Aran Sei

கொரோனா பெயரால் ரூ.241 கோடி குவித்த பாபா ராம்தேவ் – நவநீத கண்ணன்

ராம்தேவ்

யோகா புகழ் பாபா ராம்தேவின் ஆயுர்வேத நிறுவனமான பதஞ்சலியின் ‘கொரோனில் கிட் (Coronil Kit)’ அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களில் 85 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் ஈட்டிய மொத்த வருமானம் சுமார் ரூ.241 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசு சார்பில் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் உலகளாவிய கொள்ளை நோயான கொரோனாவுக்கு இந்திய அளவில் இன்றுவரை, சுமார் 1.2 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நோய்த் தொற்றுக்கான நிரூபணமான ‘குணப்படுத்தும் மருந்தோ அல்லது தடுப்பூசியோ’ இதுவரை உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில்தான் கடந்த ஜூன் 23 அன்று “கொரோனாவுக்கான குணப்படுத்தும் மருந்து மற்றும் வைரஸைக் கொல்லும் மருந்து என்ற பெயரில் கொரோனில் கிட் எனப்படும் மூன்று வகையான தயாரிப்புகளை உள்ளடக்கிய {2 வகை மாத்திரைகள் கொரோனில் (Coronil), சுவாசரி வதி (Swasari vati) மற்றும் 1 பாட்டில் அனு தைலம் (Anu taila)} சிகிச்சை மருந்துகள்” எனப் பதஞ்சலி சார்பில் விளம்பரப்படுத்தப்பட்டது.

அது மட்டுமன்றி கோவிட் நோயாளிகளிடத்தில் செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் போது, அம்மருந்துகள் 100 சதவீதம் சாதகமான முடிவுகளைக் காட்டியதாக பதஞ்சலி தரப்பில் அப்போது சொல்லப்பட்டது. இது மருத்துவ உலக ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளானது.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த உத்தரகாண்ட் ஆயுர்வேதத் துறை “பதஞ்சலி விண்ணப்பித்தபடி காய்ச்சல், இருமல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்திற்கு மட்டுமே உரிமம் வழங்கினோம்; விண்ணப்பத்தில் அவர்கள் கொரோனா வைரஸ் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை” என்று மறுப்பு தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தரப்பிலும் “பதஞ்சலி மருந்தின் கொரோனா நோயைக் குணப்படுத்துவதற்கான உரிமையையும், அந்த மருந்துகளின் உண்மையான செயல் திறனையும் நிரூபிக்க சரியான மருத்துவப் பரிசோதனைகளையும் ஆராய்ச்சித் தரவுகளையும் அவர்கள் தரப்பிலிருந்து சமர்ப்பிக்கவில்லை” என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அதனால் கொரோனா கிட் அல்லது ‘கோவிட்19-ஐ குணப்படுத்தும் மருந்து’ என்கிற பெயரில் எந்த வணிக ரீதியான விற்பனையையும் விளம்பரப்படுத்தலையும் செய்யக் கூடாது என பதஞ்சலிக்கு ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்தது; ‘இருமல், காய்ச்சலைத் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்’ என்கிற பெயரில் மட்டும் விற்பனை செய்ய அனுமதித்திருந்தது.

எனினும் இவற்றைப் பொருட்படுத்தாமல், ஹரித்வாரைத் தலைமையிடமாகக் கொண்ட பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் (PRI) தயாரிக்கும் ‘கோவிட்-19 நோய் எதிர்ப்பு சக்தி கூட்டும் மருந்து (Covid19 Immunity Booster Kit)’ என்கிற பெயரில்தான் தற்போது வரை விளம்பரப்படுதி விற்பனை செய்துவருகிறது பதஞ்சலி.

