Aran Sei

காலநிலை அரசியல்: தெற்கிலிருந்து எழவேண்டிய குரல்களுக்கான அவசியம் – மு.அப்துல்லா

‘ஐரோப்பிய ஆட்டம் இறுதியாக முடிந்துவிட்டது. நாம் மற்றொரு நிலையை உறுதியாகக் கண்டடைவோம். நம்மால் எதுவும் சாத்தியமே. இதுகாலம் வரை நாம் ஐரோப்பாவைப் பாவனை செய்யாததால், அவர்களைப் போன்ற காலனிய ஆக்கிரமிப்பை விரும்பப்போவதில்லை. அத்தகைய மூடத்தனமான ஐரோப்பிய வாழ்வியல் பொது வழிமுறைகளையும் காரணக் காரியங்களையும் தகர்த்து அடிப்படையற்ற குழப்பத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. அது இன்று படுகுழியில் வீழ்ந்துகொண்டுள்ளது. நம்மால் துரிதமான வேகத்தில் இதனைத் தவிர்க்க முடியும். ஐரோப்பாவை எதிர்கொள்ளும் மூன்றாம் உலகின் பாரிய மக்கள் சக்தியின் குறிக்கோள், ஐரோப்பாவால் விடைகாண முடியாத பிரச்சனைகளைத் தீர்ப்பதாக இருக்க வேண்டும். ஆனால், ஒன்றில் உறுதியாக இருப்போம், நாம் யாரையும் பிடித்துவைக்க விரும்பவில்லை. நாம் அடைய விரும்புவது மனித நிறுவனங்களை முன்னோக்கியதாக இருக்க வேண்டும். இரவு பகலின்றி காலத்தைக் கடந்து செல்ல வேண்டும். ஆதலால் தோழர்களே, உருவாக்கப்படும் நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும், சமூகத்திற்கும் ஐரோப்பாவிற்கு நன்றி செலுத்தாதீர்கள். ஏனெனில், அதன் பாவனையைக் கடந்து மற்றொரு சமூக அமைப்பிற்காக நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது மனிதக் குலம்’

ஃப்ரான்ஸ் ஃபனான்.

காலநிலை அரசியல் தவிர்க்க இயலாதபடி பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டது. சூழலியல் கேட்டால் ஏற்படும் அழிவு உலகம் முழுமைக்குமானது. அத்தகைய உலகம் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்றால் இல்லை. பொருளாதார தன்னிறைவு அடைந்துள்ள மேற்கத்திய நாடுகள் பெருமளவில் சூழலியலை அழித்து இந்த நிலையை அடைந்துள்ளன.  மற்றொரு புறம் அடிப்படை வசதிகளற்ற மூன்றாம் உலக நாடுகள் பெருமளவில் சூழலியல் பாதிப்பின் காரணியாக இருந்ததில்லை. காலநிலை மாற்ற நடவடிக்கையில் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க இயலாது. மேற்கத்திய நாடுகளின் சொத்து வளம், மூன்றாம் உலகின் ஆற்றல் மற்றும் மனித வளத்துடன் இணக்கம் கண்டு நிலைத்த உலகிற்காக முயல வேண்டும். ஆனால், பரஸ்பர மக்கள் நலன், அனைவருக்குமான வாய்ப்புகள் போன்றவை இந்த அமைப்பின் தீண்டதகாதவை. ஆதலால்தான், சூழலியல் பாதுகாப்பு போன்ற உலகு தழுவிய பிரச்சனைகளுக்குக் கூட மூன்றாம் உலகம் என்ற தனித்த அரசியல் நிலை தோற்றம் பெற்றது. இந்தப் பிரிவினையும் கூட மேற்கிலிருந்தே தொடங்கியது.

