Aran Sei

பாராளுமன்றத்தில் குண்டு வீசிய பகத்சிங்கின் தோழர் பதுகேஸ்வர் தத் – நினைவஞ்சலி

credits : the wire

ரலாறு அடிக்கடி இரண்டாவது இடத்தை பெறுபவர்களை பொது நினைவில் இருந்து அழிப்பதுண்டு. அப்படி அழிக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் 1929 அசெம்ப்ளி குண்டுவெடிப்பு வழக்கில் பகத் சிங்கிற்கு உதவிய ஹிந்துஸ்தான் சோசலிஸ குடியரசு அமைப்பு (ஹெ.எஸ்.ஆர்.ஏ) போராளி பதுகேஸ்வர் தத்.

பதுகேஸ்வர் தத், பகத் சிங் உடன் இணைந்து இப்போது பாராளுமன்றமாக இருக்கும் அன்றைய அசெம்ப்ளியில், ஆங்கிலேய அரசு உழைக்கும் வர்க்கத்தினரின் அரசியல் ஈடுபாட்டை கட்டுப்படுத்த கொண்டு வந்த தொழில் தகராறு சட்டம் மற்றும் பொது பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து வெடிகுண்டுகளை வீசினார்.

மீரட் சர்ச்சை வழக்கில்,   மூன்று ஆங்கிலேய கம்யூனிஸ்ட் போராளிகள், 27 இந்திய வணிக சங்க தலைவர்களோடு கூட கைது செய்யப்பட்ட போது, சோசலிசம் பேசும் இந்திய தலைவர்கள் கம்யூனிஸ்ட் இண்டர்நேஷனல் உடன் தொடர்பில் இருப்பதை ஆங்கிலேய அரசு தெரிந்து கொண்டது.

இந்திய உழைக்கும் வர்க்கத்தினரின் மத்தியில் சோசலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் இயங்கக்கூடாது எனும் நோக்கில் மேற்சொன்ன சட்டங்கள் இயற்றப்பட்டன.

இளமைக்காலம்!

மோகன் எனப்பட்ட பதுகேஸ்வர் தத், வங்காளத்தின் புர்த்வான் மாவட்டத்தில் கொஸ்தா பிஹாரி தத் மற்றும் காமினி தேவி ஆகியோருக்கு நவம்பர் 18, 1910 அன்று பிறந்தார். உத்திர பிரதேசத்தின் கான்பூரில், தியோசோஃபிக்கல் பள்ளியிலும் ப்ரித்விநாத் சக் பள்ளியிலும் படித்தார். ப்ரித்விநாத் சக் பள்ளியில் தான் பின்னாளில் தன்னுடைய தோழர்களான சுரேந்திரநாத் பாண்டே மற்றும் விஜய் குமார் சின்ஹாவை சந்தித்தார்.

1937-ல் அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது அஞ்சலி தத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பாரதி பகாச்சி எனும் ஒரு பெண் குழந்தையும் இருந்தது.

1965-ம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி, பதுகேஸ்வர் தத் புற்றுநோயால் மரித்தார். அவர் மருத்துவமனையில் இருந்த போது பகத் சிங்கின் 85 வயதான தாயார் வித்யாவதி தேவி அடிக்கடி அவரை பார்க்க சென்றிருக்கிறார். பகத் சிங்கின் அம்மா, பதுகேஸ்வர் தத்தை மிகவும் நேசித்தார்.

பதுகேஸ்வர் தத்தின் இறுதி நாட்களில் அவருடன் இருந்தார். பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குருவிற்கு அருகில் தான் தானும் தகனம் செய்யப்பட வேண்டும் எனும் பதுகேஸ்வர் தத்தின் ஆசையை பஞ்சாப்பின் முதல்வர் நிறைவேற்றி வைத்தார். தத்தின் உடல் பஞ்சாப்பிற்கு ரயிலில் அனுப்பப்படுவதற்கு முன்னால் டில்லியில் ஒரு பெரிய ஊர்வலம் நடைபெற்றது.

