Aran Sei

ஒரு முழு பேருந்தை சோற்றுக்குள் மறைத்த நிதின் கட்கரி – வெளிப்படும் பாஜகவின் ஊழல் சாம்ராஜ்யம்

2018, ஜூலை மாதம் ஒரு பிற்பகலில் நாக்பூரில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் தொடர்புடைய பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்தேன். அமைச்சர் அண்மையில் சட்டவிரோதமாக நிலங்களை கைப்பற்றியதாகவும், அத்துடன் அந்த நிலங்களை மிகப்பெரும் கடன் தொகைக்கு அடமானம் வைத்ததாகவும் குற்றச்சாட்டிற்கு ஆளானார். அந்த வளாகம் கைவிடப்பட்டு, செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தது. தொழிற்சாலை நீண்ட காலத்திற்கு முன்பே மூடப்பட்டிருப்பதாகத் தோன்றியது. வெளியே கிடந்த கருவிகள் மோசமான நிலையில் இருந்தன. தொழிலாளர்கள் யாரும் கண்ணில் படவில்லை. எனினும் குழப்பம் தரும் விதமாக ‘ஸ்கேனியா மெட்ரோலிங்க்’ வெள்ளை நிறப் பேருந்து அந்த வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்தது.

முதல் டோஸ் செலுத்திய பின்னும் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு கொரோனா உறுதி – பாதுகாப்பானதா தடுப்பூசி?

ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பின் 2021, மார்ச்சு 10 ஆம் தேதி, எஸ்விடி (SVT) என்ற சுவீடன் நாட்டு செய்தி நிறுவனம், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நிதின் கட்கரியின் மகளுடைய திருமணத்தின் போது, நிதின்  கட்கரிக்கு ஸ்கேனியா என்ற சுவீடன் நாட்டு சரக்கு வண்டி தயாரிப்பு நிறுவனம் “ஒரு கருஞ்சிவப்பு நிற தோல் இருக்கைகளுடன் கூடிய, மறு வர்ணம் பூசப்பட்ட மெட்ரோலிங்க் எச்டி என்ற சொகுசு பேருந்தை அன்பளிப்பாக” வழங்கி உள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்கேனியாவை பன்னாட்டு புலனாய்வுக்கு உட்படுத்தியதில், “ஜெர்மன் வாகன தயாரிப்பாளர்களும், ஸ்கேனியாவின் உரிமையாளர்களுமான வோக்ஸ் வேகன் நிறுவனம், இந்தியாவில் சில வேலைகளைப் (assignment) பெறுவதற்காக, இந்திய அமைச்சருக்கு அந்த பேருந்தை “அன்பளிப்பாக” கொடுத்துள்ளது என்பதற்கான தகவல்களை பெற்றுள்ளது,” என்று தெரிவிக்கிறது.

‘விவசயிகளிடையே வன்முறையைத் தூண்டும் பாஜக’ – விவசாயிகள் சங்கத்தலைவர்கள் குற்றச்சாட்டு

இந்த அறிக்கை வெளியானதும் கட்கரி ”எந்த ஒரு ஸ்கேனியா பேருந்துடனோ அல்லது எந்த ஒரு நிறுவனத்துடனோ அல்லது தனிநபருடனோ தனக்குத் எவ்விதத் தொடர்பும் இல்லை” என்று அறிவித்துள்ளார். ஆனால் கேரவன் செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வு அமைச்சர் பொய் கூறுகிறார் என்பதை ஐயத்திற்கிடமின்றி வெளிப்படுத்துகிறது. பேருந்து நிற்கும் நிலம், கட்கரியுடன் தொடர்புடையது. அத்துடன் அந்த பேருந்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும், நிதின் கட்கரியின் மகன்களான சாரங்க் மற்றும் நிகில் ஆகியோருடைய நிறுவனங்களுக்கும் ஆழமான உறவு உள்ளது. கட்கரி குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்புடைய நிறுவனங்களுக்கு, ஒரு வணிகர் மூலம் பேருந்தை விற்றிருப்பதாக ஸ்கேனியா கூறியுள்ளதாக ZDF என்ற இந்திய அமைப்பு, Confluence media என்ற ஜெர்மானிய அமைப்பு ஆகியவற்றுடன் எஸ்விடி இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையிலான அறிக்கை தெரிவிக்கிறது.

ஸ்கேனியாவின் செய்தி தொடர்பு மேலாளரும், மூத்த ஆலோசகருமான ஹான்ஸ்- ஏக் டேனியல்சன், தங்கள் நிறுவனம், மெட்ரோ லிங்க் எச்டி பேருந்தை, பெங்களூருவில் உள்ள ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு 2016 ஆம் ஆண்டு விற்றதாக என்னிடம்  கூறினார். மேலும், ட்ரான்ஸ் ப்ரோ அந்தப் பேருந்தை, மற்றொரு இந்திய நிறுவனமான சுதர்சன் ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டிற்கு “வாடகைக்கு விட்டிருப்பதாக” ஸ்கேனியா தெரிவிக்கிறது.

சில அமைப்புகள் இந்த கதையைத் தொடர்ந்தாலும், மைய நீரோட்ட ஊடகங்கள், கட்கரியின் மறுப்பையே விரிவாக வெளியிட்டன. இந்த விடயம் வெளியான மறுநாள் கட்கரியின் அலுவலகம் இந்தக் குற்றச்சாட்டுகளை “தீங்கிழைப்பவை, புனையப்பட்டவை மற்றும் ஆதாரமற்றவை”  எனத் தொடர்ச்சியாக டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டது. மேலும், எந்த ஒரு ஸ்கேனியா பேருந்து வாங்கியதற்கும் அல்லது விற்றதற்கும் அல்லது அது தொடர்புடைய எந்த ஒரு நிறுவனம் அல்லது தனி நபருடன் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அந்தப் ட்விட்டர் பதிவுகள் கூறின. மார்ச் 31 ம் தேதி தி பிரின்ட், கட்கரியுடன் நடத்திய ஒரு நேர்காணலை வெளியிட்டது. அதில் அவர் எஸ்விடியின் அறிக்கையில் உள்ள பேருந்து ஸ்கேனியாவால் தயாரிக்கப்பட்ட எத்தனாலில் ஓடக்கூடிய பேருந்து. அதனை, பசுமைப் பேருந்து திட்டத்தை முன்னெடுப்பிற்காக, நாக்பூருக்குக் கொண்டு வந்ததாக கட்கரி கூறி உள்ளார். இந்த வாதமும் பரிசீலனையில் எடுபடவில்லை. ஏனெனில் எத்தனாலில் ஓடும் பேருந்து  இந்த மெட்ரோலிங்க் எச்டி  மாடல் அல்ல.

உத்தரகண்ட் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 51 கோவில்கள் விடுவிப்பு – தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைக்க அரசு முடிவு

மிகவும் முக்கியமாக, கட்கரியின் விளக்கத்திலிருந்து  சுதர்சன் ஹாஸ்பிடாலிட்டியுடன் உள்ளத் தொடர்பு குறித்து ஏன் பொய் கூறினார் என்பதற்கோ அல்லது கட்கரியுடன் தொடர்புடைய வளாகத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருக்கு அன்பளிப்பாகத்  தரப்பட்டதாகக் கூறப்படும் ஒரு  பேருந்து ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கோ பதில் கிடைக்கவில்லை.

