Aran Sei

தொழிலாளர், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் இளம் பெண் – காவல் நிலையத்தில் சித்திரவதை

Image Credit : thewire.in

தொடர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தின் போது அரசால் கைது செய்யப்பட்டு மிரட்டப்பட்ட பலரில் 23 வயதான நோதீப் கவுர் ஒருவர். அவர் ஒரு தலித் பெண்ணும் தொழிற்சங்க ஆர்வலரும் ஆவர். நவம்பர் தொடக்கத்தில் இருந்தே புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார்.

ஜனவரி 26 அன்று டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் ஒரு பகுதியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக, செய்யப்பட்ட பரவலான கைதுகளுக்கு வெகு நாட்களுக்கு முன்பே, ஜனவரி 12 அன்று அவர் கைது செய்யப்பட்டார். இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307 – கொலை முயற்சி உட்பட பல குற்றச்சாட்டுகள் அவர் சுமத்தப்பட்டன. எனவே, நோதீப்பிற்கு இரண்டு முறை பிணை மறுக்கப்பட்டது. பிணை வழங்குவதற்கான அடுத்த விசாரணை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்குள் அவர் 26 நாட்கள் காவலில் இருந்திருப்பார்.

பஞ்சாபின் முக்த்சர் சாஹிபைச் சேர்ந்த நோதீப் கவுர், சில ஆண்டுகளுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக சேர்ந்தார். விவசாயிகள் போராட்டத்தில் சேருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, குண்ட்லியில் உள்ள FIEM இண்டஸ்ட்ரீஸ் என்ற பல்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார்.

“எங்கள் குடும்பம் எதிர்கொள்ளும் பொருளாதார கஷ்டத்தின் காரணமாக அவர் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார், அவர் விரைவில் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கவிருந்தார்.” ” என்று நோதீப்பின் அக்கா ராஜ்வீர் கவுர் கூறினார். ”

நோதீப் செயல்பாட்டாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் முக்த்சரில் உள்ள பஞ்சாப் பயிரிடுவோர் சங்கத்தில் இணைந்துள்ளனர். அவரது அக்கா ராஜ்வீர் கவுர் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் செயல்பாட்டாளர், பகத்சிங் மாணவர் முன்னணியுடன் தொடர்புடையவர். நோதீப்பும் குண்ட்லியில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகளின் சங்கமான மஜ்தூர் அதிகார் சங்கதனில் (எம்.ஏ.எஸ்) சேர்ந்தார்.

தி வயருடன் பேசிய நோதீப்பின் தாய் ஸ்வர்ன்ஜித் கவுர், “நாங்கள் பொருளாதார ரீதியாக வசதியானவர்கள் இல்லை. எனவே அவள் குண்ட்லியில் வேலையில் சேர்ந்தாள். நடந்து கொண்டிருக்கும் [விவசாயிகள்] போராட்டத்தில் அவள் தீவிரமாக ஈடுபட்டாள். அவளுடைய அப்பாவும் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் இப்போது அவர் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு, அவர் ஒரு ஓட்டுனராக வேலை செய்கிறார். ” என்று கூறினார்

விவசாயிகள், தொழிலாளர்கள் ஒற்றுமை

சிங்கு எல்லையில், நோதீப் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஒன்றிணைத்தார், குண்ட்லி எல்லையில், ‘கிசான் மஜ்தூர் ஏக்தா ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் ஒலித்தது, எம்.ஏ.எஸ்-ம் பிற தொழிலாளர் சங்கங்களும் விவசாயிகள் போராட்டத்தில் கைகோர்த்தன.

“விவசாயிகளும் தொழிலாளர்களும் பிரிக்க முடியாதவர்கள். தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்கிறார்கள், விவசாயிகள் வயல்களில் உற்பத்தி செய்கிறார்கள்,” என்று கவுர் ஒரு நேர்காணலில் கூறினார். அது அவர் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அது படமாக்கப்பட்டது. “அரசாங்கம் எங்களையும், எங்கள் வேலையையும், எங்கள் வாழ்வாதாரத்தையும் விற்று பணம் ஈட்டுகிறது” என்று அவர் கூறினார்.

“தினமும் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டக் களத்திற்கு இடத்திற்கு வருகிறார்கள்,” என்று ராஜ்வீர் கூறினார்.

