ஒரு சமூகவியல் எழுத்தாளரின் மரணத்தை நம்மால் அவ்வளவு எளிதில் கடந்து போக முடிவதில்லை. அவர் விட்டுச் சென்றதை நினைத்து பார்க்கும் போது, நம் நினைவுகள் முழுவதும் அவர் வியாப்பித்திருப்பதை நம்மால் தடுக்க இயலாது. அவரின் எழுத்துக்கள் அவரின் நினைவுகளின் எச்சமாய் இருந்து நம்மை வழிநடத்தும்.
தமிழ் சமூக சிந்தனை வரலாற்றில் தொ.ப வின் இடம் மிக முக்கியமானது. மேலைநாட்டு ஆய்வாளர்கள் பார்வையிலேயே தமிழரின் பண்பாட்டு கூறுகளைப் புரிந்து கொண்ட நாம், இம்மண்ணின் வேரிலிருந்து முகிழ்ந்தெழுந்து கிளைபரப்பி பண்பாட்டு ஆய்வுக்குள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியவர். பழமொழிகளில் இருந்தும் சொற்றொடர்களில் இருந்தும் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை அகழ்ந்தெடுத்து வெளிக்கொணர்ந்தவர். பெரியாரியவாதியாக நாத்திகராக இருந்தும், மக்கள் தெய்வங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு, வைதீகம் என்று பார்ப்பனர்களிடம் கையளிக்கப்பட்ட தமிழ் பண்பாட்டுக் கூறுகளை எல்லாம் மீட்டுக் கொணர்ந்தவர்.
மண்ணையும் மக்களையும் கற்க ஆற்றுப்படுத்திய பேராசான் தொ.ப – மாணவர் அஞ்சலி
நிறுவனமயமான அதிகாரமாக விளங்கும் பெரும் கோயில் மரபுக்கு எதிர் மரபாக மக்கள் தெய்வங்களைப் பார்த்தவர். நாட்டார் வழிபாட்டின் வழியே பெண்கள் எவ்வாறு தங்களின் ‘ஆன்மீக உரிமையைப்’ பெறுகிறார்கள் என்பது குறித்தெல்லாம் எழுதியவர். வைதீக வழிபாட்டில் ஆண்தான் அதிகாரமுள்ளவனாக இருக்கிறான். நாட்டார் கோயில்களில் பெண் சாமியாடுவது, பூசாரியாக இருப்பது போன்ற விசயங்களை எடுத்துக்காட்டி, தமிழ் மரபுக்குள் இருக்கும் பாலின சமத்துவத்தைப் பேசியவர்.
தன்னுடைய வாழ்நாள் முழுக்க பார்ப்பனிய மேலாதிக்கக்கத்தை எதிர்த்து, தமிழ் மரபுகளை களவாடிய பார்பனியத்திடமிருந்து தமிழின் அசலான பண்பாட்டுக் கூறுகளை மீட்டு, அறிவுச் செயல்பாட்டில் அதிர்வுகளை உண்டாக்கிய தொ.ப, தமிழரின் அறிவறிவு (scientific knowledge) கூறுகளின் வேர்களைப் பண்பாட்டில், வழிபாட்டில், சடங்குகளில் தேடிய மனிதர். பேராசிரியர் சுந்தர் காளியோடு உரையாடி எழுதிய ‘சமயம் – ஒரு உரையாடல்’ எனும் நூலில் தமிழ் சமயம் குறித்த பல்வேறு பரிணாமங்களை முன்வைக்கிறார்.