மின்சாதன உற்பத்தி நிறுவனமான பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் போது, இந்த பேருந்து விவகாரம் குறுக்கே வந்தது. நிதின் கட்கரியின் மைத்துனர் கிஷோர் டோடாட் 2014 ஆம் ஆண்டு மே மாதம் வரை அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்துள்ளார்.

2012 ஆம் ஆண்டே கண்காணிப்பு வளையத்திற்குள் கட்கரி வந்தார். அப்போது  300 கோடி ரூபாய் மதிப்புள்ள பூர்த்தி குழுமம் தொடர்பாக, அந்த நிறுவனத்திற்கு போலி (பினாமி) நிறுவனங்கள் மூலம் பெருமளவில் மூலதனம் திரட்டியதில் ஊழல் நடந்திருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கட்கரியின் ஓட்டுநர், பூர்த்தி குழுமத்தின் ஐந்து நிறுவனங்களுக்கு இயக்குநராக பட்டியலிடப்பட்டிருந்தார். முன்பு மத்திய அமைச்சரின் தனிச் செயலராக இருந்த முன்னாள் அரசு அதிகாரி சுதிர் டபிள்யூ திவே என்பவர், பூர்த்தி குழுமத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்திருக்கிறார். இந்த மோசடி விவகாரத்தில் கட்கரி பூர்த்தி குழுமத்திலிருந்து விலக வேண்டியதாயிற்று. 2016 பிப்ரவரியில், நீதிமன்ற உத்தரவின் படி, பூர்த்தி குழுமத்தின் சில நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, மனஸ் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு, அதன் இயக்குநராக கட்கரியின் மகன் சாரங்க் நியமிக்கப்பட்டார்.

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாகச் செலுத்தப்பட்ட நாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி – மருந்தியல் வல்லுனரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்த மனஸ் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் உடன் ஒன்றிணைக்கப்பட்ட நிறுவனங்களில், பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் இல்லை. இதன் பதிவு செய்யப்பட்ட முகவரி, மகாராஷ்ட்டிர தொழில் மேம்பாட்டுக் கழகத்திற்கு சொந்தமான பகுதியில், மனை எண் ஜே 17, ஹிக்னா, நாக்பூர் என்பதாகும். இங்குதான் கடந்த அக்டோபர் 2018 ஆம் ஆண்டு, ஸ்கேனியா மெட்ரோலிங்க் பேருந்து இருந்ததை நான் கண்டுபிடித்தேன். ஆர்எஸ்எஸ் உறுப்பினரும், பாலிசாக் தொழில் நிறுவன கூட்டுறவு சங்கத்தின் (PICS) பங்குதாரருமான கன்ஷியான்தாஸ் ரதி, ஹிக்னா தொழில் வளர்ச்சி கழகத்தின் மனையை, கூட்டுறவு சங்கத்திடமிருந்து சட்டவிரோதமாக கட்கரி  கைப்பற்றி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் என்பதை, நியூஸ்லாண்டரி  செய்தி நிறுவனம் வெளிப்படுத்தியது. பாலிசாக் தொழில் நிறுவன கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக உள்ள மத்திய அமைச்சர் கட்கரி, கூட்டுறவு சங்க பங்குதாரர்களுக்குத் தெரியாமலே அல்லது அவர்களுடைய அனுமதி பெறாமலே, பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு அந்த நிலத்தை பெயர் மாற்றம் செய்துள்ளார் என்கிறார் கன்ஷியான்தாஸ் ரதி. இதன்பிறகு பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் நிறுவனம் தனது இயக்குநர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை நியூஸ் லாண்டரி வெளியிட்டது. அதன்படி அந்த நிலத்தை,  குறைந்தது ஜூலை 2014 வரை கட்கரி யின் இரண்டு மகன்களும் (சாரங்க், நிகில்)  இயக்குநர்களாக இருந்த ஜிஎம்டி மைனிங் அண்டு பவர் லிமிடெட் என்ற நிறுவனத்திடம், 42.83 கோடி  கடன் தொகைக்கு அடமானமாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜிஎம்டி நிறுவனம் மனஸ் அக்ரோவுடன் ஒன்றிணைக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று. நாக்பூர் வளாகத்தில் உள்ள மின்கட்டண பற்றுச் சீட்டும், தண்ணீர் வரி பற்றுச் சீட்டும் அந்த வளாகம் ஜெ17, ஹிக்னா எம்ஐடிசி மனை பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் மற்றும் பாலிசாக் தொழில் மேம்பாட்டுக் கூட்டுறவு சங்கம் ஆகிய இரண்டு பெயர்களுக்கும் உரியதாகக் காட்டுகிறது.

2018 ஜூலை 20 ஆம் தேதி, நிதின் கட்கரி மற்றும் பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் உடன் தொடர்புடைய ஜே17, ஹிக்னா எம்ஐடிசி, நாக்பூர் என்ற முகவரியில் உள்ள மனையில், ஸ்கேனியா மெட்ரோலிங்க் எச்டி பேருந்து இருந்தது. நான் அந்த நாக்பூர் மனைக்குச் சென்றிருந்த போது அந்த வளாகம் திறந்திருந்தது. கைவிடப்பட்டிருந்தது. நான் மகாராட்டிர மாநில மின்வாரியத்தினால் அனுப்பப்பட்ட ரூபாய் 290 க்கான முந்தைய மாதத்திற்கான மின்கட்டண ரசீது அந்த வளாகத்தில் கிடந்ததைக் கண்டேன். அதில் நுகர்வோர் பெயராக பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று இருந்தது. இது அந்த நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இடம் என்பதை அதை  உறுதி செய்தது. மேலும் அங்கு நான் 2028, மே மற்றும் ஜூன் மாதத்திற்கான தண்ணீர் கட்டண ரசீதுகளையும் கண்டேன். அவை பிஐசிஎஸ் முகவரியில் இருந்தது. இது அந்த மனை, இன்னும் கூட்டுறவு சங்கத்திற்கும் உரியது என்பதைக் காட்டுகிறது. மனையின் நுழைவாயிலிருந்து ஏறத்தாழ  20 அடி தூரத்தில் வெளியிலிருந்தே பார்ப்பவர் எவருடைய கண்ணிலும் படும்படி, அந்தப் பெரிய வெள்ளை நிற ஸ்கேனியா மெட்ரோலிங்க் பேருந்து நின்று கொண்டிருந்தது. அதன் பதிவு எண்: “MH31 EM1630”. இதனுடைய பதிவுச் சான்றிதழ் வாஹன் என்ற சாலை போக்குவரத்து துறை இணைய தரவு தளத்தில் உள்ளது. அதில் அந்தப் பேருந்து “ஸ்கேனியா மெட்ரோலிங்க் எச்டி 410 IB6” என்றும் அது 2016, டிசம்பர் 6 ல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது. இந்தியாவில் உள்ள ஸ்கேனியா மேலாளருக்கும் சுவீடன் நிறுவனத்திற்கும் இடையே நடந்த மின்னஞ்சல் தொடர்புகள் “இந்த பேருந்தை கொடுப்பது, இந்தியாவில் சுவீடன் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளதாக எஸ்விடியின் அறிக்கை கூறுகிறது.

