Aran Sei

அயோத்தியில் உயரமான ராமர் சிலை – நிலத்தையும் வீடுகளையும் இழக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள்

Image Credit : caravanmagazine.in

னவரி 2020-ல் உத்தரபிரதேச த்தின் அயோத்தி மாவட்டத்தில் உள்ள மஜா பர்ஹடா (Majha Barhata) கிராம பஞ்சாயத்தில் வசிப்பவர்கள் ராமனின் ஒரு பிரம்மாண்ட சிலையை நிறுவுவதற்கு தங்கள் கிராமத்திலிருந்து நிலம் கையகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதை கண்டறிந்தனர்.

இவர்கள் 2019 நவம்பரில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி – ராம் ஜென்ம பூமி நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 2020 ஜனவரியில், அயோத்தி மாவட்ட நீதிபதி அனுஜ் குமார் ஜா ராமர் சிலையை நிறுவ மஜா பர்ஹடாவில் 85.977 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுத்தப் படுவதாக வெளியிட்ட அறிவிப்பு அவர்கள் மகிழ்ச்சியை கவலையாக மாற்றிவிட்டது.

ஆகஸ்ட் மாதம் ஏழு அல்லது எட்டு அதிகாரிகள் கிராம பஞ்சாயத்திற்கு வந்து ராமர் சிலையை நிறுவ, அறிவிப்பில் வரையறுக்கப்பட்டுள்ளதை விட அதிக நிலம் தேவைப்படும் என கூறியதாக அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் கூறியதைக் கொண்டு பார்க்கையில் பஞ்சாயத்தில் உள்ள நியூர் கா பூர்வா, நியூர்கா பூர்வ தலித் பஸ்தி, தர்மு கா பூர்வா, சோட்டி முஜ்னியா ஆகிய நான்கு பகுதிகளையும் முழுமையாக உள்ளடக்கியதாக அது இருக்கும் என்கின்றனர் அவர்கள்.

Image Credit : caravanmagazine.in
இங்கு குடியிருப்பவர்களில் மிக அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த விவசாயத் துறைத் தொழிலாளர்கள். இவர்கள் தங்கள் நிலத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். – Image Credit : caravanmagazine.in

அயோத்தி தீர்ப்புக்கு ஏறத்தாழ ஒரு ஆண்டுக்கு முன்பு உத்தர பிரதேச முதல்வர் அஜய் சிங் பிஷ்ட் பிரம்மாண்ட ராமர் சிலை வைக்கும் திட்டத்தை அறிவித்தார். முதலில் இதற்கு அயோத்தியில் உள்ள மஜா என்ற இன்னொரு கிராமம்தான் தேர்வு செய்யப்பட்டது. உள்ளூர் மக்கள் எதிர்த்ததாலும், அயோத்தியின் தொழில்நுட்ப தணிக்கைக் குழு எதிர்மறை அறிக்கையை கொடுத்ததாலும் அது நடக்கவில்லை. ஜூலை, 2019-ல் 251 அடி உயரமுள்ள இந்த ராமர் சிலைதான் உலகிலேயே உயரமான சிலையாக இருக்கும் என ஊடகங்கள் அறிவித்தன.

ஆதித்தியநாத் என்று பரவலாக அறியப்படும் அஜய் சிங் பிஷ்ட் இந்த சிலை வைக்கும் வளாகம் சுற்றுலா மையமாக இருக்கும். அதில் மின்னணு அருங்காட்சியகம், விளக்க மையம், நூலகம், வாகன நிறுத்துமிடம், உணவகங்கள் ஆகியவை இருக்கும். கடவுள் ஸ்ரீராமன் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட நில வடிவமைப்பில் அது இருக்க வேண்டும் என அவர் கருதினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மஜா பர்ஹடாவின் ஒரு பகுதி நிலம் தேசிய நெடுஞ்சாலைக்கும், நீர்ப்பாசனத் துறையின் ஒரு குளத்துக்கும் இடையில் உள்ளது என ஜனவரி, 2020 அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது‌. இந்த நிலம் “பரஸ்பர உடன்பாடு” மூலம் வாங்கப்படும் என்று அது கூறுகிறது. ஆனால் கிராம மக்கள் இதில் பரஸ்பர உடன்பாடு இல்லை குழப்பம்தான் உள்ளது என்கின்றனர்.