(பதஞ்சலி இணையதளத்தில் இருந்து – https://www.patanjaliayurved.net/product/ayurvedic-medicine/packages-for-diseases/swasari-coronil-kit/3262)

பதஞ்சலி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூன் 23-ம் தேதியிலிருந்து அக்டோபர் 18-ம் தேதிவரை, சுமார் 85 லட்சம் கொரோனில் மருந்துகள் மொத்த கிட்டுகளாகவும், தனித்தனி மாத்திரைகளாகவும் தைலமாகவும் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஆக பதஞ்சலி இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட விலைகளின் அடிப்படையில் கணக்கிட்டால், சுமார் 241.41 கோடி ரூபாய் அளவிற்கு மருந்துகளைக் கொரோனா மருந்துகளாக விளம்பரப்படுத்திப் பதஞ்சலி விற்பனை செய்துள்ளது.

இது தொடர்பாக பதஞ்சலி ஆயுர்வேத தலைமை நிர்வாகி ‘ஆச்சார்யா பாலகிருஷ்ணா’ த பிரின்ட் செய்தித் தளத்திற்கு அளித்த பேட்டியில், “கொரோனில் மருந்து தொடர்பான சர்ச்சைகள் இருந்த போதிலும், வாடிக்கையாளர்களிடத்தில் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதையே எங்கள் விற்பனைத் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த வெற்றிகரமான விற்பனை தந்த ஊக்கத்தால் நிறுவனம் தற்போது நாளொன்றுக்கு 50,000-லிருந்து 70,000 கொரோனில் மருந்துகளைத் தயாரிக்கிறது” என்றார்.

மேலும், இம்மருந்தின் செயல்திறன் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், “கொரோனாவுக்கு எதிரான எங்கள் மருந்தின் செயல்திறனை நிரூபிக்க, அதிக அளவிலான மருத்துவப் பரிசோதனைகள் அடங்கிய பெரிய மாதிரி அளவு (Sample size) தரவுகளை நாங்கள் சேகரித்து வருகிறோம். விலங்குகள் மத்தியிலும் மனிதர்கள் மத்தியிலும் சோதனைகள் (In-Vivo) மற்றும் சோதனைக் குழாய் சோதனைகள் (In-Vitro) ஆகிய இரண்டுவிதப் பரிசோதனைகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆராய்ச்சி முடிவுகளை விரைவில் ஆயுஷ் அமைச்சகத்திடம் சமர்ப்பிப்போம்; அப்போது உலகையே அச்சுறுத்தும் இந்நோய்க்கு எதிரான ஆயுர்வேத வழியில் குணப்படுத்தும் மருந்தை உருவாக்கிய முதல் நாடாக இந்தியா திகழும்” என ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

இம்மருந்துகளின் செயல்திறனை நிரூபிக்கும் விலங்குகள், மனிதர்கள், சோதனைக் குழாய் பரிசோதனைகள் கூட முடியாத நிலையில், கொரோனா நோயைத் தடுப்பதாகவோ, குணப்படுத்துவதாகவோ நிரூபிக்கப்படாத பதஞ்சலியின் கொரோனில் ஆயுர்வேத மருந்து பொதுமக்களிடையே இந்த அளவிற்குப் பிரபலமாவதற்கான காரணங்களை ஆராயவேண்டியது அவசியமாகிறது.

கொரோனில் கிட் அதிக அளவில் விற்பனையாவதற்கு அதைச் சுற்றி பதஞ்சலி உருவாக்கிய சர்ச்சைக்குரிய விளம்பர உத்தி முதன்மையான காரணமாக உள்ளது. முழுமையாகக் குணப்படுத்தும் மருந்துகள் கண்டு பிடிக்கப்படாத கொரோனா தொற்றுநோய் பற்றி மக்களிடையே இருக்கும் பீதியையும், பண்டைக்கால மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா உள்ளிட்டவை மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் வணிகரீதியில் லாவகமாகப் பயன்படுத்திக்கொண்டது பதஞ்சலி.

இதன்மூலம் தனது ஆயுர்வேத மருந்துகளின் செயல்திறன் குறித்த உண்மைத் தன்மையைப் பொருட்படுத்தாமல் ‘கொரோனாவுக்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகள்’ என்னும் பெயரில் பல லட்சம் யூனிட்டுகளை விற்றுத் தீர்த்துள்ளனர்.

