Aran Sei

பார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி – ஆதவன் தீட்சண்யா

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை நடத்திய “மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கம்” கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை

1. 2014 மே மாதம் பாஜக ஆட்சிக்கு வந்ததன் பின்னணியில் அதே ஆண்டு நவம்பரில் வேர்ல்டு இந்து பவுண்டேஷன் என்ற அமைப்பு உலக இந்து மாநாட்டை நடத்துகிறது. இம்மாநாட்டின் பகுதியாக நடத்தப்பட்ட ‘இந்து கல்வி மாநாட்டின்” உரைகள் இந்தியக் கல்விப்புலத்தை இந்துப் பண்பாட்டில் தோய்ந்த கல்விப்புலமாக மாற்றியமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவதாய் இருந்தன.

2. 2015 அக்டோபர் 31 அன்று தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவை உருவாக்கிட டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் குழுவை ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. 2016 ஏப்ரல் 30 ஆம் நாள் இக்குழுவினால் அரசிடம் தரப்பட்ட அறிக்கையின் முதல் பக்கத்திலிருந்தே இந்துத்துவக் குப்பைகளைக் காணமுடிந்தது. இந்தியாவின் பண்டைய கல்வி முறை வேத அமைப்பிலிருந்து உதித்தெழுந்தது என்று ஆரம்பித்து பல மாநிலங்களுக்கும் மொழிகளுக்கும் உலகைக் காணும் சன்னலாக சமஸ்கிருத அறிவு இருக்கிறது என்று புளுகுவது வரை போனது. பண்பாட்டின் ஒரு கூறாகத்தான் மதம் உள்ளது என்பதை திரித்து மதம்தான் பண்பாடாக இருப்பது போல காட்டுவதற்கான முயற்சியும் அதில் இருந்தது.

3. 2015ஆம் ஆண்டு முதல் இந்திய ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் ஏக் பாரத் சிரேஷ்ட பாரத் என்றொரு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. பிரதமரின் சிந்தனைக்குழந்தைகளாக ஏற்கனவே பிறந்த ஏகப்பட்ட இந்தியாக்களின் கதி என்னவென்று யாரும் அறியவியலாத நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் 140வது பிறந்தநாள் நிறைவுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு அவரால் பெற்றெடுக்கப்பட்ட மற்றுமொரு இந்தியா தான் இந்த ஏக் பாரத் சிரேஷ்ட பாரத். இந்தியல்லாத பிறமொழியினருக்கு இந்தத் திட்டத்தின் பெயருக்கு அர்த்தம் என்னவென்று விளக்குவதற்குக்கூட எந்த முயற்சியும் மேற்கொள்ளத்தேவையில்லை என்று கருதியிருப்பார்கள் போல. இவ்வளவு எகத்தாளமா என்கிற எரிச்சலுடன் கூகுளில் தேடிப் படித்தால்தான் ஒரே இந்தியா சிறந்த இந்தியா என்று அதன் பொருள் விளங்குகிறது. எதிலே சிறந்த இந்தியா என்று கேட்பதற்கும் முன்பாக ஒரே இந்தியா என்பதன் பொருள் என்னவென்று பார்க்க வேண்டியுள்ளது.

நாட்டின் வெவ்வேறு இரு மாநிலங்களை இணையாகச் சேர்த்து அவற்றுக்குள் பரஸ்பர புரிதலையும் இணக்கத்தையும் உருவாக்குவதற்காக அவ்விரு மாநிலங்களின் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தமது மொழி இலக்கியம் வரலாறு கலை இலக்கியம் பண்பாடு குறித்து மற்றவருடன் பரிமாறிக்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமெனக் கூறப்படுகிறது. இதனடிப்படையில் தமிழகமும் ஜம்மு காஷ்மீரும் ஓரிணையாக்கப்பட்டுள்ளன. மாறுபட்ட பண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் நாம் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்கிற உணர்வை இது உருவாக்கும் என்று இத்திட்டம் கூறிக்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் ஒரே மாநிலமாக நீடிப்பதைப் பொறுத்துக்கொள்ளாமல் சிதறடிக்கும் ஒன்றிய அரசு குமரி முதல் இமயம் வரை ஒரே நாடு என்ற உணர்வை ஊட்டப்போவதாக சொல்வது கேலிக்குரியது. தொடர்ச்சியான நிலப்பரப்பின் எதிரெதிர் முனைகளில் வாழ்கிற இவ்விரு மாநிலங்களின் மாணவர்களும் இந்தியர்கள் என்ற முறையில் பகிர்ந்துகொள்ளப் போகும் பொதுமைகள் எவையென்று இத்திட்டம் தெளிவுபடுத்தவில்லை. அதேவேளையில் அவர்களை தமது இனத்தின் தனித்த அடையாளங்களை இழக்கச்செய்வதற்கும் இந்துத்துவாவினர் கட்டமைக்க விரும்பும் ஒற்றை தேசம் ஒற்றைப் பண்பாடு என்கிற அடையாளத்தை ஏற்கச்செய்வதற்குமான பல உட்சுழிகளைக் கொண்டுள்ளது இத்திட்டம்.