புரட்சி வாழ்க்கை

இந்தியர்கள் அனுமதிக்கப்படாத ஒரு சாலையில் சென்ற இந்தியக் குழந்தை ஒன்றை ஆங்கிலேயர் அடிப்பதை பார்த்தது, பதுகேஸ்வர் தத் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படி,  பதின்பருவத்திலேயே அவருடைய புரட்சி வாழ்க்கை தொடங்கிவிட்டது.

இந்த நிகழ்விற்கு பிறகு பதுகேஸ்வர் தத் காலனித்துவ-எதிர்ப்பு போராளிகளை தேடத் தொடங்கினார்.பிரதாப் எனும் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சுரேஷ்சந்திர பட்டாச்சாரியா என்பவர் மூலம் , சச்சிந்தரநாத் சன்யல் ( ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பின் இணை நிறுவனர்) போன்றோரை சந்திக்கத் தொடங்கினார். இதே சமயத்தில் தான் பகத் சிங்கும் கட்சியில் இணைந்திருந்தார்.

பகத் சிங்கிற்கும் பதுகேஸ்வர் தத்திற்குமான நட்பு அவர்கள் கான்பூரில் இருந்த போது மேலும் ஆழமானது. 1924-ம் ஆண்டில் கான்பூரில் வெள்ளம் வந்த போது, ‘தருண் சங்’ எனும் அமைப்பின் சார்பாக தன்னார்வலர்களாக இருவரும் பங்காற்றினார்கள்.

இது பற்றி பதுகேஸ்வர் தத் “ நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்ய சொல்லப்பட்டிருந்தோம். இரவில் கங்கை கரையில் நின்று கொண்டு லாந்தர்களை ஏந்திக் கொண்டு, நதியில் விழுந்த யாராவது கரைக்கு வர போராடுகிறார்களா என பார்த்துக் கொண்டிருந்தோம்” என எழுதுகிறார்.

தத் பகத் சிங்கிற்கு வங்காள மொழி கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் கஷி நசிருல் இஸ்லாம் எனும் கவிஞரின் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அந்தக் கவிதைகளை பகத் சிங் அடிக்கடி பாடினார்.

1925-ம் ஆண்டின் ககோரி சர்ச்சை வழக்கின் போது, ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பின் தலைவர்களும் போராளிகளும் கைது செய்யப்பட, அமைப்பு சீர் குலைந்து போயிருந்தது. இந்த வேளையில், பதுகேஸ்வர் தத் பீகாருக்கும் பின்னர் கல்கத்தாவிற்கும் பயணித்து கீர்த்தி கிசான் கட்சியோடு இயங்கினார்.

கல்கத்தாவில் இந்தி பேசிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களோடு வேலை செய்து கொண்டிருந்த இந்த கட்சிக்கு, தத்தின் இந்தி புலமை கை கொடுத்தது.

பதுகேஸ்வர் தத், இந்தக் கட்சிக்காக துண்டுபிரசுரங்கள், சுவரொடிக்கள் எல்லாம் உருவாக்கினார். வங்காளத்தின் சுகாதார ஊழியர்கள் சங்கத்தின் ஹவுரா கிளையிலும் பங்காற்றினார். சந்திரசேகர் ஆசாத் மற்றும் பகத் சிங்கின் முயற்சிகளால் எச்.ஆர்.ஏ மீண்டும் வலிமையாக தொடங்கியது, தத் திரும்பவும் கான்பூருக்கு சென்றார். எந்த இயக்கத்திலும், செயல்பாட்டிலும் பங்கெடுக்க தத் முனைப்போடு தயாராக இருந்தார்.

ஏப்ரல் 8, 1929 : அசெம்ப்ளி குண்டுவெடிப்பு

ககோரிக்கு பின்னான காலத்தில், ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பு, தனி நபர் நடவடிக்கைகளில் இருந்து மக்களுக்கான அரசியல் நோக்கி நகர்ந்திருந்தது. அப்போது, ஆயுதமேந்துவதும், தீவிரவாதமும், பதில் தாக்குதல்களுமே ஆங்கிலேயே அரசிற்கு சவால்விட கருவிகளாக இருந்தன. 1927-ம் ஆண்டு, விடுதலைக்கான போராட்டத்தில் சோசலிசத்தை அடைந்தாக வேண்டும் எனும் நோக்கில் அமைப்பின் பெயரை ஹிந்துஸ்தான் சோசலிஸ குடியரசு அமைப்பு என மாற்றினார்கள்.