கட்கரியின் மறுப்பிற்குப் பின் ஒரு மின்னஞ்சல் கடிதத்தை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட ஒரு  தொடர் அறிக்கையில் ” போக்குவரத்து துறை அமைச்சர் இந்தப் பேருந்திற்காக காத்திருக்கிறார். டிசம்பர் மாத நடுவில் இதைக் கொடுப்பது மிகவும் அவசியம். ஏனெனில் அவர் அதை தனது முக்கிய குடும்ப நிகழ்ச்சிக்குப் பயன்படுத்த விரும்புகிறார்” என்று கூறப்பட்டுள்ளது. கட்கரி மகள் கேட்கியின் திருமணம், பேருந்து பதிவு நடைபெற்ற இரண்டு நாட்களுக்கு முன் அதாவது டிசம்பர் 4 ம் தேதி நடந்தது. அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி டிசம்பர் 8 ம் நாள் நடந்தது.

வண்டியின் உரிமையாளர் பெயரையும் அந்தப் பதிவு சான்றிதழ் கூறுகிறது. ஆனால், அந்தப் பெயரை முழுமையாக அறிந்துக் கொள்வதை மறைக்கும் வகையில், அந்த உரிமையாளர் பெயரில் உள்ள ஒவ்வொரு அடுத்தடுத்த எழுத்தும் நட்சத்திர குறியால் மறைக்கப்பட்டுள்ளது. அதில் உரிமையாளர் பெயர்” */**R*N*P*O*O*O*S*V*T*.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று நாட்கள் இதனுடன் போராடிய பின்தான் உரிமையாளரின் பெயரை பின்னோக்கிப் பார்க்கும் அறிவுடன் முற்றிலும் தெளிவாக என்னால் கண்டுபிடிக்க முடிந்தது: M/s TransPro Motors Pvt Ltd. இந்த பெயரில்தான் ஸ்கேனியாவிலிருந்து இந்தப் பேருந்து வாங்கப்பட்டுள்ளது. இதுதான் அந்தப் பேருந்து என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

“மறுவர்ணம் பூசப்பட்ட கருஞ்சிவப்பு தோல் இருக்கைகள் கொண்ட மெட்ரோலிங்க் எச்டி” என எஸ்விடி அறிக்கை மிகத் துல்லியமாக கூறியிருந்தது. என்னால் அந்தப் பேருந்திற்குள் சென்று பார்க்க முடியவில்லை. ஆனால் 2017, ஜூன் 3 ஆம் தேதி, சுதர்சன் ஹாஸ்பிடாலிடி, தனது முகநூல் பக்கத்தில், கட்கரி, அவரது இருமகன்களான சாரங்க் மற்றும் நிகில், அதே போல பாஜகவின் மகாராட்டிர மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகர் பாவன்குலே மற்றும் பலர் சூழ அந்தப் பேருந்தில் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி உள்ளது. அந்த நிறுவனத்தின் முகநூலில் உள்ள மற்றொரு புகைப்படம் அதே கருஞ்சிவப்பு நிற தோல் இருக்கைகளுடன் கூடிய அந்த ஸ்கேனியா பேருந்தைக் காட்டுகிறது. இருப்பினும் இதுதான் எஸ்விடி அறிக்கையில் உள்ள மெட்ரோலிங்க் எச்டி என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் நாக்பூர் வளாகத்தில் உள்ள அந்த பேருந்து பற்றிய மின்னஞ்சல் கேள்விகளுக்கு பதில் தரவில்லை. சுதர்சன் ஹாஸ்பிடாலிடியும் பேருந்து அல்லது அதன் முகநூலில் உள்ள புகைப்படங்கள் குறித்த  எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. பாவன்குலேவும், கட்கரியும் கூட அந்தப் புகைப்படம் குறித்து விளக்கமோ, பதிலோ கூறவில்லை.

பொதுவெளியில் சுதர்சன் ஹாஸ்பிடாலிடி முகநூலில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காட்டும் கருஞ்சிவப்பு நிற தோல் இருக்கைகள் கொண்ட ஸ்கேனியா பேருந்தும், எஸ்விடி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, நிதின் கட்கரி, சந்திரசேகர் பாவன்குலே மற்றும் சாரங்க் கட்கரி அமர்ந்துள்ள பேருந்தும் ஒன்றுதான்.

கார்ப்ரேட் விவகாரத்துறை அமைச்சகத்திற்கு, ட்ரான்ஸ்ப்ரோ  மோட்டார்ஸ் நிறுவனம்  கொடுத்துள்ள 2016-17 ஆம் நிதி ஆண்டிற்கான அறிக்கை, வோக்ஸ்வேகன் நிதி பிரைவேட் லிமிடெட் என்ற வோக்ஸ் வேகனின் இந்திய நிதி நிறுவனத்திடமிருந்து, ஆகஸ்ட் 2016 ல் செயல்படுத்தப்பட்ட ஒரு கடன் ஒப்பந்தத்தையும் உள்ளடக்கி உள்ளது. அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள கட்டண ஆவணங்கள், அந்த கடன் ஒப்பந்தத்தையும் காட்டுகிறது. அது வோக்ஸ்வேகன் நிதி நிறுவனம் ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வாகனக் கடனாக ரூபாய் 22.19 லட்சம் கொடுத்துள்ளதாக கூறுகிறது. CERSAI (Central Registry of Securitization Asset Reconstruction and Security Interest) இணைய தளம் அந்த கடன், பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் வளாகத்தில் நான் பார்த்த, ஸ்கேனியா மெட்ரோலிங்க் பேருந்தின் அதே பதிவெண் கொண்ட காருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக, வோக்ஸ்வேகன் குழுமத்தின் துணை நிறுவனம் ஒன்று, வோக்ஸ்வேகனின் மற்றொரு நிறுவனம் மூலம் விற்கப்படும் ஸ்கேனியா மெட்ரோலிங்க் பேருந்தை வாங்க, ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு  22.19 லட்சம் கடன் கொடுத்துள்ளது என்பது தெளிவாகிறது.

ஸ்கேனியாவின் செய்தி தொடர்பாளர் கூற்றின் படி, அந்த நிறுவனம் நடத்திய விசாரணையின்படி, ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் அந்தப் பேருந்தை சுதர்சன் ஹாஸ்பிடாலிடிக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகக் தெரிவிக்கிறது. ஆனால் சுதர்சன் ஹாஸ்பிடாலிடி தனது 2017 ஆம் ஆண்டு நிதி அறிக்கையில், அந்தப் பேருந்தை தனது உறுதியான சொத்தாக முதன்முதலாக அறிவித்துள்ளது. விற்பனை செய்யாத, வாடகைக்கு விடப்பட்ட ஒரு பேருந்தை எப்படி அந்த நிறுவனத்தின் உறுதியான சொத்தாகக் காட்ட முடியும்? இருப்பினும் சுதர்சன் ஹாஸ்பிடாலிடயோ அல்லது ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனமோ, இது குறித்த  நமது மின்னஞ்சல் கேள்விகளுக்கு பதிலேதும் தரவில்லை. இந்த நிலையில், அமைச்சகத்தில் பதிவு செய்துள்ள ஆவணத்தின் படி, அதன் உரிமையாளரை உறுதி செய்வதன்றி வேறு வகையில் அதனை முடிவு செய்வது கடினம். இந்த ஆவணங்களில் கடனாகப் பெறப்பட்ட 22.19 லட்சம் தான் வாகனத்தின் மதிப்பு எனக் குறிப்பிடுகையில், சுதர்சன் ஹாஸ்பிடாலிடியின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை அதன் மதிப்பு 33.57 லட்சம் என்று கூறி உள்ளது. ஏன் இப்படி இரண்டு அறிக்கைகள் இரண்டு வகை மதிப்புகளைக் காட்டி உள்ளது என்பது தெளிவாக இல்லை.

