Aran Sei

கொரோனா பெருந்தொற்று – பாஜக தலைவர்கள் சமீபத்தில் சொன்ன, ஆனால் சொல்லியிருக்கக் கூடாத கருத்துக்கள்

Image Credit : thewire.in

கொரோனா ஒரு பெருந்தொற்று என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்து 414 நாட்கள் ஆகிவிட்டன. “இந்த கொரோனா வைரசுக்கு எதிரான போரை “வெற்றி கொள்ள 21 நாட்கள் முழு அடைப்பு” மட்டுமே தேவை என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்து 389 நாட்கள் ஆகிவிட்டன.

இந்த இடைக்காலத்தில் இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுவதும் குறைவதுமாகவும் இருந்து தற்போது நோய் பரவலின் இரண்டாவது அலையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

நோயாளிகளின் எண்ணிக்கை, சென்ற ஆண்டு முதல் அலையின் போது இருந்ததை விட, தற்போது இருமடங்காக அதிகரித்து 19.3 லட்சமாக இருக்கிறது.

இவ்வளவு காலம் கடந்திருக்கலாம். ஆனால், இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பது பற்றியும், அதைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் அறிவியலிலிருந்தோ, அனுபவத்திலிருந்தோ அல்லது பொதுப் புத்தியிலிருந்தோ கூட நமது தலைவர்களின் புரிதல் மேம்பட்டதாகத் தெரியவில்லை.

பொறுப்பில்லாத, உணர்வில்லாத, ஆபத்தையே ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை கூறி ‘இந்த நோய்த் தொற்று நெருக்கடியில் என்ன சொல்லக் கூடாது” என்பதற்கு முன்னணி உதாரணங்களாக பாஜக தலைவர்கள் உள்ளனர்.

இதோ, கடந்த 2 மாதங்களில் பாஜக தலைவர்கள் கூறிய, கூறியிருக்கக் கூடாத கருத்துக்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்.

1). “கொரோனா பெருந்தொற்றின் இறுதிக் கட்டத்தில் நாம் உள்ளோம்” – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்.

மார்ச் 17-ம் தேதி, இந்தியாவின் தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை மீண்டும் மெதுவாக உயரத் தொடங்கி இருந்த நேரத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நிலைமை நன்றாக உள்ளது என்று முடிவு செய்தார்.

“இந்தியாவில் நாம் கொரோனா பெருந்தொற்றின் இறுதிக் கட்டத்தில் உள்ளோம். இந்தக் கட்டத்தில், வெற்றியை அடைய நாம் மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும்: கொரோனா தடுப்பூசி முயற்சிகளை அரசியலாக்காதீர்கள், கொரோனா தடுப்பூசிகளுக்கு பின்னால் உள்ள அறிவியலை நம்புங்கள், நமது உற்றார் உறவினர் உரிய காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்யுங்கள்,” என்று அப்போது ஹர்ஷ் வர்தன் கூறியிருந்தார்.

சுகாதார அமைச்சரின் இந்த வெற்றி அறிவிப்பு காலத்துக்கு முந்தையது என்பது தெளிவானது. கொரோனா வைரஸின் மாற்றமடைந்த வகைகள் வரவிருக்கும் வாரங்களில் பேரழிவை ஏற்படுத்தப் போகின்றன என்பதை அவர் அறிந்திருக்க முடியாது என வாதிடலாம்.

ஆனால் அவர் முன்னரே அறிந்திருக்க வேண்டியது என்னவென்றால்:

  1. 2020-ல் பெரும் எண்ணிக்கையிலான நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உலக நாடும், ஏற்கனவே இரண்டாவது அலையை எதிர்கொண்டிருந்தன.
  2. தடுப்பூசி இலக்குகளை நிறைவேற்றுவதற்கு மட்டுமின்றி, இந்த புதிய அதிகரிப்பை தடுத்து நிறுத்துவதற்கான அளவு தடுப்பூசிகள் இந்தியாவிடம் நிச்சயம் இருக்கவில்லை.