ஹரியானா அரசும் குண்ட்லி முதலாளிகள் சங்கமும் (KIA) தொழிலாளர் சங்கமான MAS -ஐ பிரச்சினைக்குரியதாகப் பார்த்தன. மேலும், நோதீப் ஏற்கனவே அங்குள்ள தொழிற்சாலை முதலாளிகளுடன் முரண்பட்டிருந்தார் என்கிறார் ராஜ்வீர் கவுர்.

MAS-ன் உறுப்பினர்கள் என்ற வகையில், நோதீப் அவரது தோழர் சிவக்குமாருடன் இணைந்து முதலாளிகள் சங்கமான KIA தொழிலாளர்களை தொடர்ந்து ஒடுக்குவதை எதிர்த்துப் போராடி வந்ததாக நோதீப்பின் அக்கா ராஜ்வீர் தி வயரிடம் தெரிவித்தார்.

“என் தங்கையும் அவரது அமைப்பும் குண்ட்லியில் உள்ள தொழிற்சாலை முதலாளிகள் கூட்டமைப்புக்கு எதிராக நீண்ட காலமாக போராடி வருகின்றனர்” என்று ராஜ்வீர் கூறினார். “தொழிலாளர்களுக்கு தர வேண்டிய நிலுவைகள், பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது, தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் எழுப்பினர்.”

தொழிற்சாலை முதலாளிகள் கூட்டமைப்பு, “துரித எதிர்வினை படை” என்று அழைக்கும் (கியூஆர்டி) மூலம் குண்ட்லியின் தொழிலாளர்கள் தொடர்ச்சியான அடக்குமுறைகளை எதிர்கொள்கிறார்கள் என்று ராஜ்வீர் மேலும் விளக்கினார்.

“கியூஆர்டி இன் ஒரே நோக்கம் போராட்டங்களில் ஈடுபடாத வகையில் தொழிலாளர்களை அச்சுறுத்துவதேயாகும். குண்ட்லியின் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான ஒற்றுமையை கியூஆர்டி குறிவைத்தது. தொழிலாளர்கள் போராட்டத்தில் சேரத் தொடங்கியபோது, தொழிற்சாலை உரிமையாளர்கள் அவர்களை வேலையை விட்டு நீக்குவதாக அச்சுறுத்தினர், ”என்று அவர் குற்றம் சாட்டினார்.

நோதீப் உள்ளிட்ட போராட்டக்காரர்களை போராட்டத்திலிருந்து விலகுமாறு கியூஆர்டி அச்சுறுத்தியது என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் பகத் சிங் மாணவர் முன்னணியுடன் தொடர்புடைய ராஜ்வீரின் நண்பர் சங்கீதாவும் நோதீப்பும் தி வயரிடம் தெரிவித்திருந்தனர். போராட்ட செயல்பாடுகள் காரணமாக நோதீப் FIEM இண்டஸ்ட்ரீஸிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கு நான்கு மாதங்களுக்கும் மேலாக பணிபுரிந்திருந்தார்.

ஜனவரி 2-ம் தேதி தங்களுக்கு வழங்கப்படாத ஊதியத்தைக் கோரி தொழிலாளர்கள் தொழிற்சாலை முதலாளிகள் கூட்டமைப்பின் அலுவலகத்துக்குச் சென்ற போது கியூஆர்டி அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, தொழிலாளர் சங்கம் குண்ட்லி காவல் நிலையத்தில் தொழிற்சாலை முதலாளிகள் கூட்டமைப்பு மீது வழக்குப் பதிவு செய்யச் சென்றது. இருப்பினும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டதாக ராஜ்வீர் தெரிவித்தார்.

நோதீப் கைது செய்யப்பட்ட ஜனவரி 12 அன்று, தொழிலாளர்கள் சம்பள நிலுவை வழங்காதது தொடர்பாக நிர்வாகத்தை மீண்டும் அணுகினார்கள். ஆனால், அவர்கள் மீது கியூஆர்டி கொடூரமான தடியடி நடத்தியது. பெண் தொழிலாளர்களும் அடக்குமுறைக்கு உள்ளாகி அவர்களது உடைகள் கிழிக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலை எதிர் கொண்ட நோதீப் – காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டு, “KIA இன் அடியாட்களால்” தாக்கப்பட்டார் என்று ராஜ்வீர் தி வயரிடம் கூறினார். “சிங்கு எல்லையில் அமைக்கப்பட்டிருந்த MAS கூடாரத்திலிருந்து அவர் கைது செய்யப்பட்டு, கைவிலங்கு இடப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். அவர் கர்னால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று ராஜ்வீர் கூறினார்.

