை முன்னின்று நடத்திய சர்மாவும் அவனது கும்பலும் “ஜெயந்த் சவுதிரி ஒழிக” என ஊளையிட்டனர். சர்மா அவர்களை ” கழுகுகள்” என்று கூறி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அவர்களுக்கு நிதி உதவி செய்துள்ளதாகப் புளுகினான்.

” ஒரு பக்க சார்பான”, ” இந்து விரோத” செய்திகளை வெளியிடுவதாக ‘ஆஜ் தக்’ , ‘ABP செய்தி நிறுவனங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் மற்றொரு காணொளியும் வேகமாகப் பரவியது. தீபக் தளத்தில் இருக்கும் காணொளிகள்,  ஹத்ராசுக்கு பின் உள்ள உண்மைகள் என்ற பெயரில்  கபில் மிஸ்ரா போன்ற பாஜக தலைவர்களால் பகிரப்பட்டது. வெகு விரைவில் சில முக்கிய ஊடகங்கள் இந்த புனைக்கதையை ஏற்று அந்த சம்பவம் ஆணவக் கொலை என ஒத்து ஊதின. ABP செய்தி, தீபக்,  ஹத்ராசில் ஏற்கனவே உள்ள பதட்டமான சூழலை மேலும் மோசமாக்குவதாக குற்றம் சாட்டியது.

வெறுப்புக் தாக்குதல்கள்

இந்த வருடம் ஜனவரி மாதத்தில், தீவிரவாதியாக மாறிய ஒரு இளைஞன் போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்டான்.  அவன் சர்மாவுடன் இருக்கும் நிழற்படங்கள் வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அவனது நெருங்கிய நண்பன் அல்-ஜசீரா வுக்கு கொடுத்துள்ள பேட்டியில் அவன் சர்மாவை தலைவனாக ஏற்றுக் கொண்டவன் என கூறினார். 2018 ம் ஆண்டு கிரேட்டர் நாய்டாவில், சாரதா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிய மாணவர்களுக்கும், இந்திய மாணவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சர்மாவின் பெயரும் அடிப்பட்டது. “ஆப்கான் மாணவர்கள் பல்கலைக்கழகத்தை குட்டி தாலிபானாக மாற்ற முயல்வதாக” கூறி நெருப்பைப் காக்கும் சர்மாவின் பேச்சுக்கள்  அடங்கிய காணொளிகள் சுற்றுக்கு விடப்பட்டன. மாவட்ட நிர்வாகம் அவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாகக் கூட கூறியது. ஒரு நாள் நடந்த  சச்சரவிற்குப் பின்,  சர்மா பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து வன்முறையை நடத்தியதாக புகார் உள்ளது.

இந்த தாக்குதலில் ஆப்கானியர்கள் என நினைத்து தவறுதலாக சில காஷ்மீரி மாணவர்களும் தாக்கப்பட்டனர். சில மாதங்களுக்குப் பின், தாக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரைக் காணவில்லை. அவர் தீவிரவாத குழுவில்  சேர்ந்து விட்டதாகக் கூறப்பட்டது‌ . தங்களைத் தாக்கியவர்களை பழி வாங்கப்  போவதாக அந்த இளைஞன் வெளியிட்ட காணொளி வலைதளங்களில் பரவியது‌.  இறுதியில் அவர் காவல்துறையிடம் சரணடைந்தார்.

2019ல், குடிமக்களுக்கான நீதியும் அமைதியும் (CJP) என்ற அமைப்பு தீபக் சர்மாவின் வன்முறையைத் தூண்டும் காணொளிகள் மற்றும் பதிவுகள் குறித்த கண்டன கடிதத்தை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும், முகநூல் நிறுவனத்திற்கும் சமூகவலை தளம் மூலம் வெளியிட்டது‌. அதனைத் தொடர்ந்து அவன் முகநூலில் தடை  செய்யப்பட்டான். அவனது ஒரு காணொளியில், “ஒவ்வொரு தெருவிலும், ‘அவர்களது’  தவறான முயற்சிகள் அதிகமாகி வருகின்றன. அவர்கள் தலை வெட்டப்பட வேண்டும். நமக்கு இன்னொரு கோத்ரா தேவை” என பாடியுள்ளான்.

