Aran Sei

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு – நடப்பது என்ன?

“நான் இந்த வழக்கில் அவர்கள் அப்பாவிகள் என தனிப்பட்ட முறையில் நம்புவதாலேயே இலவசமாக வாதாடுகிறேன்,” என்கிறார் ஹத்ராஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளின் வழக்குரைஞர் முன்னா சிங் பன்டிர். இப்படி அவர் கூறியதை அவருடன் இருந்த சிலரும் ஆமோதித்து தலையாட்டினர். 50 வயதில் இருக்கும் பன்டிர் தன் பெயர் பலகை வாசலின் மேல் தொங்க, மாவட்ட நீதிமன்றத்தில் அவருடைய சிறிய அறையில் அமர்ந்திருக்கிறார்.

ஹத்ராஸ் வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்தீப்பும் மற்றும் குற்றவாளிகளும் கொலை செய்யப்பட்டவருடன் உறவில் இருந்தனர் என்றும், இரு குடும்பத்தினரும் இதனை ஏற்க மறுத்து வந்தனர் என்றும் உறுதியாக நம்புகிறார்.” அந்த பெண்ணின் குடும்பத்தார் திருமணத்திற்கு முன்பு தங்கள் மகள் ஒரு பையனுடன் உறவு வைத்திருந்தாள் என்பதை அறிவது வெட்கமாக இருந்தது,”  என்கிறார் அவர். இதனால் தங்கள் குடும்ப மானத்தைக் காப்பாற்ற தங்கள் மகளை அவர்களே கொன்று விட்டார்கள்,” என்கிறார் அந்த வழக்குரைஞர்.

மன நலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

இந்தக் கூற்று, முதலில் வலதுசாரி குழுக்களால் முன்வைக்கப்பட்டது. பல சதி கோட்பாடுகள் மற்றும் இத்தகைய ஊகத்தை, வாதங்களை நம்பி வழக்கை எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார் அவர். சிபிஐ நான்கு பேர் மீதும் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்திருப்பதை அவர் ஒதுக்கித் தள்ளுகிறார்.

2020, செப்டம்பர் 29 ம் தேதி, 19 வயதான அந்த தலித் இளம்பெண் காயங்களால் உயிரிழக்கும் நிலையில்,  15 நாட்களுக்குப் பிறகு, பூல்கார்கி கிராமத்தில் வயல்வெளியில் கிடந்தாள். இறக்கும் தறுவாயில் நான்கு ஆதிக்கச்சாதிக்காரர்கள் தன்னை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக அவர் மரணவாக்குமூலம் கொடுத்துள்ளார்.  மரணத்திற்குப் பிறகு ஒரு நாள் கழித்து அவரது உடலை வலுகட்டாயமாக  நடு இரவில் காவல்துறையினர் எரித்துள்ளனர். தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் அந்த கிராமத்திற்குச் பல நாட்கள் சென்றனர். காவல்துறை பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கையைப் பார்த்த பிறகும் அதனை பாலியல் வன்புணர்வு- கொலை அல்ல என்றே கூறி வருகிறது. தி வயர் இது உண்மை அல்ல என்பதை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தியது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஊடகங்கள் சோர்வடைந்துவிட்டன. தற்போது அந்த குடும்பம் நிறைய ஊடகவியலாளர்களால் சூழப்படுவதில்லை என்பது அவர்களுக்குச் சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது. தங்கள் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததை மீண்டும் மீண்டும் விளக்குவது மிகவும் சிரமமான ஒன்று. இருந்தும் அவர்கள் பலமுறை அதை கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதைக்கு அச்சுறுத்தல் – கலையரசன் ஏ, எம் விஜயபாஸ்கர்

“பட்டப்பகலில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய முடியுமா?” என்று கேட்கிறார் பண்டிர். ” முக்கிய குற்றவாளியைக் தவிர மேலும் மூன்று பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் ஏன்  பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது? பாதிக்கப்பட்டவரின் குடும்பம் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள குற்றச்சாட்ட்டவர்கள் மீது குற்றத்தை சுமத்தி உள்ளார்கள்,” என்கிறார் அவர்.  லவ்குஷ் என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் தனது பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே இருந்த பகைமை மற்றும் கோபத்தின் காரணமாக தன்னை இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் இழுத்துவிட்டுள்ளதாகக் கூறுகிறார்.

அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திடம் சொல்லிக் கொடுத்ததால்தான் லவ்குஷ் ஷின் பெயர் சந்த்பா காவல்நிலையம் முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயரைச் சேர்த்துள்ளதாக பண்டிர் வலியுறுத்தி கூறுகிறார். ” நீங்களே கற்பனை சேர்த்து பாருங்கள். அங்கு இரண்டு மாமன்கள் ( ரவி மற்றும் ராமு) இருக்கிறார்கள். ஒரு மருமகன்( சந்தீப்) இருக்கிறான். லவ்குஷ்ஷின் தாயும் அங்கே ஒரு மூலையில் இருக்கிறார். ஒரு கூட்டு பாலியல் வன்புணர்வு பட்டப்பகலில் நடக்க முடியுமா?”என்று கேட்டுவிட்டு  பதிலுக்காக சிறிது நேரம் இடைவெளி விட்டார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில்  மூவர் (ராமு, ரவி, சந்தீப்) ஒருவருக்கொருவர் உறவினர்கள். ஒரே வீட்டில் வசிப்பவர்கள். லவ்குஷ் அருகில் வசிப்பவர்.

பாதிக்கப்பட்டவரின் தந்தை, வழக்குரைஞர் பண்டிர் கூறும் வாதத்தை மறுத்து, ஒரு குடும்பத்திற்குள்ளேயே பாலியல் வன்புணர்வு நடந்த நிகழ்வுகள் பல உண்டு. எனவே இந்த வாதம் செல்லுபடி ஆகாது என்கிறார்.

ஜனநாயக நிறுவனங்களுக்கு குழி பறிக்கும் இலங்கை அரசு – அம்பிகா சத்குணநாதன்

“குற்றத்தைச் செய்யும் போது எந்த வகையான குடும்ப உறவுகளும் ஒரு பொருட்டல்ல,” என்கிறார் அவர். அதன்பின் அவர் மாவு(Mau) என்ற கிராமத்தில் நடந்த அண்மை நிகழ்வை குறிப்பிட்டு பேசினார். ஒரு நடுத்தர வயது ஆண் தனது மூன்று வயது மருமகளை பாலியல் வன்புணர்வு செய்துளான்.”பாலியல் வன்புணர்வு மிகக் கொடூரமான குற்றம். அது பெருமளவில் குடும்பங்களுக்குள்ளேயே நடைபெறுகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கிடையே என்ன உறவுமுறை உள்ளது என்பது தேவையற்றது,” என்கிறார் அவர். அவர் மாநிலத்தில் நடக்கும் பிற கொடுமையான பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி ஊடகங்கள் தங்கள் கவனத்தை குவிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

பண்டிர் தனது ஆரவாரப் பேச்சால் தனது அனுபவத்தைக் கொண்டு தனது கருத்தை பொருத்த பார்க்கிறார். “இறந்தவரின் மூத்த சகோதரர் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் அவர் தப்பித்து வருகிறார். ஏதாவது ஒரு சாக்குக் கூறி அவர் சாட்சி சொல்ல மறுத்து வருகிறார். சில சமயம் உடல்நலமில்லை என்றும், சில சமயம் வெளியூர் சென்றிருப்பதாகவும் கூறி வருகிறார்.  உண்மை வெளிவந்து விடும்  என்று அச்சப்படுவதே இதற்குக் காரணம்,” என்கிறார்.

ஆனால் பாதிக்கப்பட்டவரின் அண்ணன் தான் உடல்நலமின்றி இருந்தது உண்மை என்றும் நீதிமன்றத்தில் சாட்சி சொல்வதிலிருந்து நழுவ நினைக்கவில்லை என்றும் கூறிய அவர்,” இதோ பாருங்கள் என்னுடைய மருந்துகளை,” என்று காட்டுகிறார். பாதிக்கப்பட்டவர் தரப்பு வழக்கறிஞரான சீமா குஷ்வாஹாவை அச்சுறுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இது குறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் அச்சுறுத்துவதாகக் கூறும் குற்றச்சாட்டுகளை மறுத்த பண்டிர், வழக்கை தில்லிக்கு மாற்றுவதற்கு குஷ்வாஹா நடத்தும்’ நாடகம் இது” என்று கூறுகிறார். ” அவர் ஒவ்வொரு விசாரணைக்கு உ.பி க்கு வர வேண்டி இருக்காது என்பதும், குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரும் ஏழைத் தொழிலாளிகளாக இருப்பதால் அவர்களால் தில்லிக்கு பயணச் செலவு செய்ய இயலாது என்பதும் அவருக்குத் தெரியும். அதனால் தன்னை அச்சுறுத்தியதாகவும், அவதூறு செய்ததாகவும் நீதிமன்றத்தில் போலி புகார்களையும், கதைகளையும் கூறி வருகிறார்,” என்கிறார் பண்டிர்.

