Aran Sei

பிக்பாஸில் மட்டுமா சாதி? துப்புச்சுக்கு துப்புச்சுக்கு பார்வை

நான் சென்னை வந்த புதிதில், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் தங்கியிருந்தேன். அதே தெருவில் என் சொந்த ஊரை சேர்ந்த 70 வயதை கடந்த ஒரு பெரியவரும் இருந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்து குடியேறியவர். பேச்சு வழக்கை வைத்து நான் எந்த ஊரை சேர்ந்தவன் என்று தெரிந்துக்கொண்டார். பின் பார்க்கும் பொழுதெல்லாம் ஏதாவது ஊரை பற்றி, குடும்பத்தை பற்றி பேச்சுக்கொடுத்து, நான் என்ன சாதி என்று போட்டு வாங்க பார்ப்பார்.

“தம்பி நீங்க மேலூர் பக்கட்டெல்லாம் போறதுண்டா? நமக்கு கோயில் அங்கிட்டு தான் வெள்ளரிப்பட்டி. அத்த யாரோ இருக்கதோ சொன்னீங்களோ முன்ன (போட்டு வாங்குறது)”

“இல்ல தாத்தா. எங்க அத்த செக்கானம்.”

“அட செக்கானமா அப்டி சொல்லுங்க. எங்க மதினி செக்கானம் தான். அங்கிட்டு எங்க உங்க அத்த?”

“அதாவது தாத்தா. செக்கானத்துலருந்து உசில போற ரோட்ல எட்டு கிலோ மீட்டர்ல லெப்ட் எடுத்தா டோலக்பூர் வெளக்கு வரும். அங்கெருந்து 2 கிலோ மீட்டர் தான். ஜெஸ்ட் வாக்கபில் டிஸ்டன்ஸ்.”

“டோலக்பூரா ??? அதுல யாரு வீடு?”

“டோலக்பூர்ல சோட்டா பீம் ஐயா வீடு எதுனு கேட்டா ஜட்டி போடாம சுட்டி டிவி பாக்குற கொழந்த கூட சொல்லும். மேக்கால விக்ரபாண்டி வரைக்கும் நெல கெடக்கும். பீம் மாமா பையனுக்கு தான் எங்க டோரா அத்தைய கட்டி கொடுத்துருக்கோம். கொரோனா டைம்ங்குறதால எங்கயும் இப்ப பயணங்கள் போறதில்ல டோரா அத்த. அந்த பக்கட்டு போனிங்கனா கண்டிப்பா பீம் மாமாவுக்கு கொஞ்சம் லட்டு வாங்கி கொடுத்துட்டு போங்க.”

கொஞ்சம் நேரம் திருதிரு என்று முழித்துக்கொண்டிருந்தார்.

ஒருவனின் சாதியை தெரிந்துக்கொள்வதற்கான தேவை, அவன் ’இன்னார் மகன் இன்னாராக’ இருந்தால் அவனுக்கு கிடைக்கும் நன்மைகள், அவன் வேறொரு ’இன்னார் மகன் இன்னாராக’ இருந்தால் அவனுக்கு கிடைக்கும் தீமைகள் போன்ற கேள்விகள் எல்லாவற்றையும் என்னை போன்ற ஏதோவொரு ‘இன்னார் மகன் இன்னார்’கள் மண்டையில் ஏற்றிக்குழப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேநேரம் ஒரு சராசரி மனிதன் ஒருவனால், மற்றொருவனின் சாதியை அறிந்துக்கொள்ள கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கிறது. பாவம். அதிலும் என்னை போன்ற ஏழரைகளிடம் சிக்குபவர்கள், ஏடாகூடமான பதில்களால் குழம்பி போய் முடிக்கொட்டி, ஏர்வாமார்டின் ஹேர் ஆயில் வாங்க வேண்டி இருக்கிறது.

இன்று ஒரு வீடியோ பார்த்தேன். பல லட்சம் பேர் பார்க்கும் பிக்பாஸ் ஒரு டிவி நிகழ்ச்சியில் அதன் பங்கேற்பாளர் சர்வசாதாரணமாக “உங்க சாதி என்ன?” என்று கேட்கிறார். அதற்கு அந்த நபரும் தன் சாதியை வெளிப்படையாக சொல்கிறார்.

இதை பார்த்த என் நண்பர் ”மாடர்ன் ஜென்ரேஷன்ல எப்டி இப்டி வெளிப்படையா சாதிய கேக்குறாங்க?” என்று அலுத்துக்கொண்டார். நவீனமும் தொழில் நுட்பமும் அவ்வளவு எளிதில் சாதி அமைப்பை விழுங்கி விடுமா என்ன?