காலநிலை மாற்றத்திற்கு வரலாற்று ரீதியான பொறுப்பு மேற்கு நாடுகளுடையது. இதை ஒப்புக்கொள்ள வைக்கவே பல மாநாடுகள் மெனக்கெட்டன. தொழிற்புரட்சிக்கு பிறகான மூலதன திரட்சி மூன்றாம் உலகை காலனியப்படுத்தியது முதல் அடிமை வர்த்தகம் வரை நீண்டது. சூழலையும் கீழைத்தேய நாடுகளின் வளங்களையும் ஒரே நேரத்தில் சிதைத்த காலனிய பொருளாதாரம் அதன் பலனை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டது. இன்று, காலநிலை பிரச்சனையை எதிர்கொள்வதன் இழப்புகளை ஈடுசெய்ய மேற்கு நாடுகளின் நிதி பங்களிப்பைக் கேட்பது, தாங்கள் இழந்த தம்மிடமிருந்து சுரண்டப்பட்ட வளத்தின் மீதான உரிமை கோரல். இது ஒருவிதத்தில் எதேச்சதிகார முதலாளித்துவ இயக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அதனாலேயே இந்த பங்களிப்புகளை நன்கொடை விஷயமாகச் சுருக்குவதிலும் பில் கேட்ஸ் போன்ற பெருமுதலாளிகள் முயல்கிறார்கள். மற்றொருபுறம், ‘இது உலகளாவிய பிரச்சனை. அனைவருக்கும் அதற்கான பொறுப்புண்டு. குறிப்பாக, மக்கள் தொகை பெருக்க நாடுகளான சீனாவும் இந்தியாவும்தான் அதிக கார்பனை வெளியிடுகிறார்கள்’ என்ற ரீதியில் அற்ப அரசியல் கையிலெடுக்கப்படுகிறது.

‘உலகிலேயே அதிக கார்பனை வெளியிடும் நாடு சீனா. தொழில்மயமான இந்தியா ஏழ்மையின் பெயரில் மௌனம் காப்பது காலநிலைக்கு நல்லதல்ல. உலகின் முதல் இரண்டு மாசு வெளியீட்டாளர்களே தவிர்க்காதபோது அமெரிக்காவும் ஐரோப்பாவும் முயல எதுவுமில்லை. அது கார்பனை பூஜ்யமாக்குதல் முயற்சிக்கும்தான். சீனாவும் இந்தியாவும் மறுசீரமைப்புக்கு ஒப்புக்கொள்ளாத வரை அத்தகைய சுமைகளை தங்கள் தலையில் கட்டுவதை மேற்கத்திய மக்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்’ என வாதிட்டு வந்தது மேற்கின் ஊடகங்கள். உலகிலேயே பெரிய நாடுகள், அதிக கார்பனை வெளியிடும் நாடுகள் என்ற பரப்புரை மக்களை எளிதில் திசைதிருப்புகிறது. அழிவுக்கான எதிர்வினைகளை மறக்கச் செய்து மேற்கு அல்லது சீனா என்று அரசியல் களத்தை சுருக்குகிறது. இதன்மூலம், வரலாற்றுக் காரணங்களை மட்டும் அவர்கள் மூடி மறைக்கவில்லை, எதிர்காலம் குறித்த முற்போக்கு செயல்களுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய போது ட்ரம்ப்பும் இதே காரணத்தைத்தான் கூறினார். பொது நலன் என்ற பெயரில் எங்கள் பொருளாதார நலனை விட்டுக்கொடுக்க முடியாது என்று வெளிப்படையாகப் பேசிய ட்ரம்ப் ஒருவிதத்தில் நேர்மையானவர். ஆனால், அமெரிக்காவின் தாராளவாத அறிவுஜீவிகள் அப்படி கிடையாது. ‘அமெரிக்கர்கள் தூய சமூக முன்னேற்றத்தை விரும்புவார்கள். ஆனால், (அழுக்கேறிய) தம் மரபு துடைத்தெறிய  வேண்டியது என்பதை ஏற்க மாட்டார்கள்’ என்கிறார் சமூகவியல் பேராசிரியர் ஜேன் பக்[1].