தங்கள் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும், மக்கள் புரட்சிக்கான தேவையையும் மக்களுக்கு புரிய வைப்பதில் தலைமை ஆர்வமாக இருந்தது. இந்த சமயத்தில் தான் சோசலிச எழுத்துக்களை அதன் உறுப்பினர்கள் படிக்கத் தொடங்கினார்கள். இதுவே “தாய்நாடு வாழ்க ”, “புரட்சி வளர்க”, ”ஏகாதிபத்தியம் ஒழிக” போன்ற பல கோஷங்கள் பரவலாக பயன்படுத்தப்பட காரணமாக இருந்தது.

1927 – 1928 வரை இந்தியாவில் தொழிலாளார்களின் போராட்டங்களையும், வேலைநிறுத்தங்களையும் ஹிந்துஸ்தான் சோசலிஸ குடியரசு அமைப்பு கவனித்துக் கொண்டிருந்தது. மற்ற நாடுகளின் வணிகர் சங்கங்கள் இங்குள்ள சங்கங்களுக்கு ஆதரவு தெரிவித்ததையும், இங்கிலாந்தின் வணிகர் சங்கங்கள் பண உதவி செய்ததையும், ஆங்கிலேய தொழிலாளர் தலைவர்கள் இந்தியாவில் ஒருங்கிணைந்த தொழிலாளர்கள் இயக்கத்தை உருவாக்க முயற்சிப்பதையும், இதை எல்லாம் தடுக்க ஆங்கில அரசு இரண்டு சட்டங்களை இயற்றியதையும் ஹிந்துஸ்தான் சோசலிஸ குடியரசு அமைப்பு கவனித்துக் கொண்டிருந்தது.

தொழில் தகராறு மற்றும் பொது பாதுகாப்பு மசோத்தக்களுக்கும் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு இருந்ததால், உடனேயே இந்த சட்டங்களை அமல்படுத்த வைஸ்ராய் முடிவு செய்தார். இந்த சட்டங்கள் அனைத்து வேலைநிறுத்தங்களையும் சட்டத்திற்கு புறம்பானது என்றாக்கிவிடும், வேலைநிறுத்தங்கள் எல்லாம் கலகங்களாக பாவிக்கப்படும் எனும் நிலை வந்தது.

ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக ஒரு வலிமையான குரல் கொடுக்க இதை ஒரு நல்ல வாய்ப்பாக பார்த்தது ஹிந்துஸ்தான் சோசலிஸ குடியரசு அமைப்பு.

பிரெஞ்சு அராஜகவாதி வாலன் வழியில், கேட்காதோரையும் கேட்கச் செய்ய பெரிய சத்தம் வேண்டும் எனும் முடிவு செய்து, இந்த சட்டங்கள் அமல் செய்யப்படுவதற்கு முன்னால், உயிர் சேதம் உண்டாக்காத குண்டுகள் அசெம்ப்ளியில் வீசப்பட வேண்டும் என திட்டம் போடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆங்கிலேய அரசுக்கு எதிராக கோஷம் போட்டு, அரசின் சுரண்டல்களை எல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்கள் தூக்கிவீசப்பட வேண்டும் எனவும் திட்டம் இருந்தது.

ஒவ்வொரு இந்தியனும் சுரண்டப்படுவதை நிறுத்த, தங்கள் உயிர்களை புரட்சி பலிபீடத்தில் தியாகம் செய்ய புரட்சியாளர்கள் தயாராக இருந்தார்கள். சிறை சென்ற பகத் சிங்கும், பி.கே. தத்தும் அரசியல் வரலாற்றிலேயே நீண்ட உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். அரசியல் கைதிகள் சிறையில் நடத்தப்படும் தரத்தை உயர்த்த வேண்டும் எனும் கோரிக்கையோடு நடந்த உண்ணாவிரதம் 114 நாட்கள் வரை சென்றது.