கால மாற்றத்தில் நிகழ்கிற அத்தனை மாற்றங்களையும் அந்த அமைப்பு உண்டு செரித்துக் கொள்ளும். சாதி என்றில்லை, மதம், மொழி எல்லாமுமே எல்லா மாற்றங்களையும் உள்ளிழுத்து, தன்னை பலப்படுத்திக் கொள்ளும். சினிமா, இலக்கியம், தேர்தல் அமைப்பு என்று எல்லாவற்றையும் தனது ஆயுதமாக்கிக்கொள்ளும், உணவாக்கிக்கொள்ளும். அப்போது தான் அது வாழும். இல்லை என்றால் அது மற்றொன்றால் விழுங்கப்பட்டுவிடும். அது தான் சமூகத்தின் நியதி.

சாதி போன்ற பழமையான அமைப்பு இதற்கு முன் எத்தனை வகையான கலாச்சார, பண்பாட்டு மாறுதல்களை கண்டிருக்கும். அவை எல்லாவற்றையும் நெகிழ்வு தன்மையாக்கி உள்ளிழுத்துக்கொண்டு, தானும் ஒரு நெகிழ்வு தன்மையுள்ள ஒன்றாக மாறியிருக்கும். ஆனால் இரண்டாவதாக சொன்ன நெகிழ்வுத் தன்மை என்பது, தன்னை பலப்படுத்திக்கொள்ள எடுக்கும் அவதாரம். இதன் சமீபத்திய உதாரணம் ஒன்றை பார்ப்போமே.

திருமண மேட்ரிமோனிகளை எடுத்துக்கொள்வோம். பெரும்பாலும் மெத்தப்படித்தவர்களாலும், நாகரீகத்தில் மேல்தட்டில் இருப்பவர்களாலும் நுகரப்படும் திருமணத்திற்கான ஒரு நவீன தளம் (திருமண முறையும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை இழுத்துக் கொண்டது).

நவீன தளம் என்பதால் அங்கு சாதிகள் இல்லாமல் இல்லை. மாறாக சாதிக்கு ஒன்று உள்ளது. ‘இந்த சாதிகள் எங்களுடைய  தளத்தில் பதிவு செய்துக்கொண்டால், இந்த சாதியிலேயே வரன் கிடைக்கும்’ என்று வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படுகிறது. அது சமூகத்தில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை.

அந்த விளம்பரங்களில் வருபவர்கள் எல்லாருமே நவயுக இளைஞர்களும், இளைஞிகளும் தான். எல்லா நவீன தொழில்நுட்பத்தையும் அறிந்து, அவற்றின் உதவியாலேயே தன் ஒவ்வொரு நாளையும் வாழ்பவர்கள். அந்தத் தளத்தின் மூலம் தனக்கு கிடைத்த சுயசாதி துணை பற்றி பெருமையாக பேசுகிறார்கள். ஏன் இந்த ’கல்வி’ பெற்ற ’தொழிற்நுட்ப’ தலைமுறையால் சாதியை தூக்கி எறிய முடியவில்லை?

தொழில்நுட்பம் மட்டுமல்ல கல்வி, தேர்தல் அதிகாரம் போன்றவற்றை வெறுமனே சமுதாயத்தின் மேல் படரவிடுவதால் எவ்வித சமுதாய முன்னகர்வும் நிகழாது. மாறாக பழமைகள் மேற்கொண்டு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தான் உதவும். அதை ஆயுதமாக்க வேண்டும். நமக்கு ஏற்றார் போல அதை வளைத்து, நாமும் வளைந்து அதை நமக்கு கருவியாக்கிக்கொள்ள வேண்டும். தரையில் இறங்கி உழ வேண்டும். காற்றில் கயிறு திரிக்கக்கூடாது. ஆண்டனிக்களை அடக்க பாட்ஷா பாய்களாக தான் மாற வேண்டும்.

இவை எல்லாம் நடக்கும் வரை பிக்பாஸ் வீடுகளில் மட்டுமல்ல, பிட்சா ஷாப்புகளில் கூட இந்த ’கேள்விகள்’ கள்ளிப்பூக்களாக வந்துக்கொண்டே தான் இருக்கும். நாம் தினமும் பறிக்க முடியாது. அதனால் சீக்கிரத்தில் கள்ளிச்செடியையே தூரோடு வெட்டி எறிந்து விடுவோம்.

சரிடா அதுக்கு இத அப்டியே விட்றலாமானு கேட்டா.. அதெப்புடி விட முடியும். இந்த ‘குறும்படத்தின்’ மூலமே நம் வேலை தொடங்குவோம். ஏன்னா யாரும் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. ‘காமன்மேன்’ இஸ் வாட்சிங். துப்புச்சுக்கு துப்புச்சுக்கு..

– அரவிந்ராஜ் ரமேஷ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்