Aran Sei

அப்பாலே போங்கள் ஜாதவ் – சிஎஸ்கேயியன்ஸ்

’கைக்கு எட்டியது கல்லாப் பெட்டிக்கு எட்டவில்லை’ என்பது போல ஆனது நேற்றைய சென்னை அணியின் தோல்வி.

மூன்று தொடர் தோல்விகளுக்குப் பின், பஞ்சாப் அணியுடனான போட்டியில் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்று கம் பேக் கொடுத்தது சென்னை அணி. வாட்சனும் டூப்ளஸிசும் பஞ்சாப் அணியைப் பஞ்சு பஞ்சாகப் பறக்க விட்டனர். ’சிங்கத்த டிவில பாத்துருப்ப, லயன் டேட்ஸ் விளம்பரத்துல பாத்துருப்ப, ஏன் அனுஷ்கா கூட டூயட் ஆடிக்கூட பாத்துருப்ப. வெறித்தனமா சேஸ் பண்ணி பாத்துருக்கீயா? பாத்துருக்கீயா?’ என்று மயில் வாகனத்தின் கோட்டையை அடித்துத் துவைத்தனர்.

”போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசயெல்லாம் சுட்டுத் தள்ளு, புதுசா இப்ப பொறந்தோம் என்று எண்ணிக்கொள்ளடா டேய்” என்று காட்டுக் குயில்களாக வெற்றிக் கொண்டாட்டத்தை பாடித்திருந்தார்கள் சென்னை ரசிகர்கள். ஆனால்  சென்னை அணியின் அடுத்த போட்டியிலேயே, ”பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா…டோய்..” என்று கேதர் ஜாதவ் எசப்பாட்டுப் பாடி, தோல்வியை அவர்களுக்குப் பரிசாகக் கொடுத்துள்ளார்.

கல்கத்தாவுடனான இந்தப் போட்டியில் சென்னை அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக வைக்கப்பட்டது. போகிற போக்கில் எடுக்கிற ரன்தான். ஓப்பனிங் வீரர்களும் கௌரவமான தொடக்கத்தைக் கொடுத்தார்கள். 9 விக்கெட்கள் கையில் இருக்க, 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சொகுசு மோடில் இருந்தது சென்னை அணி. அடுத்ததாக தோனி இறங்கினார். ’படையப்பா ரொம்ப நேரம் எடுத்துக்காத சீக்கிரம் முடிச்சுட்டு வந்துரு’ என்று படையப்பா லட்சுமி மோடில் ரசிகர்களும் இருந்தனர். ஆனால் வாட்சன், தோனி, சாம் குரன் என்று வரிசையாக பிக் பாஸ் பார்க்க நடையைக் கட்டிக் கிளம்பினார்கள்.

’தம்பி வா.. ஃபினிஷ்ங் ஷாட் அடிக்கவா’ என்று பிராவோவை தோனி அழைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அஞ்சாநெஞ்சர் பிராவோவின் வருகைக்காக வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்தனர். ஆனால் ஏரோபிளைன் சைஸ் ஏமாற்றமே வந்து அவர்கள் தலையில் தரையிறங்கியது.

’கடைசியா தான் வந்தார் விநாயக் மகாதேவ்..’ என்பது போல கேதர் ஜாதவ் கையில் பேட்டுடன் களத்தில் வந்தார். ப்ளேயிங் லெவனில் மட்டுமல்ல துபாயிலேயே நீங்கள் இருக்கக்கூடாது ஜாதவ் என்று சென்னை ரசிகர் அன்புக் கட்டளையிடும் அளவிற்கு இந்த ஐபிஎல்-லில் அவரின் பேட்டிங் இருந்தது.

’செவ்வல தாவுடா தாவு’ என்று ரசிகர்கள் ஊக்கம் கொடுத்தாலும், ‘எங்க தாவுறது நானே தவந்துக்கிட்டிருக்கேன்’ என்று பேட்டிங் சொதப்பிக்கொண்டிருந்தது சென்னை அணி.

இதில் ஜாதவின் அலப்பறைகளைப் பார்க்கப் பார்க்கதான் ரசிகர்கள் வெறியானார்கள். கடைசி நேரத்தில் புது பேட் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொண்டார். மேலும் சுற்றிலும் எத்தனை வீரர்கள், எந்தெந்த ஆங்கிள்களில் நிற்கிறார்கள், காலை என்ன சாப்பிட்டார்கள், பிக் பாஸில் யாருடைய ஆர்மி சேர்ந்தவர் என்பது வரை கைகளாலேயே அளந்துகொண்டிருந்தார். ’இருக்கு.. இன்னைக்கி சம்பவம் இருக்கு’ என்று ரசிகர்களை நம்ப வைத்தார். ஆனால் மொத்தம் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே அடித்தார்.

நன்றி : Twitter

நாலு ஓவரில் 43 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த அணி, அடுத்த மூணு ஓவர்களுக்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்து, கடைசி ஓவருக்கு 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. கடைசி 8 பந்துகளில் மொத்தமே ஒரு ரன்தான் எடுத்து சென்னை அணி தோல்வியைத் தழுவியது.

ஜாதவை மட்டும் இதில் குற்றம் சொல்ல முடியாது. மிடில் ஆர்டர் முழுதுமே சொதப்பியது. தோனி உட்பட யாரும் ரன் ரேட்டை மெயின்டெயின் பண்ணவில்லை. அடித்து ஆடக்கூடியவர்களான குரானும், ஜடேஜாவும் சேர்ந்து டொக்கு வைத்தனர்.

எந்தக் காரணத்திற்காகத் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கும் ஜாதவை ப்ளேயிங் லெவனில் தோனி எடுக்கிறார். அதிலும் இக்கட்டான சூழலில் பிராவோவிற்குப் பதிலாக ஏன் இவரை இறக்கினார் என்பது தோனிக்கே வெளிச்சம்.

ஆனாலும் ஜாதவ் மேல் உள்ள கோபம் ரசிகர்களுக்குக் குறையவே இல்லை. ‘அப்பாலே போங்கள் ஜாதவ்’ என்று ரசிகர்கள் அவரைக் கண்டாலே ஓடுகிறார்கள். ஆறு போட்டிகளில் நாலில் தோல்வியைத் தழுவியது இக்கட்டான கட்டத்திற்குச் சென்னையை இழுத்துச் சென்றிருக்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்