Aran Sei

‘அதிகாரத்திடம் உண்மையை உரக்கப் பேசுவோம்’ – ஷர்ஜீல் இமாமின் ஓராண்டு சிறைவாசம்

Image credit : outlookindia.com

“மார்ச் மாத நடுப்பகுதியில் மித வெப்பமான பின் குளிர்காலத்தில் கதிரவன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்த லேசான குளிரில், எங்களில் பலரும் அடுத்தது யார் என்று வியப்புடன் இருந்தோம். ‘சென்று வருகிறேன்’ என்று மற்றவர்களிடம் கூறுவது இதுவே கடைசியாக இருக்குமா என்பதே உறுதியாகத் தெரியவில்லை. அரசு பயங்கரவாத அச்சத்தில் இருப்பது சூழலை இறுக்கமாக்கி விட்டது. கொரோனா தொற்று நெருக்கடிக்கு முன்பே, வடகிழக்கு டெல்லியில் சுவரொட்டிகளும், போராட்டங்களும், முஸ்லீம்களின் வீடுகளும் தீ பரவுவதற்கு முன்பே இந்த அச்சம் இருந்தது‌.

ஒரு இளம் முஸ்லீம் மாணவன் மீது மத்திய அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் போட்டுள்ள பல முதல் தகவல் அறிக்கைகளுக்கு எதிராக மற்றவர்களின் ஆதரவைத் திரட்ட, ஒரு சிறிய மாணவர்கள் குழு தீவிரமாக பல்கலைகழகங்களுக்கும், அலுவலகங்களுக்கும் ஓடிக் கொண்டிருந்தது. அவர்களுடைய முயற்சிகள் எதிர்ப்பு, ஆதரவு, ஒற்றுமை ஆகியவற்றின் ஒரு சிறிய அலையை உருவாக்கியது. இறுதியில் அது டெல்லி படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கான ஆதரவு இயக்கமாகத் தொடர்ந்தது. அனைத்து பல்கலைக்கழகங்கள், சமூக இருப்பிடங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இதனுடன் இணைந்தது சாதாரணமாக இருந்தாலும் பொருளுள்ள வகையில் பங்களிப்பைச் செய்தனர். இருள் கவிந்த நேரத்திலும் கூட தீவிரமான பரவசம் இருந்தது. முஸ்லீம்கள் இதில் பெரும்பான்மையாக கலந்து கொண்டதை கொண்டாடியது, பலருக்கும் புரட்சியின் கற்பனையான இரண்டாவது விடியலாகத் தெரிந்தது. நிச்சயமாக எல்லாம் நல்லபடி இல்லை.

அந்தப் பெயரில்லாத கூட்டத்திலிருந்து, அனாமதேயத்திலிருந்து தப்பித்து யாராவது ஒருவர், ஆளும் ஆட்சி முறையையும், அதைப் போலவே எப்போதும் அமைதியற்ற முறையில் இல்லாத சமூகத்தின் முற்போக்குப் பிரிவினரின் இஸ்லாமோஃபோபியாவையும் எதிர்க்க பொறுப்பு ஏற்கும் அந்த நிமிடத்தில், எதிர்ப்புகள் மற்றும் தடைகளின் கொண்டாட்டங்கள் தாராளவாத உயரடுக்கு அறிவுஜீவிகளுக்கு ஒரு இடைநிறுத்தமாகத் தோன்றுகிறது.

தெருக்களில் மெதுவாக வீசத் தொடங்கிய புயல் விரைவாக நாடு முழுவதும் பரவியபோது, டெல்லியின் உறைய வைக்கும் குளிர்காலத்தில் சான்றுகள் கைகளில் இருந்தன. இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகத்திலிருந்து இளம் வரலாற்றாய்வாளரின் அழைப்புதான் அந்த சான்று. அந்த அழைப்பு, குருதிக்காக கூக்குரலிடும் அருவருப்பான குரல்களை கட்டவிழ்த்து விடச் செய்தது. ஷர்ஜீல் இமாம் அந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்களத்தின் அகழியிலிருந்து பேசும் போது, மணலில் கிழித்த கோட்டைத் தாண்டிவிட்டதாக பரவலாக பார்க்கப்பட்டது.

ஆனால் அது என்ன கோடு?