ஆகஸ்ட் மாதம் வந்த அதிகாரிகள் அறிவிக்கப்பட்ட 87 ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலம் எடுக்கப்படும் எனக் கூறினாலும் அது தொடர்பான எந்த ஆவணங்களையும் காட்டவில்லை. அவர்களை அடையாளம் காட்ட தங்களால் முடியாது என்றாலும் அவர்கள் நில அளவைத் துறையிலிருந்து வந்தவர்கள் என்பது தெரியும் என்கின்றனர் மக்கள்.

இது ஆயிரம் குடும்பங்களை பாதிக்கும் என்கிறார், இந்த நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள இந்தப் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் குமார் யாதவ். இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைகள், விவசாயத்துறையில் வேலை செய்பவர்கள் என்கிறார் அவர்.

“ராமனுக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டும் போது இந்தச் சிலைக்கு என்ன அவசியம் வந்தது? விவசாயிகளை அவர்களுடைய தொழிலிருந்து வேரோடு பிடுங்குவது சரியா?” என்று கேட்கிறார் யாதவ். “நாங்கள் நீர் சமாதி ஆவோம்”- எங்களை நாங்களே நீரில் மூழ்கடித்துக் கொள்வோம் – ராமனைப் போலவே. ஆனால் எங்கள் நிலத்தைத் தர மாட்டோம்.” என்கிறார் அவர்.

சஞ்சய் குமார் யாதவ் என்ற இன்னொரு விவசாயியும் ஏழை மக்களை வெளியேற்றிவிட்டு இங்கு ராமர் சிலையை நிறுவுவது தேவையில்லாதது என்றார்.

நாங்கள் ஏற்கனவே ஒடுக்கப்பட்டவர்கள். எப்படி இருந்தாலும் பிற்படுத்தப்பட்டவர்களும் விவசாயிகளும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. விவசாயிகளுக்கு அவர்களின் கரும்பிற்கு பல ஆண்டுகள் கழித்தே பணம் தரப்படுகிறது.” என்கிறார், அவர்.

மஜா பர்ஹடா, பாப்ரி மஸ்ஜித்- ராம் ஜென்ம பூமியிலிருந்து பத்து கி.மீ. தூரத்தில் உள்ளது. எல்லோருமே பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை தீவிரமாக ஆதரித்தோம்.

Image Credit : caravanmagazine.in
கிராமத்து வயலில் வேலை செய்யும் விவசாயி – Image Credit : caravanmagazine.in

“எனக்கு 12 வயதாக இருக்கும் போது கர சேவகர்கள் அல்லது மத தன்னார்வலர்கள் பாபர் மசூதியை இடிக்க 1991ல் அயோத்தி வந்தனர். எங்கள் பள்ளி பல மாதங்களுக்குத் தொடர்ந்து மூடியே கிடக்கும். நாங்கள் அயோத்திக்கு முழக்கமிடுவதற்காகச் செல்வோம். அப்போது ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் எங்கள் கிராமங்களில் தங்கி இருந்தனர். அவர்கள் இங்கு ஓய்வெடுப்பார்கள். நாங்கள் அவர்களுக்கு உணவு அளிப்போம். எந்த கரசேவகரும் பட்டினியோடு தூங்கக் கூடாது என நாங்கள் நினைத்தோம்.

கடந்த நவம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது, மேளதாளங்கள் முழங்கின. நாங்கள் வண்ணப் பொடி தூவி கொண்டாடினோம். ஆனால் இப்போது கோவில் கட்டப்படுகிறது. நாங்கள் அழியப் போகிறோம். இந்த சிலைக்காக எங்கள் வீட்டையும் நிலத்தையும் கொடுத்து விட்டால் எங்கள் குழந்தைகள் என்ன செய்வார்கள்? அவர்கள் எப்படி வாழ்வார்கள்?” என்று கேட்கிறார் யாதவ்.