ராஜஸ்தான் கொலைகாரனுக்கு ஆதரவு

சம்புலால் ரிகார் என்பவன் ஒரு வங்காள முஸ்லீம் தொழிலாளியை நிழற்பட கருவி முன்னிலையில் கொன்று தீயிட்டுக் கொளுத்தியதை முதன் முதலில் ஆதரித்த இந்துத்துவா வெறியன் சர்மா.

“நமது மதத்தைக் காப்பதற்காக  ஆயுதம் ஏந்திய இத்தகைய இந்து வீரர்களுக்கு நாம் ஆதரவாக நிற்க வேண்டும். ரிகார், சிவனுக்கு ஒப்பானவன்” என ஆர்ப்பரித்தான் சர்மா. அவனும் ரிகாரும் விவாதிக்கும் 40 நிமிட காணொளி இஸ்லாமியருக்கு எதிரான அவதூறுகளையும், பொய் செய்திகளையுமே கொண்டுள்ளது. அவனுடைய வழக்கறிஞர், கொல்லப்பட்ட அஸ்ரஃபுல்,  பங்களா தேஷிலிருந்து இங்கு வந்து குடியேறியவர் என்றும் கூட கூறியுள்ளார். இந்த வழக்கறிஞர் இலவசமாக வாதாடுவதால் அவருக்கு தனது ஆதரவாளர்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் சர்மா கேட்டுள்ளான். முஸ்லீம் தொழிலாளியை கொன்றவனுக்கு ஆதரவாக பேசியது மட்டுமல்ல, கும்பலாகச் சென்று அவன் குடும்பத்தினருக்கு நிதியும் சேகரித்து உள்ளான். இதற்கும் ஒரு நிகழ்நிலை பரப்புரையை நடத்தியுள்ளான். அந்த வேளையில், இத்தகைய அருவெறுக்கத்தக்க செயல்களைக் கண்டு பொறுக்க முடியாத, அன்றைய ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே அரசு (பாஜக) அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கியது‌‌.

அக்பர் சாலையிலிருந்து அடல்சாலை வரை

2019ல், தீபக் சர்மாவும் , ராகினி திவாரி எனும் மற்றொரு இந்துத்துவா தீவிரவாதியும் டெல்லிக்குச் சென்று அக்பர் சாலையை அடல் பிகாரி வாஜ்பாய் சாலை என மாற்ற வேண்டும் என கோரினர். இதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்நிலை விவாதங்களும், முக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட முதன்மை நேரலை விவாதமாக மாறி முஸ்லீம் ஆட்சியாளர்களைப் பற்றியும் பேசப்பட்டது.

ராகினி திவாரியுடனான சர்மாவின் தொடர்பு தற்செயலானதல்ல. திவாரியும் சர்மாவைப் போன்றே அனைத்து வகையிலும் செயல்பட்டவர்தான். டெல்லி கலவரத்தின் போது இந்துக்களை, முஸ்லீம்களை தாக்கி கொல்லுமாறு எரியூட்டும் உரைகளை நேரடியாக கைப்பேசி நிழற்பட கருவியில் பேசியவர்தான். குருகிராமில் பொதுவெளியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதை எதிர்த்து, அங்கேயே அமர்ந்து  போராடியவர்களுடன்  அமர்ந்து, யதி நரசிங்னந்த் சரசுவதி என்ற இந்துத்துவா வாதியை விடுதலை செய்யவும், பொதுவெளி தொழுகைக்கு தடை செய்யவும் கோரியவர்தான்  ராகினி‌.

இந்த நிகழ்வு ஊடகங்களால் பெரிய அளவில் பேசப்பட்டு, சிறுபான்மையினர் மீதான விவாதங்களுக்குச் சோறு போட்டது. குருகிராமில் தொழுகையை அவமானப்படுத்திய, கேலி செய்த, இடையூறு செய்த அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தீபக், மூன்று நபர்களை சுட்டிக்காட்டி ஒரு காணொளியை வெளியிட்டான். அதில் முஸ்லீம்களை அவதூறாகப் பேசி அவர்களை தேசத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் என கூறியுள்ளான்.

