Aran Sei

இந்தி சினிமாவை விழுங்க முயற்சிக்கும் பாஜக

1933-ஆம் ஆண்டு, தீவிர யூத எதிர்ப்பாளரும் ஹிட்லரின் மூன்றாம் பேரரசின் பிரச்சார அமைச்சருமான ஜோஸப் கோயபல்ஸ், புகழ் பெற்ற ஜெர்மானிய திரைப்பட இயக்குனர் ஃப்ரிட்ஸ் லாங்-ஐ தன் அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். லாங், வர்க்கப் பிளவை பற்றி எடுக்கப்பட்ட தன் ’மெட்ரோபலிஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஜெர்மனில் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருந்தார்.

கம்யூனிசக் கொள்கைகளை பரப்பும் விதமாக இந்த திரைப்படம் இருப்பதாக பலர் கருதினாலும், அதில் நாஜி சார்பு கருத்துக்கள் நுழைந்திருந்தன என்பதை லாங் அறிந்திருந்தார். அதற்கு முக்கியமான காரணமாக இருந்தது திரைக்கதை ஆசிரியரான அவரது மனைவி தியோ ஓன் என்பதையும் அவர் அறிந்திருந்தார். பல ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை அவரே நிராகரிக்கவும் செய்தார்.

மெட்ரோபலிஸ்‘ படம் கோயபல்சுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் லாங்-இடம் நேரடியாக ஒரு முன்மொழிவை வைத்தார். லாங் ஒரு ‘தேசியவாத சோசலிச’ (நாஜி) திரைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று நாஜிகள் விரும்பினர். அரசின் திரைப்பட தயாரிப்புக் குழுவின் பொறுப்பையும் அவர் எடுத்துக் கொள்ளலாம். அதன் மூலம் திரையுலகின் முடிசூடா மன்னராக ஆகலாம்.

Fritz Lang, circa 1937

இந்தச் சந்திப்புக்குப் பின் லாங் உடனே வீட்டிற்குத் திரும்பி, துணிகளை எடுத்துக்கொண்டு பாரிஸ் சென்று விட்டார். அதன் பின் 1950-களின் இறுதி வரை அவர் ஜெர்மனிக்குத் திரும்பவே இல்லை. அதற்குள் அவர் ’தி பிக் ஹீட்’ போன்ற நோயர் படங்களின் மூலம், அமெரிக்காவில் புகழ் பெற்ற இயக்குனராக ஆகியிருந்தார்.

நாஜிகளோ இயக்குனரும் நடிகையுமான லெனி ரீஃபன் ஸ்டாலை தமது வேலைக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டனர். லெனி ஹிட்லர் மீது பெரும் மதிப்பு கொண்டவர். அவர் ‘ட்ரயம்ப் ஆஃப் தி வில்’, ’ஒலிம்பியா’ போன்ற செவ்வியல் ஆவணப் படங்களாக கருதப்படுபவை உட்பட பல ஆவணப் படங்களை தயாரித்தார்.

உலகின் பல நாடுகளின் அரசுகளைப் போலவே சினிமாவின் மீதான நாஜிக்களின் ஆர்வம் அதிகரித்த வண்ணமே இருந்தது. ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை தங்களுக்கு ஏற்றாற் போல வடிவமைப்பதில் சினிமாவின் பங்களிப்பை அவர்கள் உணர்ந்தனர். அரசின் கருத்துக்களை சினிமா என்ற வடிவத்தின் மூலம் எளிதாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்க முடியும் என்பதை கண்டு கொண்டனர்.

இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி பொதுவாகவே படைப்பூக்கம் உள்ள மக்கள் சுயமாக சிந்திப்பவர்களாக இருப்பவர்கள். அவர்கள் மேல் அரசோ இல்லை அரசியல் கட்சிகளோ தங்களின் கருத்துக்களை திணிக்க முடியாது. இந்திப் படங்களைப் பொறுத்தவரை பொதுவாக முற்போக்கான கருத்துக்களை கொண்டு வெளியாவது வழக்கம். இது பழமைவாத அரசியல்வாதிகளுக்கு தொல்லை தருவதாக இருக்கும். ஹாலிவுட் பட உலகத்தின் மீது அதன் சார்புத் தன்மை தொடர்பாக அமெரிக்க அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தியத் திரையுலகில் அனுராக் காஷ்யப், பிரகாஷ் ராஜ் போன்ற ஒரு சிலரைத் தவிர்த்து, முற்போக்கு குரல்களாக ஒலிப்பவர்கள் வெகு சிலரே இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலோ இது போல பல குரல்கள் ஒலிக்கின்றன. இது போன்ற முற்போக்கு குரல்கள் அமலாக்கத் துறையினர் மூலமாகவும், தொலைக்காட்சி நிறுவனங்கள் மூலமாகவும் குறி வைத்து நசுக்கப்படுகின்றன.

1930-களின் இறுதியில், அமெரிக்க அரசு ஒரு குழு ஒன்றை நிறுவி, பொது மக்கள் மத்தியில் கம்யூனிச ஆதரவாளர்களை கண்காணிக்கும்படி செய்தது. 1947-களில், பல ஹாலிவுட் பிரபலங்கள் அரசால் தொல்லைகளுக்கு ஆளானார்கள். 300-க்கும் மேற்பட்டவர்கள் சினிமா ஸ்டூடியோக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அவர்களின் சினிமா எதிர்காலமும் வாழ்க்கையும் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

சார்லி சாப்ளின், அர்சன் வெல்லஸ், பால் ராப்சன் போன்றவர்கள் நாட்டில் இருந்தே துரத்தியடிக்கப்பட்டார்கள். டால்டன் போன்றோர் தலைமறைவு வாழ்க்கைக்கு சென்று புனைபெயரில் செயல்பட தொடங்கினார்கள். மேலும் சிலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் ’அவசர நிலை’ காலக்கட்டத்தில், அரசு இது போல பல திரை பிரபலங்களை தங்களின் தேவைகளுக்காக உபயோகிக்க நினைத்தது. தங்களுக்காக பாடல் பாட மறுத்ததால், புகழ் பெற்ற நடிகர் கிஷோர் குமாரின் பாடல்களை ’ஆல் இந்தியா ரேடியோ’வில் ஒலிபரப்ப தடைவிதித்தது அரசு. அவரின் ‘கிஸ்ஸா குர்ஸி கா’ திரைப்படத்தை கடைசி வரை வெளியிட அனுமதிக்கவில்லை.

நன்றி : thehindu

பாஜக-விற்கு இந்தி திரைத்துறை மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பிரபல இந்தி நடிகர் நடிகைகளை சந்திப்பதும், அவர்களுடன் இணைந்து செல்ஃபி புகைப்படங்களை எடுத்து, வெளியிடுவதிலும் ஆர்வமிக்கவராக இருக்கிறார். இந்தித் திரையுலகமும் மோடியின் இது போன்ற செயல்களை கொண்டாடுகிறது. நடிகர் அக்‌ஷய் குமார், மோடியிடம் ’மென்மையான’ கேள்விகளைக் கொண்ட, பெரிய பேட்டி ஒன்றை எடுத்து தேர்தலுக்கு முன் வெளியிட்டார்.

மேலும் தேசியவாதத்தை வலியுறுத்தும் படங்களும், பழமைவாதங்களை தூக்கிப்பிடிக்கும் படங்களையும், வரலாற்றை பாஜக-விற்கு ஏற்றாற் போல திருத்தி சொல்லும் படங்களையும் பாஜக அரசு வரவேற்றது. கங்கனா ரனாவத் ராணி லெட்சுமிபாய் பற்றிய ’மணிக்கர்னிகா’ என்ற படத்தில் நடிக்கிறார். காவி கொடிகளையும், சில இந்து மத அடையாளங்களையும் தூக்கிப்பிடித்தபடி, நாட்டுப்பற்றை ஊட்டும் முழக்கங்களும் படம் முழுவதும் வருகிறது. அதை தொடர்ந்து நாட்டுப்பற்றை தூக்கிப்பிடிக்கும் பெரிய பொருட் செலவு கொண்ட படங்கள் இந்தித் திரையுலகில் வெளிவருகின்றன.

