Aran Sei

பாஜக ஆளும் நான்கு மாநிலங்களில் கட்சிக்குள் கலகம் : விபரங்கள்

எடியூரப்பா, என் பிரேன் சிங், திரிவேந்திர சிங் ராவத், பிப்லாப் தேப் : Image credit : thewire.in

ணிப்பூர், திரிபுரா, உத்தர்காண்ட், கர்நாடகா மாநிலங்களில் பாஜக முதலமைச்சர்கள் சொந்த கட்சிக்காரர்களின் கோபத்தை எதிர்கொள்கிறார்கள்.

சில மாநிலங்களில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்களின் குழுக்கள் டெல்லி சென்று கட்சி மேலிடத்தை சந்தித்து மாநிலத்தில் முதலமைச்சரை மாற்றும்படி கோரிக்கை வைத்திருக்கின்றன.

மணிப்பூர்

முதலமைச்சர் பிரேன் சிங்-குக்கு எதிரான கலகத்தை முன் நின்று நடத்துபவர் பாஜக எம்எல்ஏ பிஸ்வஜித். 2017 தேர்தலுக்கு முன்னர் தான் முதலமைச்சராக மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று நம்புவதாக பிஸ்வஜித் த வயர் தளத்துக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு பாஜக மேலிடம் காங்கிரசில் இருந்து தாவி பாஜகவுக்கு வந்த பிரேன் சிங்-ஐ முதலமைச்சர் பதவியில் நியமிக்க முடிவு செய்தது.

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் - Image credit - thewire.in
மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் – Image credit – thewire.in

காலம் போகப் போக பிஸ்வஜித்துடன் இன்னும் சில கட்சி எம்எல்ஏக்கள் சேர்ந்து கொண்டனர். அவர்கள் பிரேன் சிங்-ன் சர்வாதிகார நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர். பிஸ்வஜித் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும், சில மாதங்களுக்கு முன்னர் அவரது துறையை பிரேன் சிங் பறித்து விட்டார்.

இந்த கலக எம்எல்ஏக்கள் பலமுறை டெல்லி சென்று பாஜக மேலிடத்திடம் பிரேன் சிங் பற்றி புகார் அளித்து முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். சமீபத்தில் காங்கிரசும் தேசிய மக்கள் கட்சியும் சேர்ந்து மாநில பாஜக அரசை கவிழ்க்க முயற்சித்த போது அதற்கு இந்த கலகக்கார எம்எல்ஏக்களின் ஆதரவும் இருந்தாக சொல்லப்படுவதாக த வயர் செய்தி தெரிவிக்கிறது.

பிஸ்வஜித்துக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு இருப்பதாகவும் த வயர் தெரிவிக்கிறது.

உத்தர்காண்ட்

முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்தின் தலைமையில் ஊழல் அதிகரித்து விட்டதாக பிஷன் சிங் சுபல் என்ற பாஜக எம்எல்ஏ டெல்லிக்குச் சென்று பாஜக மேலிடத் தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்து புகார் தெரிவித்திருக்கிறார். பிஷன் சிங் சுபல் 5 முறை எம்எல்ஏ ஆகவும் 2009 முதல் 2013 வரை மாநில பாஜக தலைவராகவும் இருந்தவர். 2017 தேர்தலின் போது அவரது பெயரும் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக அடிபட்டது. ஆனால், தேர்தலுக்குப் பிறகு பாஜக மேலிடம் ஆர்எஸ்எஸ் பரிந்துரைத்த ராவத்தை முதலமைச்சர் பதவிக்கு டிக் செய்தது.

உத்தர்காண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் - Image credit : thewire.in
உத்தர்காண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் – Image credit : thewire.in

பிஷன் சிங் சுபல் அமைச்சராக விரும்பினாலும் 2017-லிருந்தே அவருக்கு ராவத் அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. இன்று வரை அமைச்சரவையில் 3 இடங்கள் காலியாக உள்ளன.

