Aran Sei

ஒத்திகை தடுப்பூசி முகாம்கள் என்றால் என்ன? – இதை நடத்த காரணம் என்ன?

புனேவை சேர்ந்த இந்திய சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் (Covishield) மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaxin) என இரண்டு கொரொனா தடுப்பு மருந்துகள் நம் கையில் உள்ளன. இந்தியாவில் இவற்றை ‘அவசர தேவைக்காக பயன்படுத்தலாம்’ [emergency use authorization (EUA)]  எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒத்திகைக்காக தடுப்பூசி முகாம்கள் நடந்தன. 125 மாவட்டங்களில் 285 பகுதிகளில் இந்த ஒத்திகை நோய்தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆந்திரா, அஸ்ஸாம், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் டிசம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் மக்களை வைத்து ஒத்திகை செய்யும் கொரோனா தடுப்பு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டன. முகாம்களில், எந்த பெரிய பிரச்சினையும் வரவில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

‘இந்தியர்கள் பரிசோதனை எலிகளா?’ – கொரோனா தடுப்பு மருந்து குறித்து சுப்பிரமணியன் சாமி கேள்வி

ஏன் ஒத்திகை தடுப்பூசி முகாம் அவசியமானது? 

1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் “விரிவுசெய்யப்பட்ட நோய்தடுப்பு திட்டத்தின்” கீழ், குழந்தைகளுக்கும், கருவுற்ற பெண்களுக்கும் தடுப்புமருந்துகள் கொடுப்பதில் இந்தியாவிற்கு முன் அனுபவம் கிடைத்தது. 1985 ஆம் ஆண்டு, இந்த திட்டத்திற்கு ‘சர்வதேச நோய்தடுப்பு திட்டம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் கீழ், அரசு சுகாதார அமைப்பு 12 வகை தடுப்பு மருந்துகளை மக்களுக்கு கொடுத்தது. தடுப்புமருந்தை அளிப்பதை தாண்டி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் மூன்று படிநிலைகளில், தடுப்பு மருந்து தரமானதாக உள்ளதா, என மேற்பார்வை செய்யப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. 

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 9 மில்லியன் நோய்தடுப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என யுனிசெஃப் சொல்கிறது. அப்படி இருந்த போதிலும், 60% குழந்தைகளுக்கு தான் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இது வேறுபடுகிறது. கொரோனா தடுப்பூசி இரண்டு கட்டங்களாக போடப்பட வேண்டும் என்பதனாலும், ஏறத்தாழ 100 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதாலும்,  தடுப்பூசி முகாம்களுக்கு சிறந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்; அதிக கவனத்தோடு திட்டமிடப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்தியாவில், சுகாதாரத்துறை ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள்,  காவல்துறையினர், ஐம்பது வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் கொரோனா அறிகுறிகள் உள்ள இளம் வயதினருக்கு முதல் கட்டமாக தடுப்பு மருந்து வழங்கப்படும். இந்த பட்டியலில் 3 கோடி பேர் இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க ஆகஸ்ட் மாதம் வரை ஆகும் என அரசாங்கம் கணிக்கிறது. அவசர பயன்பாட்டு அங்கீகார பட்டியலில் குறைந்தபட்சமாக இரண்டு தடுப்பூசிகள் இருக்கும் நிலையில், பெருமளவில் டிஜிட்டல் வேலைகள் தான் திரைக்கு பின்னே நடக்கிறது. 

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி – உண்மையில் இது முழுமையான இந்திய தயாரிப்பா?

இப்போது முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படுவதன் நோக்கம், கோவின் ( Co-win) செயலியை களச்சூழலில் பயன்படுத்துவது எப்படி உள்ளது என்பதை பார்ப்பதற்கும், திட்டமிடுதலுக்கும், அத்திட்டத்தை நடைமுறை செய்வதற்கும் உள்ள இடைவெளியை சோதித்து பார்ப்பதற்கும், அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் போது என்ன மாதிரியான சவால்கள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு முன் நகர்வதற்காக மட்டுமே. இது வெவ்வேறு படிநிலைகளில் உள்ள திட்ட மேலாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களில் ஒத்திகை தடுப்புமருந்து முகாம்கள் நடைபெற்றன; மாவட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவ கல்லூரிகளிலும், சுகாதார மையங்களிலும், கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அரசு மையங்களிலும் நடைபெற்றது. களச்சூழலில் கொரோனா தடுப்பூசி போடுவதன் அத்தனை படிநிலைகளும், முதற்கட்ட தடுப்புமருந்து வழங்கும் திட்டம் வழியே பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், மாநில நிர்வாகிகள் ஒரு ‘பயனர் அடையாளத்தை( User Ids)’ உருவாக்கினர். இந்த ‘அடையாளங்கள்’ (IDs) ஒவ்வொரு முகாமிலும் இருந்த 25 தன்னார்வலர்களுக்கு அனுப்பப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படி ஐந்து முகாம்கள் இருந்தன. ஒவ்வொரு முகாமிலும் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவர், இந்த 25 தன்னார்வலர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதை உறுதி செய்வார். உண்மையில், யாருக்கும் தடுப்பூசி போடப்படாது என்றாலும், தடுப்பூசி போடப்பட்டதாக, அந்நபர்களின் பெயர்கள் கோவின் செயலியில் பதிவு செய்யப்படும். தடுப்பூசி ஒத்திகை முகாம்களில், போலி தடுப்பூசி பெட்டிகள் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டன; முகாம்களுக்கு கொண்டு வரப்படும் போது தடுப்புமருந்தின் வெப்பநிலையோடு பொருந்தி போகும் வண்ணம், குளிர் சேமிப்பு கிடங்குகளின் வெப்பநிலை அமைக்கப்பட்டது. முகாம் நிறைவடைந்ததும், அனைத்து தகவல்களும், பின்னூட்டங்களும் மாவட்ட, மாநில மற்றும் மத்திய சுகாதார மையங்களுக்கும் ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