இந்தக் கேள்விக்கான பதில்கள் உபா (UAPA) மற்றும் தேசத் துரோகச் சட்டங்களால் முன்வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு இரண்டு முரண்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு ஒரு முக்கியமான தருணமாக இருந்ததை நிரூபித்தது. சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களை துன்புறுத்துவதற்கான கதையை தொடங்கி வைத்த அரசின் கடுமையான தொடர் நடவடிக்கைகளில் முதலாவதாக இது இருந்தது. ஆனால் அந்த அதிகார எல்லைக்கு வெளியே மிகவும் துன்பகரமானது என நிரூபிக்கப்பட்ட ஒரு நிகழ்வும் அதுதான், அந்த ஒரு பேச்சு செயல் எந்த வகையிலும் ஆதரவைப் பெற முடியாமல் போய்விட்டது. சித்தாந்த நிறமாலையின் பல்வேறு நிறங்களைக் கொண்ட மக்களும் வேகமாக ஓடிவந்து அவரை கண்டனம் செய்ததுடன் அவரிடமிருந்து தங்களை விலக்கியும் கொண்டார்கள். ஷர்ஜீல் இமாமின் சொந்த பல்கலைக்கழகமான ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இடதுசாரி மாணவர் சங்கம் வெளியிட்ட முதல் அறிக்கை அவரது உரையை கண்டனம் செய்திருந்தது.

அதிலிருந்து இது ஒரு வழக்கமான நடைமுறை ஆகிவிட்டது. அரசியல்,சமூக செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் “தீவிரவாத கூறுகள்” என்று குறியிடப்பட்டவர்களிடமிருந்து ஒரு கவனமான இடைவெளியை தொடர்ந்து பாதுகாத்து வந்தார்கள். அவ்வாறு குறியிடப்பட்டவர்கள், பொதுவாக சிவில் சமூகத்தில் ஒருமித்தக் கருத்திற்கு அப்பாற்பட்டு பேசும் முஸ்லீம்களாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த ஒருமித்த கருத்திற்குள், ஆள்பவர்களின் சித்தாந்தத்தை கடைபிடிப்பவர்களுடன் சேர்ந்து தங்களையும் பொது உறுப்பினர்களாக வைத்துக் கொண்ட செயற்பாட்டாளர்கள் உலகம், அரசுக்கு எதிராக கோபத்தைக் தூண்டிவிடக் கூடாது என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இத்தகைய சித்தாந்த காப்பீடுகள் அவர்களுக்கு அரசிடம் நன்மதிப்பைப் பெற்றுத் தரவில்லை என்பதை நாம் வெகு விரைவிலேயே அறிந்துக் கொண்டோம். இந்திய முஸ்லீம் குடிமக்களுக்கு சமத்துவத்தையும், நீதியையும் கோரும் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் வரை உங்கள் குற்றத்தன்மை பதிவு செய்யப்படும்.

டெல்லி கலவரத்தின் குற்றப்பத்திரிகையை விரித்துப் பார்த்தால் : ஷர்ஜீல் இமாம், தரூரை ‘ இஸ்லாமோஃபோப்’ என்று அழைத்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் அது பின்னர் நடந்தது. ஷர்ஜீலை கொடூரமாக குறிவைப்பதைப் பற்றி பேசுவதை பலரும் முற்றிலும் தவிர்த்துவிட்டனர், பலரும் அவருடைய வார்த்தைகளை கண்டித்து நீர்த்துப் போன சாட்சியங்களுடன் தங்கள் ஆதரவைத் தெரிவித்து விட்டு, உடனடியாக தங்களை அவரிடமிருந்து விலக்கிக் கொண்டனர். இவ்வாறு ஷர்ஜீலை கடந்த குளிர்காலத்தில் நாம் தோற்கடித்தோம். இந்தக் குளிர்காலத்தில் அதற்கான விலையைக் கொடுத்திருக்கிறோம். யாரெல்லாம் அவரது பேச்சை சிதைப்பதன் மூலம் பொது விசாரணையையும் அவரது குற்றமயமாக்கலையும் வளர்த்தார்களோ, அவர்களே தற்போது குற்றமயமாக்கலின் அச்சத்தில் வாழ்கிறார்கள். யாரெல்லாம் அமைதியாக இருந்தார்களோ அவர்கள் எல்லாம் இப்போது பேசுவதைத் தவிர வேறு வழியில்லை. அப்போது தங்களை அவரிடமிருந்து பிரித்துக் கொண்டவர்கள் எல்லாருக்கும், அவர்கள் முறை வரும்போது ஆதரவிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், தப்பித்துக் கொள்ளவும் அவரோடு இணைவது தேவையாகிவிட்டது. பல வழியிலும் முஸ்லீம்களுக்கு தந்திருக்க வேண்டிய ஒற்றுமை மறுக்கப்பட்டது. அந்த மறுப்பின் சின்னமாக ஷர்ஜீல் இருக்கிறார்.

எதிர்பாராத விளைவுகள்

2020, ஜனவரி 28-ம் நாள் ஷர்ஜீல் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவருடைய கால்களை உடைக்க வேண்டும் என்ற அழைப்புகளுக்கும் ரிபப்ளிக் தொலைகாட்சியில் அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட பகுதிகளுக்கும் இடையே, ஒரு பொது விசாரணை அமைத்திருந்த கொடூரமான சூழலில், ஒரு வரலாற்றறிஞர் என்ற வகையில் ஷர்ஜீலின் கூர்மையான, விமர்சன பணிகள் இந்தியா முழுவதும் உள்ள இளம் முஸ்லீம்களை சென்றடைந்தன. இது ஒரு நினைவு கூரத்தக்க விளைவாகும். இதனை புலனாய்வு முகமைகள் சொற்பமாகவே முன் அனுமானம் செய்திருக்க முடியும். அவரது உரைகளின் காணொளிகள் இணையத்தில் வெள்ளமாக நிரம்பின. அவை வலதுசாரிகளின் பரப்புரைக்கு சேவை செய்தன. ஆனால் அதோடு நின்று விடவில்லை.