ஐரோப்பாவின் பொது கட்டமைப்பு, பிரமாண்ட கட்டிடங்கள், மக்கள்நல அரசு என அனைத்தும் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளின் மீதான சுரண்டலால் சாத்தியமானது. இதற்குக் கைமாறாக தெற்கு நாடுகள் பெற்றவை இடம்பெயர்வு, இன அழிப்பு, பஞ்சம் மற்றும் மீள முடியாத வறிய நிலை. காலனியம் வெளியேறிய பிறகும் தம்மைச் சார்ந்திருக்கும் பொருட்டான பொருளியலை வரையறுத்தது. ‘ஏகாதிபத்தியம் ஒருபோதும் முடியவில்லை. அது தனது வடிவத்தை மாற்றிக்கொண்டது’ என்று சொல்கிறார்கள் ஜேசன் ஹிக்கெல் போன்ற சூழலியல் பொருளாதார நிபுணர்கள். பில்லியன் டன்களில் மூலப்பொருட்கள், பில்லியன் மணிநேர மனித உழைப்புகள், தொழில்நுட்பங்கள், தொலைப்பேசிகள், கார் முதலிய அனைத்தும் தெற்கிலிருந்து மலிவு விலையில் பெறப்படுகிறது. இதுவே, மேற்கு நாடுகளின் உயர்ந்த வருவாய்க்கும், அதிக நுகர்வுக்கும் காரணமாகிறது. மேற்கினது தனிநபர் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கைக் கூலியாகப் பெறும் தெற்கின் தொழிலாளி மீது வன்முறையின்றி ஆதிக்கம் செலுத்துகிறது காலனியம். 80, 90களின் நவதாரளவாத அமைப்பிற்குப் பிறகு, ஆண்டிற்கு 2.2 ட்ரில்லியன் டாலர் தெற்கிலிருந்து குவிக்கப்பட்டது. இதன்மூலம், உலக வறுமையை 15 முறை போக்கியிருக்கலாம். 1960லிருந்து இன்று வரை தெற்கிலிருந்து பெறப்பட்ட வளங்களின் மதிப்பு 62  ட்ரில்லியன் டாலர். இதை தெற்கின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியிருந்தால்  அதன் இன்றைய மதிப்பு 152 ட்ரில்லியன் டாலர்[2]. ஆனால், பன்னாட்டு நிதி உதவிகள் அனைத்தும் லாப நோக்கத்தைக் கருத்தில் கொண்டதாகவே இருக்கிறது. அதாவது, நாம் பெறும் ஒரு டாலர் கடனுதவிக்குப் பதிலாக 14 டாலரை இழக்கிறோம் என்பது இருண்ட எதார்த்தம். இதனை, ‘மறைமுக பரிமாற்ற மதிப்பு’ என்கிறார் மார்க்சிய அறிஞர் சமிர் அமின்.

‘இயற்கையாக இப்படி அமைந்துள்ள ஏற்றத்தாழ்வை மாற்றுவது கடினம்’ என வியாக்கியானம் பேசும் பொருளாதார வல்லுநர்களைக் கண்டிக்கிறார் சமிர் அமின். திட்டங்களை வகுப்பதில் எதேச்சதிகார அதிகாரத்தைக் கொண்டுள்ளன பணக்கார நாடுகள். உலக வங்கி, பன்னாட்டு நிதி முனையம், உலகவர்த்தக மையம் என அனைத்தையும் தனது ஆளுகையால் கட்டுப்படுத்துகின்றனர். அவர்கள் பணத்தை வழங்குவதுபோல் திட்டங்களை வகுக்கிறார்கள். உலகில் 97% உரிமம் அவர்களிடம் உள்ளது. தனது வளங்களையும் உழைப்பு சக்தியையும் மலிவு விலைக்குத் தருவதைத் தவிர மூன்றாம் உலகிற்கு வேறு வழியில்லை. நிலைமை இப்படியிருக்க மூன்றாம் உலகின் மீது அவதூறு பொழியும் பணக்கார நாடுகளுக்கு  தங்கள் சுரண்டல் அம்பலட்டுவிடக் கூடாது என்பதைத் தவிர வேறு காரணம் உண்டா.

 

சூழலிய கேட்டிற்கு காரணமான நவீன அசமத்துவம்………. தொடரும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்