இந்த அலட்சியம் காரணமாகத்தான், ஹரித்வார் கும்பமேளா போன்ற நிகழ்ச்சிகளையும், ஏப்ரலில் நடைபெற வேண்டிய மாநில தேர்தல்களுக்கு, தேவையற்ற நீண்ட பிரச்சார காலத்தையும் அரசு அனுமதித்துள்ளது.

தடுப்பூசி போடப்படுவது தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால், இந்தியாவில் 70% பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு 2021-ம் ஆண்டு இறுதி வரை ஆகிவிடும். தேவை அல்லது வழங்கல் தொடர்பாக பெரிதும் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாத நிலையில், இன்னும் இது இறுதிக் கட்டத்தை எட்டி விடவில்லை என்பதை ஹர்ஷவர்தன் அறிந்திருக்க வேண்டும்.

Image Credit : thewire.in
இந்த 2014 படத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பிரதமர் மோடியின் முன்பு விறைப்பாக நிற்கிறார் – Image Credit : thewire.in

2). ‘ஆக்சிஜன் தேவையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்’- பியூஷ் கோயல்.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாகவும், பரிதாபமான வேண்டுகோள்கள் தொடர்பாகவும் செய்திகள் குவிந்து கொண்டிருந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநில அரசுகள் ‘தேவையை’ போதுமான அளவு கட்டுப்படுத்த தவறி விட்டன என குற்றம் சாட்டினார்.

“மாநில அரசுகள் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். வழங்கல் மேலாண்மையைப் போலவே தேவை மேலாண்மையும் முக்கியமானது. கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. அவர்கள் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்,” என்று பியூஷ் கோயல் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

“நோய்த் தொற்று எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்தால் அது நாட்டின் சுகாதார கட்டமைப்பிற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். நாங்கள் மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை செய்வோம். ஆனால் தேவையை கட்டுப்படுத்துவதுடன், கொரோனா பரவலைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மாநிலங்கள் எடுக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

ஆக்சிஜன் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவது தொடர்பாகவும் வீணாக்கப் படுவது தொடர்பாகவும் தனக்குச் செய்திகள் வந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

இவரது இந்தக் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. .’#TooMuchOxygen (“அளவுக்கு அதிகமான ஆக்ஸிஜன்”) என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆனது.

தி வயர் முன்பு கூறியிருந்தது போல, கொரோனா நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் செயல்பாட்டை நோயும், உடலின் அழற்சி எதிர்வினையும் இணைந்து சீர்குலைக்கின்றன. இந்த நோயாளிகளுடைய நுரையீரல்கள் காற்றிலிருந்து ஆக்சிஜனை வடிகட்டும் சுமையை குறைப்பதற்கு, நிமிடத்துக்கு 130 லிட்டர் வரை, ஆக்சிஜன் கொடுப்பது அவசியமாகிறது.

scroll.இன் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, எட்டு மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட 162 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு காலதாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய 11 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களே அமைக்கப்பட்டுள்ளன, அவற்றில் 5 மட்டுமே தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன.

2020 மே மாதம், “முன்னேறத் துடிக்கும் 130 கோடி இந்தியர்கள் இருப்பதால்,” பெருந்தொற்றிலிருந்து விடுபடும் முதல் நாடாக இந்தியா இருக்கும்” என பியூஷ் கோயல் கூறியிருந்தார்.

3). ‘இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்தே இல்லை’ – நரேந்திர மோடி

‘இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்தே இல்லை’ என்று மேற்குவங்க தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் மோடி கூறினார். இத்தகைய பெருந்தொற்று காலத்தில் ஒரு கூட்டம்தான் மிக மோசமான ஒன்று என்பது குறித்து தலைவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

“எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டத்தைத்தான் பார்க்க முடிகிறது, மக்கள் கூட்டத்தை மட்டும்தான் பார்க்க முடிகிறது,” என்றார், அவர். அத்துடன் அந்த மக்களில் பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வந்திருப்பதையும் அவர் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அது பற்றி அவர் எதுவுமே சொல்லவில்லை.