டில்லி சர்ச்சை வழக்கு

பதுகேஸ்வர் தத்திற்கு அசெம்ப்ளி குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது, அவர் அந்தமான் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்தமான் சிறையில் அரசியல் கைதிகளின் உரிமைகளுக்காகவும், சித்திரவதைகளுக்கு எதிராகவும் தத் இரண்டு உண்ணாவிரதங்களில் ஈடுபட்டார். மேலும், கம்யூனிஸ்ட் கன்சாலிடேஷன் எனும் மார்க்ஸிய வாசகர் வட்டத்தை தோற்றுவிக்கவும் செய்தார்.

இந்தக் குழுவில் சிவ் சர்மா, ஜெய்தேவ் கபூர், பிஜோய் குமார் சின்ஹா போன்றோர் இருந்தனர். தி கால் என்றொரு கையெழுத்து பிரதியையும் இந்த வாசகர் வட்டத்திற்காக தத் நடத்தி வந்தார். இதன் ஆசிரியராக ஜெய்தேவ் இருந்தார்.

அந்தமான் சிறையில், அனுஷிலான் சமிதி மற்றும் ஹிஸ்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பை சேர்ந்த புரட்சியாளர்கள் எல்லோரும் கருத்தியல் பயிற்சியில் பங்கேற்றார்கள், பிறகு கம்யூனிச இயக்கத்தில் இணைந்தார்கள். தத்தின் அரசியல் கோட்பாடுகள் அந்தமான் சிறையில் எப்படி மாறியது என்பது பற்றி, மன்மத்நாத் குப்தா எனும் சக போராளி, “ தத் தொடக்கத்தில் பெரியளவில் படிக்கவில்லை என்றாலும், சிறையில் நிலவிய வாசிப்பு சூழலில் அவர் சோசலிச கோட்பாட்டை முழுமையாக படித்தார். அவர் ஒரு தீவிர சோசலிசவாதியாக மாறினார்” என்கிறார்.

பதுகேஸ்வர் தத் 1937-ம் ஆண்டு அந்தமான் சிறையில் இருந்து ஹஸாரிபாக் சிறைக்கும், தில்லி சிறைக்கும், இறுதியாக பாட்னா சிறைக்கும் மாற்றப்பட்டார். 1938-ம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று விடுதலை செய்யப்பட்ட பிறகு, சிறையில் அனுபவித்த சித்ரவதை காரணமாக அவருடைய உடல்நிலை மோசமானது. வன்முறையான அரசியல் நடவடிக்கைகளிலும், வன்முறையாக இயங்கும் அமைப்புகளிலும் பங்கேற்க கூடாது எனும் நிபந்தனையோடு தான் பதுகேஸ்வர் தத் விடுதலை செய்யப்பட்டார்.

மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இவர் விடுதலை செய்யப்பட காரணமாக இருந்தனர்.  உடல்நிலை கொஞ்சம் தேறத் தொடங்கியதும், மீண்டும் இவர் இயக்கங்களில் பங்கேற்க தொடங்கினார். விதிகளை மீறினார். பகத் சிங்கையும், எச்.எஸ்.ஆர்.ஏ-வையும் முன்னோடிகளாக வைத்து, கான்பூர் மற்றும் உனா மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இயக்கத்தில் இணைந்து, ஷிவ் குமார் மிஸ்ரா, ஷேகர் நாத் கங்குலி மற்றும் பிறரின் தலைமையில் நவ்சேதன் சங் எனும் ஓர் அமைப்பை தொடங்கினார்கள். இந்த அமைப்பு 1937-38-ல் நவயுக் சங் எனும் அமைப்போது இணைந்து, ஐக்கிய மாகாணங்களில் புரட்சிக்கான களமாக இயங்கிக்கொண்டிருந்தது.

ஜோகெஷ்சந்திர சாட்டர்ஜி மற்றும் ஜான்சியின் பரமானந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கிய இந்த அமைப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடும், புரட்சிகர சோசலிச கட்சியோடும் கை கோர்த்தது.

