Aran Sei

ஏந்திரி அஞ்சலி ஏந்திரி – சென்னை ரசிகர்கள் கவலை

’தூதுவன் வருவான் மாரி பொழியும்’ என்று அஞ்சாநெஞ்சர் பிராவோ மற்றும் ராயுடு வருகைக்காக காத்துக்கிடந்த சென்னை ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது ஐதராபாத்துடனான நேற்றைய போட்டி.

முரளி விஜய் நேற்றைய ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் இருந்ததே சென்னையின் பெரிய வெற்றி என்று பலரால் பாராட்டப்பட்டது. ஆனாலும் பேட்டிங்கை பார்க்கும் போதுதான் தெரிந்தது ‘முரளி விஜய் சென்னை அணியில் இல்லை. ஒட்டு மொத்த சென்னை அணி தான் முரளி விஜய்க்குள் இத்தனை நாள் இருந்திருக்கிறது’ என்று. இந்த தொடர் சரிவுக்கு காரணத்தை தேடினால், அந்தப் பட்டியல் வேதாளத்தில் தல குதிக்கும் பாதாளம் போல போய்க்கொண்டே இருக்கிறது.

சென்னை அணியை பொறுத்த வரைக்கு சீனியர் வீரர்கள் பஞ்சம் இல்லை. ஆனால் ப்ராப்ளமே அதுதான். பெரும்பான்மையான வீரர்கள் 80-ஸ் கிட்ஸாகவோ, ’மூத்த’ 90-ஸ் கிட்ஸாகவோ, 33 வயதை கடந்தோ, மெதுவாக நடந்தோ போய்க் கொண்டிருக்கிறார்கள். அடித்து ஆட 2k கிட்ஸ்கள் போதுமான அளவு இல்லை.

சாம் குரான் முகம் நம்ம துருவ் விக்ரமை ஞாபகப்படுத்துகிறர். ’நம்ம சீயான் பையன் துருவ் விக்ரம் செய்ற காரியத்த பாருங்க’ என்று சாம் குரான் பேட்டிங் வீடியோக்களை யூட்யூப் சானல்கள் போடத் தொடங்கி விட்டன. துருவ் விக்ரமுக்குக் கூட அடுத்து வாய்ப்புகள் கிடைத்து விடும் போல, ஆனால் ஓப்பனிங் இறங்க குரானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

22 வயது சுட்டி பையன் இந்த ஐபிஎல் போட்டிகளில் மொத்த 19 பந்துகள் மட்டுமே சந்தித்துள்ளார். அதில் 6 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 51 ரன்கள் குவித்து, ஸ்ட்ரைக் ரேட்டில் பங்குனி வெயில் போல உச்சத்தில் அடித்துக் கொண்டிருக்கிறார். ஹோட்டல் ரூம் ரேட் பிரச்சனையில் இருந்த சென்னை அணிக்கு, ஸ்ட்ரைக் ரேட் ஒரு பொருட்டாக தெரியவில்லை.

நன்றி : Twitter

தோனி, ரெய்னா, பிராவோ, டூப்ளஸிஸ், வாட்சன், முரளி விஜய், ராயுடு, ஹர்பஜன், ஜடேஜா, கேதர் ஜாதவ், இம்ரான் என எல்லா வீரர்களும் ஐபிஎல்லுக்கு அடிக்கல் நாட்டிய காலத்தில் இருந்து களத்தில் இருக்கிறவர்கள். ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி போய், லலிதா ஜுவல்லர்ஸ் ஓனரே விளம்பரத்தில் நடிக்க வந்துவிட்ட காலத்திலும் அணி இவர்களையே நம்பியிருக்கிறது.

இவர்களும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெற்று விட்டால், மொத்த சென்னை அணியும் காலியாகிவிடும். அதன் பின் அதை ப்ளாட் போட்டு, ‘ஒரகடம் பக்கத்துல காத்தோட்டமான..’ என்று அப்பாஸை வைத்து விளம்பரம் செய்து விற்பனைக்கு வரலாம்.

மற்ற அணிகள் தைரியமாக இளசுகளை களம் இறக்குகின்றன. அந்த தைரியமே அவர்கள் அடித்து நொறுக்க நம்பிக்கை அளிக்கிறது. தில்லி அணியை பொறுத்த வரை ப்ரித்வி ஷா (20), டேனியல் சாம்ஸ் (27), விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் (22) போன்றவர்கள் உள்ளனர்.

கொல்கத்தாவை பார்த்தால் ஷிவம் மவி (21), கமலேஷ் நாகர்கொட்டி (20), ராஜஸ்தான் அணியில் சூப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் (25), ஆல்-இன்-ஆல் அழகு ராஜாவாக ராகுல் திவாடியா (27) உள்ளார்கள். நேற்றைய போட்டியில் சென்னை அணியின் ராயுடுவை அவுட் ஆக்கியது, தமிழகத்தை சேர்ந்த நடராஜன் (27).

அதேநேரம் சீனியர் வீரர்களை முற்றாக துடைத்து எறிய முடியாது. அவர்கள் வழிகாட்டலும், அனுபவமும் அணிக்கு எப்போதும் தேவை. வயது ஒரு தடையே இல்லை. 40 வயதை நெருங்கும் போதும் சச்சின் சதங்களை அடித்துக் கொண்டிருந்தார். ஷேன் வார்ன், மிஸ்பா 40-ஐ தாண்டியும் தெறிக்க விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போதும் சூப்பர் ஹீரோ போல அடிக்கும் கிரிஸ் கெயிலுக்கு வயது 42.

அதற்காக இத்தனை சீனியர்களா? விசு படத்திலாவது ஒரு விசுதான் இருப்பார். படம் முழுதும் விசுக்களாக இருந்தால், விசுவே விசும்பி விசும்பி அழ ஆரம்பித்து விடுவார். ‘பரிதாபகரமான நிலையில் இருக்கும் பாப்பம்பட்டி அணியில்’  தேவையான வீரர்களுக்கு  இடமும், தேவை இல்லாத வீரர்களுக்கு ஓய்வும் அவசியம். அதுவே ஒரு திறமையான அணியின் தலைமைக்கு அழகு. கேப்டன்சியை பற்றி தல தோனிக்கு ஒருவர் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

சென்னை ரசிகர்களும் இன்னும் எத்தனை போட்டிகளுக்கு தான் ‘அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காற்று அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும்’  என்ற கேஜிஎப் பட க்ளிப்பையே வாட்சப்பில் ட்ரைன் விட முடியும். அதற்குள் சிங்கம்-4 படமே ப்ரைமில் வந்துவிடும் போல.

‘ஏந்திரி அஞ்சலி ஏந்திரி’ என்று சென்னை ரசிகர்கள் கவலை கொள்ள தொடங்கி விட்டனர். ‘வரணும்.. பழைய பன்னீர் செல்வமா வரணும்’ என்பது தான் அவர்களின் வேண்டுதல்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்