இளம் முஸ்லீம்களிடம் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டு, ஷர்ஜீலின் கட்டுரைகளில் இந்திய முஸ்லீம்கள் ஓரங்கட்டப்படுவதையும், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை இயல்பானதாக ஆக்குவது குறித்த அவரது கேள்விகளையும் அங்குசமாக இருந்து அவை படிக்க வைத்தன. டெல்லி காவல் துறை அவர் மீது வழக்குத் தொடுக்க முயன்ற போது கூட ஷர்ஜீலின் சொற்களிலிருந்து வெளிவந்த புலமையும், துணிவும், நேர்மையும் ஏராளமான இளைஞர்களை, பால் பிராஸ்மனின் கலவரங்கள் குறித்த, ‘கூட்டு வன்முறையின் வடிவங்கள்: நவீன இந்தியாவில் கலவரங்கள்,படுகொலைகள் மற்றும் இனப்படுகொலைகள்’ என்ற அவரது ஆரம்பகால கட்டுரையை படிக்கத் திரளச் செய்தது. அது ஷர்ஜீலின் ‘ தீவிரமயமாக்கலுக்கு’ சான்றாக இருந்த போதும், தங்களது வாழ்க்கையை அதன் ஒளியில் அவர்கள் படித்தனர்.

ஷர்ஜீலின் பேச்சுக்களுக்கும், அவரது சரணடைவிற்கும், குற்றப்பத்திரிகையை உருவாக்குவதற்குமான கால இடைவெளியில், பல இளம் முஸ்லீம்கள் நன்கு நெய்யப்பட்ட கட்டுக் கதையான ‘சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவது’ என்ற வெற்று ஆரவாரப் பேச்சை மட்டுமல்ல, அவை முஸ்லீம்களாக இருப்பதற்கான அறிகுறிகளை ‘ஒருங்கிணைத்து’ அழிப்பதாகக் கூறித் தங்களை அதிக மதச்சார்பற்றவர்களாகக் காட்டிக் கொள்ளக் முயலும் மதச்சார்பற்ற, தாராளவாத அறிவுஜீவிகளின் கோரிக்கையையும் நிராகரித்தனர்.

இதன்மூலம், இந்தியாவின் முன் ஷர்ஜீல் எழுப்பிய கேள்விகளையும், இந்தியா அதற்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதையும் பரிசீலனை செய்ய வேண்டிய கடமை நம்மீது சுமத்தப்பட்டுள்ளது. சமூக- அரசியல் ரீதியாக ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஒரு ஒட்டு மொத்த சமுதாயமும் கேட்கும் கேள்விகளை ஷர்ஜீல் இமாம் முன்வைக்கிறார்.

தனது பேச்சின் மூலம், அவர் அம்பேத்கரின் இந்திய பகுஜன் மக்களைப் போல, அமெரிக்க நாட்டு கருப்பின மக்களைப் போல பெருமளவில் அமைதியாக இருப்பதை நிராகரிப்பதை தேர்ந்தெடுக்கும் முஸ்லீம்களால் இந்திய வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் வெடிப்பை/ சிதைவை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.

நாம் பிரிவினையால் நமது உயிரைவிட மேலான ஒழுக்கத்தை விலையாகத் தர வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஜான் டீவியின் ஜனநாயகம் குறித்த கருத்தால் ஈர்க்கப்பட்ட அம்பேத்கர், நாம் அறிந்த ‘சாதிகளை அழித்தொழித்தல் (Annihilation of Castes)’ என்ற நூலில் எழுதி இருப்பதைப் போல, “ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க வடிவம் மட்டுமல்ல. அது முதன்மையாக ஒருங்கிணைந்த பரிமாற்ற அனுபவம் தொடர்பான வாழ்க்கை முறை. அது அடிப்படையில் சகமனிதர்களிடம் மதிப்பும், மரியாதையும் காட்டும் நடத்தை ஆகும்,” என்று கூறுகிறார்.

