Aran Sei

‘விந்திய மலைகளுக்குக் கீழே இந்தியா இல்லையா?’ சு.வெங்கடேசன்

Image Credits: The Hindu

ந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆராயும் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் சேர்க்கப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளில் இந்திய கலாச்சாரத்தின் தோற்றம், பரிணாமம் மற்றும் உலகின் பிற கலாச்சாரங்களுடனான அதன் இடைமுகம் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்ள மத்திய கலாச்சார அமைச்சகம் சமீபத்தில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.

நம் நாட்டின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார வேர்களைப் பற்றிய நமது புரிதலை ஆழமாக்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருப்பினும், அந்தக் குழுவின் அமைப்பே ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளது, என்று முதல்வர் தனது கடிதத்தில் வாதிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் எந்தவொரு தென் மாநிலத்திலிருந்தும், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து எந்த ஒரு பிரதிநிதியும் இல்லை என்பது சுட்டிக்காட்டப் பட்டது. தமிழகம் ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டுள்ளதோடு திராவிட நாகரிகத்தின் தாயகமாக உள்ளது. தமிழக கலாச்சாரம் இந்தியாவின் தெற்கில் செழித்து வளர்ந்த மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் கலாச்சாரமாகும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கீழடி மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அண்மையில் நடந்த தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள், உலகப் புகழ்பெற்ற சங்கம் சகாப்தத்தை கிமு 6-ம் நூற்றாண்டில் இருந்தே காண முடிகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அவ்வகையில் தமிழ் கலாச்சாரமும் மொழியும் உலகின் மிகப் பழமையான பாரம்பரியங்களில் ஒன்றாகக் கருதப்பட வேண்டும்” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உங்களுக்கு நினைவு இருந்தால் கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில், நீங்கள் கலந்துகொண்ட உச்சிமாநாட்டில் (பிரதமர் மோடிக்கும் சீனா அதிபர் ஜி ஷன்பிங்க்கும் இடையிலான அதிகாரபூர்வமற்ற சந்திப்பு) பிரமிக்க வைக்கும் நினைவுச்சின்னங்கள் மற்றும் தமிழ் பாரம்பரியத்தின் புகழ்பெற்ற மரபு ஆகியவற்றை கண்டீர்கள். ஆகவே, இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் எந்தவொரு ஆவணமும் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்குச் சரியான இடத்தை வழங்காமல் முழுமையடையாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆய்வுக் குழு உறுப்பினர்கள்

குழுவின் உறுப்பினர்களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கே.என்.திக்ஷித், பி.ஆர்.மணி மற்றும் ஆர்.எஸ். பிஷ்ட் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்குவர். விளையாட்டு நிர்வாகக் குறியீட்டை மறுஆய்வு செய்வதற்கான அரசாங்கக் குழுவின் தலைவராகவும் சர்மா இருந்தார் என்று தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குழுவில் எந்தப் பெண்ணும் இல்லை.

இது தவிர, குழுவில் உள்ள மற்ற ஆறு உறுப்பினர்கள் சமஸ்கிருத மொழி படிப்பில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், பெரும்பாலும் ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தக் குழுவில் 2000-களின் முற்பகுதியில் வரலாற்று பாடப்புத்தகங்களை காவிமயப்படுத்த எடுத்த முயற்சிகளில் முன்னணியில் இருந்த சர்ச்சைக்குரிய வரலாற்றாசிரியரான மக்கான் லால் என்பவரும் அடங்குவார் என்று தி ஸ்க்ரோல் செய்தி குறிப்பிடுகிறது. மேலும் இவர் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்துடன் இணைந்த சிந்தனைக்குழு உறுப்பினர்.