ஒரு பிரபல இந்திய நிறுவனத்துடன் பணியாற்றி வரும்  தன் பெயரை வெளியிட விரும்பாத பேருந்து விற்பனையாளர் ஒருவர், ஸ்கேனியா மெட்ரோலிங்க் பேருந்து மிகச் சாதாரணமாக  ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையது என்று என்னிடம் கூறினார். எனவே வோக்ஸ்வேகன் நிதி நிறுவனத்திற்கும் ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான கடன் ஒப்பந்ததத்தில் பேருந்தின் மதிப்பு 22.19 லட்சம் என ஏன் குறிப்பிட வேண்டும் என்பதும் தெளிவாகவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நிதி அறிக்கைகளை  கொடுக்க வேண்டும் என்ற 2013 ஆம் ஆண்டின் நிறுவன சட்டத்தின் அடிப்படையில், சுதர்சன் ஹாஸ்பிடாலிடியும் தனது சொந்த தணிக்கையாளரின் தணிக்கை அறிக்கையை 2019 ஆம் ஆண்டு கொடுத்துள்ளது. அதில் பேருந்தின் மதிப்பு ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வருவதாகவும் ஆனால் அதிலிருந்து எந்த வருமானமும் பெற முடியவில்லை என்றும் தெரிவிக்கிறது. அந்த அறிக்கையில் ஆண்டுதோறும் 15 % அளவிற்கு அதன் மதிப்பு குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதன் 2018 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், 28.25 லட்சமாக இருந்த அந்த பேருந்தின் மதிப்பு 2019ல், 23.78 லட்சமாகக் குறைந்து விட்டதாகக் காட்டி உள்ளது. தணிக்கையாளர் தனது அறிக்கையில் “நிறுவனம் ஒரு பேருந்தை சொந்தமாக வைத்துக் கொண்டு தேய்மானத்தையும் காட்டுகிறது. அதே வேளையில் அதிலிருந்து வரும் வருமானம் புறக்கணிக்கத்தக்கதாக உள்ளதாகக் கூறகிறது” என்கிறார். அவர் மேலும் இதற்கான பணபரிவர்த்தனையை கேள்விக்குள்ளாக்கி உள்ளார். “இந்த பரிவர்த்தனையின் நம்பகத்தன்மை மற்றும் செல்லுபடியாகும் தன்மை ஐயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நிர்வாகம் கொடுக்கும் விளக்கங்கள் திருப்தி தருவதாக இல்லை” என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். அந்த அறிக்கை, நிறுவனம் கொடுத்த விளக்கத்தை குறிப்பிடவில்லை. எவ்வாறாயினும், “மேற்கூறிய முழுமையான நிதிநிலை அறிக்கைகள் சட்டத்திற்குத் தேவையான தகவல்களை, தேவையான முறையில் தருகின்றன. எனினும் 2019 மார்ச் 31 ஆம் தேதி நிறுவன விவகாரங்களின் படி, இந்தியாவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகளுக்கு இணங்க, ஒரு உண்மையான மற்றும் நியாயமான பார்வையை அது தரவில்லை” என்று தணிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.

2016 டிசம்பர் மாதம், அந்தப் பேருந்தை  பதிவு செய்த பிறகு, முதல் பண பரிவர்த்தனையாக சுதர்சன் ஹாஸ்பிடாலிடி நிறுவனம், ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ரூ 60 லட்சம் கொடுத்துள்ளது.

இதனை “வாடிக்கையாளரிடமிருந்து பெற்ற முன்தொகை” என்று 2017 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ட்ரான்ஸ் ப்ரோ குறிப்பிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பதிவிட்டுள்ள ஆவணங்களில் சுதர்சன் ஹாஸ்பிடாலிடிமிடமிருந்து “பாதுகாப்பு வைப்புத் தொகை” என்ற பெயரில் ரூ 75 லட்சத்தை ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் பெற்றுள்ளதாக கூறுகிறது. இது மீண்டும் 2019 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஆவணமும் இவை பேருந்திற்காகக் கொடுக்கப்பட்ட பணம் என்று காட்டவில்லை. இதற்கிணையான எந்த பதிவும் சுதர்சன் ஹாஸ்பிடாலிடி நிதிநிலை அறிக்கைகளில் இல்லை. ஆனால் 2020 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை அந்தப் பேருந்து இனியும் தங்கள் நிறுவனத்தின் சொத்து அல்ல என கூறுகிறது. அந்த ஆண்டிற்கான தணிக்கையாளர் அறிக்கை 2020, மார்ச்சு 31 முடியும் நிதியாண்டில், கடனை முறையாக திருப்பிச் செலுத்தாத காரணத்தால், தொடர்புடைய நிதி நிறுவனம் அந்தப் பேருந்தை எடுத்துச் சென்றுவிட்டது,” எனத் தெரிவிக்கிறது. இதற்கிணையாக ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் கொடுத்துள்ள அதே ஆண்டின் தணிக்கை அறிக்கையிலும் நிறுவனம், வங்கிக்கும், நிதி நிறுவனங்களுக்கும் கடன் தவணைகளை முறையாக திருப்பிச் செலுத்தாததால் வோக்ஸ்வேகன் நிதி நிறுவனம், பேருந்தை கையகப்படுத்திக் கொண்டதாகக் கூறி உள்ளது.

தங்கள் சகோதர நிறுவனம்  பேருந்தை கைப்பற்றி இருக்கும் போதும் ஸ்கேனியா பேருந்து எங்கிருக்கிறது எனத்  தங்களுக்குத் தெரியாது என்றே சாதித்து வந்தது வோக்ஸ்வேகன் நிறுவனம். ஸ்கேனியாவின் டேனியல்சன் “இதற்கு மிக எளிதான காரணம் ஸ்கேனியாவுக்கு அந்தப் பேருந்து தற்போது எங்குள்ளது எனத் தெரியாது (மேலும் அதை அறிந்துகொள்ள காரணமும் இல்லை)” என்று என்னிடம் கூறினார். மேலும் அவர், ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் உடனான பரிவர்த்தனை ” ஸ்கேனியா இந்தியாவால் போதுமான அளவு ஆவணப்படுத்தப்பட வில்லை…. மேலும் இது ஸ்கேனியா வழியிலான வணிக முறையல்ல. அதனால்தான் இந்த பரிவர்த்தனையில் தொடர்புடைய பணியாளர்கள் நிறுவனத்தில் தற்போது பணியில் இல்லை” என்கிறார். “தற்போது பேருந்து எங்குள்ளது என்ற கேள்வியை  அதன் உரிமையாளரிடம் (நமக்குத்தெரிந்தவரை) ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் இடம்தான் கேட்க வேண்டும்” என்கிறார் டேனியல்சன்.