பொது மக்களின் கூக்குரலுக்கும் வலுவான அழுத்தத்திற்கும் பிறகு அக்டோபர் மாதம் வழக்கை சிபிஐ வசம் உத்திரபிரதேச அரசு  ஒப்படைத்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றத்திடம் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவரின்  குடும்பத்தினர் வழக்கை தில்லிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

2020-ம் ஆண்டில் பெண் ஒடுக்குமுறை தொடர்பாக 80,000 வழக்குகள் – ராஜஸ்தான் அரசிற்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சிபிஐ, டிசம்பர் 18 ம் நாள் ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வர் மீதும் கூட்டு பாலியல் வன்புணர்வு( பிரிவு 376, 376-அ மற்றும் ஈ) மற்றும் கொலை( ஐபிசி 302) குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதுடன், பட்டியலினத்தவர்/ பட்டியலின பழங்குடியினர் ( அட்டூழியங்கள் தடுப்பு) சட்டத்தின் கீழும் குற்றத்தை பதிவு செய்துள்ளது.” சிபிஐ யின் குற்றப்பத்திரிகை மரணவாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. அது அந்த பெண்ணின் குடும்பத்தினராலும், அரசியல்வாதிகளாலும் கற்பிக்கப்பட்ட ஒன்று. எதை நம்புகிறீர்கள்? என்று எமது நிருபரிடம் கேட்கிறார் பண்டிர். அதற்கு,” இந்த வழக்கில் நான் ஒரு கட்சி அல்ல,” என்று கூறினார். அவருக்கு அருகே அமர்ந்திருந்த மற்றொருவர்,” தேவையில்லாத கேள்விகளை எல்லாம் நீங்கள் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எங்கிருந்து வந்திருந்தாலும் சரி. பாப்புலர் ஃப்ரென்ட் ஆஃப் இந்தியாவைப் பற்றியும், இந்த வழக்கில் அது நிதிஉதவி அளித்துள்ளது பற்றியும் பேசுங்கள்,” என்று பிஎஃப்ஐ(PFI) உத்திரப் பிரதேச காவல்துறை உத்திரபிரதேசத்தில் சாதி அடிப்படையிலான மோதலை உருவாக்க முயன்று வருகிறது என்று கூறுவதை மேற்கோள் காட்டுகிறார்.

‘எல்லாம் அவளையே நினைவு படுத்துகிறது’

 அந்த பூல்கார்கி கிராமத்தில் சிஆர்பிஎஃப் படையினர் வீட்டைச் சுற்றி வளைத்திருக்க பாதிக்கப்பட்டவரின் குடும்பம் அவர்கள் வீட்டிற்குள் அமர்ந்திருக்கிறது. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஊடகவியலாளர்கள் தங்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். இந்த நிருபரின் பை சோதனையிடப்பட்டு அதிலிருந்தவை பற்றிய விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டன. ஒரு சில நாட்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு உணவுப் பொருட்கள் தரப்படுகின்றன. அவர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை. அவர்கள் இன்னும் ஆபத்தில் இருக்கிறார்கள். மூன்று மணி நேரங்களில் 80 சிஆர்பிஎஃப் காவலர்கள் அந்த வீட்டின் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். எட்டு சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு மற்றும் ஐந்து வயதுடைய பாதிக்கப்பட்டவரின் இரு மருமகள்களும் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.”எங்களுக்கு அவர்கள் அடிக்கடி மிட்டாய்களைக் கொண்டு வந்து தருகிறார்கள்,” என்று கூறுகிறார் ஒரு அதிகாரி. இரண்டு வயது குழந்தை ” ஜெய் ஹிந்த்” என்று பாடிக்கொண்டே வணக்கம் சொல்கிறது. 6 மாதங்களே ஆன இன்னொரு மருமகள் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். பாதிக்கப்பட்டவர் இறக்கும் போது அவள் பிறந்து சில நாட்களே ஆகி இருந்தன.

பாதிக்கப்பட்டவரின் தாய் மகளை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விடுகிறார். அவள் காலையில் எழுந்து விடுவாள். துளசிக்கு தண்ணீர் ஊற்றுவாள்.  குழந்தைகளுடன் விளையாடுவாள். கம்பு ரொட்டிகள் செய்வாள். ஒவ்வொன்றும் அவளேயே எனக்கு நினைவு படுத்துகிறது. ” எங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களால் சாதாரண வாழ்க்கை வாழ முடியாது,” என்று அவர் குறிப்பிடுகிறார். இந்த நிகழ்விற்குப் பின் இந்த ஒட்டு மொத்த கிராமத்திலிருந்தும் ஒருவர் கூட எங்கள் வீட்டிற்குள் வரவில்லை என்கிறார் அந்தத் தாய். “குற்றவாளிகள் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்போது மகிழ்ச்சியாகவும், கைகளை உற்சாகமாக அசைத்துத் கொண்டும் வருகிறார்கள். அவர்கள் வெட்கப்படவே இல்லை,” என்று கூறும் அவர் நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். எனினும் எல்லோருடைய பாதுகாப்பிற்காகவும் வழக்கை தில்லிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறார்.