செப்டம்பர் மாதம் டெல்லியில் பாஜக மேலிடத்தைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிஷன் சிங் சுபல், தான் அமைச்சராக விரும்பவில்லை என்று தெரிவித்தார். மாநில முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று அவர் மேலிடத்தில் வலியுறுத்தியதாக கட்சிக்குள் பேசப்படுகிறது என்று த வயர் தெரிவிக்கிறது.

ராவத் தன்னை முதலமைச்சராக நியமித்த அமித் ஷாவுக்கு தொலைபேசி நிலவரத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார். மேலும் 18 எம்எல்ஏக்களுடன் தனித்தனியாக பேசி தனக்கான ஆதரவை உறுதி செய்திருக்கிறார். அக்டோபர் 21-ம் தேதி அவர் டெல்லிக்குச் சென்று அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிடத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக த வயர் குறிப்பிடுகிறது.

மணிப்பூரிலிருந்து மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளரை தேர்வு செய்யவும் அவர் மேலிட தலைவர் நட்டாவிடம் பேசியிருக்கிறார். ஒரு கட்சித் தலைவர் தெரிவித்த தகவலின் படி, இந்த வேட்பாளருக்கான போட்டியில் “தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் ஷௌர்யாவும் உள்ளார்” என்று த வயர் கூறுகிறது.

பிஷன் சிங் சுபல் மட்டுமின்றி உமேஷ் ஷர்மா, பூரன் சிங் ஃபர்த்யால் ஆகிய பாஜக எம்எல்ஏக்களும் மாநில முதலமைச்சருக்கு எதிராக கட்சி மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இவர்களில் சிலரை அமைச்சரவை பதவி கொடுத்து அமைதிப்படுத்தி விடலாம் என்று கட்சி முயற்சித்து வருவதாக த வயர் செய்தி தெரிவிக்கிறது.

திரிபுரா

2018 சட்டமன்ற தேர்தலில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் இடதுசாரி அரசாங்கத்துக்கு எதிராக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலேயே போட்டியிட்டது பாஜக. இதன் மூலம் காங்கிரசிலிருந்து அதிருப்தி தலைவர்கள் ஈர்க்க முடிந்தது. 60 இடங்களில் 36-ல் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியமைத்தது.

இந்த பிராந்தியத்திற்கான பாஜக மேலிடத் தலைவராக இருந்த ராம் மாதவ் பிப்லாப் சிங் தேவ் என்ற புதியவரை முதலமைச்சராக நியமித்தார். காங்கிரசில் இருந்து கட்சி மாறி பாஜகவுக்கு வந்த சுதீப் ராய் பர்மன் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருந்த போதிலும் புறக்கணிக்கப்பட்டார்.

பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் மற்றும் திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் சிங் தேவ் - Image credit : thewire.in
பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் மற்றும் திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் சிங் தேவ் – Image credit : thewire.in

சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சுதீப் ராய் பர்மனும் பிப்லாப் சிங் தேவ்-ம் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். சென்ற ஆண்டு முதல்வர் பிப்லாப் சிங் தேவ், சுதீப் ராய் பர்மனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தொடர்பான வழிகாட்டலை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு பர்மன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாஜகவின் 36 எம்எல்ஏக்களில் 25 பேர் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் டெல்லிக்குச் சென்று கட்சி மேலிடத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர் நட்டா, கட்சியின் அமைப்புச் செயலாளர் லி எல் சந்தோஷ் ஆகியோரையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தனர்.

இந்த எம்எல்ஏக்கள் இடது சாரி கட்சிகளை எதிர்த்து பாஜகவை மாநிலத்தில் வளர்த்தவரான சுனில் தியோதருக்கு நெருக்கமானவர்கள் என்கிறது த வயர் செய்தி. இந்த எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்கள், 2018 தேர்தலின் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர்கள் என்ற வகையில் காங்கிரஸ் அல்லது திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து பாஜகவுக்குள் கொண்டு வரப்பட்டவர்கள்.

