Aran Sei

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சாய்நாத் தலைமையில் குழு? – இதற்கு சாய்நாத்தின் பதில் என்ன?

த்திய அரசின் புதிய சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் நடக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண பி.சாய்நாத் போன்ற நிபுணர்கள் தலைமையிலான குழு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வு வியாழன் அன்று தெரிவித்தது.

இது குறித்து தி வயர் சாய்நாத்திடம் பேசிய போது, நீதிபதிகளின் அமர்வு தன் பெயரை குறிப்பிட்டது “மகிழ்ச்சியளிப்பதாக” இருக்கிறதென்றாலும், “ஒருவேளை அரசு நிஜமாகவே என்னை அணுகினால், அப்போது பிரச்சினை ஆகலாம்” என்று கூறியுள்ளார்.

அரசு தன்னை தொடர்பு கொண்டால்,  “இப்படியான ஒரு  குழுவின் தார்மீகம், என்னவாக இருக்கும் என அரசின் புரிதலை நான் தெரிந்து கொள்ள விரும்புவேன். அரசின் ஆணை என்ன, குழு எதைப் பற்றியதாக இருக்கும், குழு எப்படி அமைக்கப்படும் – மக்களின் பிரதிநிதியாக அக்குழு இருக்குமா? அக்குழுவின் முடிவுகளை அரசு ஏற்றுக்கொள்ளுமா? என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள விரும்புவேன்” எனும் சாய்நாத், “கமிட்டி அமைத்து , பிரச்சினையை இழுத்தடித்துது , தீர்வே கிடைக்காமல் செய்வது தான் நடக்கும் என்றால்” அப்படி ஒரு குழுவில் ஒருவராக இருக்க விருப்பம் இல்லை என்றார் சாய்நாத்.

டெல்லியின் எல்லைகளில் 23 நாட்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் வரை போராட்டக் களத்தை விட்டு நகரப் போவதில்லை என்கின்றனர். புதுச் சட்டங்கள் தங்கள் பொருளாதார நிலைமையை மோசமாக்கி, விவசாயத் துறையில் காலூன்ற நினைக்கும் பெரிய நிறுவனங்களுக்கு உதவுவதாக இருக்கப்போகிறது என விவசாயிகள் நம்புகின்றனர்.

மத்திய அரசுக்கும், விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கும் பல முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளன. அரசாங்கம் தங்கள் முக்கிய கோரிக்கைகளுக்கு பதிலளிக்காமல், சட்டங்களுக்கு சில அலங்கார மாற்றங்களை செய்ய மட்டுமே சம்மதிக்கிறது என்கின்றனர் விவசாயிகள்.

வியாழன் அன்று, விவசாயிகளுக்கு அமைதியான முறையில் போராட உரிமையுள்ளது என்ற உச்ச நீதிமன்றம், புதிய விவசாயச் சட்டங்களினால் உண்டான பிரச்சினைக்கு தீர்வளிக்க வேளாண் நிபுணர்கள் மற்றும் விவசாயிகள் சங்கங்களை வைத்து “பாரபட்சமற்ற, சுயாதீன” குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் தெரிவித்தது.

விவசாயிகளுக்கு போராட உரிமை இருந்தாலும் கூட, அரசோடு பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால், போராட்டம் நடத்தக் கூடாது என்றது நீதிமன்றம். “.. உங்களுக்கென ஒரு குறிக்கோள் இருக்கிறது, நீங்கள் பேசி, கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்தால் தான் அந்த குறிக்கோளை அடைய முடியும்” என தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார். விவசாயிகள் பிரச்சினையில் அத்தனை தரப்புகளையும் கேட்ட பிறகுதான் நிபுணர் குழு அமைக்கப்படும் என்றது நீதிமன்றம். மேலும், இச்சட்டங்கள் அமல் செய்வதை இப்போது நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