மேலும் இந்த மருந்தின் விற்பனைக்காக மட்டும் பதஞ்சலி இந்த மோசமான அணுகுமுறையைக் கையாண்டதாக இதைச் சுருக்கிப் பார்க்கக் கூடாது; ஏனெனில், இந்துமத வலதுசாரிய பார்வையான, “ஆயுர்வேதத்தையும் யோகாவையும் நவீன அறிவியல் மருத்துவமுறைக்கு (அலோபதி மருத்துவம்) மாற்றாகப் பிரதானப்படுத்த வேண்டும்” என்கிற விருப்பத்தைக் கடந்த சில ஆண்டுகளாகவே செவ்வனே பூர்த்தி செய்து வருகிறது பதஞ்சலி. அதற்கான முறையான அறிவியல் சோதனை முறைகள் எதனையும் பின்பற்றாமலே தனது பொருட்களை விற்று வருகிறது.

இந்தப் பிற்போக்குத் தனத்தின் ஒரு கட்டமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான நெறிமுறைகளில் ஆயுஷ் மற்றும் யோகா மருத்துவமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ வர்தன் சேர்த்திருந்தார். இந்திய மருத்துவப் பிரதிநிதிகளின் முக்கிய அமைப்பான ‘இந்திய மருத்துவச் சங்கம் (IMA)’ இது தொடர்பாக தனது கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் பதிவு செய்தது.

“ஆயுர்வேத மருத்துவத்தில், கோவிட் நோயைக் குணப்படுத்தவோ அல்லது கொரோனா தொற்றைத் தடுப்பதற்கோ மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் திருப்திகரமான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பி, இது போலி பழமைவாதத்தைத் தூக்கிப்பிடிக்கும் செயலென மருத்துவர்கள் விமர்சித்திருந்தனர்.

யோகாவைப் பிரபலப்படுத்தியதன் மூலம் பிரபலமான ராம்தேவ், இந்திய நடுத்தர வர்க்கக் குடும்பங்களிடையே கடந்த 6, 7 வருடங்களாக ஆயுர்வேதம், மூலிகை என்பன போன்ற இயற்கை சார்ந்த ஈர்ப்புப் பெயர்களின் மூலம் பல பதஞ்சலி தயாரிப்புப்  பொருட்களைப் புகுத்தி வருகிறார். அது சோப்பு, ஷேம்பூ, டூத் பேஸ்ட் தொடங்கி உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், நெய், மருந்துகள் வரையிலும் பட்டியல் நீள்கிறது.

எனினும் பாதுகாப்பற்ற, தரமற்ற பொருட்கள் தொடர்பாகவும் தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் தொடர்பாகவும் பதஞ்சலி பலமுறை சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.

உதாரணத்திற்கு,

  1. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம், பதஞ்சலியின் தேன், உப்பு, கடுகு எண்ணெய் போன்றவற்றை விளம்பரங்களில் தவறாக சித்திரித்ததற்காகவும் அவற்றுக்கான தரநிலையைப் பூர்த்தி செய்யத் தவறியதற்காகவும் இந்திய விளம்பரத் தரநிர்ணய கவுன்சில் (ASCI) பதஞ்சலிக்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
  2. 2017-ம் ஆண்டு ஏப்ரலில் ஹரியானாவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(FDA), பதஞ்சலி நெய் தரமற்றது மற்றும் பாதுகாப்பற்றது எனத் தீர்ப்பளித்தது.
  3. ஏப்ரல் 2015 முதல் ஜூலை 2016 வரை பதஞ்சலியின் 33 விளம்பரங்களுக்கு எதிராகப் புகார்கள் வந்துள்ளதாக மக்களவையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் ஒரு நீட்சியாகவே ‘கொரோனாவுக்கான குணப்படுத்தும் மருந்து என முதலில் அறிமுகப்படுத்திப் பின்னர் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து’ என்று பெயரை மாற்றி மக்களை ஏமாற்றி வருகிறது, இந்தியாவின் முக்கிய நுகர்வோர் சந்தை நிறுவனமான பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட்.

கட்டுரையாளர் நவநீத கண்ணன் மருத்துவ இளங்கலை மாணவர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்