சிலைக்கு எதிரான போராட்டத்தை அரவிந்த் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரிகிறது. அறிவிப்பு வந்த உடனே அவர் உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளார். 2020 ஜனவரி 28-ம் தேதியன்று, அலகாபாத் உயர்நீதிமன்றம், 2013-ம் ஆண்டின் “நில கையகப்படுத்துல் புனர்வாழ்வு, மீள் குடியேற்றச் சட்டத்தில்” கூறப்பட்டுள்ள நியாயமான இழப்பீடு, வெளிப்படைத் தன்மைக்கான உரிமையின்படியும் அதன்தொடர்ச்சியாக இதே விவகாரத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளபடியும் செயல்படுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

2019, ஜூலை மாத சட்டத்தின்படி, “ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால், பதிலளிப்பவர்கள் மேற்குறிப்பிட்ட 2013 ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் கூறியுள்ளபடி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறுகிறது.

2013-ம் ஆண்டு சட்டம், நிலத்திற்கான இழப்பீடு சந்தை மதிப்பு, நிலத்தை எடுப்பது அதன் உரிமையாளரின் வருவாயை எந்த அளவு பாதிக்கும் போன்ற பல காரணிகளைக் கணக்கில் கொண்டு முடிவு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. இதனடிப்படையில், “எங்களுக்கு வீட்டிற்கு ஈடாக வீடும், நிலத்திற்கு ஈடாக நிலமும் தரப்பட வேண்டும். மேலும் நிலம் சொந்தமாக இல்லாதவர்களுக்கு வேலை தரப்பட வேண்டும்.” என்கிறார் அரவிந்த்.

பிப்ரவரி 14-ம் நாள் இந்த விவகாரத்தை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதற்காக அரவிந்த் மற்றும் மேலும் 14 பேர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது அரசு. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் வேறு 200 பேரும் 144 தடை உத்தரவின் குற்றவியல் நடைமுறைவிதிகளை மீறி போராட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி கூடியிருந்தவர்கள் மீது குறிப்பிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.

அரவிந்த் மீதும் அவ்தேஷ்குமார் சிங் என்ற மற்றொருவர் மீதும் இரண்டாவது முதல் தகவல் அறிக்கையும் செப்டம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் மீதும், அமைதியை குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவதூறு செய்வது, தாக்குதல் அல்லது கடுமையான ஆத்திரமூட்டும் குற்றவியல் செயல்களை செய்தல், அரசுப் பணியில் ஈடுபட்டிருப்பவரை தாக்குதல் அல்லது குற்றவியல் செயல் மூலம் பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தனது கடமையை செய்ய விடாமல் தடுக்க தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துவது என்ற நான்கு இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை தன்னிடம் “உன்னை நிர்வாகத்தின் மூலம் முடக்கி, என்கவுண்டரில் கொன்று விடுவோம்.” என் மிரட்டியதாக அரவிந்த் கூறுகிறார்.

அங்கு வசிப்பவர்கள் அவர்கள் பல பத்தாண்டுகளாக இங்கே வாழ்வதாகக் கூறுகின்றனர். தங்கள் முன்னோர்கள் ஆங்கில அரசிடமிருந்து இந்த நிலங்களைப் பெற்றதாகவும், இதுநாள் வரை நிலம் தொடர்பாக இங்கு வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்சனையையும் நிர்வாகம் தீர்த்து வைக்கவில்லை எனவும் அரவிந்த் கூறுகிறார்.

“1984 லிருந்து எங்கள் நிலப்பதிவு நடவடிக்கை நிலுவையில் உள்ளது. பஸ்தி மாவட்டத்தில் உள்ள சீதாராம்பூர் கிராமம் எங்கள் கிராமத்தை அடுத்து உள்ளது. இன்னும் எல்லை வரையறுக்கப்படவில்லை. எப்படி அவர்களால் நிலத்தை எடுக்க முடியும்? ” என்கிறார் அவர்.

Image Credit : caravanmagazine.in
மஜா பர்ஹடா கிராமத்தின் சமார் சமூகத்தைச் சேர்ந்த விமலா தேவி என்பவர் தனது வீட்டின் நிலப்பட்டாவைக் காட்டி, “அவருக்கு (ஆதித்ய நாத்) குழந்தைகள் இல்லை. அதனால்தான் அவருக்கு இந்த பட்டாக்களின் மதிப்பு தெரியவில்லை.” என்கிறார் – Image Credit : caravanmagazine.in

1950-களில் நிலமுள்ள தனிநபர்களும், குழுக்களும் தங்கள் நிலங்களை, நிலமில்லாதவர்களுக்கு வழங்கும் ‘பூமிதான இயக்கத்தின்’ பலனாக இந்த நிலம் தங்களுக்கு கிடைத்ததாக அங்குள்ள தலித் மக்கள் பலரும் கூறுகின்றனர். இந்த நில பகிர்வு அடுத்து வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது.