கடந்த சில வாரங்களாக பிரதமர் தொடர்ந்து திரளான மக்கள் கூடும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசுகிறார். அதன்பிறகு, இரண்டிற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்பது போல் நாட்டில் கொரோனா நிலைமை பற்றி ஆய்வு செய்ததாகக் கூறுகிறார்.

4). “பெருந்தொற்று முடிந்து விட்டது. இனி நமக்கு முகக் கவசம் தேவையில்லை – ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா.

அசாம் சுகாதாரத் துறை அமைச்சரும், பாஜக பெரும்புள்ளியுமான ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா, கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது தெளிவாகத் தெரிந்த ஏப்ரல் தொடக்கத்தில், பெருந்தொற்று முடிந்து விட்டது, எல்லோரும் அவர்களது பாதுகாப்பு முகக் கவசங்களை அகற்றி விடலாம் என்று முடிவு செய்து விட்டார்.

“அசாமில் கொரோனா இப்போது இல்லை. அசாமில் முகக் கவசம் அணிய வேண்டியது இப்போது அவசியம் இல்லை. தேவை ஏற்பட்டால் நான் மக்களுக்கு அதைத் தெரிவிப்பேன்” என்று அவர் கூறினார்.

விமர்சனங்களுக்குப் பிறகும் அவர் தனது கருத்தில் உறுதியாக இருந்தார். தொற்றுகள் எண்ணிக்கையை குறைப்பதற்கு அசாம் பாராட்டத்தக்க அளவில் பணி புரிந்திருப்பதாகவும் இனிமேல் முகக் கவசங்கள் தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.

தற்போது அசாமில் 5,268 கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

5). “மா கங்காவின் ஆசிகள் ஆற்றில் பாய்வதால் கொரோனா வராது”

கொரோனா நோய்க்கிருமியினால் ஏற்படும் அபாயங்களின் தீவிரத்தை தொடர்ந்து மறுத்து வரும் பாஜக தலைவர்களில் ஒருவர் உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத்சிங் ராவத். இந்த மறுப்புகளில் அவருக்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருந்தது. ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கும்பமேளாவில் மக்களை கலந்து கொள்ள வைப்பதுதான் அந்த நோக்கம்.

இந்த நிகழ்வை ரத்து செய்ய வேண்டாம் என்ற அரசின் முடிவு தொடர்பாக குறிப்பிடத்தக்க கவலைகளும் விமர்சனங்களும் எழுப்பப்பட்ட போது, “கும்பமேள கங்கை ஆற்றின் கரையில் நடைபெறுகிறது. ஆற்றின் நீரில் மா கங்காவின் ஆசிகள் உள்ளன. எனவே, கொரோனா கிருமி எதுவும் இருக்காது” என்று தீரத்சிங் ராவத் கூறினார்.

கும்பமேளாவில் கலந்து கொண்ட ஒரு முன்னணி சாமியார் கொரோனாவில் இறந்து போனார்.

கும்பமேளாவிலிருந்து அகமதாபாத் திரும்பியவர்களில் 34 பேருக்கும், சூரத் திரும்பியவர்களில் 13 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மா கங்காவினால் நோய்க்கிருமியை அடித்துச் செல்ல முடியாது என்பது மிகவும் தெளிவானதும், ஒரு மாதம் முன்பு மக்களை கும்பமேளாவில் கலந்து கொள்ள வலியுறுத்தும் விளம்பரங்களில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடியே, கும்பமேளாவில் கலந்து கொள்வது “குறியீடாக” மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

6). கடுமையாக உழைக்கும் பாஜக தொண்டர்களை கொரோனா பாதிக்காது -கோபால் படேல்.

மாநிலத்தின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சராக முன்னர் பணி புரிந்த, குஜராத் ‌பாஜக சட்டமன்ற உறுப்பினர், கடும் உடல் உழைப்பில் ஈடுபடுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்றும் அதனால்தான் பாஜக தொண்டர்களுக்கு ஆபத்து இல்லை என்றும் நம்புகிறார்.