இந்த நேரத்தை நமது ஜனநாயகத்தின் சோதனை நேரம் என்று அறிவிக்கலாம். அந்தச் சோதனையில், நாம் உண்மையில் இந்த ஜனநாயகத்திற்குத் தகுதியானவர்கள்தானா என்றும், ஒரு உண்மையான ஜனநாயகத்தில், நமது போராட்டத்தினால் நாம் விரும்பும் ஒன்றிணைந்த வாழ்க்கை அல்லது சகோதரத்துவத்தை அடைய முடியுமா என்ற கேள்விகளுடன் ஷர்ஜீல் நம் முன்னே நிற்கிறார். இது சோதனைக்கான சிறப்பான நேரம். ஏனெனில் வேறு எந்த அரசியல் சிறைக்கைதியும்- அவர்கள் எத்தகைய சித்தாந்த இழைகளை கொண்டிருந்தாலும் அல்லது அரசியல் போர் தந்திரம் கொண்டவராக இருந்தாலும்- ஒரு தன்னாட்சியான முஸ்லீம் அரசியலுக்காக வெளிப்படையாகப் பேசி, பணியாற்றியதற்காக அவர் பெற்றதைத் போல் கண்டனங்களை, எதிர் விளைவுகளை, தொடர்பறுத்தலை பெற்றிருக்க முடியாது.

ஷர்ஜீலின் அரசியல் நமது பொதுவான விருப்பமான தோழமையில் வேரூன்றி உள்ளது. அவர் முஸ்லீம்களின் சுயமரியாதையான அரசியல் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் போதே, அதற்கு சமமாக ஒடுக்கப்பட்ட சாதிகளுடனான ஒற்றுமையைப் பேணுவதுடன், முஸ்லீம்களில் ஒடுக்கப்பட்ட சாதிகள் சமூகத்தின் உள்ளேயும் அதேபோல வெளியேயும் எதிர்கொள்ளும் இரண்டடுக்கு பாகுபாடுகளை அங்கீகரித்தும், அதற்கு எதிராக சவால் விடுபவராகவும் இருக்கிறார்.

இது பார்ப்பனிய அரசுக்கு எதிராக அடக்கப்படும் குழுக்களை ஒன்றிணைவதை மட்டும் எதிரொலிக்கவில்லை அத்துடன், தார்மீக மற்றும் நெறிமுறை உணர்வுள்ள மக்களுடன் சகோதரத்துவ உறவை உருவாக்கும் விருப்பத்தையும் எதிரொலிக்கிறது. ஷர்ஜீலின் ஒரு உரையில், முஸ்லீம்களின் குடியுரிமைக்காகவும், கண்ணியமான வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்குமான போராட்டத்திற்கு முஸ்லீம் அல்லாதவர்களை குறிப்பாக இந்துக்களை அழைத்து வந்து பங்கெடுக்கச் செய்யுமாறு அவர் மாணவர் சமூகத்திடம் வேண்டுகோள் விடுப்பதைக் கேட்க முடியும். இதன் மூலம் ஷர்ஜீல் இந்தியாவில் தற்போது மிகவும் பற்றாக்குறையாக இருக்கும் ஒரு பொது அரசியல் ஒழுக்கத்தை வளர்க்க விரும்புகிறார்.

அஜய் குடாவர்த்தி தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கும், சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை குறிப்பிடுகையில், சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் தனித்துவமாக முஸ்லீம்களை மையப்படுத்தியதாக இருப்பதால் பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு அது விடுத்த வேண்டுகோள் தோல்வியுற்ற முயற்சியாக இருந்தது என விமரிசித்திருந்தார்.

குடாவர்த்தி, தாங்களே பெரும்பான்மையினரின் இஸ்லாமோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களாகவும், அதிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களாகவும் இருப்பதை மறந்து சிஏஏ போராட்டத்தில் முக்கிய செயலாற்றியவர்கள் மீது (சிஏஏ எதிர்ப்பு இயக்கம் விரிவான ‘தார்மீக ஏற்பை’ பெறாததற்காக) பொறுப்பையும், குற்றத்தையும் சுமத்துகிறார்.

பெரும்பான்மையினரின் ஒழுக்கத்திற்காக வேண்டுகோள் விடுக்காத அடக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்துவது எப்போதுமே எளிதானது. ஆனால் மதச்சார்பற்ற பெரும்பான்மையினர் ஒழுக்கம் இழந்தததற்கும், அவர்களது இதயமற்றத்தன்மைக்கும் அவர்களை யாரும் குற்றம் சாட்டுவதில்லை. உண்மையில், நீதிக்கான ஒரு இயக்கத்தில் ‘தார்மீக ஏற்றுக் கொள்ளலை’ உருவாக்க, நீதி தொடர்பானது தவிர ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

இங்குதான் ஷர்ஜீலின் உருவம் அவசியமாகிறது. பாஜக வின் வெற்று ஆரவாரப் பேச்சால் நிர்வகிக்கப்படும் ஏற்கனவே உள்ள ஒழுக்கத்தை பிரச்சாரம் அவர் விரும்பவில்லை. மாறாக ஒரு புதிய ஒழுக்கத்தை வளர்க்க விரும்புகிறார். அவர் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளுக்கு வெளியே பல்வேறு சமூகங்களும் அவரவர் பகுதிகளில் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று கேட்கிறார். மதசார்பற்ற/ இடதுசாரிகள் முஸ்லீம்களையும் பிற உரிமைகள் மறுக்கப்பட்ட குழுக்களையும் கடந்த 70 ஆண்டுகளாக எவ்வாறு ஓரத்தில் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார்கள் என்பது பற்றி அவர் பேசுகிறார்.