நன்றி : the indian express

அதே நேரம் பாஜக-வின் அரசியலுக்கு எதிரான கருத்துகளை பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் சகித்துக் கொள்வதில்லை. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது தன் மனைவிக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று தன் கருத்தை அமிர் கான் வெளியிட்டார். அதற்கு பரிசாக ’ஸ்நாப் டீல்’ நிறுவனத்தின் விளம்பரங்களில் இருந்து அமிர் கான் வெளியேற்றப்பட்டார். இது நடந்தது 2015-ல், மோடி ஆட்சியில் அமர்ந்த ஒரு வருடத்தில். மனோகர் பரிக்கர் என்ற அந்நாளைய அமைச்சர், “இப்படி பேசுபவர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும்” என்றார். இது இந்தி திரையுலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பலர் தங்கள் முற்போக்கு குரலை மறைத்துக்கொண்டனர். திரையுலகில் பேச்சு சுதந்திரம் பெரும்பாலும் இல்லாமல் போனது.

நன்றி : Hindustantimes

ஆனால் அப்போதும் தீபிகா படுகோன் போன்றோர் ஆதிக்கத்திற்கு எதிராக தங்கள் குரலை எழுப்பினர். டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தீபிகா குரல் கொடுத்தார். இயக்குனர் அனுராக் காஷ்யப் மற்றும் ரிச்சா சத்தா போன்றோர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில், பாசிசத்திற்கும் எதிராகவும், அரசின் செயற்பாடுகளை விமர்சித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

தீபிகா போதை பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டதும், அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டதும் தற்செயலாக நடந்ததுதானா? இந்த நடவடிக்கைகளின் பின்னால், அரசோ அரசியல்வாதிகளோ இருப்பது நேரடியாக தெரியாது. ஆனால் இந்த நடவடிக்கைகள் சொல்லும் செய்தி ஒன்றுதான். அரசுக்கு எதிராக குரல் கொடுத்தால், அதற்கான பலனை சீக்கிரத்திலேயே அனுபவிக்க நேரிடும் என்பதுதான்.

பாஜக-வும் சங் பரிவாரும் இந்தித் திரையுலகை மொத்தமாக கைப்பற்ற ஆசைப்படுகின்றன. ஏனெனில், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களிடம் தங்களின் கொள்கைகளையும், கருத்துக்களையும் கொண்டு செல்ல சிறந்த கருவியாக அது உள்ளது. திரையுலகம் மட்டுமல்லாது, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்களிலும் தணிக்கை முறையை கொண்டுவர மோடி தலைமையிலான அரசு முயற்சிக்கிறது.

யோசித்து பாருங்கள், கோடிக்கான இளைஞர்கள் தங்கள் மடிக்கணினியிலும் கைப்பேசியிலும், முற்றிலும் அரசுக்கு சாதகமாக தணிக்கை செய்யப்பட்ட அரசியல் படைப்புகளையும், இந்துத்துவ வரலாற்றை தூக்கிப்படிக்கும் படைப்புகளையும் மட்டும் பார்த்தால் என்னாவது?

செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களை தங்களுக்கு சேவை செய்யும்படியாக மாற்றியாகிவிட்டது. அரசின் மீதான விமர்சனங்களை வைக்கும் செய்தித்தாள் நிறுவனங்களின் குரல்கள் நசுக்கப்பட்டுவிட்டன. ஆகவே, இவர்களின் அடுத்த குறி சினிமா துறையை கைப்பற்றுவது தான்.

மோடி ஆட்சியின் ஆரம்ப காலக்கட்டத்தில் இந்தித் திரையுலகத்தில் பல பாஜக ஆதரவாளர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களின் பேச்சுகளாலும், செயற்பாடுகளாலும், சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளானார்கள். அவர்கள் கோமாளிகள் போல ஆக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் திறமையான கலைஞர்கள் என்று பெயர் பெற்றவர்கள் இல்லை. அதனாலேயே பாஜக அரசு, திரைத்துறையில் திறமையால் உயரத்தில் இருக்கும் பிரபலங்களை குறிவைக்கிறது.

நன்றி : thewire.in
(தழுவி எழுதப்பட்டது)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்