காவல் சித்திரவதை குற்றச்சாட்டு

ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் நோதீப்-க்கு மருத்துவ பரிசோதனை நடத்தும்படி கோரப்பட்டது என்கிறார் நோதீப்பின் வழக்கறிஞர் ஜிதேந்தர் குமார். மருத்துவ அறிக்கையின்படி, அவரது உடலிலும் அந்தரங்க பகுதிகளிலும் காயங்கள் உள்ளன. “இது போலீஸ் காவலில் நோதீப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்பதைக் காட்டுகிறது” என்று வழக்கறிஞர் ஜிதேந்தர் குமார் குற்றம் சாட்டினார்.

சிங்குவில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டபோது காவல்துறையினர் நோதீப்பை அடித்து உதைத்ததாகவும் அவரது அந்தரங்க பகுதிகளில் இருந்த காயங்கள் அவர் கொட்டடி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதைக் காட்டுகின்றன என்றும் ராஜ்வீரும் கூறுகிறார்.

தற்போது, நவ்தீப் கவுருக்கு எதிராக மூன்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் பயங்கர ஆயுதம் ஏந்திய கலவரம், சட்டவிரோத கூட்டம் சேர்த்தல், அரசு ஊழியருக்கு தீங்கு விளைவித்தல், தாக்குதல், குற்றவியல் வன்முறை, அத்துமீறல், மிரட்டி பணம் பறித்தல், பறித்தல், கிரிமினல் மிரட்டல், கொலை முயற்சி ஆகியவை அடங்கும்.

“நாங்கள் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய தொகையைப் பெறுவதற்கு போராடினோம். அந்த சுமார் ரூ 5000 தொகை மிரட்டிப் பணம் பறிப்பதற்கான குற்றத்துக்கு உகந்தது என்று அவர்கள் கருதுகிறார்கள்” என்று தனது சகோதரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றி பேசும் போது ராஜ்வீர் அதிர்ச்சி தெரிவித்தார்.

முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்று ஹரியானா காவல்துறை அதிகாரியால் பதிவு செய்யப்பட்டுள்ளது, மற்றொன்று KIA இன் கீழ் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு கணக்காளரால் பதிவு செய்யப்பட்டுள்ளது, மூன்றாவது ஒரு தனியார் புகார்தாரரால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நோதீப்பின் வழக்கறிஞர் கூறினார்.

“நோதீப் கைது செய்யப்பட்டதற்கான ஒரே நோக்கம் என்னவென்றால், அவர் இந்த இயக்கத்தில் ஒரு தலைவராக உருவாவதை அவர்கள் (அரசாங்கமும் KIA-ம்) விரும்பவில்லை. அவர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பணியாற்றினார். மேலும் தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்திலும் அவர் தீவிரமாக இருந்தார், ”என்று ஜிதேந்தர் குமார் கூறினார்.

நோதீப் கவுர் வேலை செய்ததை KIA மறுக்கிறது

தி வயருடன் பேசிய KIA இன் தலைவர் சுபாஷ் குப்தா, குண்ட்லியில் உள்ள எந்த தொழிற்சாலையிலும் கவுர் ஒருபோதும் பணியாற்றவில்லை என்று கூறினார். “அவருடைய பின்னணியை நீங்கள் சரிபார்க்க வேண்டும், எனக்குத் தெரிந்து, அவர் இங்குள்ள எந்த தொழிற்சாலைகளிலும் ஒரு தொழிலாளி அல்ல. கடந்த ஆண்டு ஷாஹீன்பாகில் முழக்கம் எழுப்பியவர்களில் இவரும் ஒருவர்” என்று அவர் கூறினார்.

ஜனவரி தொடக்கத்தில் தொழிலாளர்கள் தொழிற்சாலை முதலாளிகளை அச்சுறுத்தினர் என்கிறார் சுபாஷ் கவுர். “… ஜனவரி மாதம், சிவப்புக் கொடிகளுடன் சிலர் எங்கள் வளாகத்திற்கு வந்து, சுவர்களில் ஏறி முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர். எங்கள் பாதுகாவலர்கள் தலையிடாமல் இருந்திருந்தால் அவர்கள் தங்களது கைத்தடிகளால் எங்கள் மண்டைகளை உடைத்திருப்பார்கள்” என்று அவர் கூறினார்.