1939 மே மாதம் உனா மாவட்டத்தின் முகர் கிராமத்தில் கம்யூனிஸ்டுகள் ஒரு மூன்று நாள் மாநாட்டை நடத்தினார்கள். இதில் முன்னாள் எச்.எஸ்.ஆர்.ஏ போராளிகளான சச்சிந்திரநாத் சன்யல், மன்மந்த்நாத் குப்த், ராம்கிஷன் கத்ரி, விகய் குமார் சின்ஹா, பகவந்தாஸ் மஹோர், யஷ்பல் மற்றும் பலர் பங்கேற்றனர். கதர் கட்சியின் தலைவர் சோஹன் சிங் பக்னாவும் இதில் பங்கேற்றார்.

பதுகேஸ்வர் தத்தின் தலைமையில் நடந்த இந்த மாநாடு, மாகாண நவயுக சங் அமைக்கப்படுவதற்கு வழி வகுத்தது. கோகோரியில் இருந்து நக்சச்பாரி வரை எனும் புத்தகத்தில், தனித்தனியே இயங்கிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராளிக்குழுக்களும் ஒன்றிணைய இது ஒரு முக்கியமான மாநாடாக இருந்ததை குறித்து எழுதுகிறார்.

விடுதலைக்கு பின்!

விடுதலைக்கு பிறகு, அரசியல் நிலவரம் அளித்த ஏமாற்றத்தால் அரசியலில் ஈடுபடாமல் இருந்த தத், சோசலிச இலக்கியத்தில் ஆர்வமாக இருந்தார்.

தத் குறித்து நினைவுகூரும் மன்மந்த்நாத் குப்த், “ எங்களுடைய அரசியல் பேச்சுக்களில் எல்லாம், மற்ற தோழர்களை போலவே, இது நாம் கேட்ட விடுதலை அல்ல, இதற்காக நான் போராடவில்லை, நாம் போராடியது வேறொன்றிற்கு” என தத் அடிக்கடி சொன்னார். பதுகேஸ்வர் தத் மருத்துவமனையில் இருந்த போது சிறையில் இருந்த ஷிவ் வெர்மாவும், தத்தின் அரசியல் நிலைப்பாட்டை குறித்து இதையே சொல்கிறார்.

பி.கே.தத் தில்லியில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, அவரை பிரதமரும் குடியரசுத் தலைவரும் சந்தித்தார்கள். அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, “ நீங்கள் போராளிகளைப் பற்றி நினைக்கும்போது, அவர்கள் ஏதோ துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு நிற்கும் ஆட்களாக மட்டுமே நினைக்கிறீர்கள், அவர்கள் எந்த மாதிரியான சமூகத்தை கனவு கண்டார்கள் என்பதை முற்றிலுமாக மறந்துவிடுகிறீர்கள்” என்றார் தத்.

இந்தியர்கள் புரட்சி இயக்கத்தையும், போராளிகளையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை தத்தின் இந்த ஒரு வாக்கியம் எளிமையாக சொல்லிவிட்டு கடந்து செல்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில், செலவுக்கென பணம் இல்லாமல், ஒரு கடினமான வாழ்வை தான் தத் வாழ்ந்தார். மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து எந்த பண உதவியும் இல்லாமல், பல முயற்சிகளை தத் செய்து பார்த்தார். ஒரு சிகரெட் நிறுவனத்திற்கு முகவராக சில காலம் வேலை செய்தார்; சில காலம் போக்குவரத்து வணிகத்திலும் இருந்தார். எதுவும் உதவவில்லை.

பீகாரின் சட்டப் பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார், ஆனால், வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே அங்கு வேலை செய்தார்.  இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்றதற்கு அங்கீகாரமாக, இந்திய போராளிகளின் பெயர்களை பல சாலைகளுக்கும், குடியிருப்புகளுக்கும், ரவுண்டானாக்களுக்கும் வைப்பதுண்டு. பதுகேஸ்வர் தத்தின் பெயர், கேட்காதோரை கேட்கச் செய்ய அவர் தில்லியில் குண்டுவெடுப்பு நடத்திய இடத்திற்கு அருகில் இருக்கும் காலனிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்