கேரவன் பதிவு செய்துள்ள அதன் முகவரியில், ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்தை தொலை பேசி மூலம் அழைத்த போது, அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று பதில் வருகிறது. அதற்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் உரியவரை  அடையாமல் திரும்பி வந்து விடுகின்றன. அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது, ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் அலுவலகம் மூடப்பட்டு அந்த இடத்தில் ஸ்கேனியா அலுவலகம் இயங்குகிறது.

“அரசு வழக்கறிஞரின் ஆரம்பகால விசாரணையில் இருப்பதால், தனது கருத்தைத் கூற முடியாது” என வோக்ஸ்வேகன் நிதி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபான் வோக்ஸ் என்னிடம் கூறினார். அந்த நிறுவனத்தின் விசாரணை பற்றியும், அது எது குறித்து நடக்கிறது என்பது பற்றியும் விரிவாக எதுவும் தெரிவிக்கவில்லை. மீண்டும் தொடர்பு கொண்ட போது, ஒரு தானியங்கி மின்னஞ்சல் செய்தி என்னை ஜெர்மன் நிறுவனத்தின் நிதிப் பிரிவில் உள்ள டென்னிஸ் ஐசன்ஹோவரிடம் பேசுமாறு கூறியது. ஆனால் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.

வியப்பிற்குரிய வகையில், இந்திய வோக்ஸ்வேகன் நிதி நிறுவன அதிகாரிகள் ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் பற்றிய மற்றும் அது பேருந்தைக்  கையகப்படுத்தியது பற்றிய கேள்விகளுக்குப் பதில் கூற மறுத்து, அதன் தாய் நிறுவனமான ஜெர்மன் நிறுவனத்தின் பதிலையே கூறுகின்றனர். “வோக்ஸ்வேகன் நிதி நிறுவனம் ஏஜியின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் சார்பாகவே இந்த பதில் தரப்படுகிறது” என்கிறது இந்திய துணை நிறுவனம்.

செய்தியாளர் சேகர் குப்தாவிற்கு அளித்துள்ள ஒரு நேர்காணலில் கட்கரி, வோக்ஸ்வேகன் நிதி நிறுவனம் கொடுத்துள்ள கடன் பற்றி பேசினார். அப்போது அவர் எஸ்விடி அறிக்கையின் பின்னணியில் உள்ள விவகாரம், நாக்பூர் நகராட்சி கழகத்திற்கும் ஸ்கேனியாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தை பற்றியது என்றும் தான், சாலை போக்குவரத்துத் துறையின் சார்பாக சுவீடன் தயாரிப்பாளரின் எத்தனாலில் ஓடும் பேருந்தை இந்தியாவிற்குக் கொண்டு வர வசதி செய்து கொடுத்ததாகவும் கூறினார். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பேருந்து, இந்தியாவில் எத்தனாலில் இயங்கும் முதல் பேருந்து என்றும், நாக்பூருக்கு சோதனை ஓட்டமாகக் கொண்டுவரப்பட்டது என்றும், இறுதியாக நாக்பூரில் எத்தனாலில் இயங்கும் 35 ஸ்கேனியா பேருந்துகளுடன், பசுமைப் பேருந்துத் திட்டத்தை அறிமுகப்படுத்த வழிவகுத்தது என்றும் கூறியுள்ளார்.

தனக்கும் இந்த பரிவர்த்தனைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வலியுறுத்திக் கூறிய  கட்கரி, அது முற்றிலும் நாக்பூர் நகராட்சிக்கும் ஸ்கேனியா விற்கும் இடையிலானது என்றும் கூறினார். வோக்ஸ்வேகன் நிதி நிறுவனம் ஸ்கேனியாவுக்கு இந்தப் பேருந்தை வாங்க 85 லட்சம் கடன் கொடுத்ததாகவும் ஸ்கேனியா தன் சார்பாக 45 லட்சத்தை போட்டிருப்பதாகவும் கூறினார். நேர்காணலின் இறுதியில் கட்கரி பேருந்தின் விலை ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் என்று கூறினார். இது அந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து கொடுத்தத் தொகையை விட  ஐந்து லட்சம் அதிகம். ஆனால் குப்தா இந்த பணம் எங்கிருந்து வந்தது எனக் கேட்கவில்லை. உண்மையில் ஆறு நிமிடங்களாக கட்கரி எஸ்விடியின் குற்றச்சாட்டுகளை ஆதரித்ததால் குப்தா எது பற்றியும் எதிர்கேள்வி எழுப்பவில்லை. இந்த நேர்காணலில் அந்த மூத்த பத்திராகையாளரின் பங்கு, அமைச்சருக்கு ஒரு எதிர் கதையை கூறுவதற்கான சுமுகமான தளத்தை உருவாக்குவதும், எத்தனால் பேருந்தை இந்தியாவுக்குத் கொண்டு வந்ததில் அமைச்சர் தனது பங்களிப்பை ஏற்றுக்கொள்ள செய்வது மட்டுமே ஆகும்.

ஒருவேளை கட்கரி யின் கருத்துக்களை  எதிர்த்து கேள்வி கேட்டிருந்தால் மத்திய அமைச்சர் மீண்டும் அப்பட்டமாக பொய் கூறுவதை அம்பலப்படுத்தி இருக்கலாம். எஸ்விடி அறிக்கை இந்தியாவில் உள்ள இரு தனியார் நிறுவனங்கள் மூலம் ஸ்கேனியா ஒரு பேருந்தை அன்பளிப்பாக  கட்கரிக்கு கொடுத்துள்ளது என்று கூறுகிறது.  அந்த இரண்டு நிறுவனங்கள்  கேரவனின் புலனாய்வில் அடையாளம் காணப்பட்ட ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் மற்றும் சுதர்சன் ஹாஸ்பிடாலிடி ஆகியவையே. அதனால் நாக்பூர் நகராட்சிக்கு அனுப்பிய எத்தனாலில் ஓடும் பேருந்து பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை. கார்ப்பரேட் நிறுவனத் துறை ஆவணங்கள் ஸ்கேனியா வால் ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட வெள்ளை நிற மெட்ரோலிங்க் எச்டி பேருந்து, அதாவது நான் பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் வளாகத்தில் கண்ட பேருந்து  கட்கரி கூறுவது போல பசுமை எத்தனாலில் ஓடும் பேருந்து அல்ல.

ஸ்கேனியா பேருந்து பற்றி ஒரு தவறான கதையை  பின்ன முயல்கிறார் கட்கரி என்பதற்கு மேலதிக ஆதாரங்கள் உள்ளன. ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸூக்கு விற்கப்பட்ட மெட்ரோலிங்க் பேருந்து பதிவு செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 2014 ஆகஸ்ட் மாதத்தில்,  எத்தனாலில் இயங்கும் ஸ்கேனியா பேருந்து முன்னோட்டத் திட்டத்திற்காக நாக்பூர் கொண்டுவரப்பட்டது. அதாவது ட்ரான்ஸ் ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு நிறுவனமாக பதிவு செய்வதற்கும் முன்பே இது நடந்துள்ளது.