இந்த விடயத்தில் மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு முந்தைய, வெளிப்படையாக இருந்த முன்னுரிமை பெற்ற இந்து சாதியினரின் ஆட்சிக்கும், அதற்குப் பிறகு வந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிலான ஆட்சியில் பல நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொடூரமான உபா சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டதைக் கண்டுகொள்ளாமல் விட முடியாது. நிச்சயமாக காங்கிரஸ் தனது 45 ஆண்டு கால ஆட்சியில் இருக்கும் நிலையைக் காப்பாற்றுவது என்று பெயரில் இந்தியாவின் ஆதிக்க சாதியினரின் நிலப்பிரபுத்துவ ஒழுங்கை குறைக்க அதிகமாக விரும்பவில்லை. மாட்டிறைச்சித் தடை போன்ற அதன் பல சாதிய, முஸ்லீம் எதிர்ப்புச் சட்டங்களை இங்கு குறிப்பிடாமல் விட முடியாது.

ஷர்ஜீல் ஏன் கைவிடப்பட்டார் என்பதிலும், ஏன் அவர் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார் என்பதிலும் இனியும் வியப்பேதும் உள்ளதா?

இந்திய ஜனநாயகத்தின் சீரழிவை காட்டுவதற்கு இன்னும் நிறைய உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்ற மக்களைவையில் வந்த போது அது இட ஒதுகீகீட்டில் உள்ள நீதியான இட ஒதுக்கீட்டு நடைமுறையை சிதைக்கும் என்ற போதிலும் அதனை மூன்று முஸ்லீம் உறுப்பினர்கள் மட்டுமே எதிர்த்தனர். இந்த நாட்டில் அரசியல் ஒழுக்கத்தின் மோசமான வீழ்ச்சியை இது காட்டுகிறது. இது ஒதுக்கப்பட்டவர்கள் மீதான வன்முறை எவ்வாறு ஆழமாக அமைப்பு ரீதியாக இயல்பாக உள்ளது என்பதையும், பாஜகவின் சித்தாந்தத்தின் பக்கவிளைவு அல்ல என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதைப் புரிந்து கொண்டால், மதச்சார்பற்றவர்களிடம் அவர்களுடைய மனித நேயத்தை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் வைப்பதை விட அடக்கப்படுபவர்கள் தங்கள் சமூக இயக்கங்கள் மூலம் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டியது அவர்களுடைய கடமையாகும்.

ஒரு படிப்பினை மற்றும் அரசியல் போலிகள்

எந்த மக்களுக்காக, எந்த மக்களைப் பற்றி, யாரால் ஒரு இயக்கம் திரட்டப்பட்டு வழி நடத்தப்படுகிறது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு தருவது என்ற அடிப்படை மாற்றத்திற்கு மதச் சார்பற்ற மக்களை மாற்றும் ஒரு இயக்கத்தையே தான் விரும்புவதாக ஷர்ஜீல் வெளிப்படுத்துகிறார்.

இது உடனடி இலக்கை அடைவதற்காக ஒருவரது சுயமரியாதையை சமரசம் செய்து கொண்டு மதச்சார்பற்ற மக்களிடம் அவர்களின் பழைய, நிலையற்ற விதிமுறைகள், நிபந்தனைகள் குறித்து விவாதிப்பதற்கு பதிலாக பொது ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தை உயர்த்திக் காட்டுகிறது. அந்த முந்தைய நோக்கம் நிலைமையை மீட்டெடுக்கவே உதவும்.

இந்த நாட்டை, இதன் குடிமக்களை, அவர்களின் தார்மீக திசைகாட்டிகளை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கான அவர்களின் பேரார்வத்தையும் தேடலையும் மறுவரையறை செய்யும் ஒரு எளிய இயக்கத்தையே அவர் விரும்பினார். மேல்தட்டு சாதியினரின் வல்லுநர்கள் இல்லாத, அடக்கப்பட்டவர்களை வெறும் ஆய்வுப் பொருளாக அல்லது புள்ளி விவரங்களாக குறுக்குவதை மறுக்கும் அடக்கப்பட்டவர்களுக்கான அரசியலுக்கான நீண்ட போராட்டத்தை நடத்த வல்ல போராட்டக் களத்தை அவர் உருவாக்குகிறார். அங்கு அவர்களுடைய சொந்த போராட்டத்தின் வல்லுநர்களும், தலைவர்களும் இருப்பார்கள். அதனை மதச்சார்பற்ற மக்கள்திரள் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது மட்டுமே அவர்களது இழந்த ஒழுக்கத்தன்மையை மீண்டும் நிறுவும். இந்தத் துல்லியமான பார்வைதான் ஒரு ஜனநாயகத்திற்குத் தேவைப்படுகிறது. இந்தத் துல்லியமான பார்வைதான் மாபெரும் புரட்சியாளர்களான மால்கம்X அல்லது பெரியார் போன்றவர்களுக்குத் தேர்தல் தகிடுதத்தங்களை கண்டு தடுமாறாமல், நீதியின் தேடலுக்கானத் துணிவைக் கொடுத்தது.