அவ்வாறு நிலம் பெற்றவர்களில் சமார் சமூகத்தைச் சேர்ந்த ராம்ஜித் கௌதமும் ஒருவர். “1976 ல் இந்த நிலத்திற்கான பட்டா அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் தரப்பட்டது. மோடி அரசு அதை ரத்து செய்ய விரும்புகிறது. நிர்வாகம் ‘இந்த தலித்துகளால் எதுவும் செய்ய இயலாது’ என நினைக்கிறார்கள்.” என்கிறார் ராம்ஜித்.

அரசு உரிய இழப்பீடு இல்லாமலே இவர்களை இந்த நிலங்களை விட்டு வெளியேற்றிவிடலாம் என்கிறார் அவர். இது சாத்தியம்தான். ஏனெனில் அவர்கள் உண்மையாக பணம் கொடுத்து இவற்றை வாங்கவில்லை, பூமிதான இயக்கத்தில் நன்கொடையாகக் கிடைத்தது என்கிறார் அவர். அவர்கள் “இதை இலவசமாக எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இது மேல்சாதியினர் ஆட்சி. அவர்கள் எங்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதில்லை. அவர்கள் சமார்ளையும், யாதவர்களையும் விரட்ட விரும்புகிறார்கள்,” என்கிறார் ராம்ஜித்.

ஏழை மக்களை இடம்பெயர செய்து விட்டு மஜா பர்ஹடாவில் ராமன் சிலை அமைப்பது தேவையற்றது என்கின்றனர் அந்த மக்கள். அவர்களில் ஒருவரான கரும்பு விவசாயி சஞ்சய் குமார் யாதவ், “இப்போது கோவில் கட்டப்படுவதால் சிலை நிறுவுவதில் எந்த நியாயமும் இல்லை. அதை யாரும் வணங்கப் போவதும் இல்லை. அவருடைய முகம் யாரும் சரியாக பார்க்க முடியாத உயரத்தில் இருக்கும்.” என்று கூறுகிறார்.

சிலையை நிறுவ பல சாத்தியமான இடங்களை நிர்வாகம் புறக்கணித்து விட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். நிர்வாகத்திற்கு நிலம் தேவை என்றால் முதலில் சாமியார்களிடமும் அவர்களுடைய ஆதரவாளர்களிடமும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை எடுத்துக் கொள்ளட்டும். உங்களுக்கு நிலம் வேண்டுமென்றால் மடங்கள் எங்களை விட அதிக நிலங்களை வைத்துள்ளன” என்கிறார் அரவிந்த்.

“அயோத்தியாவில் அகாதாக்கள்-சந்நியாசிகள்- நிறைய நிலங்களை வைத்திருப்பது தெரியும் அவை போதாது என்றால் எங்கள் நிலங்களைத் தருகிறோம்.” என்று அரவிந்த் மேலும் கூறுகிறார். “அருகில் ஒரு ஆற்றங்கரை உள்ளது அங்கு காலியான இடம் உள்ளது. அங்கே அவர்கள் தாராளமாக சிலையை வைக்கலாம்” என்கிறார் அனாரா தேவி யாதவ்.

நிர்வாகத்திடம் தெளிவான தகவல் தொடர்பு இல்லாதது இங்கு வசிப்பவர்களின் கவலையைத் தூண்டுவதாக உள்ளது. நிர்வாகத்திலிருந்து ஒருவரும் எங்களிடம் பேசுவது கூட இல்லை, வீட்டையா, நிலத்தையா அல்லது எதை எடுக்கப் போகிறார்கள் என கூறுவது இல்லை,” என்கிறார் அனாரா.

“அவர்கள் எங்களோடு பேசுவது இல்லை. வயதானவர்கள் அவர்களிடம் பேசினாலும் அவர்களைத் திட்டி, விரட்டி அடிக்கின்றனர்,” என்கிறார் அவர்.