இதற்கும் மேலாக, ஸ்கேனியாவின் துணை நிறுவனமான, ஸ்கேனியா வணிக வாகனம் இந்தியா பிரைவேட் லிமிடெட், 2014,2015 ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில், வோக்ஸ்வேகன் நிதி நிறுவனத்துடன் எந்த வித பணப் பரிமாற்றத்தையும் செய்ததாகக் குறிப்பிடவில்லை. எனவே எதனடிப்படையில் கட்கரி குப்தாவிடம் வோக்ஸ்வேகன் நிதி நிறுவனம் முன்னோட்டப் பேருந்திற்காக 85 லட்சம் கொடுத்தது எனக் கூறுகிறார் என்பது தெளிவாகவில்லை. இந்திய ஸ்கேனியா வணிக வாகனம் நிறுவனத்திற்கும், வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கும் இடையிலான முதல் வணிகப் பரிமாற்றம் 2016 ம் ஆண்டுதான் நடைபெற்றுள்ளது. 2016 ல் 17.17லட்சமும், 2019 ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி மிகப்பெரும் அளவில் அதாவது 10.99 கோடி ரூபாய் அளவிலான பண பரிமாற்றமும் நடந்துள்ளது.

நாக்பூர் நகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட எத்தனாலில் ஓடும் பசுமைப் பேருந்து முற்றிலும் மாறுபட்ட ஸ்கேனியா மாடல் ஆகும். 2016ம் ஆண்டு நாக்பூர் நகராட்சியின் “அப்லி பஸ் பரியோஜனா- நமது பேருந்து சேவை” திட்டத்தை கட்கரி துவங்கி வைத்தார். அதில் ஸ்கேனியாவால் தயாரிக்கப்பட்ட, எத்தனாலை எரிபொருளாகப் கொண்ட 55 பேருந்துகள் உட்பட மொத்தம் 195 பேருந்துகள் புதிதாக துவக்கி வைக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் ஒன்றின் பதிவுச் சான்றிதழில் இதன் வடிவமைப்பு” ஸ்கேனியா சிட்டி வைட் LE 270 4X2″ என்று உள்ளது. மெட்ரோலிங்க் அல்ல. அந்த அனைத்துப் பசுமைப்  பேருந்துகளும் ஒரே வடிவமைப்புதானா என்று டேனியல்சனிடம் கேட்ட போது அவர், ” எத்தனால் பேருந்து வடிவமைப்புக் குறித்து நீங்கள் சொல்வது சரிதான். மெட்ரோலிங்க் வடிவமைப்பு எத்தனாலில் ஓடுவது அல்ல,” என்று கூறினார்.

நிதின் கட்கரி தன் மகன்களின் வணிகத் திறமைப்பற்றி பெருமையாக குறிப்பிடுகிறார். 2018 ல் ஹிக்னாவில் எம்ஐடிசி நிறுவனங்கள் சங்கத்தின் நிறுவன நாள் விழாவில் பேசிய அவர் சாரங்க் மற்றும் நிகில் ஆகியோரின் வணிகம் 1,100 கோடியாகப் பதிவு செய்துள்ளது. அவர்களுடைய நோக்கம் அதனை 5,000 கோடியாக கொண்டு செல்வதே,” என்று கூறினார். 2020 ல் நாக்பூரில் ஒரு கூட்டத்தில் பேசிய கட்கரி அவருடைய மகன்களுடைய வணிகம் 1,300 கோடி என்று கூறினார். சாரங்க்கும், நிகிலும் 2016 லிருந்து அவரவர் நிறுவனங்களில் இயக்குநர்களாக  இருக்கின்றனர். சுதர்சன் ஹாஸ்பிடாலிடி, மனஸ் அக்ரோ மற்றும் சியான் அக்ரோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பிற நிறுவனங்களின் மிகப்பெரிய வலைப்பின்னல் கட்கரியின் வணிகப் பேரரசின் வெற்றிக்கு  முக்கிய பங்காற்றி உள்ளன என்பதில் ஐயமில்லை. இந்த நிறுவனங்களுக்கிடையிலான நிதித் தொடர்பான ஆவணங்கள்  எழுப்பும் பல கேள்விகளுக்கு அவர்களுடைய கார்பரேட் நிறுவன சட்டத்தின் படி தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் பதிலேதும் கூறுவதில்லை. இந்த நிறுவனங்களில் பலவும் தொடர்ந்து எதிர்மறை இழப்புகளையும், எதிர்மறையான நிகர மதிப்புகளையும் காட்டி வருவதுடன், மிக அதிக அளவில் பாதுகாப்பற்றக் கடன்கள் – அதாவது பிணையின்றி வாங்கியுள்ள கடன்களை உடையதாக இருக்கின்றன. அவற்றில் சிலவற்றிற்கு நேர்மையான  சில தனி தணிக்கையாளர்கள் சிவப்புக் கொடிக் காட்டி உள்ளனர்.

இந்த பல நிறுவனங்கள் ஒரே இயக்குநரை கொண்டுள்ளதால் இவர்களுக்கிடையான பரிமாற்றங்கள் இருண்டதாகவே உள்ளன.

அறிவின் “எஞ்சாயி எஞ்சாமி” – வேர்களை கண்டுபிடிப்பதற்கும் சமத்துவத்தைக் கொண்டாடுவதற்குமான ஒரு பயணம்

இறுதியாக, இந்த நிறுவனங்களின் வலைப்பின்னலும், அவர்களுடைய வணிக பரிமாற்றங்களும் மறுக்க முடியாத வகையில், மத்திய அமைச்சரின் கூற்றுக்கு நேர் எதிராக சாரங்க் மற்றும் நிகில் ஆகியோரின் வணிகப் பேரரசுடன் சுதர்சன் ஹாஸ்பிடாலிடி  இணைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

நாக்பூரில் உள்ள சுதர்சன் ஹாஸ்பிடாலிடி மற்றும் மேலாண்மை சேவைகள் பிரைவேட் லிமிடெட், 2015 ஜூன் மாதம் இணைக்கப்பட்டது. அது ப்ரியதர்ஷன் பாண்டே மற்றும் கௌரி பாண்டே என்ற இணையரால் நடத்தப்படுவது. அவர்கள் இருவருமே அதன் இயக்குநர்கள். கார்ப்பரேட் நிறுவன சட்ட ஆவணங்கள் படி அதன் நூறு விழுக்காடு விற்றுமுதல்,  “தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளிலிருந்தே”  வருகிறது.

ஆவணங்களில் விவரித்துள்ளபடி நிறுவனத்தின் நிதி நிலை மிக மோசமாக உள்ளது. 2017 ம் ஆண்டைத் தவிர கடந்த ஐந்து ஆண்டுகளில் கிடைக்கக்கூடிய நிதிநிலை அறிக்கைகளின் படி தொடர்ந்து நட்டத்தையே சந்தித்துள்ளதாகக் காட்டுகின்றன. அந்த ஆண்டு -தற்செயலாக ஸ்கேனியா மெட்ரோலிங்க் வாங்கிய அதே ஆண்டு- சுதர்சன் ஹாஸ்பிடாலிடி, மனஸ் அக்ரோவிடமிருந்து ரூ.35 லட்சம் பாதுகாப்பற்ற கடனைச் பெற்றுள்ளது.  ஏன் கடன் வழங்கப்பட்டது என்பதற்கும்,  அல்லது பேருந்து விவகாரத்தில் தனது மகனின் நிறுவனம் இவ்வளவு பெரியத் தொகையை பாதுகாப்பற்ற கடனாக இன்னொரு நிறுவனத்திற்கு  கொடுத்திருக்கும் போது, கட்கரியின் அலுவலகம் அவரது குடும்பத்திற்கும் பேருந்துத்  தொடர்புடைய எந்த நிறுவனத்திற்கும் எந்த உறவும் இல்லை என ஏன் கூறியது என்பதற்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை. மனஸ் அக்ரோ நிறுவனமோ, சாரங்க் கட்கரியோ இது குறித்த நமது மின்னஞ்சல் கேள்விகளுக்கு பதிலேதும் தரவில்லை.