அஜய் குடாவர்த்தியும், மற்றவர்களும் சிஏஏ எதிர்ப்பு இயக்கம் முஸ்லீம்களைப் பற்றியே தனது கவனத்தை குவித்ததால், அது ஒரு மிகப் பெரிய விரிவான மக்களுக்கு ‘வேண்டுகோள்’ விடுக்கத் தவறிவிட்டதாக வாதிடும் போது, ஒன்றிணைதல் என்ற கேள்விக்கு அது நம்மை மீண்டும் அழைத்துச் செல்கிறது. நாம் மற்றவர்களோடு இணைவதில்லையா? நீதிக்கான அவர்களுடைய கவலைகளை பகிர்ந்து கொள்வதில்லையா? உள்ளார்ந்த மனித இரக்கக் குணத்துடன், நீதிக்கான விருப்பத்துடன் சகோதரத்துவ உணர்வுடன் இருக்கவில்லையா? அல்லது முஸ்லீம்கள் போன்ற ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் பாகுபாடான சிறை வைப்பு விகிதங்கள், கல்வி உள்கட்டமைப்பு வசதியின்மை, முறைபடுத்தப்பட்ட பாகுபாடு ஆகிய கடினமான, பொருள் சார்ந்த கவலைகளையும் குறிப்பிட்ட கவலைகளையும் மீறி தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என நாட்டின் தார்மீக மனசாட்சி எதிர்பார்கிறதா? எல்லாம் கருத்தியலுக்காக?

சுற்றி வளைக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை இயல்பாக்குவது, அவர்கள் குரலைப் பயன்படுத்திக் கொள்வது, அமைதியாகவே இருக்கும் செயல் ஆகியவற்றை நிராகரிக்கும் எல்லா உரிமையும் உள்ளது என்பதை ஷர்ஜீல் இந்தியாவுக்குத் துல்லியமாக நினைவுபடுத்துகிறார்.

அரசியல் சமத்துவத்திற்கும், சமூகப் பொருளாதார சமமின்மைக்கும் இடையிலான ‘முரண்பாடு’ குறித்து 1949, நவம்பர் 25 அன்று தனது அரசியலமைப்பு நிர்ணய அவை உரையில் அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கையை புரிந்து கொள்ள வேண்டிய நேரத்தில் நாம் இருக்கிறோம். அதனை புரிந்து கொள்ளும் போது, நாடாளுமன்ற ஜனநாயகம் அதன் குடிமக்களிடம் தோற்றுவிட்டதால் இனியும் அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் மட்டுமே விவாதிக்க, திருத்த அல்லது நடைமுறைப்படுத்தக் கூடியது அல்ல என்பதை உணர்ந்து கொண்ட மிகச் சிலரில் ஷர்ஜீலும் ஒருவர்.

நாடாளுமன்ற கட்டிடம் உயர்ந்த இடத்திலிருந்து மாற்றங்களைக் கொண்டு வருவதாக இருப்பதற்குப் பதில் இந்திய சமூகத்தின் மாதிரிப் படிவமாக மாறிவிட்டது. சாராம்சமாக ஷர்ஜீல் கூறுவது என்னவென்றால், அவர்கள் வரலாற்றையும், நுணுக்கத்தையும், சிக்கல்களையும் அறிந்து கொள்ளாமல், அரசியலமைப்பு முகவுரையை படிப்பதும், அதன்மீது உறுதிமொழி எடுப்பதும் அல்லது மூவர்ணக் கொடியை ஆட்டுவதும் மட்டுமே குடிமக்களை காப்பாற்றாது. அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், அது ஆழ்ந்து ஆராயப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும், அதன் அடிப்படைகள் பற்றிய சிந்தனைகள், நீதியைப் பற்றிய மறு சிந்தனைக்கான முறையான வழியினைத் திறக்க வேண்டும், அரசியலமைப்பு சட்டம் அரச ஆவணமாக இல்லாமல் மக்கள் ஆவணமாகத் தெளிவாகப் பேசப்பட வேண்டும். சமூகத்தின் கீழினும் கீழானவர்களிலிருந்து, ‘ இரண்டாம் தர குடிமக்களாக’ உள்ளவர்கள் வரை அனைவரும் அரசியலமைப்பு பற்றிய முடிவுகள் வைத்திருக்க அனைத்து உரிமைகளும் பெற இயல வேண்டும். பெற்றிருக்க வேண்டும்.