2018 ல், ஜனவரி 26 அன்று சந்தன் குப்தா என்பவர் கொலை செய்யப்பட்ட பின் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள குடியிருப்புகளிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் என்று விஎச்பி  தலைவர் சாத்வி பிராச்சி கோரினார். காஸ்கன்ஞ் வன்முறைக்கு ஒரு வருடம் கழித்து சாத்வி பிராச்சியும் சர்மாவும் தங்கள் ஆதரவாளர்களுடன் 144தடை உத்தரவு இருந்த போதும் வலுக்கட்டாயமாக அங்கு சென்று ஒரு ஊர்வலத்தை நடத்தினர். இந்த சர்மா தெலுங்கானாவை சேர்ந்த ராஜா சிங் என்ற பாஜக தலைவருடன் சேர்ந்து காஸ்கன்ஞ்சிற்கு மீண்டும் சென்று தன் இரங்கலைத் தெரிவித்தான். அப்போது நடந்த கூட்டத்தில்,  முஸ்லீம்களைப்  பற்றிய அவதூறுகளும், ஆபாச வார்த்தைகளையும் நிரம்பிய உரைகள் காணொளியில் உள்ளன. சிங்கும் , சர்மாவும் மிக இழிவான மொழியில் முஸ்லீம்களை பேசியது காணொளியில் பதிவாகி உள்ளது.

தீபக் சர்மா போன்றவர்களை, ஆளுங்கட்சியின் கோட்பாட்டிலிருந்து வெகு தூரம் தள்ளி  இருப்பதால், பொதுவாக ” விளிம்பில் இருப்பவர்கள்” என ஒதுக்கி விடுவது வழக்கம். எனினும் முறையாக பராமரிக்கப்படும் இயந்திரமான இந்துத்துவாவை பார்ப்பவர்கள் பலரும், அதற்குள்ளே இது போன்றவர்கள் எப்படி செயலாற்றி ஆளுங்கட்சியுடன் சேர்ந்து மேலே வளர்கிறார்கள் என பார்க்காமல் ஒதுக்கி விடுகிறார்கள்.  இவர்களின் உதவியுடன் “தன்னெழுச்சியான” நிகழ்வுகளை உருவாக்கி பின் அவற்றை பயன்படுத்தி, அதன் மூலம் வருபவர்களை மையத்துடன் இணைத்துக் கொள்வார்கள். அவர்கள் எப்போதும் பல நாட்களுக்கு ஊடகங்களில் விவாதிக்கப்படும் வகையில் அதனை அமைப்பார்கள்.

இது போன்ற தாக்கத்தை உருவாக்கும் நபர்கள் மற்றும் அமைப்புகள் அவ்வப்போது தலைகாட்டி விட்டு பிரச்சினைகளுக்குப் பின்னால் திரைமறைவில் போய்விடுவார்கள். அவர்கள் பங்கை செய்து முடித்ததும், ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய பாஜக தலைவர் அதனை எடுத்துக் கொள்வார். உடனே அது முக்கிய ஊடகங்களும், தகவல் தொழில்நுட்ப குழுவும் இந்த “தன்னெழுச்சி” நிகழ்வுக்கும், வெறுக்கத்தக்க நிகழ்நிலை அட்டூழியத்திற்கும் இறுதி வண்ணம் பூசுவார்கள்.

இது போன்ற நூற்றுக்கணக்கானவர்களும் , எண்ணிலடங்கா ஆதரவாளர்களும் இந்தியா முழுவதும் உள்ளனர். பலருக்கும் அவர்களது செயல்முறைகளில் உள்ள ஒற்றுமை தற்செயலானது போல் தோன்றும். எனினும் கூர்ந்து கவனித்தால்,  சமூக பதட்டத்திற்கும், சாதி வாரியாக ஒன்றுபடுவதற்கும், வன்முறைக்கும் கூட அவர்களே அதன் ஒரு பகுதியாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகும்

(www.thewire.in இணையதளத்தில், டெல்லியை சேர்ந்த அலிஷான் ஜஃப்ரி என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்