இந்த வளாகத்தை பாதுகாக்க கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு KIA ஆல் கியூஆர்டி உருவாக்கப்பட்டது என்று சுபாஷ் குப்தா விளக்கினார். “நாங்கள் பல முறை கொள்ளையடிக்கப்பட்டுள்ளோம். எங்கள் ஜெனரேட்டர்கள் திருடப்பட்டுள்ளன, மேலும் ஊடுருவும் நபர்கள் உள்ளே நுழைய பலமுறை முயன்றனர். இதுதான் நாங்கள் காவலர்களை வைத்திருக்கக் காரணம். கொடி ஏந்திய, முழக்கங்கள் போடும் குழுவினரிடமிருந்தும் அவர்கள் எங்களை காப்பாற்றினர், அவர்களுக்கு நன்றி” என்று அவர் கூறினார்.

“அவர்கள் சங்கமாக சேர்ந்து எங்களை அச்சுறுத்த விரும்பினர்,” என்று அவர் கூறுகிறார். கியூஆர்டி தொழிலாளர்களைத் தாக்கியதா என்று கேட்டபோது, குப்தா அதை மறுத்தார். கவுர் மீது காவல்துறை சித்திரவதை பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் குப்தா கூறினார்.

நோதீப் காவலில் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து, தி வயர் கர்னல் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியுடன் (SHO) பேச முயன் போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

‘ஒரு இளம் தலித் பெண்ணை குறிவைத்து’

நோதீப் கவுர் கைது செய்யப்பட்ட உடன், மாணவர் சங்கங்களும் முற்போக்கு ஜனநாயகக் குழுக்களும் இணைந்த அமைப்பான “அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கம்” (சிஏஎஸ்ஆர்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் “தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் எழுப்பத் துணிந்த ஒரு தலித் பெண்ணின் மீது, சீருடை அணிந்த போலீசின் மிகவும் கொடூரமான, ஆணாதிக்க, காட்டுமிராண்டித்தனமான, பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறையின் தண்டிக்கப்படாத இந்த தீச்செயல் பார்ப்பனிய, ஆணாதிக்க, இந்துத்துவ அடித்தளத்தின் மீது நிற்கிறது” என்று குறிப்பிட்டது.

காவல்துறையும் தொழிற்சாலை முதலாளிகளும் தனது தங்கை மீது நடத்திய தாக்குதலுக்கு அவரது அரசியல் செயல்பாடு மட்டும் காரணம் இல்லை. அவர் ஒரு தலித் பெண் என்பதும் காரணம் என்று ராஜ்வீர் கருதுகிறார்.

“எல்லா இடங்களிலும் பாகுபாடு உள்ளது,” என்று அவர் கூறினார். நோதீப் பற்றிய செய்தி ஊடகங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்கு ஒரு மாதம் ஆகியிருப்பதற்கும் அதுவே காரணம் என்று அவர் கருதுகிறார். “அதுதான் நிலைமை. ஆனால் அவளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நாங்கள் நிரூபிப்போம்,” என்று அவர் உறுதியுடன் கூறுகிறார்.

டிசம்பர் மாதம், இந்து ஜக்ரிதி மன்ச் என்று அழைக்கப்படும் ஒரு குழு, MAS தொழிலாளர்களை தாக்கியது. விவசாயிகளை அணிதிரட்டியதற்காகவும், தொழிற்சாலை முதலாளிக்கு எதிராக போராடியதற்காகவும் அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர். “அவர்களும் தொழிற்சாலைகளும், அரசும் காவல்துறையுடன் இணைந்து செயல்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 3-ம் தேதி, விவசாயிகள் இயக்கத்திற்கு ஆதரவாக டெல்லி மண்டி ஹவுசில் குடிமக்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கங்கள், AISA, சி.ஏ.எஸ்.ஆரின் பகுதியாக இருக்கும் AISF ஆகியவை நோதீப் சித்திரவதை செய்யப்பட்டதற்கும் கைது செய்யப்பட்டதற்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

சென்ற வாரம் சீக்கிய கவிஞர் ரூபி கவுரும் நோதீப்பை ஆதரித்து ட்வீட் செய்துள்ளார்.

“ஜனவரி 12 அன்று – ஹரியானா போலீசார் சிங்கு போராட்டக் களத்தில் இருந்து நோதீப் கவுரை அவரது கூடாரத்திலிருந்து கவுரை கடத்திச் சென்றனர். அதன் பின்னர் அவர் போலீஸ் காவலில் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்

“நோதீப் 23 வயதான பஞ்சாபி தலித் பெண் & தொழிற்சங்க ஆர்வலர், அவர் விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக துணிச்சலுடன் பேசி வருகிறார்” என்றும் அவர் கூறியிருந்தார்

thewire.in இணையதளத்தில் பவன்ஜோத் கவுர் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்