சுதர்சன் ஹாஸ்பிடாலிடி தொடர்ந்து எதிர்மறையான நிகர மதிப்பையே காட்டி வருகிறது. 2018 ம் ஆண்டில் அது மிகவும் குறைந்து தனது சொத்து மதிப்பை விட  கடன் தொகை 10.48 லட்சம் அதிகமாக இருப்பதாகக் காட்டுகிறது. இருப்பினும், நிறுவனத்தின் பண மூட்டை அடிக்கடி அகலத் திறந்து அதற்குத் தொடர்புடையவர்களுக்கும், இயக்குநர்களுக்கும் கடன்களை வாரி வழங்கி உள்ளது. ஒரு தனி தணிக்கையாளரின் 2020 ம் ஆண்டு அறிக்கை எதிர்மறை நிகர மதிப்பு இருக்கும் நிலையிலும் இயக்குநர் பிரியதர்ஷன் பாண்டேவிற்கு 20.21 லட்சம்  ரூபாய் கடன் வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. “இந்தக் கடனைக் கொடுத்தற்கான அவசியத்தை வெளிப்படுத்தவில்லை. கடன் கொடுத்ததற்கான காரணங்களாக நிர்வாகம் கூறுவது திருப்தி தருவதாக இல்லை,” என்கிறார் தணிக்கையாளர்.

அதே ஆண்டு சுதர்சன் ஹாஸ்பிடாலிடி மற்றொரு நிறுவனமான ஸ்ரீனிவாஸ் ஹாஸ்பிடாலிடி என்ற நிறுவனத்திற்கு 4 லட்சம் ரூபாய்களை சுழியம் வட்டியில் கடனாக வழங்கி உள்ளது. இந்த நிறுவனத்திலும் ப்ரியதர்ஷன் பாண்டேவும், கௌரி பாண்டேவும் இயக்குநர்கள் என்பதுடன் மனஸ் அக்ரோவிலிருந்தும் தாராளமாக நிதிகளை பெறும் நிறுவனமாகவும் அது இருந்தது. 2019 நிதியாண்டில் மனஸ் அக்ரோ 18 லட்ச ரூபாய் பாதுகாப்பற்ற கடனாக ஸ்ரீனிவாஸ் ஹாஸ்பிடாலிடி க்கு கொடுத்துள்ளது. இது அதன் நிதிநிலை அறிக்கையிலும், “அதே நிர்வாகத்தின் கீழ் உள்ள சகோதர நிறுவனத்திடமிருந்து(sic) பெறப்பட்ட” கடனாக காட்டப்பட்டுள்ளது. இது எந்த நிறுவனத்தைக் குறிக்கிறது என்ற தெளிவு இல்லை. ஆனால் குறைந்தது, மனஸ் அக்ரோவும், ஸ்ரீனிவாஸ் ஹாஸ்பிடாலிடியும் ஏதோ ஒரு பொதுவான நிர்வாகத்தின் கீழ் இருப்பதாகக் கூறியுள்ளது.

தமிழகத்தில் முதுகலை மருத்துவர்கள் படும்பாடு – கண்டுகொள்ளுமா அரசு?

சுதர்சன் ஹாஸ்பிடாலிடிக்கும், ஸ்ரீனிவாஸ் ஹாஸ்பிடாலிடிக்கும் கொடுத்துள்ள கடனை மனஸ் அக்ரோ தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அதில்  அந்த நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை. சுதர்சன் ஹாஸ்பிடாலிடி நிகில் கட்கரியின் சியான் அக்ரோவுடனும் தொடர்பு வைத்துள்ளது. சுதர்சன் ஹாஸ்பிடாலிடி, எம்எம் ஆக்டிவ் சயின்ஸ்- டெக் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து 4,16,500 ரூபாய் கடனாகப் பெற்றுள்ளதாகக் கூறுகிறது. இந்த நிறுவனம் 2020 டிசம்பர் வரை ஒரு லட்சம் சியான் அக்ரோவின் பங்குகளை வைத்திருந்தது.

கட்கரி மகன்களுடன் சுதர்சன் ஹாஸ்பிடாலிடியை இணைக்கும் மற்றொரு நிறுவனம் செக்- ஒன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகும். இந்த நிறுவனத்தின் இயக்குநர் கேவல் பாட்டீல் அதில் 50% பங்குகளை வைத்திருப்பவர் என்பதுடன் சுதர்சன் ஹாஸ்பிடாலிடியின் முன்னாள் இயக்குநரும் ஆவார். செக்-ஒன், மனஸ் அக்ரோ மற்றும் சியான் அக்ரோ ஆகிய இரு நிறுவனங்களுடனும் அதே போல், நான் பேருந்தை கண்டுபிடித்த நாக்பூர் மனைக்குச் சொந்தமான பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடனும்  நிதி பரிமாற்றம் மட்டுமின்றி தலைமைகளின் இணைப்பும் கொண்டது.

2019 ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் படி செக்- ஒன் நிறுவனம் சியான் அக்ரோவிற்கு  3.34 கோடி  ரூபாய் தர வேண்டியதாக இருந்ததாகவும், அதனை அடுத்த ஆண்டு திருப்பிச் செலுத்தி விட்டதாகவும் தெரிகிறது. இந்த நிறுவனம் மனஸ் அக்ரோவிற்கு நடப்பு ஆண்டு செலுத்த வேண்டிய கடனாக 2019 ம் ஆண்டில் 2.50 லட்சமாக இருந்தது.  அடுத்த ஆண்டில் அது பல்கி பெருகி 96.82 லட்சமாகிவிட்டது. செக்-ஒன் நிறுவனம் பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும், 2019,2020 நிதி ஆண்டுகளில் குறுகிய கால கடனாக வாங்கிய 1.94 கோடி தர வேண்டியதிருந்தது. இதே போன்ற மற்றொரு குறுகிய கால கடனாக பூர்த்தி மார்கெட்டிங் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்திடமிருந்து 1.26 கோடியை வாங்கி உள்ளது. இந்த நிறுவனம் சியான் அக்ரோ வின் 45,20,000 பங்குகளை  வைத்துள்ளது.  2020, டிசம்பர் வரை இது 16.15% ஆகும். செக்-ஒன் னின் மற்றொரு இயக்குநரான அமெயா ஃபால்டான்கர் என்பவர் சியான் அக்ரோ வின் 38,70,000 பங்குகளை (13.83%) வைத்துள்ள பூர்த்தி ஒப்பந்த பண்ணை பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் இயக்குநராக உள்ளார்.

