Aran Sei

கொரோனா தடுப்பூசி – பாஜகவின் பீகார் தேர்தல் வாக்குறுதியும் உண்மை நிலவரமும்

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் “தாங்கள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பீகாரின் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக விநியோகிக்கப்படும்” என்று முதல் வாக்குறுதியாகக் கூறப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக இம்மாத இறுதியிலும் அடுத்த மாதத் தொடக்கத்திலும் நடைபெறவிருக்கிறது. இதில் மும்முனைப் போட்டியாக ஆளும் கட்சியான முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தோடு பாஜக கூட்டணியிலும் (NDA), ராஷ்ட்ரிய ஜனதா தளத்தோடு காங்கிரஸ் கூட்டணியிலும் (UPA), மத்தியில் பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி தனித்தும் போட்டியிட்டு தேர்தலைச் சந்திக்கின்றன.

இந்நிலையில் பாஜகவின் பீகார் மாநில தேர்தல் வாக்குறுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாட்னாவில் நேற்று வெளியிட்டார். அதில் “19 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் (முன்பு காங்கிரஸ் ஆர்.ஜே.டி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்ததை, பாஜக விமர்சித்தது), 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும், மருத்துவம், பொறியியல் படிப்புகள் இந்தியில் கற்றுத் தரப்படும், கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி தயாராகும் பட்சத்தில் மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாகப் போடப்படும்” என்பன உட்பட பல்வேறு வாக்குறுதிகள் 12 பக்கத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்நிலையில் இந்த இலவச தடுப்பூசி விஷயத்தை காங்கிரஸ், ஆர்.ஜே.டி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “இந்திய அரசு தற்போது தனது கோவிட் நோய் அணுகுமுறை உத்தியை அறிவித்துள்ளது; அதன்படி உங்கள் மாநில தேர்தல் அட்டவணையை நோக்குங்கள், நீங்கள் மற்ற போலி வாக்குறுதி குவியல்களுடன் சேர்த்து இதையும் பெறுவீர்கள்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தேசிய பிரச்சாரக் குழு பொறுப்பு நிர்வாகி ஸ்ரீவத்சா ட்விட்டரில் கூறுகையில், “இந்தியாவின் இலவச கோவிட் தடுப்பூசி அட்டவணை:

  • பீகார் – நவம்பர் 2020
  • அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் – ஏப்ரல் 2021
  • கோவா, உ.பி, இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் – பிப்ரவரி 2022
  • குஜராத் – டிசம்பர் 2022
  • கர்நாடகா – மே 2023
  • ம.பி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் – டிசம்பர் 2023

‘மாநில சட்டசபை தேர்தல் தேதிகளுடன் இத்தடுப்பூசி அட்டவணை பொருந்தி வந்தால் அது முற்றிலும் தற்செயலானவையே’ என்று நையாண்டித்தனமாக பாஜகவை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இத்தேர்தல் வாக்குறுதியை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இளைஞர்களும் பொதுமக்களும், சமூக ஊடகங்களில் வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.

“மக்களை வாக்காளர்களாக மட்டுமே பாவித்து, இதுவரை முழுமையாகத் தயாரிக்கப்படாத தடுப்பூசியை வைத்து, அவர்களிடம் இருக்கும் கொரோனா பற்றிய பீதியை அரசியல் லாபத்திற்காகவும் ஓட்டு அரசியலுக்காகவும் பாஜக பயன்படுத்துகிறது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால்தான் ‘இலவச’ தடுப்பூசி என்று சொன்னால் ஆட்சிக்கு வரவில்லை என்றால் ‘இலவசமாக’ தடுப்பூசி போடப்படாதா?

பாஜகவுக்கு வாக்களிக்காத ஏனைய இந்தியர்களுக்குக் கொரோனா தடுப்பூசி இலவசமாகக் கிடைக்காதா?

மேலும் பாஜக ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் நிலை என்ன?

அல்லது இலவச தடுப்பூசி கிடைக்க வேண்டுமென்றால் அந்த மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டுமா?”

போன்ற எண்ணற்ற கேள்விகள் பீகார் தேர்தலையொட்டி பாஜக அறிவித்துள்ள இலவச தடுப்பூசி வாக்குறுதியின் மூலம் எழுகின்றன.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் அனைத்துத் தமிழக மக்களுக்கும் அரசாங்கத்தின் செலவிலேயே இலவசமாகப் போடப்படும்” எனப் புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் இடத்திலே தெரிவித்தார்.

இந்தநிலையில், பாஜக ஐ.டி பிரிவைச் சேர்ந்த நிர்வாகி அமித் மால்வியா, அக்கட்சி சார்பில் இவ்வாக்குறுதி குறித்து ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் “இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. மற்ற திட்டங்களைப் போலவே, மத்திய அரசு குறைந்த விலையில் மாநில அரசுகளுக்குக் கொரோனா தடுப்பூசியை வழங்கும். அந்தத் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும். சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் (அதிகார வரம்பிற்குள்) இருப்பதால், பீகாரில் இலவசக் கொரோனா தடுப்பூசி வழங்க பாஜக முடிவு செய்திருக்கிறது’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

தேர்தல் நடத்தை விதிமீறலா:

பாஜக-வின் இந்த அறிவிப்பு “பீகார் தவிர்த்து மற்ற மாநில மக்களுக்குக் காட்டப்படும் பாரபட்சம் மட்டுமல்லாது, மத்திய அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் எனவும் ஆகையால் இவ்விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அவசர புகார் அளித்திருப்பதாக” சமூகச் செயற்பாட்டாளர் சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உருவாக்கத்தின் உடனடி சாத்தியக்கூறுகள் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

உலகெங்கிலும் உள்ள பல மருந்து நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி சோதனைகளின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ‘சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா’ மற்றும் ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் ஆகியவை தடுப்பூசி உருவாக்கத்தின் முயற்சியில் முதன்மையாக உள்ளனர். இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசி சோதனைகளை மும்முரமாக நடத்திவரும் ‘சீரம் நிறுவனமும் அஸ்ட்ராஜெனிகாவும்’ தற்போது 2 மற்றும் 3-ம் கட்ட சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் நடத்திய பரிசோதனையில் பிரேசிலில் தன்னார்வலர் ஒருவர் இறந்ததாகச் செய்திகள் வெளியாகின.

கொரானா தடுப்பு மருத்து பரிசோதனை : பிரேசிலில் ‘தன்னார்வலர்’ மரணம்

‘பாரத் பயோடெக்’ நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன்( ICMR) இணைந்து ‘கோவேக்சின்’ என்ற பெயரில் முழுக்க முழுக்க உள்நாட்டுத் தயாரிப்பில் தடுப்பூசியை உருவாக்கிவருகிறது. இதுவும் 2 மற்றும் 3-ம் கட்ட சோதனையில் இருந்து வருகிறது. இத்தடுப்பூசியைத்தான் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பயன்பாட்டிற்குக் கொண்டுவர முயற்சித்து வருவதாகக் கூறப்பட்டு சர்ச்சை எழுந்தவுடன் திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அக்டோபர் 6-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், “தற்போது சோதனையில் இருக்கும் தடுப்பு மருந்துகள் திட்டமிட்டப்படி வெற்றிபெற்றால், முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதத்தில் கிடைத்துவிடும். 3 கோடி தடுப்பு மருந்து வழங்குவதற்கான உள்கட்டமைப்பு நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது. தடுப்பு மருந்தை நிர்வகிப்பது குறித்து தேசிய நிபுணர்குழுவுடன் ஆலோசித்து, ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறோம். அடுத்த வருடம் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளின் அளவைக் கொண்டு, யாருக்கு முதலில் வழங்கலாம் என்ற முன்னுரிமைப் பட்டியலைத் தயாரிக்கிறோம். தடுப்பு மருந்துக்கு முழு அனுமதி கிடைத்ததும், முதற்கட்டமாக 3 கோடி மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட அதிக வாய்ப்புண்டு. இதில் சுமார் 70 லட்சம் மருத்துவர்களும், துணை மருத்துவர்களும் அடக்கம், மேலும் இதில் 2 கோடி முன்களச் சுகாதார ஊழியர்களும் அடங்குவார்கள்” என்று கூறினார்.

ஆக சுகாதாரத்துறை செயலாளரின் கூற்றுப்படியே தடுப்பு மருந்துக்கான கொள்கையை முழுமையாக மத்திய அரசு இன்னும் வரையறுக்கவில்லை என்பதும், அடுத்தாண்டு ஜுன் மாதம்வரை பொதுமக்களுக்குக் கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதும் தெளிவாகிறது. ஆனாலும் இல்லாத தடுப்பூசியை வைத்து தங்களுக்கு வாக்களித்தால் ‘இலவசமாக’ போடப்படும் என்று 10 கோடி மக்கள் தொகை கொண்ட மாநில மக்களிடம் தேர்தல் வாக்குறுதி அளித்து வாக்கு கேட்பது கொடுமையானது.

ஒரு பேரிடர் காலத்தில் மக்களைக் காப்பாற்ற தேவையான அனைத்தையும் அரசாங்கம் வழங்கவேண்டும்; அதுதான் பொறுப்பான அரசின் அடிப்படை கடமையாகும், அதைக் கேட்டுப் பெறுவது மக்களின் உரிமையாகும். அதற்கு பெயர் இலவசம் இல்லை- ‘அத்தியாவசியம்’.

அப்படிப்பட்ட ஒரு பொதுச் சுகாதார அவசரகாலப் பேரிடரில்தான் தற்போது இருந்துவருகிறோம்; இக்காலத்தின் அத்தியாவசியமான ஒன்றுதான் ‘தடுப்பூசி’. அதனை சந்தர்ப்பவாத வாக்கரசியலுக்காக இலவசமாக வழங்குவதாகக் குறிப்பிட்ட கட்சியின் சார்பில் வாக்குறுதி அளிப்பதும் மற்றும் மாநில அரசின் சார்பில் இலவசமாகப் போடப்படுவதைச் சாதனைப் போல் தம்பட்டம் அடிப்பதும் வெட்கக்கேடான மூர்க்கத்தனமானதாகும்.

இதன்மூலம் வரவிருக்கும் தேர்தல்களில் இந்தக் கொரோனா தடுப்பூசியை வைத்து மிகப்பெரிய வாக்கரசியல் விளையாட்டுகளும் சந்தை வணிகப் போட்டிகளும் நடைபெறப்போகின்றன என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றன; அவற்றுக்கான சமிக்ஞைகள்தான் இவை.

(கட்டுரையாளர் நவநீத கண்ணன் மருத்துவ இளங்கலை மாணவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்