Aran Sei

ஐநா சபையில் ஜாதி பாகுபாடு – அம்பேட்கர் முதல் டர்பன் மாநாடு வரை – கிருபா முனுசாமி

தன் சொந்த நாட்டில் பட்டியலின மக்களை மனிதத்தன்மையின்றி நடத்தும் இந்தியாவின் கோரிக்கையும் அதன் பாசாங்கு வாதங்களும் நகைமுரணாக இருந்தது

2001-ம் ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் டர்பன் மாநாடு என்று பிரபலமாக குறிப்பிடப்படும் இனவெறிக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் உலக மாநாடு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடை பெற்றது. ஐநாவின் இனம் குறித்த அதிகார பூர்வ சாசனத்தில் வம்சாவளியை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டின் ஒரு வடிவமாக ஜாதியைச் சேர்க்க பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் துணையோடு உலகெங்கிலும் உள்ள தலித் குழுக்கள் முற்பட்டன.

ஆனால், இந்திய அரசின் விரோத அணுகுமுறையின் காரணமாக அம்முன்மொழிவு தோற்கடிக்கப்பட்டது. எனினும், ஐநாவின் அறிவிக்கையில் ஜாதிய பாகுபாட்டை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய ஒரு நிகழ்வாக இம்மாநாடு கருதப்படுகிறது. சொல்லப்போனால், ஜாதியை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற முதல் முயற்சியாகவும் கூட இம்மாநாடு நிற்கிறது.

இனவாதத்துக்கு எதிரான ஐநா மாநாடு
இனவாதத்துக்கு எதிரான ஐநா மாநாடு – ஐநாவின் இனம் குறித்த அதிகார பூர்வ சாசனத்தில் ஜாதியைச் சேர்க்க உலகெங்கிலும் உள்ள தலித் குழுக்கள் முற்பட்டன.

ஆனால், உண்மையிலேயே ஜாதியை உலக அளவில் கொண்டு சென்ற முதல் முயற்சி இதுதானா என்றால், கண்டிப்பாக இல்லை. இந்திய சுதந்திரம், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஆகிய உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது ஜாதிய பிரச்சனையையும், சுதந்திர இந்தியாவில் கேள்விக் குறியாகப்போகும் தலித்துகளின் எதிர்காலத்தையும் ஐநாவிற்கு கொண்டுசெல்ல டாக்டர் அம்பேட்கர் எடுத்த முயற்சிகள், மறக்கப்பட்ட வரலாறு.

சொல்லப்போனால், ஜாதியை இந்திய எல்லை கடந்து கொண்டு சென்ற முதல் மனிதரும் அவர் தான், ஜாதிய பாகுபாட்டை ஐநாவிற்கு கொண்டு செல்ல எடுக்கப்பட்ட முதல் முயற்சியும் அதுதான்.

இந்திய சிற்றூர்கள் அடக்குமுறையின் கூடாரமாகவும், தீண்டாமையின் கோட்டையாகவும் திகழ்வதாக விமர்சித்த டாக்டர் அம்பேட்கர், ஜாதியக் கொடுமைகளுக்கு எதிராக பட்டியலின மக்கள் கிளர்ச்சியடைவதை தடுக்கவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சமூக புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் வாதிட்டார்.

பட்டியலின மக்கள் ஏற்கனவே ஜாதி இந்துக்களிடமிருந்து தனித்தே இருக்கின்றனர். எனவே, புவியியல் ரீதியாகவும் அவர்களுக்கென்று தனித்த சிற்றூர்களை வழங்கிடல் அவசியம் என்றுரைத்தார். இதன் காரணமாக 1920-ம் ஆண்டு பட்டியலின மக்களின் பிரதிநிதியாக தான் பங்குகொண்ட சைமன் குழுவிலும், ஸ்டார்ட் கமிட்டியிலும் பட்டியலின மக்களுக்கென தனி குடியேற்றத்தை கோரினார்.

இந்திய சுதந்திரம் குறித்து விவாதிக்க உருவாக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் ஏப்ரல் 1946 கூட்டத்திலும் இக்கருத்துக்களை முன்வைத்தார். அதில், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னர் தலித்துகளுக்கு வழங்கப்பட வேண்டியவைகள் என மூன்று விடயங்களை எடுத்துரைத்தார்:

  1. பட்டியலின மக்களுக்கென தனி வாக்குரிமை;
  2. சட்டமன்றம், நிர்வாகம், பொது பணிகள் ஆகியவற்றில் போதுமான பிரதிநிதித்துவம்;
  3. இந்தியாவின் சிற்றூர்கள் முழுவதிலும் ஜாதி இந்துக்களின் அடிமைகளாக நடத்தப்படும் பட்டியலின மக்களுக்கென தனி குடியேற்றங்கள்.