“வேலை செய்யக் கூடியவர்கள், கடும் உடல் உழைப்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. பாஜக தொண்டர்கள் உழைத்திருக்கிறார்கள், உடல் உழைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள், எனவே அவர்களில் யாரும் பாதிக்கப்படவில்லை” என்று மார்ச் இறுதியில் கோவிந்த படேல் கூறினார்.

இந்தக் கருத்தை சொல்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு கோவிந்த் பட்டேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் அதிலிருந்து மீண்டிருந்தார்.

7). கொரோனாவை எதிர்த்த இந்தியாவின் போராட்டம் உலகத்துக்கே ஊக்கமளிக்கிறது – நரேந்திர மோடி

காலத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட இந்த வெற்றி பிரகடனத்தை இந்த முறை செய்தது இந்திய பிரதமரேதான்.

“இந்த பெருந்தொற்றின் தொடக்கத்தில் உலகமே இந்தியாவின் நிலைமை குறித்து கவலை கொண்டிருந்தது. ஆனால், இன்று கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் உலகத்துக்கே ஊக்கமளிக்கிறது. உலக நலனை முன்நிறுத்தும் மனிதர்களை மையமாகக் கொண்ட ஒரு அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகிறது.” என்று மோடி பிப்ரவரி மாத மத்தியில் கூறினார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் உலகிலேயே அதிக அளவு தொற்றுகள் பதிவாகி வருகின்றன.

8). “கொரோனில்”-ஐ கொரோனா மருந்து என்று அங்கீகரித்தல் – ஹர்ஷ வர்தனும் நிதின் கட்கரியும்.

வியாபாரியும், யோகா குருவுமான பாபா ராம் தேவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அதில் பாபா ராம் தேவ் அவரது சொந்தத் தயாரிப்பான “கொரோனில்” பற்றிய “ஆய்வுக் கட்டுரையை” வெளியிட்டார்.

கொரோனில் ராம் தேவின் நிறுவனமான பதஞ்சலி தயாரித்த ஒரு ஆயுர்வேத மருந்து என்று கூறப்படுகிறது. அதை வெளியிடும் போது, பாபா ராம்தேவ், அது கொரோனாவுக்கான “ஆதாரங்கள் அடிப்படையிலான முதல் மருந்து” என்றும் “உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மருந்து,” என்றும் கூறினார். உலக சுகாதார அமைப்பு இந்தப் பொய்யை அம்பலப்படுத்தி உடனடியாக ட்வீட் செய்தது.

ஆயுர்வேத பொருட்களின் விற்பனை அதிகரித்திருப்பது, “மக்கள் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர்” என்பதைக் காட்டுவதாக பாபா ராம்தேவ் இந்த வெளியீட்டு விழாவில் கூறினார்.

ஆனால், தி வயர் சயின்ஸ், வெளியிட்ட விபரமான செய்தியின்படி, கொரோனிலுக்கு அடிப்படையாக உள்ள அறிவியல், சந்தேகத்துக்கிடமானது என்றும் இரண்டு மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட “ஆய்வு கட்டுரை” பிரச்சினைகள் நிரம்பியது என்றும் தெரியவந்தது. மருந்து என்று சொல்லப்பட்ட இதற்கு அரசின் அங்கீகாரத்தைக் கொடுப்பது பல வழிகளில் பிரச்சினைக்குரியது.

9). ‘ மக்களுக்கு வயதாகிறது, அவர்கள் சாகத்தான் வேண்டும்’- பிரேம் சிங் படேல்.

கொரோனா பெருந்தொற்றின் போது இந்தியாவில் நடக்கும் சாவுகளை தவிர்க்க முடியாது, ஏனென்றால் மக்களுக்கு வயதாகிறது, அவர்கள் சாகத்தான் வேண்டும் என்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் பிரேம் சிங் படேல் கருதுகிறார்.

thewire.in இணைய தளத்தில் ஹார்வி சென் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்