தொ.பரமசிவன் மரணம்: வேர்களை நோக்கி பயணித்த ஆலமரம் வீழ்ந்தது – உமேஷ் சுப்ரமணி
மக்களுக்கும் தெய்வத்துக்குமான உறவு குறித்து விளக்குவது மிக அலாதியானது. திராவிட இயக்கம் மேலெழுந்ததால்தான் கோயில்கள் பாழடைந்துள்ளன என்கிற கேள்விக்கு மிக அட்டகாசமான பதில் வழங்கி இருப்பார். இது பார்ப்பனர்கள் திராவிட இயக்கத்தின் மீது செய்யும் பொய் பரப்புரை. திராவிட இயக்க ஆட்சிக்குப் பிறகுதான் கோயில்கள் புணரமைக்கப்பட்டு செழுமையாக்கப்பட்டன. பார்ப்பனர்கள் இருக்கும் கோயில்கள் மட்டும்தான் பாழடைந்துள்ளன என்பது வரலாறு.
ஆதாயம் ஏற்படுமாயின் கோயிலை கைவிட்டு வேறு இடங்களுக்கு பார்ப்பனர் சென்றுவிடுவர். நாட்டார் மக்கள் வாழக்கை நெருக்கடியின் காரணமாக புலம் பெயர நேருமானால், தங்களின் தெய்வத்தை பூர்விக இடத்தில் வந்து வருடம் தோறுமாவது வணங்கி செல்வது வழக்கம். தெய்வங்கள் மக்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாய் இருக்கிறது என்கிறார் தொ.ப..
தொ.ப வின் ஆய்வுக்குள் இருக்கும் சரி, தவறுகளை அலசிப்பார்த்து அதை வளர்த்தெடுப்பது மட்டுமே அவருக்கு நாம் செய்யும் நியாயமான அஞ்சலியாக இருக்க முடியும். நாட்டார் தெய்வங்கள் நிறுவன சார்பற்றவை என்று விளக்கினாலும் அதில் ஒளிந்திருக்கும் மறைமுக நிறுவனமாக்களை, சாதியின் அதிகாரத்தை எல்லாம் நாம் கவனிக்க வேண்டும் . சில சாதிகளுக்குள் வழிபாட்டு ஒற்றுமை இருப்பதை மட்டும் சுட்டிக்காட்டியுள்ளார். பலி ஏற்பவை நாட்டார் தெய்வங்கள், பலி ஏற்காதவை வைதீக தெய்வங்கள் என்ற அவரின் முடிவு சரியானது என்று சொல்ல முடியாது. மாரியம்மன்/அங்காளம்மன் கோயில்களில் பலியிடும்போது சாமிக்கு முன்பாக மஞ்சள் துணி காட்டுவார்கள். அதன் அர்த்தம் சாமிக்கு பலியிடுவது தெரிய கூடாது என்பதுதான். அய்யனார்கோயிலில் வீரனுக்குத்தான் கறி, சாராயம் படைப்பது வழக்கம். அய்யனார் பலி ஏற்காத தெய்வம். அவரின் பரந்துபட்ட வரையறையில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
அவரின் மிக முக்கியமான நூலாக பன்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், அறியப்படாத தமிழகம் என்று சொல்ல்லாம். இம்மூன்றில் இருந்து விரித்து எழுதியதே விடுபூக்கள், தெய்வமென்பதோர், நான் இந்து அல்ல? நீங்கள், உரைகல் உள்ளிட்ட நூல்களைக் சொல்லமுடியும். மிக சரியாக சொல்லப்போனால் தொ.ப ஒரு தகவல் களஞ்சியம். அவரின் நூல் முழுக்க தகவல்களால் நிறைந்திருக்கும். பல தகவல்கள் மலைப்பூட்டுவதாய் இருக்கும். கடுமையான உழைப்பின் விளைவால் சடங்குகள், வழக்காறுகள் பின்னிருக்கும் வரலாற்றை கண்டடைந்தார். அவருடைய ஆய்வு பார்வைகளில் இருக்கும் வைணவ சார்பை யாரும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். மனிதர்கள் அறிவுமயமானவர்கள் அல்ல, உணர்வுமயமானவர்கள். சமூகத்தின் அசைவியக்கித்தில் பண்பாடு புரியும் வினையாக்கத்தை கணக்கில் கொள்ளவேண்டும் என்பதே தொ.ப நமக்கு கையளிக்கும் செய்தி.
– சந்துரு மாயவன்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.