4. 2016 ஆம் ஆண்டு இறுதியில் ஒன்றிய அரசின் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் “12000 வருட இந்தியப் பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிணாமத்தை முழுமையாக ஆய்வு செய்வதற்கான வல்லுனர் குழு” ஒன்றை அமைக்கிறார். 40 கோடி ரூபாய் அரசு நிதியுதவியுடன் 12 பேர் கொண்டதாக அமைக்கப்பட்ட இக்குழு தன் ஆயுட்காலம் 2017 நவம்பர் 11 அன்று முடிவடைவதற்குள்ளாக சிலதடவைகள் கூடியிருப்பதாக தெரியவருகிறது. என்ன பேசப்பட்டது என்கிற விவரம் பொதுவெளியில் பகிரப்படவில்லை.

2018 மார்ச் 6 ஆம் நாள் ராய்டர்ஸ் இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரை வழியாகத்தான் இப்படியொரு குழு அமைக்கப்பட்டிருக்கும் செய்தியே வெளியே தெரியவந்தது. ஆனாலும் பரவலாகவில்லை. ராய்டர்ஸிடம் இந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஐவர் தெரிவித்த கருத்துகளின்படி, ஆரியர்கள் எங்கிருந்தும் இந்தியாவிற்குள் வந்தவர்களல்ல- அவர்கள் இம்மண்ணின் பூர்வகுடிகள், சமஸ்கிருதம் இந்தியாவிலேயே உருவான மொழி, வேதங்களின் பிறப்பிடம் இந்தியாவே, வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றில் உள்ள கருத்துகள் கற்பிதமானவையல்ல – உண்மையே என்று இந்துத்துவவாதிகள் சொல்லிக் கொண்டிருக்கும் பொய்களை ஆய்வுமொழியில் எழுதித்தருவதுதான் இந்த வல்லுனர் குழுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆய்வு வரம்பு என்பதை அறியமுடிகிறது. இந்தக்குழு கொடுக்கும் அறிக்கையை இந்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்ளப் போகிறதென அறிவித்த அப்போதைய அமைச்சர், அந்த அறிக்கையின் அடிப்படையில் பாடநூல்களை மாற்றியெழுதிட கல்வி அமைச்சகத்திடம் தான் வலியுறுத்தப்போவதாகவும் அறிவித்தார். அப்போதைய ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரோ பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தற்போது கற்பிக்கப்படும் வரலாற்றை கேள்விக்கேட்கும் தைரியமுள்ள முதல் அரசு எங்களுடையதே எனப் பீற்றிக்கொண்டதுடன், பண்பாட்டுத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்படவிருக்கும் அறிக்கை கல்வித்துறையில் தீவிரமாக அமலாக்கப்படும், பாடநூல்கள் மாற்றியெழுதப்படும் என்று தெரிவித்தார்.

5. 2018 அக்டோபரில் அகில இந்திய தொழில்நுட்பல கல்விக்கழகம் (ஏஐசிடிஇ), பண்டைய இந்தியாவின் அறிவமைப்பு ( Ancient Knowledge System) என்கிற படிப்பையும் அதற்கான பாடநூலாக பாரதிய வித்யாசார் என்கிற நூலையும் புகுத்தியது. போலி அறிவியலை முன்வைக்கும் கல்விக்குள் திணிக்கும் இம்முயற்சிக்கு எதிராக கல்வியாளர்களும் அறிவியலாளர்களும் இணையவழி கையெழுத்தியக்கம் நடத்தியபோது, அவர்களைவிடவும் கூடுதலானவர்கள் தனது முடிவுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுக் கொடுத்திருப்பதாக கொக்கரித்தது ஏஐசிடிஇ. அதற்கும் முன்னதாகவே கூட அது அறிவியல் தொழில்நுட்பக்கல்வியை பாழடிக்கத்தொடங்கிவிட்டதற்கு 2018 ஜனவரியில் வெளியிட்ட Model Curriculam for Undere Graduate Degree Courses in Engineering and Technology என்கிற ஆவணம் சான்றாக உள்ளது.