அடக்கப்பட்டுள்ள பலருக்கும் நீதிக்கான மூலமாக இருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஷர்ஜீல், கேலிக்கும், அவமரியாதைக்கும் அல்லது நிராகரிப்பதற்குமான ஆபத்தில் வைக்கிறார் என பலரும் வாதிடலாம். ஆனால் அது மதிப்பிற்குரிய திட்டமிட்ட ஆபத்துதான் என்பது அவருக்குத் தெரியும் என நாம் வாதிடலாம்.

‘அரசியலமைப்பு சட்டத்தை வீதிக்கு கொண்டு வருவது’ அவமரியாதையான செயல் அல்ல. மாறாக அதை மீட்டெடுப்பதும் சொந்தமாக்கிக் கொள்வதுமாகும். இது ஒரு அறிவுசார் விமர்சனம் தேவைப்படும் தீவிரமான,உறுதியான விவாதமாக இருக்கும். அது உரிமைகளை தர விரும்பும் வகையில் பெறும் வழியாக அது இருக்கும். அரசியலமைப்பை அது எதற்காக உள்ளதோ அந்த வழியில் திருப்புவதாக இருக்கும். ஜனநாயக வழித்தடத்தில் பழைய உயரடுக்கினரால் போடப்பட்ட அதனுடைய சொந்த முரண்பாடான வழியில் அல்ல.

அரசு மற்றும் சமூகத்தின் சந்திப்பில் நீதி என்பது ஒரு சட்டத் தேடலாக இருக்க முடியாது. ஆனால் அத்தியாவசியமாக ஒரு தார்மீக தேடலாக இருக்க முடியும். ஒரு வகையில் அவர் அரசியலமைப்புச் சட்ட ஒழுங்கை வளர்க்கிறார் என்றும், அவர் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை வீதியிலிருந்தே சிந்திக்க மக்களுக்கு உதவுகிறார் என்றும் கூறலாம்.

அவர் நாடு தழுவிய சாலை முடக்கம் (chakka jam) மூலம் வீதிகள் தத்துவம் மற்றும் அரசியலின் இடங்களாக மாறும் என்றும், அது மக்களின் உண்மையான பங்கேற்புடன் கூடிய நாடாளுமன்ற நீதி முறையை மறுகட்டமைப்புச் செய்ய உதவும் என்றும் அவர் எண்ணினார். நாம் அரசியலமைப்பின் நீதியையும் ஒழுக்க நெறியையும் நம்பினால், மற்றவர்களைப் போலவே ஷர்ஜீலுக்கும் பேசுவதற்கும், தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும், அவருக்குரிய அரசியலுக்கும் எல்லா உரிமையும் உண்டு; அவருக்கு வாழ்வதற்கும், கண்ணியத்திற்கும் உரிமை உண்டு. அரசியலமைப்பு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளை நாம் பெறுவதற்கு கோட்பாடோ அல்லது கமுக்கமான ஒழுக்கமோ தேவையில்லை. ஷர்ஜீலை விடுதலை செய்ய அனுமதிப்பதற்காக விவாதிப்பதற்கும், பேச்சுவார்த்தைக்கும் நம்மை எடுத்துச் செல்லக் கூடாது.

ஒருவருக்கு ஷர்ஜீலுடன் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், ஷர்ஜீல் தவறு செய்தார் என்பதற்கு பல்வேறு கோணங்களிலிருந்து ஒருவர் சாட்சியாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்களுடைய அடிப்படைகளை ஆய்ந்துப் பார்த்தால், என்ன தவறுகள்? என்று கேட்க வேண்டும். ஷர்ஜீல் கூறியவற்றில் எது இருக்கும் நிலையை மாற்றம் செய்ய வைத்தது? சக்கா ஜாம் என்று ஒரு முஸ்லீம் கூறுவது எதைக் குறிக்கிறது?

ஒரு ஜனநாயகத்தில் அரசுக்கு வெறும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மட்டுமல்ல, அரசுக்கும் நமக்கும் இடையே போர் தந்திரத்தில், கருத்தியலில், அரசியலில் மற்றும் தத்துவத்தில் உடன்பாட்டின்மை கொண்டிருக்கவும் உரிமை இருக்க வேண்டும். ஆனால் அந்த உடன்பாட்டின்மை ஜனநாயக நடைமுறை வழியாகச் செல்ல வேண்டும். அது நம்மை விலக்குவதற்கு காரணமாக இருக்கக் கூடாது. மாறாக அது ஒன்றுபட்டு இருப்பதற்கான தகுதியை உயர்த்துவதாக இருக்க வேண்டும். சொல்லப்படும் ஜனநாயகத்தில் நாம் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும். இருக்கும் நிலை பற்றிய ஷர்ஜீலின் ஆழ்ந்த வருந்தத்தக்க கேள்விகளும், இந்த நாட்டில் உண்மையில் எப்போதுமே இருந்திராத ஜனநாயகத்தை கட்டுவதற்கான யுக்தியும் அவர் பெற்ற கண்டனங்களுக்கும், தொடர்பறுத்தல்களுக்கும் கண்டிப்பாகத் தகுதியானவையல்ல. அதற்கு பதிலாக, ஒரு ஜனநாயக நடைமுறையிலான தொடர்பையும் விவாதத்தையும் துவக்கி இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஷர்ஜீலின் அரசியல் நிற்கிறது.