பாஜக அரசின் முந்தைய வரலாற்று குழு

2017-ம் ஆண்டு, பாஜக அரசால் ஒரு வரலாற்று ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அகழ்வாராய்ச்சி முடிவுகள் மற்றும் டிஎன்ஏ. ஆதரங்களைக் கொண்டு இந்துக்கள் தான் இந்த நாட்டின் மூத்தகுடிகள் என்று நிரூபிக்கவும், பண்டைய இந்து வேதங்கள் உண்மை, கட்டுக்கதை அல்ல என்று நிரூபிக்கவும் இந்த குழு அமைக்கப்பட்டது என்பதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இக்குழுவினருடன் பேசிக் கண்டறிந்தது.

இந்தக் குழுவின் தலைவர் கே.என்.தீட்சித் “பண்டைய வரலாற்றின் சில அம்சங்களை திருத்தி எழுத அரசுக்கு உதவும் வகையில் ஒரு வரைவை உருவாக்க என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது” என்று ராய்ட்டர்ஸ-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Image Credits: Financial Express
Image Credits: Financial Express

2014-ல் மோடி பதவியேற்றதிலிருந்து அதிகரித்துள்ள மத வன்முறையும் மற்றும் பாகுபாடும் இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் ராய்ட்டர்ஸ் குறிப்பிடுகிறது. மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன், இஸ்லாமிய கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி “எங்கள் மக்கள் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒருபோதும் இவ்வாறு ஒதுக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ்ஸின் வரலாற்று ஆராய்ச்சி பிரிவின் தலைவரான பாலமுகுந்த் பாண்டே, முன்னாள் கலாச்சார அமைச்சர் சர்மாவை அக்காலத்தில் தவறாமல் சந்தித்ததாகக் கூறியிருந்தார். “பண்டைய இந்து புராணங்கள் உண்மையில் கட்டுக்கதை அல்ல என்பதை நிறுவுவதன் மூலம் இந்தியாவின் கடந்த கால மகிமையை மீட்டெடுப்பதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது” என்று பாண்டே அப்பேட்டியில் தெரிவித்திருந்தார்.

32 எம்.பி.க்கள் கடிதம்

ஆய்வுக் குழுவில் தென்னிந்தியர்களும் வடகிழக்கு இந்தியர்களும் இல்லை என அதிருப்தி தெரிவித்தும், ஆய்வுக்குழு கலைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

நாங்கள் உங்களது மேன்மையான கவனத்துக்கு கொண்டுவர நினைப்பது யாதெனில், மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் உள்ள 16 நிபுணர்களும் நாட்டின் பன்மை தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் இல்ல.

இந்தக் குழுவில் தென் இந்தியர்கள், வடகிழக்கு இந்தியர்கள், சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் போன்ற யாரும் இடம்பெறவில்லை. இப்போது குழுவில் கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினர்களும் இந்திய சமூகத்தின் சாதி வரிசையில் மேல் இருக்கும் சில குறிப்பிட்ட சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்,” என்றும் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சு.வெங்கடேசன், கவுரவ் கோகாய், கதிர் ஆனந்த், கனிமொழி, ஜோதிமணி, சுமதி தங்கபாண்டியன், ஆரிஃப் உள்ளிட்ட 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.

வலுக்கும் எதிர்ப்பு

மத்திய அரசின் இந்த குழுவிற்கு எதிர்வினை ஆற்றியுள்ள திமுக எம்பி கனிமொழி “இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதா?  அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா?” என்றும் கேட்டு அவரது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மக்களவையின் பூஜ்ய நேரத்தில் பேசிய எம்.பி சு.வெங்கடேசன் “விந்திய மலைகளுக்கு கீழ் உள்ளது இந்தியா இல்லையா?” என்றும் “சமஸ்கிருதத்தை தவிர வேறு செம்மொழிகள் இல்லையா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“வேரின் ஆழத்தை விமானத்தில் பறக்கும்போது காண முடியாது. அதே போல் மக்களின் உண்மையான வரலாற்றை சாதிய படிநிலையில் மேலே உள்ளவர்களால் எழுத முடியாது,” என்றும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்