6. மேற்சொல்லப்பட்டிருக்கும் பின்னணியில் தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிடப்படும் பண்பாடும் பாரம்பரியமும் யாருடையவை என்கிற கேள்வி எழுகிறது. இந்த நாடு பன்மைத்துவமான பண்பாட்டைக் கொண்டிருக்கிறது என்று விதந்தோதிக் கொண்டே அந்த பன்மைத்துவத்தை ஒழித்துக்கட்டுவதற்குண்டான கேடுகளைச் செய்துவருகிற இந்துத்துவர்களின் பாஜக அரசு, கல்விப்புலத்தில் மட்டும் பன்மைத்துவப் பண்பாட்டை பேணும்விதமாக நடந்து கொள்ளுமா என்கிற சந்தேகத்திலிருந்து இந்தக் கல்விக்கொள்கையை அணுகவேண்டும். ஆரியர்களின் – அவர்களது வழித்தோன்றல்களாக தம்மைக் கருதிக்கொண்டுள்ள பார்ப்பனர்களின் வேதப்பண்பாட்டையும் மேலாதிக்கத்தையும் அரசதிகாரத்தின் துணையோடு நிறுவத்துடிக்கும் இந்துத்துவவாதிகள் – அதே நோக்கங்களுக்காக இந்திய குடிமக்களை குழந்தைப்பருவம் தொட்டே பதப்படுத்துவதற்காக மேற்கொண்டுள்ள சட்டப்பூர்வ ஏற்பாடே இந்த தேசிய கல்விக்கொள்கை என்கிற முடிவுக்கு வருவதற்கு சில உதாரணங்கள் போதும்.

தேசிய கல்விக்கொள்கையின்படி, ஒரு குழந்தை தனது வீட்டிலிருந்து எவ்வளவு அருகாமையில் பள்ளிக்கூடத்தைப் பெறவிருக்கிறது, அது எவ்வாறு பள்ளிக்கு சென்று திரும்பப்போகிறது என்கிற பிரச்னைகளையெல்லாம் கடந்து, மூன்றுவயதில் கற்றல் செயல்பாட்டிற்காக பள்ளிக்குள் தள்ளிவிடப்படும் குழந்தை அன்றாடம் எதை எப்படி கற்றுக்கொண்டு வீடு திரும்பப்போகிறது? பண்பாட்டின் அடிப்படைக்கூறுகளில் ஒன்று உணவு; எனில் அந்த மூவேளை உணவில் இருவேளை- காலை மற்றும் மதியத்தில் அரசே வழங்கப்போவதாக சொல்லப்படும் உணவு யாருடைய உணவாக இருக்கப்போகிறது? தமிழர்களின் உணவில் பாரம்பரியமாக கலந்துள்ள வெங்காயம் பூண்டு இரண்டையும் தவிர்த்த உணவை ஏற்கனவே இஸ்கானின் அட்சயப் பாத்ரா தமிழகக் குழந்தைகளுக்கு வழங்கத் தொடங்கிவிட்டது. நான் வெங்காயம் பூண்டு சாப்பிடும் வழக்கமில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று நிதியமைச்சர் நிர்மலா நாடாளுமன்றத்திலேயே தன் சாதி அகங்காரத்தை வெளிப்படுத்தினாரல்லவா– மக்கள்தொகையில் மிகக் குறும்பான்மையினரான ஆசாரப்பார்ப்பனர்களின் வெங்காயம் பூண்டு கலக்காத இத்தகைய உணவுதான் நாடு முழுவதற்கும் நம் குழந்தைகளுக்கு வழங்கப்படவிருக்கிறது என்பதற்கான முன்னோட்டமே இது. இந்த அந்நிய உணவுக்கும் சுவைக்கும் பெரும்பான்மையான குழந்தைகள் பழக்கப்படுத்தப்படவிருக்கின்றனர். குழந்தைகள் பள்ளியில் பழகிக்கொண்டுவரும் இந்த உணவும் சுவையும் அவர்களது வாழ்நாள் முழுக்க தொடரக்கூடியதாயும் குடும்பத்தின் மற்றையவர்கள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடியதாகவும் இருக்கப்போகிறது.