மேற்குறிப்பிட்ட அனைத்தையும் உறுதி செய்யும் வகையில் அரசமைப்பு சரத்து ஒன்று இயற்றப்பட வேண்டும். தனி பட்டியலின குடியேற்றத்தை கண்காணிக்க அந்த சரத்தின் கீழ் நடுவண் அரசின் நிதி ஆதாரத்தில் ஒரு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். பட்டியலின மக்களுக்கு ஆக்கிரமிக்கப்படாத, பயிரிடக்கூடிய நன்செய் நிலங்களை வழங்கிட வேண்டும். இவ்விடங்களுக்கு பட்டியலின மக்கள் குடி பெயர்வதை இந்த ஆணையம் உறுதி செய்ய வேண்டும் ஆகியவற்றையும் வலியுறுத்தினார். ஆனால், இவை எதுவுமே அமைச்சரவைக் குழு கூட்டத்தில் பயனளிக்கவில்லை.

இந்த தனித்தனி குடியேற்றங்கள் என்ற அம்பேட்கரின் முடிவானது இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களின் அனுபவத்திலிருந்து எதிரொலித்தது என்றால் மிகையல்ல. மேலும், தனிக் குடியேற்றம் என்ற கோரிக்கையினுடாக உலகின் மற்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களோடு இந்திய பட்டியலின சமூகத்தை ஒப்பிட முயற்சித்தார்.

இதன் வாயிலாக ஜாதிய பாகுபாட்டையும், தீண்டாமை கொடுமையையும் உலக பிரச்சனையாக கொண்டுச்செல்ல நினைத்தார் டாக்டர் அம்பேட்கர். அதன் பொருட்டு, 1946-47 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளையும், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலையும் கூட சந்தித்தார்.

இந்திய சுதந்திரம் உறுதியாகிவிட்டது. புதிய அரசின் அதிகாரம் பார்ப்பன-ஆதிக்க ஜாதிகளின் கைகளில் குவியப்போகிறது. எனவே, டாக்டர் அம்பேட்கரை பொறுத்தவரையில், வெள்ளையர்கள் வெளியேறுவதற்குள் பட்டியலின மக்களின் உரிமைகளை சட்ட ரீதியாக உறுதி செய்யவில்லை எனில், பட்டியலின மக்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும். எனவே, ஜாதியை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதன் மூலம் பட்டியலின மக்களுக்கான அரசியல் பாதுகாப்பை இந்திய சுதந்திரத்திற்கு முன்னரே உறுதி செய்திட எத்தனித்தார்.

ஜாதிய பிரச்சனையை ஐநாவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற டாக்டர் அம்பேட்கரின் எண்ணம் தற்செயலானது அல்ல. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் நிலவிய கொந்தளிப்பான காலகட்டத்தை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட மிகக் கவனமான திட்டமாகும்.

இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஐநா தோற்றுவிக்கப்பட்ட முதலே அதற்கொரு சுதந்திரமான இடம் அளிக்கப்பட்டது. ஆங்கிலேய காலனியாக இருந்தபோதே இவ்வாய்ப்பை பயன்படுத்தி ஐநா பொதுச்சபையின் 1946-ம் ஆண்டு முதல் கூட்டத்திலேயே தன்னுடைய பிரச்சனைகளை விவாதத்திற்கு கொண்டு வந்தது.

இந்த காலகட்டத்தில், இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் நிலம் வாங்குவதை தடை செய்யும் சட்டம் ஒன்றை கொண்டுவர முயற்சித்தது தென்னாப்பிரிக்காவின் ஜான் ஸ்மட்ஸின் நிர்வாகம். இதனை இந்தியச் சிறுபான்மையின சமூகத்துக்கு எதிரான மனித உரிமை மீறல் என்றும், இந்தியர்களை பாகுபடுத்தும் ஒதுக்கிவைக்கும் சட்டம் என்றும் இந்தியா வாதிட்டது. ஆனால், தென்னாப்பிரிக்காவோ இது அவர்களின் உள்நாட்டு விவகாரம், இதில் ஐநா தலையிட முடியாது என பேச்சுவார்த்தையை மறுத்துவிட்டது.