புதுச் சட்டங்கள் நிறைய குறைகளோடு இருப்பவை என்றும், அதை அரசே ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது என்றும் சாய்நாத் தி வயர் –ரிடம் தெரிவித்தார். “விவசாய உற்பத்தி சந்தைக் குழுச்சட்டம் அல்லது விவசாய ஒப்பந்த சட்டத்தில் நடைமுறை சாரம் – அதாவது நடைமுறைக்கு தொடர்பான எழுத்து – வெறும் நான்கு பக்கங்களில் தான் உள்ளது. விவசாயிகள் வைக்கும் 14 அல்லது 15 விமர்சனப்புள்ளிகளில் பன்னிரெண்டை திருத்துவதாக அரசாங்கம் சொல்கிறது என்றால், இந்தச் சட்டங்கள் எவ்வளவு தவறாக இருக்கிறதென்பதை அரசே ஏற்றுக் கொள்கிறது என்று தான் பொருள். இவ்வளவு தவறுகளோடு இருக்கும் சட்டங்களில் 80-90% திருத்தம் கொண்டு வருவது அர்த்தமில்லாதது (சட்ட நிபுணர்கள், இது சட்ட-விரோதமானது என்றும் சொல்கிறார்கள்). இது, மாநில அரசின் சட்ட அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதற்கான வழி. அரசியலமைப்பிற்கு விரோதமான சட்டங்களை திருத்தலாமா – அவற்றை திரும்பப் பெறவே வேண்டும்” என்றார்.

மேலும், நிபுணர்கள் குழுவின் அறிவுறுத்தல்களை அமல் செய்வது குறித்த மத்திய அரசின் கடந்த கால நடவடிக்கை சிறப்பானதாக இல்லை என சுவாமிநாதன் குழு அறிக்கையை உதாரணமாக வைத்து சொல்கிறார் சாய்நாத்.  “இந்தியாவில் விவசாயத்திற்கு என அமைக்கப்பட்ட மிகச் சிறப்பான குழுவை வைத்து, இந்தியாவின் விவசாய எதிர்காலத்திற்கென செயல்திட்டம் போன்ற ஒன்று வடிவமைக்கப்பட்டது என்றால் அது சுவாமிநாதன் குழு அறிக்கை (விவசாயிகளுக்கான தேசிய குழு) தான். அந்த குழுவிற்கு இருந்த அனுபவம், திறமை மற்றும் புரிதலுக்கு ஈடு எதுவும் இல்லை. ஆய்வு மட்டும் அல்ல பெரும் ஆலோசனைகளையும் அடிப்படையாக வைத்து அந்தக் குழு பல ஆண்டுகள் வேலை செய்தது. ஆனாலும், அந்த அறிக்கையை பதினாறு ஆண்டுகளாக யாரும் தொடவும் இல்லை, அது குறித்து பாராளுமன்றத்தில் ஆலோசனை செய்யப்படவும் இல்லை. அந்த அறிக்கையை குறித்து பாராளுமன்றத்தில் ஆலோசனை நடத்தி, அது உடனடியாக அமல் செய்யப்பட ஒரு குழுவை அமைத்தால் அது சிறப்பான நடவடிக்கையாக இருக்கும்” என்றார் சாய்நாத்.

ஒரு நிபுணர் குழுவை விட, விவசாய பிரச்சினைகள் குறித்து பேச சிறப்பு பாராளுமன்ற குழு அமைக்கப்படுவது தான் அவசியமாக இருக்கிறது என்பது சாய்நாத்தின் வாதமாக உள்ளது. “முன்னெப்போதையும் விட, இப்போது தான் இக்குழு அமைக்கப்படுவதற்கான தேவை உள்ளது. நம் விவசாயிகளும் பாராளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டால், சில ஜனநாயக நாடுகளில் இருப்பது போல நமது பாராளுமன்றத்திலும் பொது மக்கள் பங்கேற்கும் கூட்டங்கள் (Public hearings) நடத்தப்பட வேண்டும். இப்படியான கூட்டங்களில், பாதிக்கப்பட்டவர்களே தங்களுக்காக பேச வேண்டும்” என்றார்.

நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதில் உறுப்பினராக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என சாய்நாத்திடம் கேட்ட போது, “விவசாயிகள் மூன்று சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கையை வைப்பது சரியானது தான். விவசாயிகள் சொல்வதை கேட்க வேண்டும் என்ற அளவில் சிலர் அக்கறையோடு உள்ளோம். நான் நிபுணர் குழுவிற்கு அழைக்கப்பட்டால், மறுபடியும் அவர்கள் சொல்வதை கேட்டுவிட்டு, பிறகு முடிவு செய்வேன்” என்றார்.

இதற்கு முன், மத்திய அரசின் மூன்று சட்டங்கள் விவசாயிகள் குறித்தது மட்டுமல்ல, நெருக்கடி நிலைக்கு பிறகு குடிமக்களின் சட்ட உரிமைகள் அதிகளவில் மறுக்கப்படுவது இச்சட்டங்களினால் தான் என்று சாய்நாத் தெரிவித்துள்ளார்.

( www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்