தேசிய கல்விக்கொள்கை செயலாக்கத் திட்டத்தில் இந்திய மொழிகளை, கலைகளை, பண்பாட்டை ஊக்குவிப்பது குறித்த அத்தியாயத்திற்கான முன்குறிப்பில் வட்டார/ தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இப்போதைய நிலையிலேயே பெரும்பாலான தனியார் பள்ளிகள் எல்லா குழந்தைகளையும் காலைநேர பிரார்த்தனைப் பாடல் என்ற பெயரில் பஜனைப்பாடல்களையும் சமஸ்கிருத சுலோகங்களையும் பாடவைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா நிலையிலும் சமஸ்கிருதத்தையும் அதற்கடுத்த நிலையில் இந்தியையும் உயர்த்திப்பிடிக்கும் தேசிய கல்விக்கொள்கை ஒட்டுமொத்தமாக எல்லா பள்ளிகளின் குழந்தைகள் மீதும் காலைநேர கூடுகைப்பாடல் என்பதற்கும் அப்பால் பல்வேறு வழிகளில் இந்த அன்னிய மொழிகளை திணிக்கப்போகிறது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 19569 மொழிகளும் கிளைமொழிகளும் பேசப்படும் இந்த நாட்டில் 10000 பேருக்கு மேல் பேசக்கூடிய மொழியென அடையாளம் காணப்பட்டவை 121 மட்டுமே. இவற்றிலும் 22 மொழிகள்தான் அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசும், அதன் திட்டங்களும் இந்த 22 மொழிகளையும் ஒருபோதும் சமமாய் நடத்தப்போவதில்லை என்பதற்கு அன்றாடம் உதாரணங்கள் வந்தவண்ணம் உள்ளன. மகாதானபுரம் ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையில் இருந்த ‘க’ நீக்கப்பட்டு ‘ஹ’ சேர்க்கப்பட்டதானது ஒன்றிய ஆட்சியாளர்கள் ஒவ்வொரு எழுத்தையும் குறிவைத்து வேலை செய்கிறார்கள் மாற்றத் துடிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

பள்ளிகளின் பெயரை மாற்றுவது, வகுப்பறைக்குள் மாணவர்கள் அமரும் இருக்கைகளுக்கு ஆளுங்கட்சியின் கொடிநிறத்தைப் பூசுவது, சமஸ்கிருதத்தில் மட்டுமே போட்டிகளை நடத்துவது, பாடநூல்களை திரித்து எழுதுவது, உண்மையான அறிவியலையும் வரலாற்றையும் பேசும் பாடங்களை நீக்குவது, ஆசிரியர் மாணவர் உறவை குரு-சிஷ்ய படிநிலையாக மாற்றுவது, ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்வுகளை நடத்துவது, உடற்பயிற்சி- மனப்பயிற்சிக்காக யோஹா என்கிற பெயர்களில் கல்விக்கூடங்களுக்குள்ளேயே சாஹா நடத்த முயற்சிப்பது என்று எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவவிடாமல் தமது கருத்தியலை கல்விப்புலத்தின் மீது இந்துத்துவவாதிகள் திணித்துவந்ததன் தொடர்ச்சியில்தான் தேசிய கல்விக்கொள்கை வந்துள்ளது.