டாக்டர் அம்பேட்கருக்கு, தன் சொந்த நாட்டில் பட்டியலின மக்களை மனிதத்தன்மையின்றி நடத்தும் இந்தியாவின் கோரிக்கையும் அதன் பாசாங்கு வாதங்களும் நகைமுரணாக இருந்தது
டாக்டர் அம்பேட்கருக்கு, தன் சொந்த நாட்டில் பட்டியலின மக்களை மனிதத்தன்மையின்றி நடத்தும் இந்தியாவின் கோரிக்கையும் அதன் பாசாங்கு வாதங்களும் நகைமுரணாக இருந்தது

உலக விவகாரங்களில் எப்போதும் விழிப்புடன் இருந்த டாக்டர் அம்பேட்கருக்கு, தன் சொந்த நாட்டில் பட்டியலின மக்களை மனிதத்தன்மையின்றி நடத்தும் இந்தியாவின் கோரிக்கையும் அதன் பாசாங்கு வாதங்களும் நகைமுரணாக இருந்தது. விளைவாக, ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களின் இன்னல்களை ஐநாவின் முன்வைக்க ஒரு உலக அளவிலான குழுவை ஒழுங்கமைக்க திட்டமிட்டார். இதுகுறித்து வெளிநாட்டு ஊடங்கங்களுக்கு தகவல் கொடுத்ததோடு நிற்காமல், பல நாட்டு அரசியல் தலைவர்களையும் சந்தித்து உரையாடினார். எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்க-அமெரிக்க அரசியல் தலைவரான டு போய்ஸ் அவர்களை சந்தித்து அமெரிக்காவின் இனவெறி பிரச்சனையை தேசிய கறுப்பின மகாசபை ஐநாவிற்கு கொண்டு சென்றது குறித்து கலந்துரையாடினார்.

அம்பேத்கரின் இந்த முயற்சிகள் பெரும் கவனத்தை ஈர்த்தன. இந்திய அரசின் ஐநா பிரதிநிதியும், பம்பாயின் முன்னாள் ஆளுநருமான மகாராஜ் சிங் அவர்கள் தென்னாப்பிரிக்கா மீது இன பாகுபாடு குற்றஞ்சாட்டியபோது அந்நாட்டு பிரதிநிதியான ஜான் ஸ்மட்ஸ் இந்தியாவில் நிலவும் ஜாதிய பாகுபாடு குறித்து ஐநாவில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது, “வர்க்க வேறுபாடுகள் மற்றும் சமூக பாகுபாடு என்று வரும்போது மற்றவர்கள் மீது கற்களை வீசும் கடைசி நாடு இந்தியாவாக இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுதான் இந்திய சமுதாயத்தின் மிக அடிப்படையும் வடிவமும் ஆகும்” என்று கூறினார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் நிலையையும், இந்தியாவில் பட்டியலின மக்களின் நிலையையும் ஒப்பிட்டு பேசிய அவர்: “தென்னாப்பிரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் அறியப்படாத ஒரு நிகழ்வாக தன்னுடைய நாட்டில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகும் அவலத்தையும், அனுபவிக்கும் கொடுமையையும் இந்திய பிரதிநிதி மறந்து விட்டாரா?” என வினவினார்.

ஸ்மட்ஸின் இந்தக் கருத்துக்கு பிறகு ஜாதிய பிரச்சனையை ஐநாவிற்கு கொண்டுசெல்ல வேண்டுமென்ற அம்பேட்கரின் எண்ணம் மிகத் தீவிரமாக கருதப்பட்டது. பட்டியலின ஜாதிகளின் கூட்டமைப்பு ஐநாவிடம் வழங்கும் புகார்களை கண்காணிக்க ஆங்கிலேயே வெளியுறவு அலுவலகம் கோப்பு ஒன்றை உருவாக்கியது. ஸ்மட்ஸின் ஆதரவோடு ஜாதி குறித்த விவாதத்தை ஐநாவில் அம்பேட்கர் கொண்டுவந்து விடுவார் என இங்கிலாந்து அஞ்சியது.

எனவே, “அம்பேட்கரை தடுக்கும் வகையில், தீண்டாமை ஒரு மதம் சார்ந்த சமூகம் சார்ந்த பிரச்சனையே தவிர, சட்ட ரீதியான அரசியல் ரீதியான பிரச்சனை இல்லை. அதோடு, பட்டியலின மக்கள் முறையான சிறுபான்மையினர் கூட இல்லை” என்று இராஜகோபாலாச்சாரி கொடுத்த பதிலை பயன்படுத்திக் கொண்டது. சொல்லப்போனால், 1919 முதல் பட்டியலின சமூகத்துக்கு ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியில் வழங்கி வந்த சிறப்பு அரசியல் பிரதிநிதித்துவ கொள்கைக்கே இது நேரெதிரானது. இறுதியில், போதுமான ஆதரவை திரட்ட முடியாமல் ஐநாவிற்கு ஜாதியை கொண்டுசெல்லும் டாக்டர் அம்பேட்கரின் முயற்சி தோற்றது.

முந்தைய பகுதி

ஜாதி : உலகப் பெருந்தொற்று -கிருபா முனுசாமியின் புதிய தொடர்

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்