பயங்கரவாதத்தின் தொடர்ச்சியான, எளிதான மற்றும் மோசமான குற்றச்சாட்டுகளைக் கொண்ட அரசால் அல்லது தாராளவாத அறிவு ஜீவிகளால் சமூக ரீதியாக அனுமதிக்கப்பட்ட புறக்கணிப்பால் இந்தியாவில் முஸ்லீம்கள் ஒரு முஸ்லீமாக தடையின்றி பங்கேற்பது பரவலாகக் களங்கப்படுத்தப்பட்டுள்ளது என்பது பரவலாக குறிக்கப்படும் உண்மை.

ஒரு சமூகமாக, அரசியல் ரீதியாக முஸ்லீம்களை அணி திரட்டும் முயற்சிகளுக்கான எந்த ஒரு கூற்றிற்கான பொதுவான பதில் “வகுப்புவாதம்” என்று அறிவிப்பதாகும். அதாவது மதச்சார்பின்மை என்பதற்கு நேர் எதிரானது. ஆகவே, முஸ்லீம்களை அவசியமாக அமைப்பாக்க வேண்டும் என்பது ஷர்ஜீல் இமாமின் அடிப்படை அறிவிப்பாக உள்ளது. அது அடக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வது களங்கமற்றது என்பதாலும், அதே நேரத்தில் சமூக படிமுறைகளை அகற்றுவதற்கும் பேசுவதால் இது ஒரு நேர்மறையான, நிறைவேற்றக் கூடிய மற்றும் ஆக்கபூர்வமான வகையில் புரட்சிகரமானது.

இதன் விளைவாக, தற்போதைய அரசு ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகளை பலரும் பேசுகிறார்கள். இத்தகைய உறுதியுடன் ஊட்டப்பட்ட அச்சம் எப்போதும் செயலுக்கு தடையாக உள்ளது. பெரும்பாலும் அச்சத்தில்தான் நாம் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை எடுக்கிறோம் அல்லது உடனடி தீர்வுக்காக சண்டையில் இறங்குகிறோம். ஆனால் வெறும் உயிர்வாழ்வதை உறுதிப்படுத்திக் கொள்வது மட்டுமல்ல இந்த நாட்டில் நீதியுடனும், கண்ணியத்துடனும் வாழ்வது அவசியம் என்பதைப் புரிந்துக் கொள்ளத் தவறி விட்டோம். இந்த குரூர ஜனநாயகத்தை பண்படுத்த, ஒழுக்கப்படுத்த, தொடரும் பார்ப்பனிய முன்னுரிமை மற்றும் கட்டுப்பாட்டினால் தங்கள் மனிதத்துவத்தை இழந்த குடிமக்களை ஜனநாயகப்படுத்த ஒரு நீண்டகால இயக்கத்தைக் கட்ட வேண்டும்.

ஷர்ஜீல் சக்கா ஜாமிற்கு விடுத்த அழைப்பு, அது எந்த அளவு உடனடி விளைவுகளைக் கொடுத்ததோ அதே அளவு, அடிப்படையில் அடக்கப்பட்டவர்களின் தலைமையிலான ஒரு தார்மீக, ஜனநாயக இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ஆனது. அது குடியுரிமை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அரசியல் செயல் முறை மட்டுமல்ல, தலித் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை, இந்தியாவின் பிற கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளை முன்வைப்பது ஆகியவற்றிற்கான வழியும் ஆகும். இது தாராளவாத அறிவுஜீவிகளுக்கு ஒதுக்கப்பட்டவர்களுக்கான இடத்தையும், குரலையும் பொருத்தமாக முடிவு செய்வதற்கான அழைப்பு. மேலும் முஸ்லீம்களுக்கு, குறிப்பாக அவர்களில் மிகவும் பின்தங்கிய, சாதி, வர்க்கம், பாலின அடிப்படையில் பல சுமைகளை சுமந்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய சொந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அழைப்பு – இந்த ஒரு அமைப்பிற்கான அல்லது செயலுக்கான விலைதான் ஷர்ஜீல் இமாமின் 365 நாட்கள் சிறைவாசம்.

www.outlookindia.com இணையதளத்தில் சுபாஷ் மஹராஜ், ஸ்நேஹசிஷ் தாஸ் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்