Aran Sei

தத்தளிக்கும் பொருளாதாரம் – பேரிடியாய் கொரோனா

சில ஆண்டுகள் முன்பு வரை உலகின் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந இந்தியப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக இருந்த இந்தியாவின் நடுத்தர வர்க்கம் கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பே தள்ளாடிக் கொண்டிருந்தது. நோய்த் தொற்று அவர்களை கிட்டத்தட்ட தாக்கி வீழ்த்தி விட்டது.

உலகில் மிகக் கடுமையாக ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் மிக மிக மெதுவாகவே மீண்டு வர முயல்கின்றன. இந்த மந்தநிலை காரணமாக கொரோனா நெருக்கடிக்குப் பின் வளர்ச்சியை நோக்கிச் செல்ல பல ஆண்டுகள் போராட வேண்டியிருக்குமோ என்பதே இன்றைய கேள்வி.

“மக்கள் தற்போதைய மோசமான நிலையை உணர்ந்தே செயல்படுகிறார்கள்”, என்று கூறும் விவேக் கவுல் என்ற பொருளாதார வல்லுநர், “உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8-9% அளவிற்கு மீள்வது சீக்கிரத்தில் நடக்கும் என நான் நினைக்கவில்லை” என்கிறார்.

கொரோனாவுக்கு முன்பே இந்தியப் பொருளாதாரம்  தத்தளித்துக் கொண்டிருந்தது; கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி வீதங்களை பதிவு செய்திருந்தது.  2020 மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் வளர்ச்சி 4.2% ஆக வீழ்ச்சியடைந்திருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அது 8% ஆக இருந்தது.

பொருளாதாரம் சிறிது மீண்டெழத் துவங்கிய போது பொது மக்கள் தமது அதிகரிக்கும் கடன் சுமையை குறைத்துக் கொண்டு நம்பிக்கையை திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் கொரொனா நோய்த்தொற்று பிற நாடுகளை விட  இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்திய மக்கள் தங்கள் செலவினங்களை பிற நாட்டு மக்களை விட மிகவும் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

ஒரு ஆண்டுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்தியாவில் திறன் பேசிகளின் (smart phone) விற்பனை  51% குறைந்துவிட்டதாக கவுன்டர் பாய்ன்ட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. இந்த வீழ்ச்சி விகிதம் பிற நாடுகளில் 25% ஆகவே உள்ளது.

புது டெல்லியைச் சேர்ந்த வாடகைக்கார் ஓட்டுநர் பிஸ்வேஸ்வர் கேவத், முன்பு அடிக்கடி புதுப்புது திறன்பேசிகளை வாங்கி வந்ததாகவும் தற்போது வருமானம் மிகவும் குறைந்து ஏறத்தாழ வருமானமே இல்லாத நிலையில் உடைந்து போன திறன் பேசியை பழுதுபார்க்க கொண்டு செல்வதாகவும் கூறுகிறார்.

நாற்பத்தைந்து வயதான பிஸ்வேஸ்வர் கிழிந்த துணிகளை தானே சரி செய்து கொள்கிறார்.  உணவுச் செலவையும், தான் மிகவும் விரும்பும் விஸ்கி செலவையும் கூட குறைத்துக் கொண்டுள்ளதோடு, வாடகை குறைவான வீட்டிற்கு குடி பெயர முயற்சித்து வருவதாகவும் கூறுகிறார். அவர்.

”கொரோனாவுக்கு முன்பு ஓரளவு முன்னேறி வந்து கொண்டிருந்தேன். தற்போது எனது சேமிப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. எதிர்காலம் நிச்சயமின்றி உள்ளது.“ என்று வேதனையுடன் கூறுகிறார்.

இதை விட மோசமான நிலையில் இருப்பவர்கள் ஏராளம்.