செக்-ஒன் மற்றும் கட்கரியின் மகன்களுக்கு இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க தொடர்பு, அவினாஷ் ஃப்யூல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் உள்ளது. 2019 நிதியாண்டில் இந்த நிறுவனத்திடமிருந்து செக்ஒன் 70.90 லட்சம் கடன் வாங்கியுள்ளது. இதற்கு ஈடாக, அவினாஷ் ஃப்யூல்ஸ் மனஸ் அக்ரோவிலும், சியான் அக்ரோவிலும் முதலீடு செய்துள்ளது. 2019 நிதி அறிக்கையின் படி 78.13 லட்சம் மதிப்புள்ள 3,857   மனஸ் அக்ரோ நிறுவன பங்குகளை அது வாங்கி உள்ளது. 2020 டிசம்பர் நிலவரப்படி அவினாஷ் ஃப்யூல்ஸ், சியான் அக்ரோவின் 26.13% பங்குகளை வைத்துள்ளது. இதன் மதிப்பு 17.74 கோடி ரூபாய் ஆகும்.

கட்கரியை சுதர்சன் ஹாஸ்பிடாலிடியுடன் இணைக்கும் வலைப்பின்னல்கள் முடிவில்லாதவையாகவே தோன்றுகின்றன. கார்ப்பரேட் நிறுவனத் துறை வலைதளத்தை தோண்டினால் புதுப்புது தொடர்புகள் வெளியாகின்றன. இந்த நிறுவனங்கள் அடியில் மறைந்திருப்பதை நிறுவுவதுடன் கட்கரியின் கூற்றுக்களில் உள்ள பொய்மையையும் தெளிவாக எடுத்துக் காட்டும் போது மேலும் இரண்டு நிறுவனங்கள் பற்றி இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும். அவை, ஃபன்சிட்டி ரிசார்ட்ஸ் அண்டு ரிக்ரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிரீன் எட்ஜ் கன்ஸ்ட்ரக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பனவாகும். சுதர்சன் ஹாஸ்பிடாலிடி, ஸ்ரீனிவாஸ் ஹாஸ்பிடாலிடி ஆகியவற்றின் இயக்குநராக உள்ள அதே பிரியதர்ஷன் பாண்டேதான் இந்த ஃபன்சிட்டி ரிசார்ட்ஸ்க்கும் இயக்குநர். இந்த நிறுவனமும் அதனுடன் தொடர்புடைய எல்லா நிறுவனங்களையும் விட நிதிநிலையில் மிக மோசமாகவே உள்ளது போல் தோன்றுகிறது. இது தொடர்ந்து எதிர்மறை அல்லது வருமானமே இல்லாததைக் காட்டுவதுடன் மிகமிக மோசமான நிகர மதிப்பையும் காட்டுகிறது. 2020 ம் நிதியாண்டில் எங்கிருந்து வாங்கப்பட்டது என்றே தெரியாமல் 1.3 கோடி கடன் இருப்பது உட்பட அதன் அனைத்து பரிமாற்றங்களும்  மூடி மறைக்கப்பட்டுள்ளன. அதே ஆண்டு சியான் அக்ரோ வின் விளம்பரதாரரான கிரீன் எட்ஜ் கன்ஸ்ட்ரக்சன்ஸிடமிருந்து 75 லட்சம் கடன் வாங்கி உள்ளது. 2020, டிசம்பர் கணக்கின்படி கிரீன்எட்ஜ்,  சியான் அக்ரோ வின் 3.09% பங்குகளை வைத்துள்ளது. அதனுடைய 2019ம் நிதி அறிக்கையும் அது மனஸ் அக்ரோ மற்றும் கிரீன் எட்ஜ் ஆகியவற்றுடன் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்ததைக் காட்டுகிறது.

துல்லியமாகப் பார்த்தால் கிரீன்எட்ஜ் நிறுவனத்தின் ஒரு இயக்குநரான சந்தீப் மென்ட்ஜோக் அவினாஷ் ஃப்யூல்ஸ் மற்றும் பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் ஆகியவற்றின் இயக்குநராகவும் இருக்கிறார். அத்துடன் 2019ம் ஆண்டில்  பூர்த்தியின் 10,000 பங்குகளையும் வைத்திருக்கிறார்.

நிகர மதிப்பு, வருவாய் அல்லது லாபத்தைப் பொறுத்தவரை மனஸ் அக்ரோ அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது. 2017ல் 9.64 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. இது முந்தைய ஆண்டின் 46.16 லட்சத்தோடு ஒப்பிடுகையில் மிகப் பெரும் தாவல். 2020 ல் இந்த நிறுவனம் 16.93 கோடி லாபம் காட்டியது. அதே போல் அதன் வருமானமும் 2016 ல் 524.10 கோடியிலிருந்து 2020 ல் 668.71 கோடியாக உயர்ந்தது. இந்தக் காலத்தில் அதன் நிகர மதிப்பு 40% வளர்ச்சி அடைந்து 468.76 கோடியாக இருந்தது.

சியான் அக்ரோவும் இதே போன்று மேல்நோக்கிய வளர்ச்சியைக் கண்டது. 2017ல் 112.80கோடியாக இருந்த வருவாய் 2020 ல் 213.97 கோடியாக உயர்ந்தது. 2017 ம் ஆண்டிலிருந்து ஒரு கோடிக்கும் அதிகமான லாபத்தை ஈட்டி வந்த இந்நிறுவனம் 2019ம் ஆண்டில் 4.61 கோடி ரூபாய் லாபம் பெற்றது.

சுதர்சன் ஹாஸ்பிடாலிடி, மனஸ் அக்ரோ, சியான் அக்ரோ போன்ற நிறுவனங்களுடன்  தொடர்புள்ள இத்தனை நிறுவனங்களின் மேசைகளை எல்லாம் தாண்டி நாம் வந்த பின்னும் கட்கரி எவ்வாறு அந்தப் பேருந்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக் கூற முடியும் என்பதைப் புரிந்துக் கொள்வது கடினமாகவே உள்ளது. கட்கரி கற்கும்,அவரது மகன்களுக்கும், அவர்களுடைய நிறுவன அதிகாரிகளுக்கும் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு பதிலே வரவில்லை. பிரியதர்ஷனும் கூட பேருந்து பற்றியும் அல்லது கட்கரி பேரரசுடன் அவரது வணிகத் தொடர்பு குறித்த கேள்விகளுக்கு பதில் தரவில்லை. பூர்த்தி சோலார் சிஸ்டம்ஸ் இயக்குனர் மென்ட்ஜோக் அவருடைய நிறுவன வளாகத்தில் இருக்கும் பேருந்து குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

அந்த காணொளியில் ஸ்கேனியா மெட்ரோலிங்க் பேருந்தில் மூன்றாவது ஒரு அடையாளத்தைக் காண முடிந்தது. அது பேருந்தில்  ” ஆரஞ்ச் டூர்ஸ் அண்டு ட்ராவல்ஸ்” என்று ஒட்டப்பட்டிருந்த பெயர். இந்த அமைப்பின் இணையதளம் செயல்பாட்டில் இல்லை. ஆனால் இணைய காப்பகத்தில் இருந்த ஒரு சைமிப்பு நகல் பிரியதர்ஷன் தான் அதன் உரிமையாளர் என்று கூறுகிறது.

(www.caravanmagazine.in இணைய தளத்தில், கௌஷல் ஷ்ராஃப் எழுதியுள்ள புலனாய்வுக் கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்