7. சாதியத்திற்கு முந்தைய வர்ணாசிரம நிலையை தற்காலத்திற்கேற்றாற்போல மீட்டுருவாக்கும் தமது முயற்சியில் கார்ப்பரேட்டுகளையும் கல்வி வியாபாரிகளையும் இந்துத்துவவாதிகள் தம்முடன் இணைத்துக்கொள்வதற்கு தேசிய கல்விக்கொள்கையில் வழி கண்டுள்ளனர். வர்ண நலனும் வர்த்தக நலனும் ஒன்றுக்குள் ஒன்றாக ஊடாடியிருக்கும் – பார்ப்பனீயமும் கார்ப்பரேட்டியமும் கலந்து பார்ப்பரேட்டியமாக மாறியுள்ள இக்காலத்தில் குடிமக்களுக்கு வழங்கப்படும் கல்வி அதற்கிசைந்தாற்போல்தான் இருக்கும். மக்களை மந்தையாகவும் தேசத்தை சந்தையாகவும் கட்டியமைக்க பண்பாடும் அதனங்கமான கல்வியும் தான் உகந்த களம் என்று அவர்கள் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடாகவே இக்கொள்கையை பல அடுக்கு வடிகட்டலுடன் வகுத்துள்ளார்கள். சந்தையின் மிக மலிவான பண்டமே உழைப்புதான். அந்த உழைப்பை விற்பவர்களாக பெரும்பகுதியினரையும், அந்தந்த காலத்திற்குரிய நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பவர்களாக, மேம்படுத்துகிறவர்களாக, கையாள்கிறவர்களாக சிறுதொகையினரையும் இக்கொள்கை வடிகட்டல்கள் வழியே உருவாக்கும் அதேநேரத்தில் கல்வி வளாகத்திற்குள் நுழைகிற ஒவ்வொருவரது – ஆசிரியர் உட்பட- கருத்துலகத்தையும் மூடத்தனங்களாலும் பழமைவாதங்களாலும் கற்பிதமான பெருமிதங்களாலும் நிரப்பிவைக்கும் விதமாக இக்கொள்கையும் அதை செயல்படுத்தும் திட்டங்களும் உள்ளன.

குறிப்பிட்ட நிலப்பரப்பில் மொழியால் நடத்தையால் நம்பிக்கைகளால் இணைந்துள்ள மக்களை ஒரு பண்பாட்டுத்தொகுதி என்று கொள்வோமானால், அந்தப் பண்பாட்டுக்குரியவர்கள் தங்களுக்குகந்த கல்வியை வட்டாரம் சார்ந்ததாக தனித்தன்மையுடையாக உருவாக்கிக் கொள்வதும் அதன்வழியே உலகோடு தொடர்பாடுவதுமே சரி. ஆனால் இந்த தேசிய கல்விக் கொள்கை வட்டாரத்தன்மைகளையும் பல்வேறு இனங்களின் தனித்தன்மைகளையும் கணக்கில் கொள்ளாது ஒற்றைமயமாக்கத்திற்காக மத்தியிலிருந்து உருவாக்கப்பட்டு மாநிலங்கள் மீது திணிக்கப்படுகிறது. இக்கொள்கையை செயல்படுத்துவதற்குமப்பால் சென்றுவிடாதபடியான நெருக்கடியை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உருவாக்கி வருவதை ஏற்க முடியாது.

மாநில அரசுகள் தமது ஆளுகைப்பரப்பிலுள்ள மக்களின் சமூக அரசியல் பொருளியல் பண்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பையும் அதிகாரத்தையும் அரசியல் சாசனத்தின் வழியே பெற்றவை. அவ்வகையில் தம்மக்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாட்டின் அரசு தனியாக கல்விக்கொள்கை ஒன்றை உருவாக்குவதே சரியாகும். அதற்கு கல்வியை மாநிலப்பட்டியலுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற குரலை மாநில அரசும் மக்களும் சேர்ந்தெழுப்ப வேண்டிய காலமிது.

8. இந்தியச்சமூகம் வரலாற்றுப்போக்கில் உருவாக்கிவந்துள்ள பண்பாட்டு நிறுவனங்களுக்கும் அரசியல் சாசனத்திற்கும் அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசின் ஆட்சியாளர்களால் இன்று நேர்ந்துவரும் அபாயம்தான் கல்வித்துறையின் மீதும் கவிந்துவருகிறது. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மையையும் சமூகப் பாத்திரத்தையும் இழந்து ஒன்றிய ஆளுங்கட்சியின் விருப்பார்வங்களை நிறைவேற்றித்தருகிற அடியாள்படையாக மாற்றப்பட்டு வரும் நிலையில் அதிலிருந்து கல்வியை மட்டும் தனித்தெடுத்து காப்பாற்றிவிட முடியுமா என்கிற கேள்வி அப்பாவித்தனமாக எழுப்பப்படுகிறது. ஆனால் இந்தக் கேள்விக்கான பதில், ஒட்டுமொத்த அபாயத்திற்கும் எதிரான போராட்டம் திரளும் வரை கல்விப்புலத்தின் தனித்துவத்திற்கான, மாநிலங்களின் உரிமைக்கான போராட்டங்கள் காலந்தாழ்த்தவோ காத்திருக்கவோ வேண்டியதில்லை என்பதுதான்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்