ஊரடங்கால் நாட்டை முடக்கியதும், கொரோனா அச்சமும், நோய்த் தொற்று வேகமாக அதிகரித்து வருவதும் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஜூனுடன் முடிந்த காலாண்டில் முந்தைய ஆண்டை விட 23.9% குறைத்திருக்கிறது. ஏற்கனவே மோசமாக இருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பொருட்கள் விற்பனை பல விஷயங்களில் பிற ஆசிய நாடுகளைவிட மிக மோசமான வீழ்ச்சியை அடைந்துள்ளது.

மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் தங்கள் விற்பனை 75% குறைந்துள்ளதாகவும் உலக அளவில் இந்த வீழ்ச்சி 24% தான் என்றும் கூறுகிறது. ஜப்பானின் சுசுகி மோட்டார் நிறுவனத்தின் விற்பனை ஜப்பானில் 28% வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. ஆனால், இந்தியாவில் விற்பனை 83% வீழ்ச்சியை அடைந்துள்ளதாக கூறி உள்ளது.

நீல்சன் நிறுவனம் ஆசியா முழுவதும் நடத்திய கணக்கெடுப்பில் கொரோனாவுக்குப் பின் அடிப்படை நுகர் பொருள் விற்பனை இந்தியாவில் மிகப் பெரும் சரிவை சந்தித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. எடுத்துக்காட்டாக ஷாம்பு, நொறுக்குத்தீனி ஆகியவற்றின் விற்பனை இந்தியாவில் 8% வீழ்ச்சியை சந்தித்துள்ள அதே நேரத்தில் சீனா, இந்தோனேசியாவில் அது உயர்ந்துள்ளதாகவும் மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளில் 1%  வீழ்ச்சியையே சந்தித்து இருப்பதாக அதன் அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் சாதாரண நடுத்தர மக்கள் தங்களிடம் உள்ள அதிகப்படியான பணத்தில் தங்கம் வாங்குவது வாடிக்கை.  சென்ற காலாண்டில் தங்க விற்பனை இந்தியாவில் 74% வீழ்ந்துள்ளதாகவும், உலக அளவில் அந்த வீழ்ச்சி 53% தான் என்றும் உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. உலகளாவிய வேண்டல் அதிகரித்த நிலையில், மற்றும் நெருக்கடி காலத்தில் பாதுகாப்பான சேமிப்பு என்கிற ரீதியில் வேண்டல் அதிகமானதையும் தாண்டி இந்தியாவின் வேண்டல் மிக அதிகமாகக் குறைந்ததே தங்கத்தின் விலையை இன்னும் உயராமல் வைத்திருக்கிறது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில் வளர்ச்சி குறைவு, வட்டி வீதம் குறைவு என்ற நிலையிலும் சேமிப்புகள் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  இதற்குக் காரணம், இன்னும் தொடர்ந்து வருமானம் பெற்று வருபவர்கள் எதிர்க்காலம் நிச்சயமற்ற நிலையை கவனத்தில் கொண்டு  சேமிப்பதே ஆகும்.

பொருட்களை வாங்கவும், பொழுது போக்கு இடங்களுக்கு செல்லவும் மக்களின் இடப்பெயர்வுகள் கொரோனா நோய்த் தொற்று தாக்குதலுக்கு முன்பு இருந்ததை விட இந்தியாவில் 55% குறைந்துள்ளதாக கூகுள் நகர்வு புள்ளிவிவரங்கள் (Google Mobility Data) காட்டுகின்றன. பெரும்பாலான நாடுகளில் கடந்த சில மாதங்களில் பொருளாதார நடவடிக்கைகள் மீட்சி அடையத் துவங்கி விட்டன. அமெரிக்காவில் இது 18% ஆக குறைந்துள்ள நிலையில் தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளில் முன்னிலையில் உள்ள பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளில் இந்த நகர்வு 31% என்றுள்ளது.

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும், பல நூறு கோடி டாலர் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் இந்திய நுகர்வோரே அடிப்படை ஆகும்.

கொரோனாவுக்கு முந்தைய காலத்திலும் இந்திய அரசு பொது சுகாதாரத்திற்கு செலவிடும் தொகை மிகக் குறைவாக இருந்தது. நோய்த் தொற்று மிகப் பெரிய எண்ணிக்கையில் பாதிப்பது ஏற்கனவே உள்ள நிலையை மேலும் மோசமானதாக்கும்.