கொரோனா தடுப்பூசி- புலம்பெயர்ந்தோரின் வெற்றிக் கதை

இந்த வாரத்தின் தொடக்கத்தில், அஸ்ஸாம், ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஒத்திகை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. முதல் கட்டமாக தடுப்பூசி கொடுக்க வேண்டியவர்கள் (சுகாதார பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள், ராணுவ வீரர்கள், காவல்துறையினர்) மற்றும் கோவின் செயலியில் பதிவு செய்து கொண்டவர்களின் பட்டியலை மாநில அரசுகள் தயார் செய்தன. இவர்களுக்கு, ஒத்திக்கை தடுப்பூசி முகாம் நடக்கும் இடமும், நேரமும் எஸ்.எம்.எஸ் வழியே அனுப்பப்பட்டது.

ஒத்திகை தடுப்பூசி முகாமினால் கிடைத்த அனுபவம் என்ன?

பஞ்சாப் மாநிலம் 12 மாவட்டங்களில் ஒத்திகை தடுப்பூசி முகாம்கள் நடத்தியது. அஸ்ஸாம் அதிகாரிகள் தாங்கள் “மென்பொருள் திறனில்” கவனம் செலுத்தியதாகவும், இரண்டு மாவட்டங்களில் முன்னூறு பேரை வைத்து ஒத்திகை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆந்திராவில், ஐந்து இடங்களில் இரண்டு நாட்கள் முகாம்கள் நடந்தன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட முகாம்களில், 25 பேரை வைத்து  ஒத்திகை நடத்தப்பட்டது. 

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் செயல்பாடுகள் – அறிவியல் வல்லரசு என்பது பகல்கனவே

ஒத்திகை தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நிஜ தடுப்பூசி மருந்துகள் தயாராக உள்ளதா?

இப்போது வரை, ஆக்ஸ்ஃபர்டு தடுப்பூசியை மையமாக வைத்து  புனேவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்ஸின் தடுப்பூசி மருந்துகள் ஆகிய இரண்டிற்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலின் நிபுணர் குழு அனுமதியளித்துள்ளது. இந்த அமைப்பிடம் அனுமதி பெற்ற பிறகே, மருந்து நிறுவனங்கள், அரசிற்கு மருந்துகளை வழங்க முடியும். இந்திய சீரம் நிறுவனம் இப்போது 5 கோடி மருந்துகளை தயாரித்துள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் மேலும் 5 கோடி டோஸ்கள் தயாராகும் எனவும் தெரிவித்துள்ளது. வருகின்ற வாரங்களில் தடுப்பூசிகள் மக்களுக்கு கொடுக்கப்படும் என அனுமானிப்பது சரியாக இருக்கும். 

ஒத்திகை தடுப்பூசி முகாம்கள், ஒரு பயிற்சியாக நன்றாகவே இருக்கும்; ஆனால், தடுப்பூசி போடுவதனால் உண்மையில் உண்டாகும் பின் விளைவுகள், பின் விளைவுகளுக்காக மருத்துவமனையில் ஆட்கள் அனுமதிக்கப்படுவது குறித்து எதுவும் நமக்கு தெரியவராது. இப்போது வரை, இந்தியாவில் நடந்த நோய்தடுப்பு முகாம்களில், ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. போதுமான சுகாதார கட்டமைப்பு இல்லாத கிராமப்புறங்களில் எதிர்காலத்தில் தடுப்புமருந்துகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபைஸர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் மருந்துகளை கொண்டு 2 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் அந்நாட்டில் இப்போது வரை 28 லட்சம் மக்களுக்கு மட்டும் தான் நோய்தடுப்பு மருந்து வெற்றிகரமாக கொடுக்கப்பட்டுள்ளது. 

(தி இந்துவில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்) 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்