நிர்வாகத்தின் திட்டம் குறித்து ஏராளமான குழப்பங்கள் உள்ளன என்று மீண்டும் வலியுறுத்துகிறார் சஞ்சய் “சில நேரங்களில் அவர்கள் எங்கள் விவசாய நிலங்களை எடுத்துக் கொள்ளப் போவதாகக் கூறுகின்றனர். சில சமயம் நிலம், வீடு இரண்டையும் எடுத்துக் கொள்ளப் போவதாகக் கூறுகின்றனர். எங்கள் வீடுகளை எடுக்கப் போகிறார்களா அல்லது நிலங்களை எடுக்கப் போகிறார்களா என புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.” என்கிறார் சஞ்சய்.

குடியிருப்பவர்களின் கவலையை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. “இது மேல்சாதியினருக்கான அரசு” என்கிறார் விமலா. குடியிருப்பவர்கள் தங்கள் நிலத்திற்கு என்ன நடந்தாலும் எதுவும் கூறமுடியாது.

அதிகாரிகள் நிலத்தை அளக்க வந்த போது, “நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் வீட்டை அளக்கக் கூடாது என கையைக் கட்டிக் கொண்டு நின்றனர்.” என்று அனாரா கூறுகிறார். கடந்த ஆண்டு மஜா பர்ஹடா அயோத்தி மாநகராட்சியின் ஒரு பகுதியானது. “யாரிடமும் கேட்கவில்லை. வலுக்கட்டாயமாக மாநகராட்சியின் பகுதியாக்கப்பட்டது,” என்கிறார் அவர்.

நாங்கள் மாவட்ட நீதிபதி ஜா அவர்களுக்கும், அயோத்தியாவின் காவல்துறை துணைத்தலைவர்/ உயர் காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் குமாருக்கும் மின்னஞ்சல் அனுப்பினோம். ஆனால் பதிலே வரவில்லை.

“மஜா பர்ஹடா வில் வாழ்வது எங்கள் குடும்பத்தினருக்கான போராட்டம்,” என்கிறார் அனாரா. எங்கள் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்படவில்லை. இதுவரை மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இந்த அரசு எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. வெளிநாட்டினர் இங்கே சுற்றுலாவாக வரலாம் அல்லது கோவிலை கட்டுங்கள் அல்லது மசூதியைக் கட்டுங்கள். அதனால் எங்களுக்கு என்ன பயன்?” என்று அவர் கேட்கிறார்.

குடும்பத்தினருடன் நீரில் மூழ்குவதே இதைவிட நல்லது. அதற்குப் பிறகு அவர்கள் இந்த பிரம்மாண்ட சிலையை வைக்கட்டும்,” என்ற அனாராவின் விரக்தி வார்த்தைகள் மஜா பர்ஹடா வில் வாழ்வதற்கான உறுதியை சிறிதும் அசைக்கவில்லை. “நான் இந்த கிராமத்திற்கு வாழ்க்கைப்பட்டு வந்துள்ளேன். இங்கேயே இறந்து போவேன்,” என்கிறார் அனாரா.

மற்றொரு குடியிருப்பாளர் சிவ்நாத் யாதவ் என்பவர், “நாங்கள் மூன்று தலைமுறைகளாக இந்த மஜா பர்ஹடாவில் இந்த குடிசையில் வாழ்ந்து வருகிறோம். அதையும் விட்டு விட்டால் பிறகு என்ன மிஞ்சும்?” என்று கேட்கிறார்.

“சிலையால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஏதாவது தரிசு நிலத்தில் திட்டமிட்டிருந்தாலாவது எங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது வேலை கிடைத்திருக்கும்‌. வாழ்க்கைக்கு சிறிது சம்பாதிக்கலாம். மோடியிடமிருந்தோ, யோகியிடமிருந்தோ எங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. எங்களை வீடற்றவர்களாக்கிப் பார்க்க விரும்புகிறார்கள். நான்கு பகுதிகளிலும் உள்ள மக்களை அகற்றிவிட்டு எவ்வளவு வளர்ச்சியை நீங்கள் கொண்டு வந்து விட முடியும்? என்கிறார் சிவ்நாத் யாதவ்.

“நாங்கள் இந்த அயோத்தியின் பூர்வீக குடிகள் இல்லையா? நாங்கள் ராமனை வணங்குவதில்லையா? நாங்கள் எல்லோரும் உயிரை விடுவோம் துறப்போம். எங்கள் வீட்டை விட்டுப் போக மாட்டோம்,” என்கிறார் விமலா.

– சுனில் காஷ்யப், சாஹித் தந்ரே

caravanmagazine.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்