சமீபத்தில் ஐ.நா‌ வின் உலக பொருளாதார பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கூறுகிறது. உலகப் பொருளாதாரம் அடுத்த ஆண்டில் 5% முதல் 20% சுருங்கினால் உலக அளவில் 8 கோடி முதல் 39.5 கோடி மக்கள் தீவிர வறுமையில் வீழ்வார்கள் என்று மதிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வின் படி இந்தக் கூடுதல் ஏழைகளில் பாதி பேர் இந்தியாவில் இருப்பார்கள்.

விவசாயம் செய்யும் தன் தந்தையை விட்டு வெளியூருக்குச் சென்று நகரில் 20 பேர்களுடன் வேலை செய்து வந்தார், ஹிமான்ஷு சர்மா. கொரோனாவுக்கு முன்பு நல்ல ஊதியம் பெற்று, தன்  குடும்பத்துக்கு நிறைய பணம் அனுப்பி வந்ததாகவும் தற்போது கொரோனாவால் வேலை உத்தரவாதம் இன்றி, இவ்வாண்டின் போனஸ் தொகையையும் இழந்து நிற்பதாகக் கூறுகிறார். தற்போது சொந்தமாக சமைத்து உண்ணும் அவர் எதிர்காலம் பற்றி கவலையுடன், இதுவரை இல்லாத அளவு மிகக்குறைந்த பணத்தையே தன் குடும்பத்துக்கு அனுப்புவதாக வேதனையோடு கூறுகிறார். ”நான் மிகுந்த கவலையோடு உள்ளேன். நான் வேலை செய்யும் தொழிற்சாலை மூடப்பட்டு விடுமோ என அஞ்சுகிறேன். வேறு வேலை கிடைக்காவிட்டால் என் எதிர்காலம் என்னவாகுமோ?”  எனக் கவலையுடன் கூறுகிறார் சர்மா.

இந்திய அரசு பல்வேறு நிவாரண நடவடிக்கைகளுக்கான அறிவிப்புகளை  வெளியிட்டு, மக்களின் நம்பிக்கையை மீட்க முயல்கிறது. ஆனால் அதற்கு முன்பே பெரும் நிதிப் பற்றாக்குறையில் இருப்பதால் இவற்றை நடைமுறைப்படுத்த போதுமான நிதியை தர முடியுமா என்பது கேள்விக் குறியே.

நகரங்களில் இருந்து திரும்பிச் சென்ற 2 கோடி பேரையும் சேர்த்து கிராமப்புறங்களில் நிவாரணத்துக்கான இன்றைய தேவை மிக அதிகமாகிவிட்டது. அங்கு 45% பேர் அரசின் நூறுநாள் வேலைதிட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இத்தனைக்கும் அதில் கிடைப்பது நாளொன்றுக்கு 200ரூபாய்க்கும் குறைவே.

இந்த நிதியாண்டின் மார்ச் மாத முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய ஆண்டை விட 7% சுருங்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு சுருக்கம் ஆகும். உலகில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கும் நிலையில் நுகர்வோர் முடக்கப்பட்டு இருந்துவிட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும்.

எச்.எஸ்.பி.சி வங்கித் தலைவர், ப்ரான்ஜூல்  பண்டாரி, ” நுகர்வோர் மீது முன்பு போல் செலவு செய்ய முன்வருவார்கள் என எனக்குத்  தோன்றவில்லை.” என்கிறார்.

டெல்லி வாடகை கார் ஓட்டுனர் கேவத், தான் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் தனது மகள்களின் வாழ்க்கையையும் இது பாதிக்குமோ எனக் கவலைப்படுவதாகவும் கூறுகிறார். இந்த நிலை நீடித்தால் அவர்கள் எதிர்காலம் பற்றி அச்சமாக உள்ளது என்கிறார்.

– எரிக் பெல்மன் (கிருஷ்ண பொக்ரெல் பங்களிப்புடன்)

(www.wsj.com இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்