அக்டோபர் 14-ம் தேதி டெல்லியில் தங்கியுள்ள 11 பாஜக எம்எல்ஏக்களில் 4 பேர் நட்டாவை சந்தித்தனர். பிப்லாப் சிங் தேவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதன் தேவையை மேலிடத்தின் முன் வைக்கப் போவதாக அவர்கள் ஊடகங்கள் முன் கூறினர், ஆனால் மேலிடத் தலைவர் நட்டாவைச் சந்தித்த பிறகு அந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தாமல் உள்ளனர்.

கர்நாடகா

பாஜக எம்எல்ஏ பசண்ணகவுடா பாட்டீல் யட்னால், முதலமைச்சர் எடியூரப்பா நீண்ட காலத்துக்கு முதலமைச்சராக நீடிக்க மாட்டார் என்று கூறியிருந்தார். “மேலிடத்தில் உள்ளவர்கள் கூட அவர் மீது கடுப்பாக உள்ளனர். அவர் வட கர்நாடகாவை முழுவதும் புறக்கணிக்கிறார். பாஜகவின் மூத்த தலைவர்கள் எடியூரப்பாவை இன்னும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை” என்று ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

வட கர்நாடகாவைச் சேர்ந்த யட்னால், வட கர்நாடகாவில் இருந்துதான் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் நியமிக்கப்படுவார் என்று கூறியிருக்கிறார். பாஜகவின் 100 எம்எல்ஏக்கள் வட கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தென் கர்நாடகாவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாற்றம் செய்யப்படும் என்று பிரதமர் மோடி தனக்கு உறுதியளித்தாக யத்னால் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பசண்ணகவுடா பாட்டீல் யட்னால்
பசண்ணகவுடா பாட்டீல் யட்னால்

செப்டம்பர் மாதத்தில் முதலமைச்சர் மாற்றப்படுவார் என்ற ஊகங்களுக்கு மத்தியில் எடியூரப்பா டெல்லி சென்று மேலிடத் தலைவர் நட்டாவையும் மத்திய அமைச்சர்களையும் மட்டுமின்றி, மோடியையும் சந்தித்திருக்கிறார். மாநிலத் தலைமையில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை என்று கட்சியின் கர்நாடகா கிளை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

முதலமைச்சர் பதவிக்கு போட்டி போடுபவர்களில் முன்னணியில் இருப்பவர் துணை முதல் அமைச்சர் லக்ஷ்மண் சவாடி. கடந்த ஜூலையில் அவரது ஆதரவாளர்கள் 2023 தேர்தலில் லக்ஷ்மண் சவாடியை முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்துமாறு ஒரு சமூக வலைத்தள பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். இதைத் தொடர்ந்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க , எடியூரப்பா விரும்பியதாகவும், லக்ஷ்மண் டெல்லிக்குச் சென்று மேலிடத் தலைவர்களுக்கு விளக்கம் அளித்ததாகவும் த வயர் செய்தி தெரிவிக்கிறது.

இந்த நான்கு மாநிலங்களிலும் பாஜகவினுள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலில் உள்ள பொதுவான அம்சங்கள்

  1. முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் பாஜக மேலிடத்தின் சர்வாதிகார முடிவு. மாநில கட்சித் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்களின் தேர்வை முதலமைச்சராக நியமிக்காமல், 2014 முதலே முதலமைச்சர்களை தேர்ந்தெடுப்பதில் பாஜக மேலிடம் ஆச்சரியம முடிவுகளை எடுத்து வருகிறது. இது சில மாநிலங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
  2. மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் கலக குழுக்களை அமைதிப்படுத்த முடியாமல் இருப்பது.
  3. பாஜகவினுள் இருக்கும் உறுப்பினர்களுக்கும், வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர்கள் என்ற கணிப்பில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளிலிருந்து கொண்டு வரப்பட்டவர்களுக்கும் இடையேயான இழுபறி.
  4. எதிர்ப்பை சந்திக்கும் சில மாநில தலைவர்கள், “மாநில அளவில் இரண்டு தரப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் டெல்லி மேலிடம் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்த முயற்சிக்கிறது” என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

நன்றி : thewire.in

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்