முசாபர்நகர் கலவர வழக்கை நடத்த அரசு மறுப்பு – குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்த நீதிமன்றம்

தற்சமயத்தில் இந்த குடும்பம் இரு வழக்குகளை எதிர் கொண்டு வருகிறது. முதலாவதாக எஸ்சி/எஸ்டி சட்டப்படி கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை ஆகிய குற்றங்களுக்காக ஹத்ராஸ் மாவட்ட சிறப்பு நீதிமன்ற வழக்கு. இரண்டாவது கட்டாயமாக சிதைக்கு எரியூட்டியது தொடர்பாக லக்னோ உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்

உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அளித்த வாக்குறுதிகளும் ‘வெற்று வாக்குறுதிகளாகவே’ உள்ளன என்று அவர் கூறுகிறார். அந்த பெண்ணை அவரது குடும்பத்தின் அனுமதியின்றி எரித்த அன்றே ஹத்ராஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணைக்கும், திறமையான  அதிவிரைவு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது ட்விட்டரில் பதிவிட்டார். எனினும் இதுவரை இந்த வழக்கு அதிவிரைவு நீதிமன்றமத்திற்குச் செல்லவில்லை. நால்வரில் மூன்று பேர், இது  ஆணவக்கொலையாக இருப்பதை மறுக்க முடியாது என்பதால்  பிணை மனு கொடுத்துள்ளனர். முதலமைச்சர் மறுநாள் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் பேசி 25 லட்ச ரூபாய் இழப்பீடும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ஹத்ராசில் மாநில நகர்ப்புற மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் ஒரு வீடும் தரப்படும் என அறிவித்தார்.

இழப்பீடு தவிர வேறு எதுவும் இதுவரை நடக்கவில்லை என்று அந்தப் பெண்ணின் தந்தை கூறுகிறார். “நிலைமையை அமைதிப்படுத்த பொய் வாக்குறுதிகளைத் தருகிறார்கள்,” என்கிறார் அவர். ” முந்தைய மாவட்ட நீதிபதி எங்களை அச்சுறுத்தியது சிசிடிவி காமிராவில் பிடிக்கப்பட்டதால் சிக்கிக் கொண்டார். அதனாலேயே அவர் இந்த மாவட்டத்திலிருந்தே பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் எங்கிருந்தாலும் அந்த வேலையைத் தொடர்ந்து செய்வார்,” என்கிறார் அந்தப் பெண்ணின் அண்ணன்.” புதிய மாவட்ட நீதிபதி எங்களை சந்திக்க வரவே இல்லை. ஊடகங்களும் இப்போது ஆர்வத்தை இழந்து விட்டன,” என்கிறார் அவரது தாய்.  இந்த கிராமத்திலிருந்து முகநூலிலில் பதிவிடுபவர்கள் எங்களை தேச விரோதிகள் என்றும், தேசத் துரோகிகள் என்றும் கூறுகின்றனர். ஒரு பதிவு,” உங்களுக்கு இந்தியா போதாததென்றால் பாகிஸ்தானுக்குச் சென்று விடுங்கள்,” என்று கூறுகிறது என்கிறார் அண்ணன்.

இந்த இடத்தில் முதல்முறையாக அவரது தந்தை கண்ணீர் சிந்தினார். “நான் என் மகளை மருத்துவமனையில் சென்று பார்த்த போது நான் அவளிடம் பயப்படுகிறாயா என்று கேட்டேன். அதற்கு அவள் இல்லை என்றும் தானும் துணிவோடு இருக்க வேண்டும் என்றும் கூறினார். அந்த வார்த்தைகள்தான் எனக்கு இந்த வழக்கில் மேலெடுத்துச் செல்லக்  துணிவை கொடுத்தன,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

வாக்குச்சாவடி முகவர்களுக்கே பாஜகவில் திண்டாட்டம் – வெளியான பாஜக தொண்டர்களின் தொலைப்பேசி உரையாடல்

ஹோலி  நெருங்கி வருகிறது. ஆனால் அந்த குடும்பம் அதை கொண்டாடப்போவதில்லை என முடிவு செய்துள்ளது. ” தீபாவளியின் போதும்  நாங்கள் ஒரு மெழுகுவர்த்திக் கூட ஏற்றவில்லை. திருவிழாக்களில் இனி எந்த பொருளும் இல்லை,” என்கிறார் அந்த குடும்பத்தின் மிக மூத்த சகோதரர்.

ஒரு சிஆர்பிஎஃப் வீரர் வந்து உறவினர் ஒருவர் அவர்களைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறினார். அவர்களை உள்ளே வர அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவர் உள்ளே வந்ததும் பாதிக்கப்பட்டவரின் தாய் அவரை அடைந்து அழுதார். தன் மகளின்  இழப்பு தந்த வேதனை இன்னும் அவர் இதயத்தில் புதிதாகவே இருக்கிறது.

www. thewire.in இணையதளத்தில் இஸ்மத் ஆரா எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்